தாதா மாவீரன்... செல்லப்பிள்ளை ஓணாண்டி!
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாவாசிகள் தவறவிடாமல் பார்க்கும் இடம்... முதலைப் பண்ணை. கரடுமுரடான தோற்றம், முரட்டு சுபாவம், ஆக்ரோஷமாக வாய் பிளந்து மிரட்டும் குணம்... என இங்கு டெரர் இமேஜ் காட்டுகின்றன 124 முதலைகள்!
##~## |
மாவட்ட வன அலுவலர் செந்தில்குமாரிடம் பேசினேன். ''35 ஆண்டுகளுக்கு முன்பு பல் வேறு காரணங்களால் முதலை இனம் வேகமா அழிஞ்சுக்கிட்டு வந்திருக்கு. அப்போதான் 1975-ல் முதலை இனத்தைக் காக்க ஒகேனக்கலில் 'முதலைகள் மறுவாழ்வு மையம்’ உருவாக்கினாங்க. அவ்வப்போது ஏரி, ஆறுகள்ல மக்களுக்குத் தொல்லை தரும் முதலைகளைப் பிடிச்சுக் கொண்டுவந்து இங்கே விட்டு பராமரிக்கிறோம்!'' என்றார்.
ஒகேனக்கல் முதலைப் பண்ணையில் கடந்த 26 ஆண்டுகளாக முதலைகளைப் பாசத்துடன் பராமரித்துவருகிறார், சுப்ரமணி. முதலையின் வாய்க்குள் இறைச்சித் துண்டுகளை போடுவது, தொட்டிகளுக்கு நீர் நிறைப்பது, கூண்டுகளைச் சுத்தம் செய்வது, அவ்வப்போது ரவுடித்தனம் செய்யும் முதலைகளை அடக்குவது என பன் முகப் பணியாளர் இவர்!
''வேலைக்கு வந்த புதுசுல ரெண்டே நாள்ல வேலையை விட் டுட்டு ஓடிடலாம்கிற அளவுக்குப் பயம் வந்துடுச்சு. மூணு குழந்தை கள் இருக்கிறதால அவ்வளவு சுலபமா இந்த வேலையை விட முடியலை.
தைரியத்தை வரவழைச்சுக் கிட்டு கூண்டுக்குள்ள இறங்க ஆரம்பிச்சேன். முதலைகளை எப்படிக் கையாளுறதுனு அதிகா ரிகள் சில நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்தாங்க. நாளாக, நாளாக முதலைகளை கட்டுப்-படுத்துற வித்தைகளை தெரிஞ்சுக் கிட்டேன். நமக்கு இடுப்பைத் தொட்டா எப்படி எகிறுவோமோ அப்படித்தான் முதலைகளுக்கும். அதோட உடம்பின் பக்கவாட்டில் குச்சியைவெச்சுத் தொட்டா அப்படியே நெளிஞ்சு நாம சொல்ற பேச்சைக் கேட்கும். ரெண்டு முதலைகள் சண்டை போட்டாலோ, ஃபீடிங் கொடுக்குறப்ப அட்டகாசம் செஞ்சாலோ மூங்கில் குச்சியால சுவத்துல ஓங்கி அடிச்சுக்கிட்டே, சத்தமா மிரட்டுவேன். உடனே அடங்கிடும்.
இத்தனை வருஷமாப் பழகினாலும் முதலை களோட மூர்க்கத்தனத்தைக் கணிக்கவே முடி யாது. பலநாள் என்னை நோக்கிப் பாய்ஞ்சி இருக்குங்க. நான் எகிறி குதிச்சு தப்பிச்சு இருக் கேன்.
எங்க கேம்பஸில் இருக்கிற ஆட்கள்லேயே 'மாவீரன்’தான் சீனியர். அவர் இங்கே வந்து 35 வருஷம் ஆச்சு. அவரோட பெரிய முதலை கள் இருந்தாலும் எல்லாரும் அவருக்குக் கீழ்ப்படிஞ்சுதான் இருக்கணும். இல்லைன்னா குதறிவெச்சுடுவார். உணவு கொடுக்குறப்போ அவருக்கு முதல்ல போட்டாத்தான் மத்தவங் களுக்குக் கொடுக்கவே விடுவார். 'ஓணாண்டி’தான் பண்ணையின் செல்லப் புள்ளை. நாமக்கல்லில் ஒரு ஏரியில இருந்து அஞ்சு மாசத்துக்கு முன் னாடி அலேக்காத் தூக்கிட்டு வந்து இங்க விட்டுட்டாங்க. இங்கே வர்றப்ப குட்டி ஓணான் மாதிரி இருந்தாரு. அதனால 'ஓணாண்டி’னு பேர் வெச்சுட்டோம். இப்போ ரொம்பப் பாசமா இருக்கான். பெருசா வளர்ந்த பிறகு என்ன பண்றானோ தெரியலை.
பண்ணையின் இன்னொரு முக்கியமான ஆள் செவ்வாழை. பெருசா அலட்டிக்கவோ, யார் கூடவும் சண்டை போடவோ மாட்டான். தண்ணிக்குள்ள மூழ்கி தூக்கம் போடுறதுதான் அவனோட முழு நேர பொழுதுபோக்கே. எப்ப வாச்சும்தான் எட்டிப் பார்ப்பான். இன்னைக்கு ஆள் வெளியிலேயே வரலை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை போலிருக்கு...'' என்று சிரிக்கிறார் பாசமான தகப்பன் உணர்வோடு!
- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்