மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 42

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

மஞ்சள் பூசிய முகத்தில் மலர்த்திப்போடும் அதே சிரிப்பு. முந்திக்குள் மறைத்துவைத்து மேரி பிஸ்கட் கொடுத்த அந்தக் கைகளை இறுக்கி ஒரு முத்தம் கொடுக்கலாம் எனத் தோன்றியது.

போரூர் பக்கம் ஓர் இடுகாட்டில் டெஸி ரீனா, மார்பில் அணைத்த பூங்கொத் தோடு மண்டியிட்டு அமர்ந்திருந்த காட்சி இப்போதும் நினைவில் பிரவகிக்கிறது!

 200 வருடங்களுக்குப் பிறகு, ஒரு நன்றியைச் சொல்ல லண்டன் பக்கக் கிராமம் ஒன்றிலிருந்து சென்னைக்கு வந்தவர் டெஸி. இந்தியாவை இங்கிலாந்து ஆட்சி செய்தபோது, சென்னையில் ராணுவ அதிகாரியாக இருந்தவர் டெஸியின் தாத்தா. அவரிடம் வேலை பார்த்தவர் தமிழரான கிருஷ்ணமூர்த்தி. டெஸியின் அம்மாவை வளர்த்தது கிருஷ்ணமூர்த்திதான். அவர் டெஸியின் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார்.

கிறிஸ்துவரான டெஸியின் தாத்தா, கிருஷ்ணமூர்த்தியின் நட்பால் மனதளவில் இந்து மதத்தைத் தழுவி, கோயில் கோயிலாகச் சுற்றியிருக்கிறார். சிறு வயதில் ஒரு விதமான மனப்பிறழ்வு நோயில் இருந்த டெஸியின் அம்மாவை கிருஷ்ணமூர்த்திதான் தனது அன்பால் மீட்டெடுத்திருக்கிறார். டெஸியின் தாத்தா இறந்தபோது எழுதிவைத்த உயிலில், தனது நண்பர் கிருஷ்ணமூர்த்தி இறந்தால் தனது கல்லறைக்கு அருகிலேயே அவரையும் புதைக்க வேண்டும் என எழுதியிருக்கிறார். ஆனால், கிருஷ்ணமூர்த்தி இறந்தபோது, பலரது எதிர்ப்பால் அது நடக்கவில்லை.

அதன் பிறகு, காலத்தின் சுழற்சியால் டெஸியின் குடும்பம் இங்கிலாந்து சென்றுவிட்டது. டெஸியின் அம்மா அவருக்கு கிருஷ்ணமூர்த்திபற்றி நிறையச் சொல்லிஇருக்கிறார். அவர் தனக்கு இன்னொரு தகப்பன் என்றாராம். தான் வாழ்வதே அவரால்தான் என நெகிழ்ந்தாராம். மறு படியும் அவரைப் பார்க்க முடியவில்லையே என வருந்தினாராம். அவரும் ஒருநாள் தவறிவிட்டார். இப்போது இத்தனை வருடங்கள் கழித்து, பணம் சேர்த்துக்கொண்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டெஸி.  அப்போது நான் விகடனில் நிருபராக வேலை பார்த்தேன்.

வட்டியும் முதலும்  - 42

பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கான கல்லறைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் மூலம் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, இதை விகடனில் எழுதலாம் என்று போனேன். அப்போது கிருஷ்ணமூர்த்தி அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடு காட்டைக் கண்டுபிடித்து அங்கு உட்கார்ந்து இருந்தார் டெஸி. அவரிடம் பேசியபோது, ''கிருஷ்ணமூர்த்தி சாருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றதுக்குத்தான் இங்கே வந்தேன். இது எங்க குடும்பத்தோட பாக்கி...' என்றார் நெகிழ்வுடன். பத்திரிகையில் எழுதுவதற்காகக் கேட்டபோது மறுத்துவிட்டார். ''இதுஎங்கள் நன்றியுணர்வு... இதைப் பேச விரும்பலை' என்றார்.  

இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இத்தனை தூரம் கடந்து, எப்போதோ இறந்துபோன ஒருவருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்வதற் காக வந்திருந்த அவரைப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. யாரோ ஒரு வெள்ளைக்காரப் பேத்திக்கும் எப்போதோ செத்துப்போன ஒரு தமிழருக்கும் நடுவே சாகா வரம் பெற்றிருக்கும் அந்த ஒரு நன்றியை என்னவென்று சொல்வது? போரூர் இடு காட்டில் டெஸி வைத்துவிட்டுப்போன அந்தப் பூங்கொத்து, எந்தக் காலத்திலும் காயாமல் நன்றியின் ஈரம் மினுங்க உயிர்த்து இருக்கும்தானே?!

எங்கிருந்தோ ஒரு தேங்க்ஸைச் சுமந்துகொண்டு இப்படி வந்து நிற்கிறார் ஒருவர். எனக்கு இந்தக் கணம், 'எவ்வளவு பேருக்கான நன்றியை நான் சொல்லாமல் வைத்திருக்கிறேன்?’ எனத் தோன்றுகிறது. இன்குபேட் டரில் ஒரு வாரம் என்னை வைத்து உயிர் தந்த பெயர் தெரியாத செவிலித் தாயில் இருந்து முந்தா நாள் ஆதம்பாக்கத்தில், நான் தேடிய முகவரிக்கு வழி சொல்லி விட்டு தள்ளாடிக் கடந்துபோன முதியவர் வரை எவ்வளவு பேருக்கான நன்றிகள் பகிரப்படாமல் எனக்குள் கிடக் கின்றன?

இத்தனை வருடங்களுக்குப் பிறகு பத்மா டீச்சரைப் பார்க்கப் போயிருந்தேன். ''ரிட்டையர்மென்ட் ஃபங்ஷனுக்கு நீ வரலைல்ல கழுத...' - மஞ்சள் பூசிய முகத்தில் மலர்த்திப்போடும் அதே சிரிப்பு. முந்திக்குள் மறைத்துவைத்து மேரி பிஸ்கட் கொடுத்த அந்தக் கைகளை இறுக்கி ஒரு முத்தம் கொடுக்கலாம் எனத் தோன்றியது. ''தேங்க்ஸ் டீச்சர்...' என்றபடி மடியில் படுத்துக்கொள்ளலாம் எனப் பொங்கியது. ''நல்லாருக்கீங்களா டீச்சர்..?' எனக் கேட்டுவிட்டு வந்துவிட்டேன். பல நேரங்களில் நன்றியை எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. இப்படித்தான் சமீபத்தில் விமலா அத்தையை ரயிலேற்றிவிடப் போகிறவரைக்கும் ஒரு கணம் கையைப் பற்றி, ''தேங்க்ஸ் அத்த...' எனச் சொல்லிவிடத் தவித்தது மனசு. இன்னோர் அம்மா மாதிரி இருந்தவள். வளர்ந்த பிறகு, அன்பையும் நன்றியையும் பகிர்ந்துகொள்வதே பெரும் பிரயத்தனமாகிவிடுவது எவ்வளவு பெரிய துயரம்? ஓடிப்போய் பிஸ்கட்டும் வாட்டர் பாட்டிலும் வாங்கி வந்தேன். ''மொபைல் டாப்-அப் பண்ணிவிடவா... தஞ்சாவூர்ல எறங்கி மறக்காமக் கூப்பிடுத்த...' என்றேன்.

அதிகாலையில் எழுந்து சாணி அள்ளி, நாலைந்து மாடுகளில் பால் கறந்து, டிப்போ போய்விட்டு, சமைத்து முடித்து, நாளெல்லாம் உழைத்து, எப்போதும் ஏனங் கழுவிய வாசத்தோடு, ''வாடா முருகா...' என அழைக்கும் மாறவே மாறாத அந்தப் பாசக்காரிக்கு என்ன நன்றி செய்துவிட்டேன் நான்..? நள்ளிரவுக்கு மேல் கதவு தட்டினாலும், ''எரும மாடே... சாப்பிட்டுப் படு...' எனத் தோசை சுட்டுக் கொடுக்கும், சித்தப்பா ஆஸ்பத்திரியில் இருந்தபோது இரண்டு நாட்களாய்ச் சாப்பிடாமல் கிடந்தபடி, ''நீ போய்ச் சாப்பிட்டு வா...' எனக் கசங்கிய ரூபாயை நீட்டும் சாந்தி சித்திக்குத்தான் என்ன செய்துவிட்டேன்..? அது சரி... நன்றி என்பதைச் சொல்லிவிட்டால் போச்சா..? அது வெறும் வார்த்தைதானா..? 10 வருடங்களுக்கு முன்பு, ஒரு ராத்திரி அப்பா என்னை தனியே அழைத்துப் போய், ''ஒனக்கு எவ்வளவு சம்பளம்னு எனக்குத் தெரியாது... தெரியவும் வேணாம். எனக்கு நீ காசு பணம்லாம் தர வேணாம்ப்பா. ஒங்கம்மா பேருக்கு மாசம் ஒரு ஆயிரம் அனுப்பி வையி... அவளுக்கு ஒரு பொடவ வாங்கியாந்து தா... அவளுக்கு அது சந்தோஷமாயிருக்கும்...' என்றார்.

பணமும் பொருளுமா அது? அது அன்பின், நன்றியின் இன்னொரு வெளிப்பாடு. தீர்க்கவே முடியாத நன்றிகளால்தான் நம் ஒவ்வொருவருக்குமான உலகம் உயிர்த்திருக்கிறது! யார் என்ன என்றே தெரியாமல் நம்மைத் தொட்டுத் தூக்கிய இதயங்கள் எவ்வளவு இருக்கின்றன. வலிகளோடும் தழும்புகளோடும் அணைத்துச் சிரித்த அண்ணன்கள் மட்டும் இல்லையென்றால், நானெல்லாம் என்னவாகியிருப்பேன்..? அன்பாலும் கண்டிப்பாலும் இந்தப் பாதையைப் போட்டுத்தந்த அண்ணன்களுக்கு என்ன நன்றி செய்துவிட முடியும்..? இந்த வாழ்க்கையே அவர்களுக்கான நன்றிதான் எனத் தோன்றுகிறது. 'இயற்கைக்கு நன்றி சொல்வதென்றால், ஒரு மரக்கன்றை நடுங்கள்’ என்பது எவ்வளவு உண்மையான  வார்த்தைகள்? பொங்கல் நாளிலும் அறுவடை நாளிலும் ஒரு கொத்து நெற்கதிரைத் தூக்கிக்கொண்டு, வானத்தைப் பார்த்து, ''அப்பனே முருகா... அய்யனாரப்பா... நன்றிடா... நன்றிடா...' என அப்பா வேண்டுவது நினைவில் சித்திரமாகவே இருக்கிறது.

கடவுளுக்கும் இயற்கைக்கும் நன்றியும் காணிக்கையும் செலுத்துவதுதானே நமது மரபும் மனசும்.

''இது நன்றி கெட்ட ஜனம்ப்பா... காமராஜரைத் தோக்கடிச்ச நன்றி கெட்ட நாடுதானேப்பா இது...' என்பார் கருப்பு பெரியப்பா அடிக்கடி. ஒருமுறை அவர் இப்படிச் சொன்னபோது சத்தியமூர்த்தி தாத்தா சொன்னது எப்போதும் எனக்கு மறக்காது, ''ஜனங்களை அப்பிடிச் சொல்லாத கருப்பு. இப்பவும் ஒரு பூகம்பம், சுனாமி, புயல்னா முடிஞ்ச வரைக்கும் உதவறதும் போய் நிக்கறதும் இதே ஜனம்தானே? உதவி, நன்றிங்கற வார்த்தைக்குஎல்லாம் அர்த்தமே தெரியாம அதைச் செய்றவன் இன்னும் ஊர் ஊருக்கு நெறையப் பேர் இருக்கான். மேல இருக்கறவனும் புத்திசாலிகளும்தான் இதுக்குஎல்லாம் அர்த்தம் தேடித் தொங்கிட்டிருக்கான். சாதாரண ஜனம் எவ்வளவோ பேர் எதுவும் அறியாம இதுக்கெல்லாம் அர்த்தமாவே வாழ்ந்துட்டு இருக்கான்.'

எவ்வளவு உண்மை? பேருந்தில் முடியா தவர்களுக்கு இடம் கொடுப்பதில் இருந்து, ஒரு கோடி விழுந்த லாட்டரியை உரிய வருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டு, ஒரு நன்றியை மட்டும் வாங்கிக்கொண்டு போனவர் வரை எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

நள்ளிரவில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, ''தேங்க்ஸ் சார்...' என்ற வார்த்தைக்கு, ''ச்சீ... என்னடா நீ...' என்கிற அன்பர்களை... வழியில் விபத்துக்குள்ளாகிக் கிடந்தவர்களைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டுக் காத்திருப்பவர்களை... வாங்கிய சாப்பாட் டைப் பகிரும் நண்பர்களை... மொபைலில் ரத்தம் கேட்டுவரும் மெசேஜ்களுக்கு ஓடிப்போய் நிற்பவர்களை... பொது இடங்களில் யாரையேனும் யாராவது அநியாயமாக அடிக்கும்போது கொந்த ளித்து அவர்களை மீட்பவர்களை... வழியில் பரிதவிப்பவர்களுக்கு லிஃப்ட் கொடுப்பவர்களை... மார்ச்சுவரி வாசலில் கதறிக்கிடக்கும் யாரென்றே தெரியாத பெரியம்மாவுக்குச் சாப்பாடு வாங்கி வந்து, அமரர் ஊர்தி பிடித்துத் தந்து, வீடு வரைக்கும் சேர்த்துவிட்டு வருகிறவர்களை...  இன்னும்... இன்னும்... நன்றி என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்துக்கொண்டு எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

வட்டியும் முதலும்  - 42

'அன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று நன்றி... இன்னொன்று துரோகம்’ என்பார் எஸ்.பொ. அய்யா. இதுதான் இந்த உலகமாக இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு, சமீபத்தில் சசியை ஸ்பென்சரில் பார்த்தேன். தஞ்சாவூர்க்காரன். நண்பன். கூடவே ஒரு பெண் இருந்தார். ''ஸாரி முருகா... எனக்குக் கல்யாணமாகிடுச்சு. உனக்கெல்லாம் சொல்ல முடியலை. ரொம்பப் பிரச்னைக்கு நடுவுல நடந்துச்சு... இதான் என் ஒய்ஃப். விசாலியை உனக்குத் தெரியும்ல...' என்றான். அந்தப் பெண்ணைப் பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது. ''டேய்... சிவராமன் சார் பொண்ணுல்ல...' என்றேன். ''ஆமாண்டா... நாங்க லவ் பண்ணோம். தெரிஞ்சா, அவர் ஒப்புக்கவே மாட்டார்னு தெரியும். அதான் வெளில வந்து நாங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...' என்றான்.

''அப்புறம் என்னாச்சு..?'

''இன்னும் அவர் சமாதானமாகலை... நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்துட்டோம்...' என்றான். சசி, தாய் தந்தை இல்லாதவன். அம்மாவும் அப்பாவும் போன பிறகு, அவனது எதிர் வீட்டுக்காரரான சிவராமன் சார் இவனைத் தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார். அவர் தான் இவனைப் படிக்கவைத்தார். அவர் வீட்டில்தான் அவனை நான் பார்த்திருக்கிறேன். அவர் மகளைத்தான் இவன் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டான். அதன் பிறகு, தஞ்சாவூர் போனபோது சிவராமன் சாரை யதேச்சையாகச் சந்தித்தேன். பார்த்த அடுத்த கணமே, ''கேள்விப்பட்டியா... ஒன் ஃப்ரெண்டு பண்ண காரியத்தை.

நன்றி கெட்ட நாயி, நன்றி கெட்ட நாயி...' எனக் கதறத் தொடங்கிவிட்டார். மறுபடி மறுபடி... 'நன்றி கெட்ட நாயி...’ சசிக்கு இதை போன் பண்ணிச் சொன்னேன். ''என்ன பண்றது நண்பா... எவ்வளவோ ட்ரை பண்ணிட்டோம். அவரைச் சமாதானப்படுத்த முடியலை. இனிமே அவருக்கு நான் காட்ற நன்றிங்கறது, அவர் பொண்ணை நல்லாப் பார்த்துக்கறதுதான்...' என்றான். நன்றி நினைத்தல், நன்றி மறத்தல் என்ற இரண்டு முனைகளுக்கு நடுவேதான் பல உயிர்கள் அலைகின்றன. ஏற்றிவிட்டவனை மறந்துவிடுவது, கூட இருந்தே துரோகிப்பது, நம்பியவனைக் கை கழுவுவது என நன்றி மறத்தலில் காயங்களும் எங்கெங்கும் இருக் கின்றன!

'உதிரி குமார்’ தெரியுமா உங்களுக்கு..? கோயம்பேடு மார்க்கெட்டில் 'உதிரி குமார்’ என்றால் அவ்வளவு பிரபலம். வெளியூர்க்காரன். மார்க்கெட்டிலேயே உண்டு, உறங்கி, எழுந்து காய்கறி வியாபாரம் பார்த்துவந்தான். மார்க்கெட்டில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் மூலம்தான் 'உதிரி குமார்’ எனக்குப் பழக்கம். எப்போது பார்த்தாலும் சரக்கடித்துவிட்டு ஒரு நாயுடனேயே திரிவான். ஒரு முறை அவனிடம் ''என்ன கொமாரு, இந்த நாயி மேல இப்பிடி ஒரு லவ்வு...' என்றதற்கு, ''தலைவா... நாய்தான் நன்றியோட இருக்கும். பொண்டாட்டி, புள்ள, ஃப்ரெண்டுனுஎந்த மனுஷன்ட்டயும் ப்யூரா அதை எதிர் பார்க்க முடியாது. மனசுல வெச்சுக்க...' எனச் சிரித்தான்.

ரொம்ப நாளைக்குப் பிறகு, சமீபத்தில் மார்க்கெட் போனபோது கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் 'உதிரி குமார்’. எனக்குப் பகீரென்றது. ''எப்பிடிங்க... என்னாச்சு..?' என்றேன் நண்பரிடம். ''அய்ய... அது அவன் கூடவே சுத்திட்டு இருந்துச்சுல்ல ஒரு நாயி... அது கடிச்சுத் தொலைஞ்சுருச்சு. வெளாட்டுப் போக்குலயே வுட்டுட்டான். ரேபீஸ் அட்டாக் ஆகி ஆளே போயிட்டான். அய்ய்ய்ய... கொடுமைங்க... அவனே கொஞ்சம் கொஞ்சமா நாய் மாதிரி மாறி ரொம்பக் கஷ்டப்பட்டுப் போய்ச் சேர்ந்தான்...' என்றார் நண்பர். அஞ்சலி போஸ்டரில் சிரித்த 'உதிரி குமா’ரைப் பார்த்து அதிர்ச்சி யாக இருந்தது.

சொல்லப்படாத நன்றிகள் ஒரு நதியாகவும் நாம் அதன் கரை மேல் நகர முடியாத மரங்களாகவும் இருந்துகொண்டே இருக் கிறோம். ஒரு காற்றில் நதியில் பூ கொட்டினால்கூடப் போதும். 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ என கீர்த்தனாவை நினைத்துக்கொள்ளும்போது எல்லாம் ஒரு காற்று அடித்து கொஞ்சம் பூ கொட்டுகிறது. யாரோ ஒரு பெயர் தெரியாத ஓவியன், தென்னந்தோப்பும் ஓட்டு வீடுமாக ஓர் ஓவியத்தை இப்போது புதிதாகப் போன தெருச் சுவரில் வரைந்துவிட்டுப் போய் விட்டான். அவனைத் தேடி ஓடி, ''ஹலோ! சூப்பரா வரையறீங்க... தேங்க்ஸ்ங்க...' என்றால், வாய் கோணிச் சிரித்துவிட்டுப் போய்விட்டான். ''அவன் கொஞ்சம் கிறுக்கு சார்...' என டீக்கடைக்காரர் சிரிக்கிறார். அவன் அந்த தேங்க்ஸை எடுத்துக்கொண்டானா தெரியவில்லை. அவன் போய்விட்டான். நாம் அந்தத் தெருவிலேயே நிற்கிறோம்... ஏராளமான நன்றிகளோடு!

- போட்டு வாங்குவோம்...