அம்மா!
அம்மா... இந்த மூன்றெழுத்து மந்திரத்துக்கு அடிபணியாதவர்கள் யார்? இந்த ஒரு வார்த்தைக்குச் சிறப்புச் சேர்க்க கவிதை பாடுவது தொடங்கி கோயில் கட்டுவது வரை எத்தனையோ முயற்சிகள் எடுக்கிறார்கள் மக்கள். அப்படி தன் பங்குக்குச் சிறப்புச் சேர்க்க முயன்றிருக்கிறார் குறும்பட இயக்குநர் வினு அரவிந். 'அ ம் மா’ என்ற தன் குறும்படத்தை அன்னையர் தினமான கடந்த 13-ம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் திரையிட்டார்.

##~## |
குறும்பட திரையிடலைத் தொடர்ந்து இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், கே.பாக்யராஜ், பி.வாசு, கரு.பழனியப்பன் ஆகியோர் தங்கள் அம்மாக்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த 'அம்மா-பிள்ளை’ பாச நினைவுகளில் இருந்து...
''துறவி என்பதற்கான உண்மையான அடையாளத்தோடு வாழ்ந்தவர்கள் ரெண்டு பேர். ஒருத்தர் பட்டினத்தார். இன்னொருத்தர் பத்திரகிரியார். ஒரு சமயம் பட்டினத்தாரிடம் ஒருத்தர் பிச்சை கேட்டு வந்திருக்கார். அவர்கிட்ட, 'ஏம்பா... நானே ஒண்ணுமில்லாம கிடக்கேன். என்கிட்ட பிச்சையா..? அதோ அங்க பத்திரகிரியார்னு குடும்பஸ்தர் ஒருத்தர் இருப்பார். அவர்கிட்டப் போங்க..’னு சொல்லி இருக்கார். அங்க போனா, பத்திரகிரியார் அதிர்ச்சியடையறார். 'ஏம்பா... நானும் துறவிதானே? என்னையா குடும்பஸ்தர்னு சொன்னார்’னு யோசிச்சிருக்கார். பத்திரகிரியார் கூடவே ஒரு நாய் எப்பவும் இருக்கும். அதனாலதான் பட்டினத்தார் தன்னை ஒரு குடும்பஸ்தர்னு சொல்லி இருக்கார்னு புரிஞ்சுக்கிட்டார். நாயைக் கூட வெச்சிருக்கிறதாலேயே பத்திரகிரியாரை குடும்பஸ்தர்னு சொன்ன பட்டினத்தார், கடைசிக் காலத்தில் தன் தாய் கூடவே இருந்தார். துறவியாலும் துறக்க முடியாத உறவுதான் தாய்!'' என்றார் கரு.பழனியப்பன்.
அடுத்து பேசிய பி.வாசு, ''நான் 'மன்னன்’ படம் பண்ணும்போது இளையராஜா சார்கிட்ட, 'நீங்க ஜனனி... ஜனனி’னு மூகாம்பிகையைப் பத்தி காலத்துக்கும் நிக்கிற மாதிரி பாட்டுப் போட்டீங்களே, அப்படி 'அம்மா’வைவெச்சு காலத்துக்கும் நிக்கிற மாதிரி ஒரு பாட்டுப் போட்டுக்கொடுங்க’னேன். நான் சொல்லி முடிச்ச அடுத்த நிமிஷமே ட்யூன் போட்டுக்கொடுத்தார். அந்த ட்யூனை எடுத்துக்கிட்டு வாலி சார்கிட்ட போய், 'நான் இன்னிக்கும் வீட்டுல இருந்து வெளியில வர்றப்ப அம்மா எனக்கு ஒரு ரூபாய் கொடுப்பாங்க. 30 வருஷமா இது நடந்துக்கிட்டு இருக்கு. இதை இந்த ஜென்மத்துல நான் அவங்களுக்குத் திரும்பத் தர முடியுமோ முடியாதோ. அப்படி என்னால தர முடியாம போய்ட்டா
அடுத்த ஜென்மத்துல நான் அவங்களுக்குத் தாயாவும், அவங்க எனக்கு மகளாவும் பிறக்கணும்’னு சொன்னேன். அதை அப்படியே பிடிச்சுக்கிட்டு, 'ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி/நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா/ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்/உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா’னு பாடல் வரிகளா எழுதிக்கொடுத்தார்'' என்று நெகிழ்ந்தார்.
அடுத்து பேசிய பாக்யராஜ், ''நான் படிக்காம, 'சினிமா.. சினிமா...’னு ஊரைச் சுத்திக்கிட்டு இருந்தப்பவே, 'நீ பெரிய ஆளா வருவடா’னு சொல்லுச்சு எங்க அம்மா. அப்படியே சினிமாவில் ஜெயிச்சேன். அப்புறம் ஒருநாள் 'நீ பெரிய நடிகனா வருவே... உன் டைரக்டரே உன்னைவெச்சுப் படம் எடுப்பாரு’னுச்சு. அதுவும் நடந்துச்சு. அப்புறம் சினிமாவுல எனக்கு பிரவீனாவோட அஃபையர் இருந்துச்சு. அதைத் தெரிஞ்சுக்கிட்ட எங்க அம்மா, 'உனக்குப் பிடிச்ச பொண்ணக் கட்டிக்கோ’னுச்சு. அதுவும் நடந்துச்சு. இப்படி என்னோட ஒவ்வொரு கட்டத்தையும் முன் னாடியே தெரிஞ்சுக்கிட்டு எனக்கு ஆதரவா இருந்துச்சு எங்க அம்மா!'' என்று நெகிழவைத்தார்.
கடைசியில் மேடை ஏறிய ஆர்.சுந்தர்ராஜன், ''என் அம்மாவுக்கு 86 வயசு. இன்னிக்கும் அவங்க கையால சமைச்சுப் போட்டதைச் சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன். எத்தனையோ தடவை எங்க அம்மாகூட கோயிலுக்குப் போயிருக்கேன். அம்மா எனக்காக மட்டும்தான் சாமி கும்பிடும். ஒருமுறை வலம்புரி ஜான் ஒரு கேள்வி பதில் பகுதியில், 'உங்களிடம் கேட்கப்பட்ட மறக்க முடியாத கேள்வி எது?’னு ஒருத்தர் கேட்டிருந்தார். அதற்கு, 'நீங்க இவ்வளவு சம்பாதிக்கிறீங்களே, உங்க அம்மாவுக்கு ஏதாவது அனுப்பி வைக்கிறீங்களா?’னு கேட்ட கேள்வி யும், அதுக்கு நான் 'எங்க அம்மாவை அனுப்பிவெச்சதுக்கு அப்புறம்தான் நான் சம்பாதிக்கவே வந்தேன்!’னு சொன்ன பதிலும்தான்’னு சொன்னாராம்'' என்று முடித்தார்.
- ந.வினோத்குமார்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்