என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

"பறை இனி இறப்புக்கான இசை இல்லை!”

"பறை இனி இறப்புக்கான இசை இல்லை!”

"பறை இனி இறப்புக்கான இசை இல்லை!”

''பறை, தமிழனின் பாரம்பரிய இசைக் கருவி. உணர்ச்சியும் எழுச்சியும் மிக்கது. ஆதித் தமிழன் நமக்குக் கற்றுத்தந்த, விட்டுச்சென்ற கலைப் பொக்கிஷம். 'பறை’ என்ற சொல்லை 'சொல்லுதல்’, 'தோல் இசைக் கருவி’ என்று வரலாற்று இலக்கியங்கள் அங்கீகரித்தாலும் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிடும்படியாக அந்தச் சொல் இங்கு வேரூன்றிவிட்டது என்பதுதான் அவலம்!'' - உணர்ச்சிப் பொங்கப் பேசுகிறார் பறை இசைப் பயிற்சியாளர் மணிமாறன்.

"பறை இனி இறப்புக்கான இசை இல்லை!”
##~##

செங்கல்பட்டு அருகே மெல்ரோசாபுரத்தில் புத்தர் கலைக்குழு சார்பாகப் பறை வாசிப்பதற்கான ஆறு நாள் பயிற்சி முகாமை நடத்தினார் மணிமாறன். பயிற்சி நிறைவு பெற்றதும்

அவரிடம் பேசினேன். ''எங்கள் கலைக்குழு சார்பாகப் பறையின் புகழைப் பரப்பிவருகிறோம். அதன் ஒரு பகுதிதான் இந்த ஆறு நாள் பயிற்சி வகுப்பு. பறையை இசைப்பது, ஆடுவது தொடங்கி பராமரிப்பு வரை சொல்லிக்கொடுக்கிறோம்.

அதனுடன் ஒயிலாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள், சமூக விழிப்பு உணர்வு நாடகங்கள், யோகா என பல்வேறு வகுப்புகளும் நடத்துகிறோம். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு சாதியினர். 'சாவுக்கோ, மது அருந்திவிட்டோ பறை அடிக்க மாட்டோம்’ என உறுதியளித்த பின்னரே பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

"பறை இனி இறப்புக்கான இசை இல்லை!”

இங்கு இறப்புக்கு இசைக்கவே பறையை பயன்படுத்திவருகிறார்கள். ஆனால், அது வாழ்வுக்கான இசைக்கருவியும்கூட. திருமணம், காதுகுத்து, கோயில் திருவிழா என நீண்டப்பட்டியலில் ஒன்றுதான் சாவுக்குப் பறையை இசைப்பது. அறிவியல் வளராத அந்தக் காலத்தில் பறை இசை என்பது பெரிய சத்தம். அந்தப் பெரும் சத்தத்தைக் கேட்ட பிறகும் இறந்ததாக நம்பப்படுபவர் எழவில்லை என்றால் அவரின் இறப்பை உறுதி செய்வார்களாம். அதனாலேயே இறப்புக்குப் பறை இசைக்கிறார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 'பறை’ என்றால் செய்தியை பறைதல் அதாவது அறிவித்தல் என்று பொருள். மன்னர் காலத்தில் யானையின் மீது அமர்ந்து பறையடித்து அறிவிக்கும் செய்தியை ஒற்றர்கள் கேட்டு, நாடு முழுவதும் பரப்பி இருக்கிறார்கள். 'யானையின் மேல் நின்று வள்ளுவப் பறையை கொட்டடா’ என்ற பாரதிதாசன் பாடல் இதற்கு சான்று.

தன் பிள்ளைகள் பரதம், டிஸ்கோ போன்ற மேல்நாட்டு நடனங்கள் கற்றுக்கொள்வதைத்தான் பெற்றோர் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், இந்த மண்ணின் கலையை நம் வாழ்வோடு இணைந்த கலையைக் கற்க அவர்கள் தயங்குகிறார்கள். சாவுக்கு இசைப்பதால் என்னவோ பலர் பறையை ஒதுக்குகின்றனர். சிலர், இந்தச் சத்தத்தைக் கேட்டாலே இசைக்காதீர்கள் என்று காதைப் மூடிக்கொள்கிறார்கள்.

"பறை இனி இறப்புக்கான இசை இல்லை!”

தற்போது பிராமணர்கள்கூட பறையடிக்க விரும்புகிறார்கள். சென்னையில் இதுவரை இரண்டு பிராமணர்களின் திருமண நிகழ்ச்சிகளில் பறை இசைத்து இருக்கிறோம். அதுவும் திருமண அரங்கிலேயே அமைக்கப்பட்ட தனி மேடையில். இது நமக்கான கலைவடிவம். இதை இவ்வளவு காலம், தாழ்த்தப்பட்டவர்கள் தாங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எங்களோடு மற்ற சமூகத்தினரும் கைகோக்கத் தொடங்கி இருக்கிறார்கள்'' என்கிறார்.

பயிற்சி முகாமின் நிறைவு நாளில் எடிட்டர் லெனின், இயக்குநர் களஞ்சியம், வழக்கறிஞர் அங்கையற்கன்னி, முனைவர் கு.சின்னப்பன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய லெனின், ''நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு நான் வந்தபோது, நிறையப் பேர் நெளிந்து பயந்தபடி இருந்தனர். இப்போது அவர்கள் பறை எடுத்து அடிக்கும் ஒவ்வொரு அடியும் மிரட்டலாக இருக்கிறது. மங்கிக் கிடக் கும் தமிழ்க் கலைகள் இனி வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று பேசியதை தங்கள் பறை இசையால் ஆமோதித் தனர் பயிற்சிக்கு வந்தவர்கள்!

"பறை இனி இறப்புக்கான இசை இல்லை!”

- பா.ஜெயவேல்