என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

அய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு!

அய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு!

##~##

''காசு கொடுத்த அய்யாவுக்கும் பழம் கொடுத்த பாப்பாவுக்கும் ஒரு முத்தம் கொடு, அந்த அம்மாவுக்கு ஒரு உம்மா கொடு'' என்று குரல் கேட்டதும், முகத்தைத் தூக்கி நாக்கால் நன்றியோடு முத்தம் தருகிறது அந்த பூம் பூம் மாடு. ''இந்த மாசம் மழை வருமா? அய்யாவுக்கு உத்தியோகம் கிடைக்குமா? தாயிக்கு ஆடி போய் ஆவணியில கல்யாணம் முடியுமா?'' என்று பல கேள்விகளுக்குத் தலையை 'ஆம், ஆம், ஆம்’ என்று 60 டிகிரிக்கு ஆட்டுகிறது மாடு. அதை முகம் மலரப் பார்த்து ரசிக்கிறார்கள் சுற்றிலும் இருப்பவர்கள்.

 தேனியில் பூம் பூம் மாட்டுடன் வந்த தாதர் குமார், ''பூம் பூம் மாடுனுதான் எல்லோரும் சொல்றாங்க. அதுக்கு இன்னொரு பெயரும் இருக்கு. 'சங்கரன்கோவில் மாடு’ன்னும் சொல்வாங்க. முகத்துல பத்து, பருவு, மருவுன்னு இருக்கிறவங்க அது சரியாகறதுக்காக சங்கரன்கோவிலில் இருக்கும் ஆவடியாச்சி

அய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு!

அம்மன் கோயிலில் நேர்ந்துக்கிட்டு, நேர்த்திக் கடனை எங்களை மாதிரி மாட்டுக்காரங்ககிட்ட கொடுப்பாங்க. நாங்க அவங்க சார்பா சங்கரன்கோவிலில் போய் போட்டுருவோம். அதனாலதான் சங்கரன் கோவில் மாடுன்னு சொல்வாங்க. பெரும்பாலான பூம் பூம் மாட்டுக்காரங்க ஆந்திராவில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வந்தவங்க. 'ஆடி - அமாவாசை’ தான் எங்களுக்கு சீஸன். நேர்த்திக் கடனாக உப்பு, மிளகு, காணிக்கை,  தானியங்கள் தருவாங்க. அதைஅப்படியே கொண்டுபோய் சங்கரன்கோவில்ல போடுவோம். இதற்கு இடையில் சித்திரைத் திருவிழாவில் மதுரையில் கொடியேற்றியதும், மதுரைக்குக் கிளம்பிப்போய் திருவிழாவுல கலந்துக்குவோம். அழகர் ஆத்துல இறங்கும்போது, 'எல்லோருக்கும் சௌபாக்கியம் உண்டாகட்டும். அவர்கள் குடும்பத்துக்குக் கண்ணீர், கவலை தீரணும். கஷ்டம் நஷ்டம் தீரணும். இவர்கள் கொடுத்த காணிக்கை இன்னும் பெருகணும்’னு வேண்டிப்போம்காணிக்கையாக வழங்கிய தானியங்கள்ல ரெண்டு படி, மூணு படினு ஆற்றில் விட்டுட்டு, ரெண்டு, மூணு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு, மீதம் இருக் கும் தானியத்தோடு வீட்டுக்கு வந்துருவோம்!'' என் றார்.

அய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு!

இன்னொரு பூம் பூம் மாட்டுக்காரரான செல் வம் ''வருஷத்துக்கு ஆறு மாசம் வீடு, அடுத்த ஆறு மாசம் தொழில்னு இருப்போம். எல்லா ஊரையும் கால்நடையாவேச் சுத்துவோம். எங்க வாரிசுங்க பெரியவங்களா ஆனதும், தொழிலுக்கு அனுப்பிருவோம். புதுசாத் தொழில் தொடங்கு றவங்க பணம் கொடுத்து மாடு வாங்க மாட் டாங்க. ஊரில், கிராமப்புறங்களில் திரியும் கோயில் மாடுகளைக் கேட்டு வாங்கிருவோம். முதல்ல மாடு பழகாது. மாட்டைப் பிடிச்சதுமே மதுரை அழகர் கோயில் போய் தீர்த்தம் வாங்கி, மாட்டுக்குக் கொடுத்துட்டு தலையை ஆட்டவைக்க கத்திரிக்காய், வாழைப்பழம் கொடுத்து பழக்குவோம். காலைத் தூக்குறதுக்குக் காலில் கயிறைக் கட்டி பழக்குவோம். முத்தம் கொடுக்கு றதுக்கு சொளகில் அரிசி, வாழைப் பழம் தந்து நாக்கால் நக்கவிட்டு முத்தம் தரப் பழக்குவோம். எங்களோட வலது கை, இடது கை, கால்னு ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதை மாடு நல்லாப் பழகின பின்னாடிதான் தொழிலுக்கு இறக்குவோம். காலம் மாறிப்போச்சு. முன்ன மாதிரி இப்ப மரியாதை கிடைக்கிறது இல்லை. நாள் பூரா தோள்ல உருமி, கொட்டு, போர்வை, பாத்திரங்கள், மாட்டுக்குத் தேவை யான அலங்காரம், மாட்டுத் தீவனம்னு பத்து கிலோவைத் தூக்கிச் சுமக்கணும். இருந்தாலும் வருமானம் எதுவும் வர்றது இல்லை. எங்ககுடும் பம் எல்லாம் மதுரை சக்கிமங்கலத்தில் தங்கி இருக்கோம். முதல் முறையா எங்க குழந்தைங்க 50 பேர் ஸ்கூலுக்குப் படிக்கப் போறாங்க. அவங் களும் உங்களை மாதிரி சீக்கிரமே நல்ல உத்தி யோகத்துக்கு வந்துருவாங்க'' செல்வம் சொல்லி முடிக்க, தன்னிச்சையாகத் தலையை 'ஆமாம்’ என்று ஆட்டுகிறது பூம் பூம் மாடு!

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி