என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

மண்ணின் மைந்தர்களுக்கு வணக்கம்!

மண்ணின் மைந்தர்களுக்கு வணக்கம்!

நீலகிரி மக்களுக்கு நீண்ட நாள் ஏக்கம் ஒன்று உண்டு. 'நாட்டின் ஏதேதோ மூலையில் உள்ளவர்கள் இங்கே வந்து பாராட்டு விழா, புத்துணர்வு முகாம்கள் எல்லாம் நடத்திச் செல்வார்கள். ஆனால், தங்களை தட்டிக்கொடுக்கவோ உற்சாகப்படுத்தவோ எந்த நிகழ்வும் நடப்பது இல்லை’ என்பதுதான் அந்த ஏக்கம். அந்தக் குறை சமீபத்தில் தீர்ந்தது!

மண்ணின் மைந்தர்களுக்கு வணக்கம்!
##~##

ஊட்டியைச் சேர்ந்த 'மீடியா ஃபயர் ஈவென்ட் மேனேஜ்மென்ட்’  என்கிற நிறுவனம், சமீபத்தில் அங்கே 'தி நீல்கிரி ஃபெஸ்ட் 2012’ என்ற ஆக்கபூர்வமான விழா ஒன்றை நடத்தியது. பல துறைகளில் சாதனை செய்துகொண்டு இருக்கும் நீலகிரி மண்ணின் மைந்தர்களை ஊக்கப்படுத்துவதுதான் விழாவின் கான்செப்ட். விழாவை நடத்திய மீடியா ஃபயர் ஈவென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான அனீஸ் மற்றும் சுரேஷிடம் பேசினேன்.

''மண்ணின் மைந்தர்களை ஊக்கப்படுத்துற மாதிரி இதுவரைக்கும் இங்கே எந்த நிகழ்ச்சியும் நடந்தது இல்லை. அதனாலதான் நாங்க களம் இறங்கினோம். நகரங்களைப் போல இங்கு மக்களுக்கு வசதி, வாய்ப்புகள் கிடைக்காது. மழை மற்றும் குளிரைப் பொறுத்துதான் மக்களோட தலையெழுத்தே மாறும். படிப்புல சாதிக்க நினைக்கும் மாணவ, மாணவிகள் அவசரமா சில தகவல்களை சேகரிக்க லைப்ரரிக்கோ, இன்டர் நெட் சென்டருக்கோ கூட போக முடியாத அளவுக்குக் குளிர் வாட்டி எடுக்கும். ஊட்டி நகரைத் தவிர பல மலைக் கிராமங்களில் மின்சாரம், தொலைத் தொடர்பு மற்றும் இன்டர்நெட் வசதி கிடையாது.

இந்தச் சிக்கல்களை எல்லாம் தாண்டி ஒரு துறையில சாதனை படைக்கிறதுன்னா பெரிய விஷயமாச்சே? அதனாலதான் அந்தச் சாதனையாளர்களைத் தட்டிக்கொடுக்க நினைச்சோம். அதற்காக அரசியல், ஐ.ஏ.எஸ்., விளையாட்டு, கலை அப்படினு பல்வேறு வகைகளை பிரிச்சுக்கிட்டு அதுல சாதனை புரிஞ்ச நபர்களை தேட ஆரம்பிச்சோம்.

நீலகிரியோட முதல் பெண் எம்.பி. ஆன அக்கம்மா தேவியை குன்னூர்ல கண்டுபிடிச்ச நாங்க அசந்துட்டோம். இந்தத் தள்ளாத வயதிலும் அவ்வளவு அருமையா அரசியல் பேசுறாங்க. ஆனா, விருது வாங்க நேரில் வர முடியாத அளவுக்கு அவங்க உடல் நிலை மோசமா இருந்தது. அவங்க உறவினர்தான் விருதை வாங்கினாங்க.

மண்ணின் மைந்தர்களுக்கு வணக்கம்!

இஸ்ரோவின் குரூப் இயக்குநராக இருக்கும் போஜராஜன், தேயிலைத் தோட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வுகண்ட 'நீலகிரியின் இரும்பு மனிதர்’ குண்டன் இருவரையும் விருதுக்காகத் தேர்ந்தெடுத்தோம். நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்கள் படுகர் சமுதாய மக்கள். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது படுகர் சமுதாயம். முன்பின் தெரியாத ஆட்கள் வீட்டுக்கு வந்தா, முதல்ல டீ கொடுத்து உபசரிச்ச பின்புதான் 'யார் நீங்க? என்ன வேணும்?’னு கேட்பாங்க. அந்தச் சமுதாயத்துல இருந்தும் பல சாதனையாளர்களை கண்டுபிடிச்சோம்.    

இந்த விழாவுல மொத்தம் 62 நபர்களுக்கு விருதுகளை வழங்கினோம். விருது வாங்கின ஒவ்வொருத்தருமே 'இப்படியரு அங்கீகாரத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்’னு நெகிழ்ந்தாங்க. விழாவில் 710 கூல் டிரிங் ஸ்ட்ராக்களை வாயில் செருகி கின்னஸ் சாதனைக்கு முயற்சி பண்ற பிரசாத் என்கிற இளைஞரோட ஷோவை நடத்தினோம். நிகழ்ச்சியில், அவரோட சாதனைக்குத் தடையா இருக்கிற அவரோட ஏழ்மையையும் குறிப்பிட்டோம். உடனே, இந்த நிகழ்ச்சியோட ஸ்பான்சரான செம்மனூர் ஜுவல்லர்ஸின் உரிமையாளர் போபி எழுந்திருச்சு, 'பிரசாத்துக்கான நியாயமான தேவைகளை செம்மனூர் நிறைவேற்றும்’னு சொல்லி சிலிர்க்கவெச்சுட்டார்.

மண்ணின் மைந்தர்களுக்கு வணக்கம்!

அதே மாதிரி முதுகெலும்புத் தொடர்ல உள்ள பிரச்னையால கழுத்து நேரா நிற்காம அவதிப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளான க்ரிஷ்மா, கீதிகா ஆகியோரைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு நிதி உதவி வழங்கினோம். ஆனா, நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னாடி கீதிகா இறந்ததுதான் மிகப் பெரிய சோகம். மேடையில இதைச் சொன்னபோது பலர் கண் கலங்கிட்டாங்க. சந்தோஷம், நெகிழ்ச்சி, சோகம்னு நீலகிரி மக்கள் காலத்துக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சியா இது அமைஞ்சிருச்சு. இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவோம்'' என்றார்கள்!

மண்ணின் மைந்தர்களுக்கு வணக்கம்!

- எஸ்.ஷக்தி