ஆலிஸ் என்றொரு அம்மா!
'ஜி.ஆலிஸ். கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்றப் பெண்களுக்கு 'ஸ்ரீ மகா ஹோம் கேர்’ என்ற இல்லம் மூலம் ஏராளமான உதவிகளைச் செய்துவருகிறார். அவரைப்பற்றி என் விகடனில் எழுதலாமே?’ - இது தி.நகர் வாசகி தேவிகலா வாய்ஸ் ஸ்நாப்பில் தந்த தகவல். ஆலிஸை சந்தித்தேன்.
##~## |
''வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள் பசி, பட்டினியோடு, பல நேரங்கள்ல செக்ஸ் தொல்லையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கு. அப்படிப் பிரச்னைகளை எதிர்கொள்ற பெண்களுக்குத் தங்க இடமும் வேலைவாய்ப்பும் கொடுத்துட்டா எந்தப் பயமும் இல்லாம நிம்மதியா வாழ்வாங்க. அந்த உதவியைத்தான் நான் என் அளவில் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் ஏராளமான பெண்களுக்கு உதவி செஞ்சுருக்கேன்!'' என்கிறார். தி.நகர் தாமோதரன் தெருவில் சிறிய அறை ஒன்றில்தான் இவரின் சேவை நிறுவனம் செயல்படுகிறது. அவரைத் தேடி வந்த பெண்களிடம் ஆறுதலாகப் பேசியபடி நம்மிடமும் பேசுகிறார்.
''என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி. டிரைவர் ஒருத்தரைக் காதலிச்சு, வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி குடியாத்தத்தில் குடியேறினோம். அடுத்தடுத்து ரெண்டு குழந்தைகள் பிறந்தது. நாளாக நாளாக வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு கொடுமைகளை அனுபவிச்சேன். குழந்தைகளோட சென்னையில் உள்ள சொந்தக்காரங்க வீடுகளுக்குப் போனேன். யாரும் என்னை ஏத்துக்கலை. எங்கேயாவது மணல் கொட்டிக்கிடந்தா அதுதான் அன்னைக்கு என் வீடு. மணல்ல குழந்தைகளை விளையாட விட்டுட்டு அங்கேயே கண் அசந்து தூங்கிடுவேன்.
அப்படி ஒருநாள்லதான் மகாலட்சுமிங்கிற ஒருத்தரைச் சந்திச்சேன். அவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு அமைப்பை நடத்திக்கிட்டு இருந்தார். அதில் என்னைச் சேர்த்துவிட்டு, ஒரு வீட்டில் சமையல் வேலைக்கு அனுப்பினார். பிறகு அந்த அம்மாவின் ஆபீஸ்லயே வேலை கொடுத்தார். நல்ல அனுபவம் கிடைச்சுது. இப்ப அந்த அம்மா மும்பையில இருக்காங்க. அவங்க பேருலயே ஒரு அமைப்பை ஆரம்பிச்சு அவங்க எனக்குச் செஞ்சதையே இப்ப நான் பல பெண்களுக்கு திரும்பச் செய்றேன். அவ்வளவுதான்'' என்றவர் தொடர்கிறார். ''ஆதரவற்றப் பெண்களுக்கு மட்டுமில்லாம மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்கள், தனிமையில் இருக்கிற மூதாட்டிகள்னு பலருக்கும் உதவுறோம். சமயங்கள்ல சில பெண்கள் குழந்தைகளோட வந்துடுவாங்க. அப்ப அந்தக் குழந்தைகளோட படிப்புக்கும் பொறுப்பு ஏத்துக்கிறோம். இங்க வர்ற பெண்களுக்குச் சமையல், வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு, நோயாளி பராமரிப்பு மாதிரியான வேலைகள் கிடைக்க உதவிகள் செய்றேன்.
பேசின சம்பளம், சாப்பாடு கொடுக்காம இருக்கிறது, தங்க சரியான இடம் கொடுக்காம இருக்கிறதுனு அவங்களுக்கு வேலை செய்ற இடங்கள்ல பிரச்னைகள் வரும். அந்த மாதிரியான சமயங்கள்ல போலீஸை அழைச்சிக்கிட்டுப் போய் பிரச்னையைத் தீர்ப்பேன். ஒருமுறை 17 வயசுப் பொண்ணு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல தனியாத் தவிக்கிறதாச் செய்தி வந்துச்சு. வசதியான பொண்ணு. ஒரு விபத்தில் பெத்தவங்களை இழந்ததால விரக்தியில இங்க வந்துட்டதாத் தெரியவந்துச்சு. அந்தப் பொண்ணை அழைச்சுக்கிட்டுவந்து ஆறுதலாப் பேசி தங்கவெச்சிருந்தேன். இந்த விஷயம் தெரிஞ்சு அவளோட சொந்தக்காரங்க வந்து அழைச்சிக்கிட்டுப் போய்ட்டாங்க. அவ பேருல இருந்த லட்சக்கணக்கான பணத்தை அவங்க பேருக்கு மாத்திக்கிட்டு திரும்ப அவளை இங்கே கொண்டுவந்து விட்டுட்டாங்க'' என்றவர், ''அதோ நிக்குறாங்களே அவங்க பேரு சாந்தி. வசதியான வீட்டுப் பெண். அவங்க கல்யாணத்தை எம்.ஜி.ஆர். தான் நடத்திவெச்சிருக்கார். இவங்க கணவர் இறந்த பிறகு வீட்டுல சொத்துப் பிரச்னை. எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு இவங்களை வீட்டைவிட்டுத் துரத்திட்டாங்க. இவங்களை மாதிரி ஏகப்பட்டப் பெண்கள்; ஏகப்பட்ட கதைகள்'' என்றபோது, ஆலிஸின் கண்கள் கலங்கி இருந்தன!
- சா.வடிவரசு
படங்கள்: பா.காயத்ரி அகல்யா