
இந்த வாரம் : கே.பாலபாரதி எம்.எல்.ஏ.சி.பி.ஐ.(எம்), மாநிலக் குழு உறுப்பினர்படம் : என்.விவேக்
பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!
##~## |
''அப்போது நான் திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழக மாணவி. விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்த காலம். வெள்ளிக்கிழமை அதிகாலை வாயிற்கதவின் இடுக்கு வழியாக வந்து விழும் ஆனந்த விகடனை எடுக்க எங்கள் விடுதியில் பெரும் போட்டியே நடக்கும். என் அறை, விடுதி வாயிலுக்கு மிக அருகில் இருக்கும் என்பதால், பெரும்பாலும் போட்டியில் எனக்கே வெற்றி. நானும் என் தோழி நாகலட்சுமியும் விகடனை எடுத்துவந்து தலையணைக்கு அடியில் ஒளித்துவைத்துவிடுவோம். நாங்கள் வாசித்த பிறகுதான் அடுத்த அறைக்கே போகும் விகடன். வாசிப்புப் பழக்கத்தை எனக்குத் துளிர்க்கச் செய்தது விகடன்தான்.
மிக இளம் வயதிலேயே கம்யூனிசத்தின் பால் ஈர்க்கப்பட்டதால், மார்க்சிய நூல்களை அதிகம் வாசிப்பேன். காசு கொடுத்து வாங்கும் பத்திரிகைகள் ஆனந்த விகடனும் ஜூனியர் விகடனும் மட்டுமே. ஒரு நகைச் சுவைத் துணுக்கு வெளியிட்டதற்காக, பத்திரிகை சுதந்திரத்தைக் காற்றில் பறக்கவிட்டு, ஆனந்த விகடன் ஆசிரியரை அன்றைய எம்.ஜி.ஆர். அரசு கைது செய்து சிறையில் அடைத்தபோது, அதற்கான விகடனின் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்தவண்ணம் இருந்தேன். விகடன் மேல் வைத்திருந்த அபிமானமும் மதிப்பும் பன்மடங்கு அதிகரித்த தருணம் அது.

கல்லூரிக் காலத்திலேயே விகடனுக்குப் படைப்புகள் அனுப்பியிருக்கிறேன். அவை வெளிவரவில்லை என்கிற ஆதங்கமும் வருத்தமும் ரொம்ப காலம் எனக்குள் இருந்தது. விகடனில் பிரசுரமாகும் அளவுக்கு நமது படைப்புகள் தரமாக இல்லையோ என்ற தாழ்வுமனப்பான்மையே உண்டாகிவிட்டது. சில வருடங்களுக்குப் பிறகு, நான் திண்டுக்கல் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதும், விகடனில் என் பேட்டி முதன்முதலாக வெளியானது. அந்தப் பேட்டியில் நான் கவிதைகள் எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன். அதை நினைவில் நிறுத்தி, கேட்டு வாங்கி என் கவிதைகளை வெளியிட்டது விகடன். முதன்முதலில் விகடனின் பக்கங்களில் என் கவிதைகளைப் பார்த்த அந்த நொடியே, அவ்வளவு ஆனந்தம். என் பல வருட வருத்தம் கரைந்து பறந்தே போனது.
விகடனில் இடம் பெறும் பகுதிகளை வாசகர் கள் வாசித்து நேசிப்பார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், விகடன் செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்றான 'மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’ ஓர் அற்புதமான திட்டம். அதன் மூலம் எத்தனையோ இளம் பத்திரிகையாளர்கள் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறார்கள். சௌபா, திருப்பதிசாமி போன்ற பல சமூக அக்கறை உள்ள பத்திரிகையாளர்களை விகடன்தான் வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. குக்கிராமங்களில் இருக்கும் திறமைசாலிகளைக் கைப்பிடித்து அழைத்து வந்து பட்டை தீட்டிய வைரமாக்கும் தொழிற்சாலைதான் விகடன்.
சமூகத்தைப் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாகவே விகடன் இருந்து வந்திருப்பதை நான் ஒவ்வொரு தருணத்திலும் உணர்ந்திருக்கிறேன். யாருமே கண்டுகொள்ளாத வாச்சாத்தி கொடூரம் குறித்து வெகுஜன இதழ்களில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பத்திரிகை விகடன்தான். தீண்டாமை குறித்தும், தலித்தியம் குறித்தும் விகடனின் கட்டுரைகள் நிறையப் பேசியிருக்கின்றன. தாமிரபரணிப் படுகொலைகளோ, சென்னை நகரின் மண்ணின் மைந்தர்களை நகரில் இருந்து அப்புறப்படுத்தி, கண்ணகி நகருக்கும் செம்மஞ்சேரிக்கும் இடம்பெயரவைத்த அவலமோ, பரமக்குடியில் காவல் துறை நிகழ்த்திய படுகொலை களோ எதுவானாலும் தலித் மக்களின் உரிமைக் குரலாக நின்று வாதாடும் விகடன்.
விகடன் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு நான் கிட்டத்தட்ட அடிமை. அதே சமயம், ஆரம்ப காலங்களில் பெண்களை மட்டம் தட்டுவதுபோல விகடனின் ஜோக்குகள் அமையும்போது, மனதுக்கு வருத்தமாக இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலைமையில் பெருமளவு முன்னேற்றம். பொதுவாக, வெகுஜனப் பத்திரிகைகள் கண்டுகொள்ளாத மாற்றுச் சிந்தனையாளர் களுக்கும் விகடன் இடம் கொடுக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
பெண் சிசுக் கொலை கொடூரங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதிலோ, ரீட்டா மேரியின் பாதிப்பை ஜூனியர் விகடன் மூலம் தமிழகம் அறியச் செய்ததோ, சிதம் பரம் பத்மினி வழக்கு குறித்த கட்டுரையோ, பெண்ணியக் கருத்துகள் நிரம்பிய சிறுகதை களை அடிக்கடி வெளியிடுவதிலோ... பெண்களுக்காக வாதாடவும் போராடவும் விகடன் எப்போதுமே தயங்கியது இல்லை.
வெகுஜனப் பத்திரிகைகளில் கவிதைகளுக்கு விகடன் அளிக்கும் முக்கியத்துவம் அபாரம். எந்த ஊரில் இருந்தாலும், வாரம் தவறாமல் விகடன் வாங்கியதும் நான் முதலில் புரட்டுவது 'சொல்வனம்’ பகுதி யைத்தான். நிறைய நிறையப் புதியகவிஞர் களை அந்தப் பகுதி அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. குட்டிக் குட்டியாக எழுதிப் பெருமளவில் கவனத்தைக் கவரும் வகையில் எழுதுகிறார்கள் இளைஞர்கள். இந்த இடத்தில் ஒரு சின்ன ரகசியம் சொல்கிறேன்... என் கவிதைகளும்கூட வெவ்வேறு பெயர்களில் 'சொல்வனம்’ பகுதியில் இடம்பெற்று இருக்கிறது.
என் கல்லூரிக் காலத்தில் வெளிவந்த 'தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்துக்கு விகடனின் விமர்சனத்தைப் படித்துவிட்டு கல்லூரியின் அத்தனை பேரும் அந்தப் படத்துக்குச் சென்றது நினைவில் இருக்கிறது. பிறகு, விகடனின் சினிமா விமர்சனங் களை வாசித்து, அதன் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் ஒரு சினிமாவைப் பார்ப்பதா, வேண்டாமா என்று முடிவெடுப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டோம். அந்த அளவுக்கு விகடன் விமர்சனங்கள்மீது பெரும் மதிப்பு உண்டு. இன்றைக்கும் விகடன் விமர்சனம் அதே தரத்துடன் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
ஒரு முறை சட்டமன்றத்தில் நான் துப்புரவுத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தபோது, அந்த வாரத்தில் விகடனின் 'ஷொட்டு’ எனக்குக் கிடைத்தது. நான் கன்னியாகுமரிக்குச் சென்றிருந்தபோது, ஒரு துப்புரவுத் தொழிலாளியின் மகள் எனக்கு விகடனைக் காட்டி நன்றி சொன்னாள். விகடனில் வரும் ஒரு சின்ன வாக்கியம் எவ்வளவு தூரம் சென்று சேர்கிறது என்ப தற்கு இதுவே சாட்சி.
நகைச்சுவை கலந்து சிந்திக்கத் தூண்டும் 'நானே கேள்வி... நானே பதில்!’ பகுதி என் விகடன் விருப்பங்களில் ஒன்று. அன்றில் இருந்து இன்று வரை விகடனின் தலையங்கம் ஆணித்தரமான கருத்துகளை அழுத்தமாகப் பதியச் செய்கிறது. ஓர் இடதுசாரியான எனக்கு விகடன் தலையங்கங்களில் தொனிக் கும் நியாயம் எப்போதுமே பிடிக்கும்!
'தானே’ புயல் பாதித்த பகுதிகளுக்கான நிவாரண உதவிகளை விகடன் மேற்கொள் வது அதன் மைல்கல் சாதனைகளில் ஒன்று. சமூகத்துக்கு நல்ல விஷயங்களைப் போதித் துக்கொண்டு மட்டும் இருக்காமல், களத்தில் இறங்கி விகடன் பணியாற்றுவது சமூகத்தின் மீதான அக்கறைக்குச் சான்று.
வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாத பி.சம்பத், ப.சண்முகம் போன்ற மக்கள் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் டாப் டென் மனிதர்கள் பட்டியலில் விகடன் அளிக்கும் அங்கீகாரம் செயற்பாட்டாளர்களுக்கு மிகுந்த மனநிறைவு அளிக்கும் பெருமை. அந்தப் பெருமித உணர்வே அவர்களை இன்னும் ஆத்மார்த்தமாகப் பணியில் ஈடுபடவைக்கும்.
விகடனுக்கு நன்றிகள்!''