Published:Updated:

நெஞ்சில் நிறைந்த குமரன் !

ஷைலஜாகண்ணா

##~##

ராஜேந்திரன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக் காக்க உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர்.

ராணுவப் பணி முடிந்து ஊர் திரும்பியவருக்கு, நம் மக்களில் பலர் பாரத நாட்டின் அருமை பெருமைகளை அறியாமல் சுயநலமாக வாழ்வதும், தொலைக் காட்சித் தொடர்களில் மூழ்கிக்கிடப்பதும் வருத்தமாக இருந்தது. விழுதுகளில் பழுது வராமல் காக்க வேண்டிய வேரே நிலத்தை வெடித்துக்கொண்டு வெளியே வர முயற்சிப்பது கண்டு திகைத்தார். வேர்கள் வெளியே தெரிந்தால், மரங்கள் சாய்ந்துவிடாதோ? இளைய தலைமுறையும் சினிமா, கேளிக்கை என்று அலைவதாகவே அவருக்குப் பட்டது. இளைய தலைமுறைக்குத் தேசிய உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருந்தார்.

அன்று ஆகஸ்ட் 15. அவர் பகுதியில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்று சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு தலைமை ஏற்க ராஜேந்திரனை அழைத்தது. மேடையில் நடுநாயகமாய் அமர்ந்தவரைப் பள்ளி நிறுவனம் பாராட்டி அறிமுகப்படுத்தியது. கலை நிகழ்ச்சிகள் பலவும் நடந்தன.

நெஞ்சில் நிறைந்த குமரன் !

திரைப் பாடல்கள் பலவற்றுக்கு குழந்தைகள் நடனமாடினர். பாரதியார் பாடல்களும் பாடப்பட்டன. ராஜேந்திரனைச் சிறப்பு விருந்தினராகக் கௌரவித்து, மலர்க்கொத்தினைக் கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியர், அவரை சில வார்த்தைகள் பேச அழைத்தார். ராஜேந்திரன் புன்னகை யுடன் எழுந்தார். பேச ஆரம்பித்தார்.

நிகழ்ச்சிகளைப் பாராட்டியவர் இறுதியில், ''மாணவர்களே! மேலை நாட்டுத் திரைப் பாடலும் நம் நாட்டுத் திரைப் பாடலும் அட்சரம் பிசகாமல் பாடுகிறீர்கள். சிலர் பாரதியார் பாடலையும் அப்படிப் பாடியதில் மகிழ்ச்சி. ஆனால், உங்களுக்கு எல்லாம் நம் நாட்டுத் தேசியகீதம் நன்கு தெரிந்து இருந்தால் அதுதான் பெருமை! எங்கே, இந்தக் கூட்டத்தில் தேசியகீதத்தைப் பிழையின்றிப் பாடக்கூடியவர் யார்? கை தூக்குங்கள்'' என்றார்.

சில மாணவர்கள் கைகளைத் தூக்கினர். ராஜேந்திரன் அவர்களை மேடைக்கு அழைத்தார். ''தேசியகீதத்தைப் பிழை இல்லாமல் முழுவதும் சரியாகப் பாடுபவர்களுக்கு, பாடி முடிந்ததும் என் அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய் தரப்போகிறேன்'' என்று அறிவித்தார்.

மூன்று பேர் முக்கால்வாசி பாடும்போது திணறிப்போய், மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். கடைசியாக வந்த மாணவன் பிழையே இல்லாமல் மிகச் சரியாகப் பாடி முடிக்கவும் கூட்டம் கைதட்டியது.

ராஜேந்திரன் அவனைத் தழுவிக்கொண்டார். ''உன் பேர் என்னப்பா?'' என்றார். ''குமரன். கொடிகாத்த குமரன் நினைவாய் என் தந்தையார் வைத்த பெயர் அய்யா'' என்றான்.

''ஆஹா! அதனால்தான் ரத்தத்திலேயே தேசிய உணர்வு வந்துள்ளது உனக்கு. உணர்வுப்பூர்வமாய் வார்த்தைகளை விழுங்காமல், அப்படியே பாடினாய் குமரா! இந்தா உனக்கு என் பரிசு ஆயிரம் ரூபாய்'' என்று அவன் கையில் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட குமரன், ''நன்றி அய்யா'' என்று கை குவித்துவிட்டுக் கீழே இறங்கினான்.

பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு வந்த ராஜேந்திரன், சில நிமிடங்களில் வீட்டுக் கதவை யாரோ தட்டவும் வாசலுக்கு வந்து கதவைத் திறந்தார். வாசலில் குமரன். ''அட குமரா நீயா? வாப்பா'' என்றார் மகிழ்ச்சியாக.

''வணக்கம் அய்யா... அதிகம் பேச நேரம் இல்லை. பரீட்சைக்குப் படிக்கணும். இந்தாங்க ஆயிரம் ரூபாய்'' என்றான் மென்மையான குரலில்.

ராஜேந்திரன் வியப்புடன், ''அது தேசியகீதத்தை நீ பிழையின்றிப் பாடினதுக்குப் பரிசாக நான் கொடுத்தது'' என்றார். ''தெரியும் அய்யா... உங்கள் அன்புக்கு நன்றி! ஆனால் தேசியகீதத்தைத் தெரிந்துவைத்து இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியப் பிரஜையின் கடமை. நான் கடமையைத்தான் செய்தேன் அதற்கு ஊதியம் வாங்கலாமா? மேடையில் மறுத்து இருந்தால், அங்கே உங்களை நான் அவமதித்தது போலாகுமே என்றுதான் இங்கே தனியாக உங்களைப் பார்த்துக் கொடுக்க வந்தேன்'' என்றான் குமரன்.

ராஜேந்திரனுக்கு எல்லையில் தன் சாகசங்களுக்குப் பெற்ற எத்தனையோ பதக்கங்களைவிட குமரன் திரும்பக் கொடுத்த ஆயிரம் ரூபாய் நெஞ்சை இன்னமும் நிமிரவைத்தது.