என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

வலையோசை - கைகள் அள்ளிய நீர்

வலையோசை - கைகள் அள்ளிய நீர்

வலையோசை - கைகள் அள்ளிய நீர்

என்னா வில்லத்தனம்!

##~##

கைகேயி ராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்.

கிருத, திரேதா, துவாபர, கலியுகங்கள் ஆக யுகங்கள் நான்கு. கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல்), 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்துவிடும் என்கிறது இந்து மத சாஸ்திரம். இந்தப் பிரிவின் அளவு துவாபர யுகத்தில் 13 ஆண்டுகளாகவும், திரேதா யுகத்தில் 14 ஆண்டுகளாகவும், கிருத யுகத்தில் 15 ஆண்டுகளாகவும் இருந்தன. ராமாயணம் நடந்தது திரேதா யுகத்தில். ஆக தசரதனும், ராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும். ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் ராமனுக்குப் பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான் என்பதுதான் கூனி கைகேயிக்குச் சொல்லிக் கொடுத்த குயுக்தியின் பின்னணி.

வலையோசை - கைகள் அள்ளிய நீர்

என்னா வில்லத்தனம் கூனி?

 மூக்கின் மீது விரல்!

இந்தியாவின் கழிப்பிட வசதியின்மையைப் பற்றி யாரும் பெரிதாக மூச்சுவிட்டது இல்லை. உதாரணத்துக்குச் சென்னைக்குப் புதுச்சேரியில் இருந்து ஒருநாள் வேலையாக வரும் என்னைப் போன்றவர்களின் ஒருநாளைப் பார்ப்போம். என்னை ஒரு பெண்ணாகக் கற்பனைக்கு எடுத்துக்கொள்வோம். அதிகாலை வீட்டில் கழிப்பறையை உபயோகப்படுத்திய பின் என் பயணம் தொடங்குகிறது.

சென்னைக்கு, வழியில் எங்கும் நிற்காமல் வந்து சேர்கிறேன். என்னுடைய காலை உணவு அதைத் தொடர்ந்து வேலைகள் என்று தொடரும் ஒரு பரபரப்பான நாளில் சுகாதாரமான கழிப்பறைக்கு எங்கு இடம் இருக்கிறது? மீண்டும் பின்னிரவில் புதுச்சேரி திரும்பும் வரை எத்தனை முறை என் உபாதை, நான் விரும்பும் இடங்களில் தீர்ந்திருக்கிறது? பதில் மிகவும் கசப்பானதுதான். 'உணவு உண்ணும் ஹோட்டல்களில்’ என்ற பதில் புத்திசாலித்தனமானது. விடிந்தவுடன் மூடப்பட்டு இருக்கும் இயங்காத பொதுக் கழிப்பறைகளின் முன்னே நிற்பவர்களின் பதில்தான் எனக்குத் தேவையாக இருக்கிறது. தினம் தினம் ஒரு கழிப்பறையின் முன்னே தொடங்கும் அவர்களின் அவலம், வாழ்வெல்லாம் தொடர்கிறது.

வலையோசை - கைகள் அள்ளிய நீர்

திறந்தவெளிக் கழிப்பிடங்களை உபயோகிப்பவர்கள் அதை விரும்பி அசுத்தம் செய்வது இல்லை. வேறெந்த ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் அவர்களுக்குக் கண்முன்னே தெரிவது நடைபாதைகளும் ரயில் தண்டவாளங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமான திறந்த வெளிகளும்தான். இவர்களின் நிலையை மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். அதுவும் மாதவிடாய் நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் பற்றிப் புரிந்துகொள்ளவும் திட்டமிடவும் ஆட்சியாளர்கள் பெண்ணாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

பொதுக் கழிப்பறைகளைப்பற்றிப் பேசுபவர்களும் பொதுஇடங்களில் சுகாதாரம் பற்றிப் பேசுபவர்களும் துரதிருஷ்டவசமாக ஒரே கோட்டில் இணைவது இல்லை. தவிரவும் இலவசங்களாக வாரி வழங்கி நாட்டைக் குட்டிச்சுவராக்கி மேலும் மேலும் பால், பேருந்து, பெட்ரோல், டீசல் என்று நோகாமல் அடித்தட்டு மக்களின் மடியில் கையைவைக்கும் பொறுப்பற்ற அரசாங்கங்கள் தொடர்கையில் அவர்களின் பார்வைக்கு எட்டாத விளிம்பில்தான் கழிப்பறைகளும் சுகாதாரமும் இருக்கின்றன.

எத்தனை எத்தனை புதிய வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவிகின்றன? உள்ளூரிலேயே எத்தனை எத்தனை புதிய பெரும் வணிக நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன ஒவ்வோர் ஆண்டும்? அந்த நிறுவனங்களுக்கு முதலில் கண்ணில் படுவது பூங்காக்களை நிர்மாணித்து அவற்றைப் பராமரிப்பதும் சாலைகளில் தங்கள் பெயர் பொறிக்கப்பட்ட தடுப்பான்களை வழங்குவதும் மட்டும்தான் பிரதானமாக இருக்கிறது. புதிதாகப் பல்லாயிரம் கோடிகளில் தொடங்கும் அந்நிய நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படும்போதே ஒவ்வொரு நகரத்துக்கும் பல்லாயிரக்கணக்கான நவீன கழிப்பறைகளை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களுக்கு ஒரு நிபந்தனையாக்கி நகரத்தையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏன் தூய்மையாக்க முடியாது?

மாயா மாயா எல்லாம் மாயா!

இந்த இடுகையை எழுதிக்கொண்டு இருக்கும்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட்டில் மாநிலத் தேர்தல் முடிவுகளோடு எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளும் லாட்டரிச் சீட்டு விற்கும் வியாபாரிகளைப் போலக் கூவிக் கூவி கடைபரப்பிக்கொண்டு இருந்தார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் முகாமிட்டு ஏழைகளுடன் ஏழையாகவே கடந்த ஒரு வருடமாக தேவுடு காத்த ராகுல் காந்தி, இலவு காத்த கிளியானார். சிலைகளாலேயே கல்லாக் கட்டிய மாயாவதிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி மாயமானது. முலாயம்சிங்குக்கு அடித்தது யோகம். இனி அடுத்த ஐந்து வருடங்கள் அவர் காட்டில் மழை. இந்திய அரசியலை ஆட்டிவைக்கும் மூன்று பெண் முதல்வர்களில் முதல்வரான மாயாவதிக்கு அடுத்த ஐந்து வருடங்கள் கோர்ட் படிகளை மிதிக்கவே நேரம் சரியாக இருக்கும்.

வலையோசை - கைகள் அள்ளிய நீர்

அரசியலில் ஒரு சராசரி, நியாயமான மனிதன் எதிர்பார்க்கும் எந்த மாறுதலும் இப்போது தேர்தல் ஆணையம் நடத்திக்கொண்டு இருக்கும் தேர்தல் முறைகளால் ஏற்படாது. மனம் உவந்து தேர்தல்களில் கடுமையான மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப்படாமல் வெறுமனே கட்டப்பஞ்சாயத்து குண்டர்களுக்கும் தாதாக்களுக்கும் கட்சி வாரியாக, சாதி வாரியாக வேட்பாளர் நியமனம் கொடுத்தாலோ நூறு சதவிகிதம் ஓட்டுப்போட்டு ஜனநாயகக் கடமையாக ஆள்காட்டி விரலைக் கறையாக்க வாருங்கள் என்று கூவி, முக்கி முக்கி 60 சதவிகிதம் நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு கலந்துகட்டி முடிவுகளை அறிவித்து மாற்றி மாற்றி இரண்டு கட்சிகளும் கொள்ளையடித்து நாட்டைக் காயடித்துக்கொண்டு இருந்தாலோ வளர்ச்சி மற்றும் மாறுதல் என்பதெல்லாம் வெறும் கெட்ட வார்த்தைகளாகவே நீடிக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ரத்த சோகை பிடித்து லொக் லொக்கென்று இருமிக்கொண்டு பூட்ட கேஸாகத்தான் இருக்கும்!