மர்மம் உடைக்கும் ’மௌன சாட்சி’
கொல்லிமலை என்றாலே சித்தர்கள், மந்திரவாதிகள், சித்திரக் குள்ளர்கள் போன்ற மர்மமான விஷயங்களே மனதில் வந்து செல்லும். இந்த மர்மங்களைவைத்து 'மௌன சாட்சி’ என்கிற ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் படம் இயக்கிக்கொண்டு இருக்கிறார் அசோக். இவர் சேலத் தைச் சேர்ந்தவர். இவர் மட்டும் இல்லாமல் படத்தின் நடிகர்கள், இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் அனைவருமே மண்ணின் மைந்தர்களே!
அசோக்கிடம் பேசினேன். ''நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருந்தேன். இருந்தாலும் மனசுல சினிமா ஆசை ஓடிக்கிட்டே இருந்துச்சு. குடும்பச் சூழல், படிப்புனு பல காரணத்தால சினிமாவுக்குப் போக முடியலை. திருமணத்துக்கு அப்புறம் என் ஆசையை மனைவிகிட்டே சொன்னேன். 'நல்லவேளை நீங்க சினிமாவுக்குப் போகலை’ங்கிற பதிலை அவங்கக்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன். ஆனா அவளோ, 'இவ்வளவு பெரிய ஆசையை வெச்சுக்கிட்டு ஏன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கீங்க. உங்களுக்கு எது பிடிக்குதோ... அந்தத் துறையில இருங்க’னு ஊக்கப்படுத்தினா.
அப்புறம் என்ன..? வேலையை விட்டுட்டு சினிமா கத்துக்கிட்டேன். நான் கல்லூரியில் படிக்கிறப்ப, அடிக்கடி நண்பர்களோட ஏற்காடு, கொல்லிமலை ஆகிய இடங்களுக்கு பைக்குல போவோம். அப்போ நிறையப் பேர் மலைப் பாதையிலேயே உட்கார்ந்து குடிச்சு, கும்மாளம் போட்டுக்கிட்டு இருப்பாங்க. காலி பாட்டில்களை சிதறடிப்பாங்க. பல இடங்கள்ல பைக் மட்டும் ஓரமா நிக்கும். புதர் மறைவில் செய்யக் கூடாத காரியங்களை செஞ்சுக்கிட்டு இருப்பாங்க. காதல் தோல்விக் காக நடக்கிற தற்கொலை முயற்சி களும் இங்கே சகஜம். இதை எல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு இந்தக் கதையை உருவாக்கினேன். குடி போதையில் தவறு செய்றவங்க திடீர் திடீர்னு கொலை செய் யப்படுறாங்க. யார் கொலை செய்றாங்கிறதை ஒரு ரிப்போர்ட்டர் கண்டுபிடிக்கிறார். இதுதான் கதையின் கரு. கற்பனைக் கதையா இருந்தாலும் கொல்லிமலையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களையும் கதையோட இணைச்சு இருக்கோம்.
கடவுளை நம்புவோருக்குக் கொல்லிப்பாவை வதம் செய்வதாகவும் அதே சமயம், அறிவியலை மட்டும் நம்புவோருக்கு 'கொங்கிலி’ என்கிற மனிதர்களையும் விலங்குகளையும் சூழ்ந்து கொண்டு கொல்கிற ஒரு வகை தாவரம் வதம் செய்வதாகவும் கதை அமைச்சிருக்கேன்.
கொல்லிப் பாவையை வரவைக்க 'மாய ரூபினி’, 'மகா மந்திர ரூபினி’, 'தாயே சுஹா’ என்கிற மந்திரங்களை சாமியார்கள் சிலர் பயன்படுத்துறாங்கனு தெரிஞ்சுக்கிட்டோம். அதோடு மனிதர்களின் மூளையை செயல் இழக்கச் செய்யும் செடி, மனித நடமாட்டம் தெரிந்தால் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும் செடி, ஆளை சுற்றிக் கொல்லும் செடிகள் என நிறைய விஷயங்களை கொல்லி மலையைச் சேர்ந்தவங்க எங்களுக்குச் சொன்னாங்க. கேட்கவே திகிலாவும் பிரம்மிப்பாவும் இருந்தது. அதை அப்படியே கதையில கொடுத்திருக்கோம்!'' என்கிறார் அசோக்.

##~## |