என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

என் ஊர்

ரோட்டுக்குக் கீழ்ப் பக்கம் தமிழ்நாடு...ரோட்டுக்கு மேல் பக்கம் பாண்டிச்சேரிபெருமாள் சூரமங்கலம்

##~##

''வயலும் வரப்புகளும்னு பசுமையான ஊர் சூரமங்கலம். நாங்க சிறு விவசாயிங்க. எங்ககிட்ட ஒண்ணே முக்கால் ஏக்கர் நிலம் இருந்துச்சு. வாழவைக்கிற நிலம், சின்ன வயசுல எனக்கு விடுமுறை தின விளையாட்டு மைதானமா இருந்துச்சு. அந்த அளவுதான் விவசாயம் பற்றிய புரிதல். முன்னாடி எங்க வீட்டுல படுக்க இடம் இருக்காது. வீடு முழுக்க நெல் மூட்டைகளா இருக்கும். இன்னிக்கு விவசாயமே இல்லாமப் போயிடுச்சு'' என்று சின்னப் பெருமூச்சுடன் தொடங்கினார் புதுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெருமாள்.

''எங்க ஊரு ரொம்பவும் சுவாரஸ்யமான எல்லைக்கோட்டுல இருக்குது. ரோட்டுக்குக் கீழ்ப்பக்கம் தமிழ்நாடு. ரோட்டுக்கு மேல்பக்கம் பாண்டிச்சேரினு வித்தியாசமான புவிப்பரப்பு. நெட்டப்பாக்கம் தொகுதியில் இருக்கு எங்க கிராமம். ஆறாம் வகுப்புப் படிக்க ரோட்டுக்குக் கீழ்ப்பக்கம் இருக்கிற ஓமந்தூரார் நடுநிலைப் பள்ளிக்கு வந்தாச்சு. ஒன்பதாவது, 10-வது படிக்கிறதுக்குத் திரும்பவும் ரோட்டுக்கு மேல்பக்கம் போயாச்சு. எங்க கிராமத்துல இருந்து நாலு கி.மீ. தூரத்துல இருந்த அரசுப் பள்ளியில படிச்சேன். அப்ப பஸ் வசதி இருந்துச்சு. ஆனாலும் நான், என் நண்பர்கள்னு ஒரு குரூப் நடந்துதான் போவோம். வறுமை எல்லாம் காரணம் இல்லை. ஒரு சந்தோஷம். ஊர்ல, நாட்டுல என்ன நடக்குது, யார் என்ன பண்றாங்கனு அரட்டை அடிச்சிக்கிட்டே நடப்போம்.

என் ஊர்

அப்படி நடக்குறதுக்குப் பழக்கப்படுத்திக்கிட்டதும், நாலு பேரோடு சேர்ந்து வேலை செய்யறதுக்கான விருப்பமும் 10-ம் கிளாஸ் விடுமுறையில எங்க நிலத்தில் என்னை நிறுத்தியது. 10-வது பாஸாயிட்டா மேல படிக்கணும். படிக்கணும்னா ஏகப்பட்ட செலவுகள் இருக்குல்ல... அதுக்குக் காசு வேணுமில்ல... படிப்பு மேல இருந்த தீராத ஆர்வம் என்னை அடுத்தவங்க நிலத்திலும் கூலியா வேலை செய்யவெச்சுது. 10-வது பாஸ் பண்ணி, ப்ளஸ் டூவும் பாஸ் பண்ணி கல்லூரிப் படிப்புக்கு நகரத்துக்கு வந்துட்டேன். எங்க நிலத்துல விவசாயம் செஞ்ச காலங்கள்ல பக்கத்துல இருக்கிற அய்யனார் கோயிலுக்குப் பொங்கல் வைக்கப்போவோம். அப்ப வசதியா இருந்த அந்தக் கோயில், இப்ப கேட்பாரற்றுக்கிடக்கு. என் கிராமத்தைத் தொலைச்சிட்டனோங்கிற ஒருவித சோக உணர்வு நகரத்துக்கு வந்தபிறகுதான் ஏற்படுது.

என் ஊர்

புதுவை தாகூர் கலைக் கல்லூரியில் படிக்கிறப்போ புதுச்சேரி மாணவர் அணிச் செயலாளரா இருந்தேன். அப்ப ஊர்ல இரவுப் பாடசாலை  நடத்தணும்னு யோசிச்சோம். அதுக்குத் தேவையான நிலம், கொட்டகை போடுற செலவு, சொல்லிக்கொடுக்குறதுக்கான ஆட்கள்... இதை எப்படிச் செயல்படுத்தப்போறோம்னு அடுக்கடுக்கா கேள்விகள். நிலத்தை என் நண்பரின் உறவினர் வாடகைக்குத் தர்றதா சொல்லிட்டார். அந்த வாடகைக்கு என்ன பண்றது? கிடைக்கிற நேரத்துல, கூப்பிடறவங்க நிலத்துல எல்லோரும் சோளம் அறுக்கப் போவோம். ஒவ்வொரு சோளமும் அறுபடறப்போ நம்ம கையும் அறுபடும். இப்படிக் கஷ்டப்பட்டுதான் இரவுப் பாடசாலையை நடத்தி னோம்

என் ஊர்
என் ஊர்

கட்சியில் முழுநேர ஊழியனானதுக்கு அப் புறம், நான் பேசிய முதல் கூட்டம் எழுத்தறிவு இயக்கம் சம்பந்தமானது. என் கன்னிப்பேச்சையும் என் ஊர் பார்த் திருக்கு. 2005-ல 'தலித் மக்கள் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தினோம்.

என் ஊர்

ஒரு பொறியியல் கல்லூரி வந்த பிறகும் எங்க ஊரில் ஒரு நூலகம் இல்லை. நான் கபடி விளையாடிய மைதானத்தில் இப்போ கிரிக்கெட் விளையாடுறாங்க. பெயரைச் சொல்லிக் கூப்பிடாம உறவைச் சொல்லிக் கூப்பிடுற கலாசாரம் எங்க போச்சோ? யோசிச்சுப் பார்த்தா... ஒருவகையில எங்க ஊரும் சிதிலமடைஞ்ச அய்யனார் கோயில் மாதிரித்தான் இப்ப இருக்கு!''

- சந்திப்பு மற்றும் படங்கள்: ந.வினோத்குமார்