ஜெ.முருகன்
##~## |
''ஆர்வமும் கற்றுக்கொள்ளும் நம்பிக்கையும் இருந்தால் சாதிக்க, படிப்பு ஒரு தடையல்ல என்பதற்குப் புதுவையைச் சேர்ந்த எஸ்.எம்.சி.ராஜேஷ் ஒரு நல்ல உதாரணம். ஒரே நேரத்தில் ஓவியராகவும் புகைப்படக்காரராகவும் திறமையில் மிளிர்கிறார் அவர்'' என்று நம் வாய்ஸ் ஸ்நாப்பில் பாராட்டுத் தகவல் பதிந்திருந்தார் புதுவை வாசகர் சரவணன்.
உண்மைதான். 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் ராஜேஷ். இவருடைய ஓவியங்களில் பெரும்பாலும் பராமரிப்பு இல்லாமல் பழமை பூசிய கற்சிலைகளே இடம்பிடித்திருக்கின்றன.
''சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். ஆனா, ஓவியக் கல்லூரியைப் பத்தி எல்லாம் விவரம் தெரியாது. அதனால 10-ம் வகுப்பு முடிச்சதும் விளம்பரப் பலகை எழுதற கடையில வேலைக்குச் சேர்ந்தேன். கொஞ்ச நாள் போனதும் வேலை மனசுக்குப் பிடிக்கலை. அப்போதான் போட்டோகிராஃபி மேல ஆசை வந்துச்சு. அப்பவும் முதல்ல செஞ்ச அதே தப்பைச் செஞ்சேன். ஒரு போட்டோ ஸ்டுடியோவுல வேலைக்குச் சேர்ந்தேன்.

கல்யாணம், சடங்குனு போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நாள்ல தனியா ஸ்டுடியோவும் ஆரம்பிச்சேன். அங்கேயும் படம் வரைஞ்சுக்கிட்டு இருப்பேன். அப்போதான் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களோட ஓவியங்களை போட்டோ எடுக்குற வாய்ப்புக் கிடைச்சுது. தேசிய விருது பெற்ற ஓவியர் மாணிக்கம், சர்வதேச வாட்டர் கலர் ஓவியர்கள் ஏழுமலை, ஆபேல் மாதிரியானவங்களோட படைப்புகளைப் பார்க்கவும் அவங்களோட பழகவும் வாய்ப்புக் கிடைச்சுது.

அரியாங்குப்பத்துல இருக்கிற ஒரு பாழடைந்த சிவன் கோயில் நந்தியை போட்டோ எடுத்து, அதையே வாட்டர் கலரில் ஓவியமா வரைஞ்சு மாணிக்கம் சாரிடம் காட்டினேன். 'நீங்க நல்லா வரையறீங்க. படிப்புக்கும் ஓவியம் வரையறதுக்கும் சம்பந்தம் இல்லை’னு ஊக்குவிச்சார் மாணிக்கம் சார்.

அப்புறம் ஊர் ஊராச் சுத்தி போட்டோ எடுக்குறது, போட்டோ எடுத்ததை ஓவியமா வரையறதுனு என்னை நானே பழக்கப்படுத்திக்கிட் டேன். என்னோட ஓவியங்கள் எல்லாமே வாட்டர் கலர் ஓவியங்கள்தான். பெரும்பாலும் இரண்டு கலர்கள் மட்டுமே ஒரு ஓவியத்துல பயன்படுத்துவேன். ஓவியர்கள் வரைஞ்ச ஓவியங்களை போட்டோ எடுத்துக்கொடுக் கிறதுக்கு நான் காசு எதுவும் வாங்குறது இல்லை.

எனக்குப் பழமையான சிலைகள், பராமரிப்பு இல்லாத பாரம்பரியக் கோயில்கள் மேல ஆர்வம் அதிகம். அதைப் பார்க்கும்போது எல்லாம் பெருமை, வருத்தம் ரெண்டுமே ஒரே நேரத்துல வரும். நான் 10-வதுதான் படிச்சிருக்கேன்னு பெரிசா வருத்தப்பட்டது இல்லை. படிப்புங்கிறது என்ன, கத்துக்கிறதுதானே? நான்தான் போட்டோகிராஃபியையும் ஓவியத்தையும் கத்துக்கிட்டேனே'' என்கிறார் ராஜேஷ்!