மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 41

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

நானறிந்த புரட்சிப் புயல்களில் அவரும் ஒருவர். தீவிர சமூகச் சிந்தனையாளர். பேச ஆரம்பித்தால், புரட்சி கால் டாக்ஸி புக் பண்ணி, வந்துகொண்டு இருக்கிற மாதிரியே இருக்கும்.

வர் என் நண்பர்தான்!

 அவரை முதன்முதலில் பார்த்தது ஏதோ ஒரு ஷாம்பு கம்பெனி பிரஸ் மீட்டில். கிழிந்த லெதர் பேக்குடன், ஓட்டை டி.வி.எஸ். 50-யில் வந்திருந்தார். பழைய பேன்ட் - சட்டை, ஒரு வார தாடியோடு எல்லோருக்கும் உற்சாகமாக பிரஸ் ரிலீஸைக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த கம்பெனிக்கான பி.ஆர்.ஓ-வின் அசிஸ்டென்ட் அவர். ஒவ்வொருவரிடமும் 'அண்ணே’, 'ஜி’, 'நண்பா’, 'தோழா’ என விதவிதமான துணைச் சொற்கள் போட்டுப் பேசுவார். பிரஸ் மீட் முடிந்ததும் ஒரு 'அண்டா காகசம்’ சிரிப்போடு வாசலில் நின்றார். அப்போது பத்திரிகைக்கு நானும் புதுசு... அவரும் புதுசு. என்னிடம் சிநேகம் பொங்க, ''நண்பா... ப்ளீஸ்... நீங்க வெயிட் பண்ணுங்க' என்றார். பிரஸ் மீட்டெல்லாம் முடிந்து, ''எங்கே போறீங்க..?' என்றார்.

''கோடம்பாக்கம் சார்...'

''அய்ய... சாரெல்லாம் வேணாம். நண்பானு கூப்பிடுங்க... வாங்க... நான் டிராப் பண்றேன்' என வண்டியை நேராக விட்டது வட பழனி பஸ் ஸ்டான்ட் பக்கம் ஒரு கையேந்தி பவனுக்கு. ரெண்டு முட்டை பரோட்டா ஆர்டர் பண்ணியவர், என்னைக் குறுகுறுஎனப் பார்த்துவிட்டு, ''எங்கூரு ஆத்தூரு பக்கத்துல. எங்கப்பன் பால்காரன். ரெண்டு தொத்த மாட்ட வெச்சுக்கிட்டு மொத்தக் குடும்பமும் பூவா திங்கணும். பஞ்சம் பாஸு... பஞ்சம். அதான் கௌம்பி சென்னைக்கு வந்துட்டேன்.

வட்டியும் முதலும் - 41

நெறையக் கவிதை எழுதுவேன் பாஸு. வாலி, வைரமுத்துவை எல்லாம் வண்டியேத்திவிடத்தான் வந்தேன். ஒரு கவிதை சொல்லவா...' என்றபடி அரை டஜன் கவிதைகள் சொல்லித் தாளித்தார். ''கவிதையை வெச்சுக்கிட்டு என்னா பண்றது... நாம என்ன பாரதியா? வயிறு இருக்குல்ல... இருக்குல்ல பாஸு... என்னமோ தெரியல... ஒன்னையப் பாத்தா அழுகையா வருது பாஸ்... அழுகையா வருது...' என்றபடி அழ ஆரம்பித்துவிட்டார். அவரை வண்டியில் ஏத்தி, வழி கேட்டு, கொண்டுபோய் விடுவ தற்குள் கிறுகிறுத்துவிட்டது. ''பாலிடிக்ஸ் பழகு... பாலிடிக்ஸ் பழகு பாஸ்...' என்ப தையே திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுப் போனார்.

அதன் பிறகு அவரை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரியல் எஸ்டேட், செக்ரட்டரியேட் கான்ட்ராக்ட், அரசியல் என வேறு எங்கெங்கோ போய்விட்டார். ஒரு முறை சந்தித்தபோது, ''நமக்கு சி.ஐ.டி. காலனிலயும் ஆள் இருக்கு. மன்னார்குடியிலும் ஆள் இருக்கு!'' என பஞ்ச் அடித்தார்.   அப்புறம் அவரை நான் பார்க்கவே இல்லை.

இரண்டு வருடங்கள் இருக்கும். ஒரு மழை நாளில் ஏவி.எம். ஸ்டுடியோ போய்விட்டுத் திரும்பி நடந்துகொண்டு இருந்தேன். சர்ர்ர்ரக்கென்று குழித் தண்ணியை விசிறி அடித்தபடி கடந்த ஒரு கார் சட்டென்று நின்று திரும்பி வந்தது. கண்ணாடியை இறக்கிவிட்டு, ''ஹலோ நண்பா... ஏறுங்க...' எனச் சிரித்தார் அதே நண்பர். புத்தம் புது  கார். பூ போட்ட சட்டை, மழுமழு முகம், ப்ரேஸ்லெட் என ஆளே மாறி இருந்தார். மாறி மாறி அடித்த மூன்று மொபைல்களில் பேசிக்கொண்டே இருந்தார்.

ஸ்டீரியோ செட் அலற, ''என்ன நண்பா... எப்பிடி இருக்கீங்க? ஆபீஸ்ல டிராப் பண்றேன்...' என்றவரைப் பார்க்கவே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ''இண்டிகா வெச்சிருந்தேன்... போன மாசம்தான் குடுத்துட்டு இதை வாங்கினேன். ஒரு காபி குடிச்சுட்டுப் போலாமா...' என்றபடி ஜெமினி பக்கம் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நுழைந்தார். ஒரு காபிக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா? ஹோட்டலில் அவருக்கு என்று ஒரு டேபிள் இருந்தது. எனக்கு மிரட்சியாக இருந்தது.

ஆபீஸில் என்னை இறக்கிவிட்டு, ''உங்க ஆபீஸ்ல பாலிடிக்ஸ் உண்டா? பாலிடிக்ஸ் பண்ணாத்தான் வளர முடியும்... என் பெர்சனல் நம்பரை நோட் பண்ணிக்கங்க...' என ஒரு ஃபேன்ஸி நம்பர் கொடுத்துவிட்டுப் போனார்.

சீனியர் நிருபருடன்  பேசும்போது, அதைச் சொல்லி ஆச்சர்யப்பட்டேன். ''அவனா... இன்னிக்குத் தேதிக்கு சென்னைல அவந்தாம்ப்பா நம்பர் ஒன் பிம்ப்பு...' என்றார். அதிர்ச்சியாக இருந்தது. வயல்பற்றியும் வயிறுபற்றியும் கவிதை சொன்ன அவரா இவர்? இரண்டே வருடங்களில் இப்படியா ஒருவனைக் காலம் ஆள் மாற்றி புரட்டிப் போடும்? ''பாலிடிக்ஸ் பழகு... பாலிடிக்ஸ் பழகு...' என அனத்திக்கொண்டு வந்த குரல் இன்னும் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வரும் என் நண்பர்தான்!

நானறிந்த புரட்சிப் புயல்களில் அவரும் ஒருவர். தீவிர சமூகச் சிந்தனையாளர். பேச ஆரம்பித்தால், புரட்சி கால் டாக்ஸி புக் பண்ணி, வந்துகொண்டு இருக்கிற மாதிரியே இருக்கும்.

மார்ட்டின் லூதர் கிங்கில் இருந்து பிரபாகரன் வரை அவர் சொல்லும் கோட்ஸ்கள் உலுக்கிப் போட்டு உசுப்பேற்றும். ''எதுல அரசியல் இல்ல நண்பா... முத்துக் கடை டீயில் இருந்து ஐ.பி.எல். மேட்ச் ரிசல்ட் வரைக்கும் எல்லாமே அரசியல்தான். அரசியல் கற்றுக்கொள்... அப்போதுதான் கலகம் பிறக்கும்...'' என்பார் அடிக்கடி ஆவேசமாக. அவர் வீட்டில் குவிந்து இருக்கும் புத்தகங்களைப் பார்த்து மிரண்டு இருக்கிறேன். அவர் ஒரு மனித உரிமைப் போராளியாக, எனக்கு  இன்ஸ்பிரேஷனாக இருந்தார்.

பல நேரங்கள் ஈழம், தண்டகாரண்ய மக்கள், மாவோயிஸ்ட்டுகள், மதவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம், சீனாவின் ஆபத் தான உருமாற்றங்கள், மொழி - இன வீழ்ச்சி, உலகமயமாக்கலின் சுரண்டல் என அவரின் கோபங்களிலும் தாகங்களிலும் கரைந்திருக்கின்றன. மிக எளிமையான வாடகை வீடு, பஸ் பயணம் என்பதுதான் அவரது வாழ்க்கை. 'சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் ஒரு கான்ட்ராக்ட் பிடித்ததுதான் அவரைப்பற்றிய என் முதல் அதிர்ச்சி. அந்த நிகழ்ச்சிபற்றியும் அதை நடத்துகிற வர் குறித்தும் எதிர்ப்புக் கருத்துகள் வைத்திருந்தவர் அவர். அதைப்பற்றி நான் கேட்காமலே, ''இதுவும் ஒரு அரசியல்...' என்றார் ஒரு தருணம். ஒரே வருடம்தான்... கெட்டப்பு செட்டப்பு எல்லாமே மாறிவிட்டார் மனிதர். முழுக்க முழுக்கப் பெரிய மனிதர்களின் தொடர்புகள்... வசதி வாய்ப்புகள் என வேறு ஒரு வாழ்க்கைக்குப் போய்விட்டார்.

அவர் தனது கருத்துகள் எல்லாவற்றையும் விற்கிறார். ஜெகத் கஸ்பர், சீமான், கார்த்தி சிதம்பரம் என எல்லோருடனும் விசித்திரமான அரசியல் நட்பு வைத்திருக்கிறார். ஈழப் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது அதையும் வியாபாரம் ஆக்கியவர்களில் நண்பரும் ஒருவர். சமீபத்தில் அவரைப் பார்த்தபோது, ''ஒரு கல்வி நிலையம் அமைச்சிருக்கேன்...'' என்றார் பெருமையாக. அவர் தீவிர தமிழ் உணர்வாளர். ''ஓ... தனித் தமிழ்ப் பள்ளிங்களா?'' என்றேன் ஆர்வமாக. அவர் சொன்னார், ''இல்லைங்க... இல்லை... மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ங்க!'

வர்கூட என் நண்பர்தான்!

சமீபமாக ஏதோ ஒரு தெரியாத நம்பரில் இருந்து எனக்கு ஆன்மிக மெசேஜ்களாக வந்துகொண்டு இருந்தன. '26-ம் தேதி ஆசிரமத்தில் குருப்பெயர்ச்சி யாகம்... வந்துவிடவும்’, '2-ம் தேதி ராசி விருத்தி யாகம்... வந்துவிடவும்’ என்பது மாதிரியான மெசேஜ்கள். 'டவுசர்... ஓவரா ஒரண்ட இழுக்கறானே...’ எனக் கடுப்பானேன். ஒரு நாள் அந்த நம்பரில் இருந்து போன் வர, ''வணக்கம்... நான் சுகுமார சுவாமிகள் பேசறேன்...' என்றது குரல். ''யாருங்க..?' என்றால், ''முருகன்தானே... நான் சுகுமார சுவாமிகள்... ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி ஹவுஸிங் போர்டுல உங்க பக்கத்து ரூம்ல இருந்தேனே... கம்ப்யூட்டர் சேல்ஸ்மேன்...'

''அண்ணே... சுகுமாரண்ணே...' எனப் பரவசமானேன்.

ஹவுஸிங் போர்டில் எங்கள் பக்கத்து அறைக்காரர் சுகுமார். எங்கள் ரூமுக்கே அவர்தான் ஸ்பான்சர் பார்ட்டி. ஞாயிற்றுக் கிழமையானால் குவார்ட்டர் பாட்டில் கொண்டுவந்து குவிப்பார். பலான டி.வி.டி-களுக்குத் தனிப் பெட்டி வைத்து இருந்தார். தமிழில் அவருக்குப் பிடிக்காத வார்த்தை 'குளியல்’. குளிக்கவே மாட்டார். தலைக்குத் தண்ணி தெளித்துக்கொண்டு, பெர்முடாஸ் மேலேயே பேண்ட் போட்டுக்கொண்டு, பெர்ஃப்யூமைப் பல கோட்டிங் அடித்துக்கொண்டு அவர் ஆபீஸ் கிளம்புவதே திருவிழாவாக இருக்கும். அவர் எப்போது தண்ணியடித்தாலும், ''...க்காளி... எவனைப் பார்த்தாலும் பாலிடிக்ஸ் பண்றான்... நான் வர்றேண்டா... வர்றேன்... சூது எங்களுக்கும் தெரியும்ல...' என பஞ்ச் அடிப்பார். அந்த சுகுமாரண்ணனா இவர்?

''என்னண்ணே எப்பிடி இருக்கீங்க?'

''முருகன்... நான் சந்நியாசம் வாங்கி இப்போ சுவாமிகள் ஆகிட்டேன். செங்கல் பட்டு பக்கம்தான் நம்ம ஆசிரமம்... நீங்க நிச்சயம் வரணும். விதி, மோட்சம், பயன் அத்தனைக்குமான நல்ல வழிகளைத் திறந்துவிட நான் காத்திருக்கேன்...'' என ஆரம்பித்து அமானுஷ்யமாகப் பேசப் பேச, எனக்குக் கிலியடித்தது. சுகுமாரண்ணன் எப்படி இப்படி ஆனார்? என்ன பாலிடிக்ஸ் அவரை இப்படி இழுத்துப்போனது? என்னடா இது உலகம் என வியப்பாக இருந்தது. சொல்லப்போனால், சுகுமார் அண்ணன்தான் சூப்பர் அரசியல்வாதி எனத் தோன்றியது. 'அவசரப்பட்டுட்டியே ஆதீனம்...’ என மதுரைக்கு ஒரு கால் அடிக்கலாமா என யோசித்தேன்!

இப்படிப் பற்பல நண்பர்களால் 'பாலிடிக்‌ஸ்’ என்ற வார்த்தை என்னைத் துரத் திக்கொண்டே இருக்கிறது. ''தெறமயெல்லாம் விடுங்க... கொஞ்சம் பாலிடிக்ஸ் பண்ணத் தெரியணும். அப்போதான் முன்னேற முடியும்' என யாராவது அவ்வப்போது அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருக் கிறார்கள். ''அய்யோ! அவன் பயங்கர பாலிடிக்ஸ்ரா...'' என யாராவது ஆபீஸ், பார், ஹோட்டல் என எங்கேயாவது உட் கார்ந்து புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள். யாரைப் பிடிப்பது, யாரைக் கவிழ்ப்பது, யாரைக் கலாய்ப்பது, யாரை எங்கே வைப்பது, யாருக்கு என்ன செய்வது என ஏகப்பட்ட புதிர்ப் பாதைகள் கொண்டது 'பாலிடிக்ஸ்’ என்ற வார்த்தை. அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது.

வட்டியும் முதலும் - 41

அரசியல் பண்ணத் தெரிந்தவர்கள் சீக்கிர மாக முன்னேறி, வசதி வாய்ப்புகளை அனுபவிப்பார்கள். அரசியல் பண்ணத் தெரியாதவர்கள் அப்பாவி லகுட பாண்டி களாகச் சிங்கியடிப்பார்கள் என்பதை இந்தச் சமூகம் நமக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. குருஷேத்திர யுத்த மும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான். நீங்கள் எதைத் தருகிறீர்கள்... எதைப் பெறுகிறீர்கள் என்பது அல்லவா முக்கியம்?

கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்துகிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்கு பைப் வைத்துக்கொண்டு இறுதிக் கணங் களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில், வாட்டர் பாட்டில் கம்பெனிக்கு வயலை விற்க மாட்டேன் எனத் தனி ஆளாக மல்லுக்கு நின்ற வேலுச்சாமியின் வைராக்கியத்தில், தன்னைப் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் போராடி தண்டனை வாங்கித் தந்த ரோசினியின் உறுதியில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன? அற்பத் துக்கும் சொற்பத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம்? அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகிவிட்டது இந்த தேசத்தில்.

வட்டியும் முதலும் - 41

''எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்' என்றார் வினோபா பாவே. உண்மை. தொடர்ந்து பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையில் இருப்பவர்கள் எவ்வளவு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உட்கார்ந்து, நுங்கு விற்று மீதப்பட்டுப்போன காய்ந்த பனை ஓலையில் பிள்ளைகளுக்குத் தர காத்தாடி செய்துகொண்டு இருக்கும் ஒரு முதியவரின் விரல்களைப் போல வாழ்ந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய விஷயம் என ஏங்குகிறவர்களுக்கு ஏதய்யா பாலிடிக்ஸ்?

'எந்த வேஷத்துக்கும் பொருத்தமற்றது என் முகம். சுற்றிச் சூழ நடக்கிறது நாடகம்!’ என்ற வித்யாஷங்கரின் கவிதைதான் ஞாபகத்துக்கு வருகிறது!

- போட்டு வாங்குவோம்...