என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

”ஊர்க்காத்தான் கல்லும் கணேசா தியேட்டரும்...”

”ஊர்க்காத்தான் கல்லும் கணேசா தியேட்டரும்...”

”ஊர்க்காத்தான் கல்லும் கணேசா தியேட்டரும்...”

'வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் அறிமுகம் ஆகி, 'திருப்பாச்சி’ படத்தில் விஜய்க்கு நண்பராக வலம்வந்து, தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்து இருக் கும் நகைச்சுவை நடிகர் பெஞ்சமின், தன் சொந்த ஊரான தருமபுரி மாவட்டம்ராஜா பேட்டையைப் பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

”ஊர்க்காத்தான் கல்லும் கணேசா தியேட்டரும்...”
##~##

''தருமபுரியில் இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல ராஜாபேட்டை இருக்கு. இந்த ஊரை ஒரு ராஜா ஆண்டாராம். அந்த ராஜா வோட பெயரை குறிப்பிட்டா மரியாதைக் குறைவா போயிடும்னுதான் ராஜாபேட்டைனு பேரு வெச்சுட்டாங்களாம். அந்த ராஜா தங்கின ஓய்வு மண்டபம் இன்னைக்கும் ஊர்ல கோட்டையா இருக்குது. சின்ன வயசுல மாட்டு வண்டியிலதான் பள்ளிக்கூடம் போவோம். அப்ப தினமும் காட்டுல இருந்து அரிசி, பருப்பு, காய்கறி மூட்டை ஏத்திக்கிட்டு சந்தைக்கு மாட்டு வண்டி போகும். அதுல தொத்திக்குவோம்.  

எங்க ஊர்ல மரவள்ளிக் குச்சிக் கிழங்கு ரொம்பப் பிரபலம். பஞ்ச காலத்திலெல்லாம் மூணு வேளையும் குச்சிக் கிழங்கைச் சாப்பிட்டு தான் காலத்தை ஓட்டுவோம். ஊர்ல நான், நஞ்சுண்டான், வேலு, இளங்கோ, ஆனந்த், சரவணன் இவங்க எல்லாம் ஒரு குரூப். மொத்த ஊரும் சேர்ந்து எங்களுக்கு வெச்சப் பேரு 'உருப்படாதக் கூட்டம்’. அந்த அளவுக்கு சேட்டை பண்ணுவோம். அந்தி மசங்குனாப் போதும்... பக்கத்துல இருக்கிற தோட்டம் தொர வுகள்ல புகுந்து கரும்பு, வேர்க்கடலை, மாங்காய்னு களவாண்டு வந்து சாப்பிடுவோம்.  எங்க உருப் படாதக் கூட்டத்துக்குப் பயந்தே ஊர்க்காரங்க அவங்கவங்க தோட்டத்துக்கு ஆட்களைக் காவ லுக்குப் போட ஆரம்பிச்சுட்டாங்க.

எங்க ஊர்ல கல்யாணம், கருமாதி எது நடந்தாலும் கூத்துக்காரனைக் கூப்பிடும்பாங்க. கல்யாண வீடு இருக்கிற தெருவை அடைச்சு ராமர் - சீதா வைபோகம் கூத்துக் கட்டுவாங்க. அப்புறம் அர்ச்சுனன் தபசு நாடகம் முக்கியமானது. நாடகத்துல பனை மரத்தால் செஞ்ச 30 அடி ஏணியை வெச்சு இருப்பாங்க. அர்ச்சுனன் வேஷம் போட்டவர் அந்த ஏணி உச்சியில ஏறி உட்கார்ந்து கிருஷ்ணனை நினைச்சு பாட்டுப் பாடுவார். அவர் தலைக்கு மேல வானத்துல கருடன் வந்து வட்டம் அடிக்கும். நம்பினா நம்புங்க, ஒவ்வொரு வருஷமும் கண்டிப்பா இது நடக்கும். சில வருஷம் கழுகு வர்றதுக்கு ரெண்டு மூணு நாளுகூட ஆகும். அப்ப புயலே அடிச் சாலும் அர்ச்சுனன் வேஷம் போட்டவர் கீழே இறங்க மாட்டார். கீழே இருந்து சோறு, தண்ணி மட்டும் போகும். நாங்க ராத்திரி முழுக்க உட் கார்ந்து இந்த நாடகத்தைப் பார்ப்போம்.

”ஊர்க்காத்தான் கல்லும் கணேசா தியேட்டரும்...”

ராஜாபேட்டையில இருக்கிற ஏரிக்கு நடுவுல ஒரு கல் இருக்கும். அதை ஊர்க்காத்தான் கல்லுனு சொல்வாங்க. நாங்க ஏரியில நீந்தி அந்தக் கல்லுக்குப் போய், ஊர்ல பார்த்த நாட கங்களை நடிச்சுக் காட்டுவோம். ஊர்க்காத்தான் கல்லும் தருமபுரி கணேசா தியேட்டரும்தான் எனக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்த இடங்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 'திரிசூலம்’ படத்தை கணேசா தியேட்டர்ல 30 தடவைக்கும் மேல நண்பர்களோட போய் பார்த்து இருக்கேன். தியேட்டர்ல ஒரு பக்கம் படம் ஓடிக்கிட்டு இருக்கும். திரையில நடிகர் திலகம் எப்படி நடிக்கிறாரோ அதையே தியேட்டர்ல நான் நடிச்சுக் காட்டுவேன். என்னைச் சுத்தி 20, 25 பேர் உட்கார்ந்து ரசிச்சுப் பார்த்து விசில் அடிப்பாங்க.

எங்க ஊர்ல இருக்கிற கோட்டையில ஒரு தூண் இருக்கு. அதைத் 'தொங்கும் தூண்’னு சொல்வாங்க. கார ணம், அந்தத் தூண் நிலத்தைத் தொடாமல் மேற்கூரையில் இருந்து தொங்கிக்கிட்டு இருக்கும். பள்ளிக்கூடம் விட்டதும், நண்பர்களோட அந்தத் தூண்கிட்ட உட்கார்ந்து தின்பண்டங்கள் சாப்பிட்டுட்டுத்தான் வீட்டுக்கு வருவேன். இன்னைக்கு அந்த தொங்கும் தூணும் ஊர்க்காத்தான் கல்லும் எங்கேப் போச்சுன்னே தெரியல. ஆனாலும் அதையெல்லாம் நினைக்கும் போதெல்லாம் மனசு இனிக்குது!'

”ஊர்க்காத்தான் கல்லும் கணேசா தியேட்டரும்...”

- ம.சபரி
படங்கள்: எம்.தமிழ்செல்வன், ம.கா.தமிழ்ப்பிரபாகரன்