சந்திப்பு மற்றும் படங்கள்: ந.வினோத்குமார்
##~## |
''இந்திய நாகரிகத்தின் வரலாற்றை ஆராயும்போது வெட்கப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஏனெனில், சாதியப் படிநிலைகளோடுதான் நம் வரலாறு நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது!'' - இப்படிச் சொல்பவர் ஆபிரகாம் எராலி. டி.டி.கோசாம்பி, இர்ஃபான் ஹபீப், ரொமீலா தாப்பர், ராமச்சந்திர குஹா போன்ற இந்திய வரலாற்று ஆசிரியர்களின் வரிசையில் முக்கியமானவராகக் கருதப்படுபவர். இவர் எழுதிய 'தி ஃபர்ஸ்ட் ஸ்பிரிங்’ எனும் புத்தகம், ஆயிரம் ஆண்டு கால இந்திய நாகரிகத்தின் வரலாற்றைச் சொல்லி பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை நகரத்தைச் சார்ந்து வெளிவந்த 'அசைட்’ எனும் ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இருந்தவர். தற்போது புதுச்சேரியில் தங்கி தன் எழுத்துப் பணியை மேற்கொண்டுவருகிறார். அவரிடம் பேசியபோது...
''மன்னர்களைப் பற்றிய வரலாற்றுப் புத்தகங்களில் அந்தப்புரம் குறித்த செய்திகள் கணிசமாக இருப்பது ஏன்?''
''நடந்த நிகழ்வுகள் அப்படி இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? டெல்லி சுல்தான்களின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது அவர்களின் சபைக்கு அந்தப்புரப் பெண்களை அழைத்துவந்து நிர்வாணமாக நடனமாடவைத்து அரசர்களும் அவர்களுடன் இணைந்து ஆடுவார்களாம். இந்தத் தகவல்கள் எல்லாம் மூல ஆதாரங்களில் இருந்து தெரியவருகின்றன. அவற்றைத் தொடர்ந்து செல்லும்போது அன்றைக்கு வாழ்ந்த மக்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை எல்லாம் தெரியவரும். அவற்றை நீங்கள் சொல்ல வேண்டுமானால், இந்த அந்தப்புர விஷயங்களையும் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும்!''

''பண்டைய இந்திய நாகரிகத்தின் மிச்சசொச்சங்கள் இன்றும் தொடர் கின்றனவா?''
''நம்முடைய நாகரிகத்தைப் பற்றி பலருக்கும் பல்வேறுவிதமான தவறான புரிதல்கள் இருக்கின்றன. இந்து மதம்தான் பண்டைய நாகரிகத்தின் அடையாளம் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய மதம், பௌத்தம்தான். பௌத்தம், சமணம், அஜிவிகா எனும் மூன்று மதங்கள்தான் பின்பற்றப்பட்டு வந்தன. அந்த மூன்று மதங்களுமே 'கடவுள் இல்லை’ என்று சொன்னவை. அஜிவிகா மதம் பற்றி யாரும் எந்தக் குறிப்பும் எழுதி வைக்கவில்லை. மற்ற மதத்துக்காரர்கள் தங்களின் இலக்கியங்களில் போகிற போக்கில் எழுதிவைத்த குறிப்புகள்தான் இன்று நம்மிடையே இருக்கின்றன. இந்து மதத்தின் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மன் போன்றவைகளுக்கு சிலைகள் இருக்கவில்லை. அவற்றை யாரும் வழிபடவும் இல்லை. நீங்கள் கேட்கிறபடி, பண்டைய நாகரிகத்தின் சொச்சங்கள் இன்றும் தொடர்கின்றன. ஆனால், அந்தத் தொடர்பு அறுந்துபோவதுதான் நமக்குத் தேவை. ஏனெனில் சாதி பாகுபாடுகள், எது நடந்தாலும் சகித்துக்கொள்கிற மனப் பாங்கு போன்ற 'நாகரிகத் தொடர்ச்சிகளை’ விட்டெறிந்தால்தான் நம்மால் வளர முடியும்!''
''இந்திய வரலாற்றை ஒரு வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர் அணுகு வதற்கும் இந்திய வரலாற்றாய்வாளர் அணுகுவதற்கும் என்ன வித்தியாசங்கள் இருப்பதாக நினைக்கிறீர்கள்?''
''நம்முடைய வரலாற்றை நமக்கு அறிமுகப்படுத்தியவர்களே ஐரோப்பியர்கள்தான். அப்படி இருக்கும்போது உள்நாட்டு ஆய்வாளர்கள், வெளிநாட்டு ஆய்வாளர்கள் என்று பிரிப்பது சரியாக இருக்காது. வேண்டுமென்றால், கல்வி நிறுவனம் சார்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அல்லாத மற்ற வரலாற்று ஆசிரியர்கள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்று வித்தியாசப்படுத்தலாம். கல்வியாளர்கள் எழுதுகிறபோது வரலாற்றுப் புத்தகங்கள் போரடிக்கும். வரலாறு என்பது கடந்த காலத்தில் வாழ்கின்ற அனுபவத்தைத் தர வேண்டும். இந்த நிலையில் இருந்துதான் மற்ற வரலாற்று ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். அதனால் அவர்கள் எழுதும் வரலாற்றுப் புத்தகங்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன!''
''வரலாற்றாசிரியர் சொல்லும் தரவுகளில் எந்த அளவு நம்பகத்தன்மை உள்ளது?''
''பல வரலாற்றாசிரியர்கள் நான் முன்பே சொன்ன 'மூல ஆதாரங்களில்’ இருந்துதான் தகவல்களை எடுத்து, தொகுத்துத் தருகிறார்கள். ஆனால், அந்த மூல ஆதாரங்களில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை யாரால் சொல்ல முடியும்? இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் எழுதி இருப்பது எல்லாம் உண்மை என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அன்றைய நாட்களில் மன்னர்களின் மனதைக் குளிரவைப்பதற்காக, அவர் சபையில் இருந்த மந்திரிகளே கல்வெட்டை எழுதச் சொல்லி இருக்கலாம். அதனால் எந்த ஒரு வரலாற்றுப் புத்தகத்தையும் படிக்கிறபோது, ஒருவித சந்தேக உணர்வு இருப்பது நல்லதுதான்!''
''இன்றைக்குப் பல கல்லூரிகளில் வரலாறு ஒரு பாடமாக இல்லையே?''
''கல்வித் துறையில் இருந்து நான் விலகி 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என் அனுபவத்தில் கல்லூரிகளில் பி.ஏ. ஹிஸ்டரி எனும் பாடப் பிரிவைத் தூக்கிவிடலாம் என்றுதான் சொல்வேன். காரணம், நாள் முழுக்கப் பேராசிரியர்கள் உரை நிகழ்த்திக் கொண்டே இருப்பார்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, விவாதங்களை மாணவர்களிடையே ஏற்படுத்திவைக்க வேண்டும். அவர்களாகவே பாடங்களைத் தங்களின் தேடல்கள் மூலம் கற்றுக்கொள்கிற நிலையை உருவாக்க வேண்டும். மற்றபடி வரலாற்றுப் பாடத்தைப் படிப்பது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யாது. இது யதார்த்தம். இதைப் புரிந்துகொள்ளாமல் 'யாரும் வரலாற்றைப் படிப்பது இல்லை. பொறியியல் படிப்பை மட்டுமே படிக்கிறார்கள்’ என்று குற்றம்சாட்டுவது தவறு!''
''இப்போது என்ன பணியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?''
''தற்போது இரண்டு புத்தகங்களை எழுதிவருகிறேன். வயது 76 ஆகிவிட்டது. மரணம்தான் என் எழுத்துப் பணியை நிறுத்தும். தற்போதைக்கு எழுதுவது மட்டுமே எனக்கு ஓய்வு தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது!''