என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

கெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை!

தன்னம்பிக்கை உயரம் கூட்டும் கார்த்திகா

##~##

திண்டுக்கல் மாவட்டம் லட்சுமணம்பட்டியில் அந்த வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது கார்த்திகாவின் குரல். ''எல்லாம் 23-ம் பக்கம் எடுங்க!'' கார்த்திகாவின் குரல் கேட்டதுமே மாணவர்கள் பரபரவென புத்தகத்தைப் புரட்டுகிறார்கள். சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கும் கார்த்திகாவின் மொத்த உயரமே மூன்று அடிதான். காரணம் வளர்ச்சிக் குறைபாடு நோய்.  

 இவருடைய பெற்றோர் திம்மையனும் சிக்கம்மாளும் கூலி வேலை செய்பவர்கள். வறுமையின் கூடுதல் சோகமாக கார்த்திகாவுக்கு நோய் தாக்கி கை, கால்கள் வளைந்துவிட்டன, மார்பு எலும்பு, முதுகுத் தண்டு வளைந்துவிட்டதால், வளர்ச்சி அடையாமலேயே இருந்துவிட்டார்.

'எனக்குப் படிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, என்னால் தனியா எங்கேயும் போக முடியாது. ரொம்பத் தூரம் நடக்க முடியாது. அதே மாதிரி தனியா எந்த வேலையையும் செய்ய முடியாது. அப்பாவுக்குக் கிடைக்கிற கூலி கொஞ்சம்தான். இருந்தாலும் எங்களைப் படிக்கவெச்சார் அப்பா. நானும் என் தம்பி மணிகண்டனும் கஷ்டத்துக்கு நடுவுல நல்லாவே படிச்சோம். எங்க ஊர்ல இருக்கிற பள்ளிக்கூடத்துல அஞ்சாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அதுக்கப்புறம் ஆறாம் வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரைக்கும் தினமும் நாலு கி.மீ. பஸ்ல போய் வேடச்சந்தூர்ல படிச்சேன்.

கெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை!

என்னால தனியா ஸ்கூல் போய் வர முடியாது. தினமும் என் தம்பி என் ஸ்கூல் பேக்கை எடுத்துக்கிட்டு வருவான்.  நான் எங்கேயாச்சும் வெளியில போகணும்னா அப்பா சைக்கிள்ல கூட்டிட்டுப் போவாரு. பல நாள் என்னை ஸ்கூலுக்கு தூக்கிக்கிட்டு, நடந்தே கொண்டுபோய் விட்டுட்டு வந்திருக்கார். நிறையப் பேர் கிண்டல் பண்ணினாங்க. நிறையப் பேர் உதவி பண்ணினாங்க. நான் கெட்ட விஷயங்கள் எதையும் மனசுக்குள்ள ஏத்திக்கவே இல்லை. கஷ்டப்பட்டு படிச்சதுக்கு நல்ல பலன் கிடைச்சுச்சு. 10-ம் வகுப்புல 407 மார்க் வாங்கினேன். 10-ம் வகுப்பு முடிச்சதும் என் படிப்பைத் தொடர 'விஜயலட்சுமி அறக்கட்டளை’ உதவி செஞ்சுது. நிறைய கஷ்டங்களுக்கு நடுவுல படிச்சு ப்ளஸ் டூ-வுல 1,044  மார்க் வாங்கினேன்.

கெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை!

ஆனா, மேற்கொண்டு என்ன படிக்கிறதுனு தெரியலை. அப்பா என்னை டீச்சர் டிரெய்னிங் படிக்கச் சொன்னார். ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லாரும் படிக்கிறதுக்கு உதவி செஞ்சாங்க. படிப்பு முடிஞ்சதும் வேலை கேட்டு

கெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வாராவாரம் மனுகொடுத்தேன். அப்போ கலெக்டராக இருந்த நாகராஜன் சார், என்னைப் பார்த்துட்டு, 'அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின் கீழ் பாலகிருஷ்ணபுரத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் வேலை கொடுத்தார். நான் கார்த்திகா டீச்சரா மாறிட்டேன். நான் இப்போ இந்த ஸ்கூலோட  மையக் காப்பாளராக இருக்கேன். பாதியில் படிப்பை நிறுத்தின குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித்தர்றேன். நான் படிச்சதோட, நாலு பேரைப் படிக்கவைக்கிறது சந்தோஷமா இருக்கு. இப்போ எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இனிமே வாழ்க்கையில எது வந்தாலும் சமாளிப்பேன்!'' என்கிறார் நம்பிக்கையாக.

சா.வடிவரசு
படங்கள்: வீ.சிவக்குமார்