என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

மண்ணை மதிக்கிற பூமி!

மண்ணை மதிக்கிற பூமி!

##~##

ணப் பயிர் விளைந்து பணம்கொடுத்த நிலத்தையே கூறுபோட்டு பணம் பார்க்கிற இந்தக் காலத்திலும், சித்திரையை ஏர் விட்டு வரவேற்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே உள்ள பச்சேரி கிராம மக்கள். தொடர்ந்து பல வருடங்களாகப் பழமை மாறா மல் கலப்பையும் கையுமாக 'ஏர் விடு திருவிழா’ வைக் கொண்டாடிவருகிறார்கள்.

வேலை தேடி தமிழ்நாட்டின் எந்த மூலைக்குப் போய் இருந்தாலும் திருவிழாவுக்கு வந்து குவிந்துவிடுகிறது இளைஞர் பட்டாளம். காலை கிழக்கு வெளுப்பதற்குள் முளைக்கொட்டு திண்ணையில் ஊரே கூடிவிடுகிறது.

அனைவரின் பெயர்கள் அடங்கிய சீட்டுகள் கொட்டப்பட, ''எனக்கு சீட்டு விழ வேண்டும் அய்யனாரே! ரெட்டைக் கிடாவோடு சீமைச் சரக்குப் படைச்சுடுவோம்'' எனக் கோரிக்கை யோடு வெள்ளந்தியாக மனம் உருக வேண்டி நிற்கிறார்கள் குடும்பத் தலைவர்கள். பளபளப் பாகக் கொம்பு சீவி வர்ணம் அடித்து, மாட்டு வண்டி மேக்கால் வைத்ததால் தழும்பேறிப் போன திமிலோடு திமிராக நிற்கின்றன மயி லைக் காளைகள் இரண்டு.

மண்ணை மதிக்கிற பூமி!

''இது மன்னர் காலத்துல தங்க கொலுவெச்சு உழுத பூமி. 'ஏர் விடு திருவிழா’ அன்னைக்கு சீட்டு குலுக்கல்ல பேருவந்தா, விவசாயம் பொங்கி பெருகும்கிறது ஐதீகம். மணி கட்டி மாலை போட்டு, புது ஏரு கட்டி சிம்பலங் கொட்டுவெச்சு உடையனாதாபுரம் கோனாரு வயலுக்கு ஊரே சேர்ந்து தூக்கிட்டுப்

மண்ணை மதிக்கிற பூமி!

போவோம். உடைமரத்து விளார்ல தார்க் குச்சி செஞ்சு ஏரைப் பூட்டி வயல்ல உழுது வண்ணக் கொட்டான்ல விளைஞ்ச தானியம் கலந்து விதைச்சுடுவோம். ஏரு ஓட்டி கரை ஏறுற ஆணுக்கு முறைப் பொண்ணுங்க குலவைப் போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்புக் கொடுப்பாங்க. அவங்க சந்தோஷப்படுற அளவுக்குப் பணம் கொடுக்கணும். இப்படிச் செய்றதால வருஷா வருஷம் தவறாம வெள்ளாமை விளையும்னு நம்புறோம்.

பச்சை குறைஞ்சு வயல் காய ஆரம்பிச்ச உடனே காளைக எல்லாம் கண்ணீர் விடும்னு பொழிகாரன் பாடக் கேட்டு இருக்கேன். ஆனா, இப்ப பொழிகாரனும் இல்லை. மாடுகளும் இல்லை. விதைக்கிறது தொடங்கி கதிரு அறுக்கிற வரைக் கும் எல்லாமே மிஷினா மாறிப் போச்சு. ஆனாலும் எங்க ஊர்ல வீடு தவறாம கலப்பை இருக்குது. தைத் திருவிழா அன்னைக்கு சூரியனுக்கு நன்றி சொல்ற

மண்ணை மதிக்கிற பூமி!

மாதிரி இந்த ஏர் விளையவெச்சுக் கொடுக்கிற வயலுக்கு நன்றி சொல்ற விழா.

ஏர் விட்டு முடிச்ச உடனே ஊர்த் திடல்ல வட மாடு பிடிச்சு,கடா வெட்டி ஒரே கும்மாளமா இருக்கும். இளந்தாரிக எல்லாம் ஒயில் ஆடி கம்பு சுத்தி ஜாலியா இருப்பாங்க. பல பேரு கல்யாணத்துக்குப் பொண்ணு மாப்பிள்ளை பார்க்கிறதே அன்னைக்குத்தான்.

காலம் ரொம்பவே மாறிட்டு வருது. ஆனா, நாங்க மாற மாட்டோம் சார். நன்றி சொல்லலைனா மனுஷனே கிடையாது. எத்தனை வருஷம் ஆனாலும் வயலுக்கு நன்றி சொல்வோம்!'' என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த மாரிமுத்து.

- பேச்சி மகன்