என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாடணும் !

காசி.வேம்பையன் படங்கள்: ரா.ராபின் மார்லர்

##~##

நகரத்து மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட 'செஸ்’ விளையாட்டு, தற்போது குக்கிராமத்து மாணவர்களுக்கும் சாத்தியம்தான் என்கிறார், திருவண்ணாமலை மாவட்டம், பொலக்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம்.

திருவண்ணாமலையில் இருந்து... 25-வது கிலோ மீட்டரில் இருக்கிறது பொலக்குணம் கிராமம். இந்தக் கிராமத்தில் இருக்கும் 40 மாணவர்களை ஒருங்கிணைத்து, 'சன் செஸ் அகாடமி’ என்ற பெயரில் செஸ் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதோடு, தானும் உலகத் தர வரிசைப் பட்டியலில் இடம்பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இந்த ராமஜெயம்.

'’எல்லா கிராமத்துப் பசங்களையும் போலத்தான், என்னோட கவனமும் கிரிக்கெட் மேல இருந்துச்சு. ஆறாம் வகுப்பு படிக்கும்போது, பக்கத்து வீட்டுல மேஸ்திரி வேலை பார்க்கிற திருமலை அண்ணன், பொழுதுபோக்கா செஸ் விளையாடச் சொல்லிக்கொடுத்தார். ஆரம்பத்துல பொழுதுபோக்காத்தான் செஸ் விளையாடினேன். ப்ளஸ் டூ பரீட்சை லீவுலதான், முதல்முறையா வேலூர்ல, மாநில அளவுல நடந்த செஸ் போட்டியில கலந்துக்கிட்டேன். முதல்நாள் போட்டியில மொத்தம் நாலு மேட்ச் நடந்துச்சு. அதுல ஒண்ணுல மட்டும்தான் ஜெயிச்சேன். மீதி மூணுலேயும் தோல்விதான். அதுக்குக் காரணம் ஆட்டத்தோட 'ரூல்ஸ், மூவ்மென்ட்’ தெரியாம இருந்ததுதான். அன்னைக்கு இரவு 1 மணி வரைக்கும், மேட்ச்சுக்கு நடுவரா வந்திருந்த ரவிகுமார் சார்தான், எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்து, விளையாடக் கத்துக்கொடுத்தார். அந்த மூவ்மென்ட்டுகளைப் பயன்படுத்தி  இரண்டாவது நாள் நடந்த நாலு மேட்ச்லேயும் வின் பண்ணினேன். மொத்தம் 153 பேர் கலந்துக்கிட்ட இந்த மேட்ச்களில் 22-வது இடம் கிடைச்சது.

விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாடணும் !

அதன் பிறகு, நான் கத்துக்கிட்ட செஸ் ஆட்டத்தை, முதல்ல 10 பேருக்குச் சொல்லிக்கொடுத்து, தினமும் பயிற்சி கொடுத்தேன். மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டிகளில் நாலு பேர் பரிசு வாங்கினாங்க. அதற்குப் பிறகு, அஞ்சு வயசுப் பசங்கள்ல இருந்து 22 வயசுப் பசங்க வரைக்கும் மொத்தம் 40 பேரைச் சேர்த்து... 'சன் செஸ் அகாடமி’னு ஆரம்பிச்சு, செஸ் விளையாட  கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன். லீவு நாட்களில் தான் எங்களோட செஸ் பிராக்டீஸ் நடக்கும். எங்கள் தெருவுல இருக்கிற பிள்ளையார் கோயில்தான் நாங்க செஸ் பிராக்டீஸ் செய்யுற இடம். போட்டிகளில் விளையாடப் போகும்போது மட்டும்... இரவு 1 மணி வரைக்கும் பிராக் டீஸ் நடக்கும். மற்ற நாட்களில் 9 மணியோட பிராக்டீஸ்  முடிஞ்சுடும்'' என்றவர், தொடர்ந்து தன்னுடைய முயற்சிபற்றிக் கூற ஆரம்பித்தார்.

விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாடணும் !

''எனக்கு இன்டர்நேஷனல் அளவுல விளையாடி ஜெயிக்கணும்கிறதுதான் கனவு. அதுக்கு முதல்ல... இன்டர்நேஷனல் அளவில் இருக்கும் தர வரிசைப் பட்டியலில் இடம்பிடிக்கணும்.  மொத்தம் இன்டர்நேஷனல் அளவில் நடக்கும் ஒன்பது மேட்ச்சுகளில் கலந்துக்கிட்டு, இரண்டு ஆட்டத்துல 'டிரா’ செய்தாலே... கடைசி இடம் கிடைத்துவிடும். நான், கடந்த  ஜனவரி மாதம் நாமக்கல்லில் நடந்த ஏழு மேட்ச்சுகளில் ரெண்டுல வின் பண்ணிட்டேன். மீதி ரெண்டு மேட்ச் இருக்கு. அதுக்கு விளையாடப்போகணும்.

விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாடணும் !

எங்க வீட்டுல செஸ் விளையாட்டைச் சூதாட்டம்னு சொல்லி, பணம் கொடுக்க மறுத்துட்டாங்க. நான் படிக்கிற சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில இருந்து கொடுத்த பணத்துலதான் முதல் கட்டமா விளையாடப் போனேன். அடுத்து, 18-ம் தேதி விளையாடப்போற ஆட்டத்துக்குப் பணம் இல்லாம இருந்தேன். என்னோட நிலைமையைத் தெரிஞ்சுக்கிட்ட, திருவண்ணாமலை இந்தியன் வங்கி, என்னோட போக்குவரத்துச் செலவுக்கு 3,000 ரூபாய் கொடுத்து உதவி செஞ்சாங்க. தற்போதைய நிலவரப்படி 1,350 புள்ளிகள் வருவேன். அடுத்து ரெண்டு மேட்ச்ல வின் பண்ணினா, கிட்டத்தட்ட 1,600 புள்ளிகள் வந்துடுவேன். என்னோட ஆசை எல்லாம், 40 பேரையுமே பெரிய ஆட்டக்காரர்களா மாத்திடணும்கிறதும், ஒரு மேட்ச்சாவது விஸ்வநாதன் ஆனந்த்கூட விளையாடணும்கிறதுதான். அதுக்குத் தேவையான பயிற்சி எடுக்க ஆர்வம் இருக்கு. ஆனா, பயிற்சி எடுக்கத் தேவையான அளவுக்கு வசதி இல்லாம இருக்கேன்'' என்றார்.