என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

தாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் !

கட்டுரை, படங்கள் : ந.வினோத்குமார்

##~##

'பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாண்டிச்சேரி!’ - புதுவை கடற்கரை சாலைப் பகுதியில் புனித லூயி வீதியில் அமைந்து இருக்கிறது இந்த ஆய்வு நிலையம். வெளியூர்வாசிகள் 'ஏதோ கல்லூரிபோல’ என்று நினைத்து அந்த பிரெஞ்சு கலைநயம் மிக்க

மஞ்சள் நிறக் கட்டடத்தைக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், ஆசியாவிலேயே அதிக அளவில் பல வகையான தாவரங்களின் படிமங்கள், மலர்களின் மகரந்தத் தூள்கள் போன்றவற்றைச் சேமித்துவைத்திருக்கும் ஒரே நிறுவனம் இதுதான் என்பது பலரும் அறியாத செய்தி!

''1960-ல் இங்கு மகரந்தத் தூள்களைச் சேகரிப்பதற்காக, ஆய்வகம் ஒன்று தொடங்கப்பட்டது. அப்போதிருந்து இப்போதுவரை 22,000-த்துக்கும் அதிகமான பூக்களின் மகரந்தத் தூள்களைச் சேகரித்திருக்கிறோம். வெப்ப மண்டல மலர்களின் மகரந்தத் தூள்களைப் பற்றிய ஆய்வகம், இந்தியாவிலேயே இது ஒன்றுதான்'' என்று பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார் ஆய்வாளர் முனைவர் அனுபமா.

தாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் !

'' 'மகரந்தத் தூள்களை எதற்காகச் சேகரிக்க வேண்டும்?’ என்று பலரும் யோசிக்கலாம். மகரந்தச் சேர்க்கைதான் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பூக்களில் இருக்கும் மகரந்தத் தூள்கள் மட்டும் அழியாது. தொல்லியல் பொருட்கள், மண், தேன் கூடுகள் எனப் பலவற்றிலும் இந்த மகரந்தத் தூள்கள் கலந்திருக்கும். இவற்றைத் தனியே எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தும்போது, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி அது தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை என்னென்ன மாற்றங்களுக்கு உட்பட்டு இருக்கிறது என்பது தெரியவரும். மேலும், எதிர்காலத்தில் அந்த நிலப்பரப்பு எப்படி இருக்கும், அது மனித இனத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவரும். அதற்கு ஏற்றாற்போல் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில தாவரங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே ஆரம்பத்தில் இருந்து அதே தாவரங்கள்தான் இருந்தன என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதே நிலத்தில் 1,000 வருடங்களுக்கு முன்பு பாலைவனம் இருந்திருக்கலாம். பிறகு அது காடாக மாறி இருக்கலாம். அல்லது வெறும் புல்வெளியாக மாறி இருக்கலாம். அதை எல்லாம் அறிவதற்கு இந்த மகரந்தத் தூள் ஆய்வு மிகவும் உதவும். இந்த ஆய்வு சுற்றுச்சூழல், வரலாறு, புவியியல், தொல்லியல் துறை போன்ற பல துறைகளுக்குப் பயன்படும்'' என்று ஆய்வகத்தில் நடைபெறும் பணி பற்றி அனுபமா விளக்க, ஆய்வகத்தின் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தார் இன்னொரு பணியாளரான பிரசாத்.

தாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் !

''பொதுவாக, மகரந்தத் தூள்கள் பரிணாம மாற்றங்களுக்கு உட்படாது என்பதால், சுமார் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த தாவர இனங்களின் மகரந்தத் தூள்கள்கூட எங்களிடம் இருக்கின்றன. இந்தத் தகவல்களை எல்லாம் கணினியில் பதிவுசெய்திருக்கிறோம். மகரந்தத் தூளின் வடிவம், அளவு ஆகியவற்றை வைத்து அது என்ன வகையான தாவர இனம், அதன் தன்மைகள் என்ன, எந்தக் காலகட்டத்தில் இருந்தது, எங்கே இருந்தது என்பன போன்ற விவரங்களை எல்லாம் ஒரே சொடுக்கில் தெரிந்துகொள்ள முடியும்!'' என்று பெருமைகளைப் பட்டியலிடுகிறார் பிரசாத். அடுத்ததாக ஹெர்பேரியம் ஆய்வகத்தைப் பற்றி விளக்கினார் ஆய்வாளர் ஐயப்பன்.

தாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் !

''நீங்கள் ஆய்வுக்காகக் காடுகளுக்குச் சென்றால், அங்கே ஏதேனும் ஒரு மரத்தைப் பார்த்து அது என்ன குடும்பம், என்ன இனம் என்று அறிய வேண்டுமானால் அதற்கு ஏகப்பட்ட புத்தகங்களைச் சுமந்துகொண்டு போக வேண்டும். ஆகவே இதை எளிமைப்படுத்த இந்த நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டது. அதாவது மரங்களின் இலைகளைவைத்து 'ஹெர்பேரியம்’ செய்து, அவற்றைப் பற்றிய விவரங்களை எல்லாம் பதிவுசெய்தோம். அதற்குப் பிறகு அந்தத் தாவர இனத்தை 'ஹை ரெஸல்யூஷனில்’ படம் பிடித்து அந்தத் தாவரத்தின் ஆதி முதல் அந்தம் வரையிலான விவரங்களை எல்லாம் மென்பொருள் மூலம் தொகுத்திருக்கிறோம். 'பயோடிக்’ எனும் இந்த மென்பொருளை, இப்போது எங்கள் இணையதளத்திலும் கொடுத்திருக்கிறோம். தாவரவியலில் ஆர்வம் உள்ள அனைவரும் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்'' என்கிறார் ஐயப்பன்.

தாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் !

வெளியே வந்தபோது ஓர் அடர்ந்த காட்டுக்குள் அலைந்து திரிந்ததைப் போன்ற ஓர் உணர்வு !