”மயிலாப்பூர் என்னுது மாமே!”
''நம்பர் 7, தேவடி வீதி. இதுதான் எங்க மயிலாப்பூர் வீட்டு முகவரி. எங்க ஏரியாவுக்கே அடையாளமா இருந்தவங்க ரெண்டு பேர். ஒருத்தர் எங்க அப்பா ஜி.காமேஷ். பெரிய இசையமைப்பாளர். இன்னொருத்தர் எங்க அம்மா, கமலா காமேஷ். பிரபலமான நடிகை. அதனாலேயே சின்ன வயசுலேயே நானும் குட்டிப் பிரபலம்!'' - கலகலவென சிரித்தபடி தன் மயிலாப்பூர் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை உமா ரியாஸ்.
##~## |
''பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மயிலாப்பூரில்தான். அப்பா, 'ஜி.காமேஷ்’ங்கிற தன் பெயரை வீட்டு பெயர்ப் பலகையில வாத்தியக் கருவிகள் டிசைன்ல எழுதிவெச்சிருந்தார். யாராவது, தேவடி வீதிக்கு வழி கேட்டா எங்க வீட்டை அடையாளப்படுத்தினது அந்தப் பெயர்ப் பலகைதான்.
எங்க வீட்டு காம்பவுண்ட்ல ஷியாமளா மாமினு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க பொண்ணு பேரும் உமாதான். அதனால என்னை சின்னதுல எல்லோரும் 'குட்டி உமா, குட்டி உமா’னுதான் கூப்பிடுவாங்க. அருண்டேல் வீதியில் இருக்கிற பாபுஜி பால மந்திர், சாந்தோம் சர்ச்சுக்கு எதிரில்இருக்கிற 'செயின்ட் தாமஸ் இங்கிலீஷ் பிரிபரேட்டரி ஸ்கூல்’ ரெண்டு இடத்துலயும் ஆரம்பக் கல்வியைப் படிச்சேன். அப்புறம் ஸ்கூல் ஃபைனல் வரை கோடம்பாக்கம் ஃபாத்திமா ஸ்கூல்ல படிச்சேன். எங்க வீட்டுல இருந்து கச்சேரி சாலைக்கு வந்து அங்க 12-பி பஸ் பிடிச்சு லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை, பாண்டி பஜார், உஸ்மான் ரோடு, லிபர்டினு ஊரைச் சுத்திவருவேன். எனக்காகவே அந்த பஸ் டிரைவர் எப்பவும் ஒரு சீட் போட்டுவெச்சிருப்பார். அவரோட முகம் இன்னைக்கும் என் ஞாபகத்துல இருக்கு.
அப்ப லஸ்ல காமதேனு, கபாலினு ரெண்டு தியேட்டர் இருந்துச்சு. இப்ப அந்த தியேட்டர்கள் இல்லை. அங்கதான் எல்லா எம்.ஜி.ஆர். படங்களையும் பார்த்துடுவேன். படங்கள் பார்த்துட்டு வீட்டுக்கு வந்த உடனே அதில் வந்த நடிகர்கள் மாதிரி பேசிக் காட்டுவேன். அட்சரம் பிசகாத குரல்னு சொல்ல முடியாது. ஓரளவுக்கு அந்த நடிகர்களின் குரலோடு பொருந்திவரும். அதுக்கே எங்க ஏரியாவுல எனக்கு நிறைய ரசிகர்கள் உருவாகிட்டாங்க. அப்படித்தான் மிமிக்ரி எனக்குப் பழக்கமாச்சு. 'பவித்ரா’னு ஒரு டாகுமென்ட்ரி படம்தான் எனக்கு முதல் திரை அறிமுகம். அதைத்தொடர்ந்து விளம்பரப் படங்கள்ல பிஸியா இருந்தப்ப, 'ப்ளூ டிராகன் பியூட்டி பார்ல’ருக்கு அடிக்கடி போவேன். அது ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் அம்மாவுக்குச் சொந்தமானது. மயிலையில் என் ஃபேவரைட் இடங்களில் அதுவும் ஒண்ணு.
ஷூட்டிங் முடிஞ்சு திரும்புறப்ப எல்டாம்ஸ் ரோடு 'சாம்கோ’ ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வருவேன். அப்ப எல்லாம் ஷூட்டிங் இல்லாத நேரங்கள்ல சாந்தோம் பீச், சாந்தோம் சர்ச், கபாலி கோயில்னு சுத்துவேன். கபாலி கோயில்ல மயில்களோட பேசுறதுன்னா ரொம்ப ஆசை. சின்ன வயசுல மயில்களோட யாரோ பேசுறதைப் பார்த்துட்டு நானும் பேச ஆரம்பிச்சேன். அந்தப் பழக்கம் பெரியவளாகிற வரைக்கும் இருந்துச்சு. அறுபத்து மூவர் தேர்த் திருவிழா வந்தா ஒரே குஷிதான். தேர் இழுத்துட்டுப் போற இடங்கள்ல அங்கங்க மோர் வெச்சிருப்பாங்க. மோர் குடிக்கிறதுக்காகவே தேர் பின்னால போவேன். குட்டிக் குட்டியா பொம்மைகள் வாங்கிக் குவிப்பேன். அந்தக் காலங்களை நினைச்சா மறுபடியும் குட்டி உமாவா மாறமாட்டேனானு மனசு ஏங்குது.
இன்னைக்கு குழந்தைகள், கார், பங்களா, புகழ் எல்லாமே கிடைச்சதுக்கு அப்புறமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மயிலாப்பூருக்குப் போவேன். என்னை மாதிரியே மயிலாப்பூரிலும் நிறைய மாற்றங்கள், வளர்ச்சிகள். ஆனா, 'நம்பர் 7, தேவடி வீதி’ மட்டும் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு அப்படியே இருக்கு. அதைப் பார்க்கும்போது எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் சொல்லத் தோணுது.... மயிலாப்பூர் என்னுது மாமே!''
- ந.வினோத்குமார்
படங்கள்: உசேன், வீ.நாகமணி