என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

முதியோரை மதியுங்கள்!

'பத்மஸ்ரீ' டாக்டரின் அட்வைஸ்

##~##

முதியோர் மருத்துவத்தில் மகத்தான சாதனைகளைச் செய்ததற்காக, ஈரோடு மாவட்டம், வள்ளலார்புரம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் நடராஜனுக்கு 'பத்மஸ்ரீ’ விருது அளித்து கௌரவப்படுத்தி உள்ளது மத்திய அரசு. டாக்டர் நடராஜன், இந்தியாவில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் 'முதியோர் மருத்துவம்’ என்ற தனிப் பிரிவு  தொடங்கக் காரணமாக இருந்தவர். தற்போது சென்னையில் மருத்துவ சேவை புரிந்துவரும் இவரைச் சொந்த மண்ணுக்கு அழைத்து வந்து, விழா எடுத்து உச்சிமுகர்ந்து அனுப்பி இருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள்!

 அந்தியூர் அருகே இருக்கும் டாக்டர் நடராஜனின் சொந்தக் கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில், வாழ்த்து மழையில் நனைந்துகொண்டு இருந்த நடராஜனிடம் பேசினேன்.

முதியோரை மதியுங்கள்!

''நான் ஒரு சாதாரண விவசாயியின் மகன். பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் என் பெற்றோர் என்னைப் படிக்கவைத்தார்கள். அதற்கு இந்தக் கிராம மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு மிக அதிகம். மருத்துவம் படித்துவிட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் அண்ணாமலையிடம் உதவி மருத்துவராக ஐந்து வருடங்கள் பணிபுரிந்தேன்.

முதியோரை மதியுங்கள்!

டாக்டர் அண்ணாமலை, மருத்துவத்தைப் புனிதமாக நேசித்தவர்; சமூக அக்கறை நிறைந்தவர். குறிப்பாக, மருத்துவமனைக்கு வரும் ஏழை முதியோர்களைத் தன் பெற்றோர் போல பாவித்து சிகிச்சை அளிப்பார். ஒருமுறை அவர் என்னிடம், 'எல்லா மருத்துவப் பிரிவுகளையும் படிக்க ஆட்கள் செல்கிறார்கள். ஆனால், முதியோர் மருத்துவம் என்று தனியாக ஒரு பாடம் இருக்கிறது. அதை நீங்கள் ஏன் படிக்கக் கூடாது?’ என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன்  சம்மதித்து 1974-ம் ஆண்டு லண்டன் சென்று முதியோர் மருத்துவம் படித்தேன். குழந்தைகள் சிகிச்சை போல முதியோர்க்கும் தனிப்பட்ட சிகிச்சை முறைகள் உண்டு. முதியோருக்கு ஏற்படும் உடல் நலப் பாதிப்புகள், தனிமையில் இருக்கும் முதியோருக்கு ஏற்படும் மனநலப் பாதிப்புகள் எல்லாவற்றுக்கும் அந்த மருத்துவச் சிகிச்சையில் தீர்வு உண்டு. அன்றைக்கு ஆசியாவில் முதியோர் மருத்துவப் படிப்பு முடித்த முதல் ஆள் நான்தான். படிப்பை முடித்து தாய் மண் வந்த கையோடு, சென்னை- அரசுப் பொது மருத்துவமனையில் முதியோருக்கான புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கினேன்.

பின்பு, 88-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முதலாக சென்னை - அரசுப் பொது மருத்துவமனையில் முதியோருக்கான தனிப் பிரிவும் தொடங்கப்பட்டது. 1996-ல் முதியோர் மருத்துவத்துக்காக 'முதியோர் பட்ட மேற்படிப்பு’ என்ற பாடமும் சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இப்போதும் இந்த மேற்படிப்பு இந்தியாவில் வேறு எந்த மருத்துவக் கல்லூரியிலும் இல்லை.

இந்தக் காலத்து இளைஞர்கள் முதியோரைப் சுமையாக நினைக்கின்றனர். கவனிப்பார் இன்றி முதியோர் படும் அவதிகள் சொல்லி மாளாதவை. அதனால்தான், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 'மூத்த குடிமக்கள் மன்றம்’

முதியோரை மதியுங்கள்!

என்ற அமைப்பை உருவாக்கினோம். 35 டாக்டர்கள் உட்பட மருத்துவ மாணவர்களைக் கொண்ட அமைப்பு இது. வீட்டில் தனியாக உள்ள முதியோர் உடல் நிலை பாதிக்கப்பட்டால் எங்கள் அமைப்புக்கு போன் செய்தால் போதும்; வீடு தேடிச் சென்று எங்கள் டாக்டர்கள் இலவசமாகச் சிகிச்சை அளிப்பார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் எங்களுக்கு போன் செய்த 30-க்கும் மேற்பட்ட முதியவர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். எங்கள் லட்சியம் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். அதற்கு அரசும் உதவ வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை'' என்கிறார் டாக்டர் நடராஜன்!

ம.சபரி, படங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன்