சொல்வனம்!
##~## |
இந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது?
ஆறு பேர் அமரக்கூடிய
பெரிய ரக மகிழ்வுந்தொன்று
சிக்னலில் நிற்கிறது
குழந்தையோடு
பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தி
மூடியிருக்கும்
அந்த வண்டியின்
கண்ணாடியைத் தட்டுகிறாள்
'இல்லை போ’ என்ற
சைகை மட்டுமே கிடைக்க
தட்டிக்கொண்டே இருக்கிறாள்...
வாகனத்தில் உள்ளே இருந்த
குழந்தையன்று
இவள் கையிலிருக்கும்
குழந்தையைப் பார்த்துப்
புன்னகைத்தபடியே
உதடுகளைக் குவித்துக்கொண்டு
கண்ணாடியை நோக்கி
வருகிறது...
வெளியிலிருக்கும் குழந்தை
கண்ணாடியில்
கன்னம்வைக்கும் தருணத்தில்
உள்ளே இருக்கும் குழந்தையை
இழுத்துக்கொள்கிறாள்
ஒரு பெண்மணி
பச்சை விளக்கு எரிந்ததும்
நகரும் அந்த வண்டியின் பின்னால்
'No Hand Signal’ என எழுதப்பட்டிருக்கிறது
ஆனாலும்
கையசைத்து வழியனுப்புகிறது
கையிலிருக்கும்
குழந்தை.
- நாவிஷ் செந்தில்குமார்
செஞ்சுடர் தூரிகை
அலமாரியின் இரண்டாவது அடுக்கில்
வைக்கப்பட்ட மெழுகுவத்தியின்
செஞ்சுடர் தூரிகை
மூன்றாவது அடுக்கின்
முக நாடியில் வரைகிறது
கருமையாக ஒரு நவீன
குறுந்தாடி ஓவியம்.
- சின்னமனூர் ராஜமழை
பயணம்
பாதை இல்லாமல்
பறந்துகொண்டிருக்கும்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
இறகு அசைவுக்கு
வழிவிட்டு
ஒதுங்கிக்கொள்கிறது
காற்றால் நிறைந்த ஒரு காடு!
- வைகறை
முரண்
'இறைவனிடம்
கையேந்துங்கள்’ என்ற
பாடலைப் பாடிக்கொண்டே
மனிதனிடம் கையேந்துகிறான்
ரயில் பிச்சைக்காரன்.
- கவிஜி
வெளிப்பாடு
காதலை
எவ்வளவுதான்
மூடி மூடி மறைத்தாலும்
குழந்தையின் ஆடைபோல்
அவிழ்ந்துவிடுகிறது
கவிதையன்று.
- அசோக் பழனியப்பன்
நம்பிக்கை

இருபத்திநான்கு மணி நேரமும்
முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும்
அங்கேயே உட்கார்ந்து
உண்டு
உறங்கிக்கிடக்கும்
பிச்சைக்காரர்களுக்குக்
கிடைக்காத
வரமும் வாழ்வும்
ஏதேதோ எண்ணங்களுடன்
எப்போதாவது ஒரு நாள்
கோயிலுக்குச் செல்லும்
நமக்குக் கிடைக்கப் பெறலாம்...
நம்பிக்கை
வேறென்ன சொல்ல...
- சோலை அய்யப்பன்
