அண்டன் பிரகாஷ்
##~## |
'சமூக ஊடகங்களைப் பற்றி சதா எழுதுவது போரடிக்கிறது!’ என்று காட்டமாக விகடன் டாட் காமில் கருத்துத் தெரிவித்திருக்கும் சதீஷ் இந்த வாரம் பொறுத்தருள வேண்டுகிறேன்.
இந்தக் கட்டுரையை எழுதும் இந்தக் கணத்தில், ஃபேஸ்புக் பொதுச் சந்தைக்குள் நுழையச் சில மணி நேரங்களே இருக்கின்றன. சென்ற வாரம் அலைபேசித் தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய முக்கிய அலைபேசி சேவை நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், அவர்களது நிறுவனங்களின் வருமானம் ஃபேஸ்புக்கால் எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்பதைச் சிலாகித்துப் பேசினார்கள். 'ஃபேஸ்புக் மென்பொருளை இயக்குவதற்காகப் பயனீட்டாளர்கள் ஒரு நாளைக்கு 150 தடவை அலைபேசியைக் கையில் எடுத்துப் பார்க்கிறார்கள்!'' என்று சிலாகித்தார் ஜி மொபைல் நிறுவனத் தலைவர். கோவை விமான நிலையத்துக்கு வெளியே 'ஃபேஸ்புக் பயன்படுத்த 10 ரூபாய் மட்டுமே!’ என்ற பேனர் வைத்திருக்கும் டாடா நிறுவனம், ஃபேஸ்புக்குக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரிகிறது. இந்தப் பேச்சுகளைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது, ஃபேஸ்புக் தனக்கேயான அலைபேசியை வெளியிட்டால் இவர்களின் நிலைமை என்ன ஆகும்? இப்போதைக்கு அப்படி ஒரு திட்டம் இல்லை என்று ஃபேஸ்புக் தொடர்ந்து மறுத்து வந்தாலும், எனக்கென்னவோ அவர்கள் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் தங்களது தொழில்நுட்பத்தைக்கொண்ட அலைபேசியை வெளியிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

ஃபேஸ்புக் பங்குச் சந்தையில் பில்லியன்களைக் குவிக்கப்போவது இருக்கட்டும், உங்களால் ஃபேஸ்புக்குக்கு எவ்வளவு லாபம்? பொதுச் சந்தையில் நுழைவதற்காக ஃபேஸ்புக் சமர்ப்பித்திருக்கும் - இது வரை ஈட்டியிருக்கும் வருமான விவரங்களையும், இனி வரும் வருடங்களில் கிடைக்கப்போவதாகக் கணித்திருக்கும் வருமான விவரங்களையும் ஆராய்ந்தறிந்து வலைதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வலைதளத்தில் உங்களது ஃபேஸ்புக் பயனீட்டுத் தகவல்களைக் கொடுத்தால், உங்களை வைத்து ஃபேஸ்புக் எவ்வளவு வருமானம் ஈட்டப்போகிறது என்பது தெரியவரும். எனது தகவல்களைக் கொடுத்தேன். இந்த வருடம் எனது பயனீட்டால், ஃபேஸ்புக் 32 டாலர்களை எனக்கு விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் என்கிறது இந்த வலைதளம். நான் புகைப்படங்களை ஃபேஸ் புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்வது இல்லை. ஒருவேளை அதிகமாகப் பதிவேற்றம் செய்தால் என்ன ஆகும் என்று கொடுத்துப்பார்த்தால், கிட்டத்தட்ட என்னால் வரும் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.

விடுமுறைக்காக அமெரிக்காவில் நியூயார்க், லாஸ் ஏஞ்சலீஸ், வேகாஸ் எனச் சுற்றி வரும் சென்னை வழக்கறிஞர் அழகுராமன் ஒவ்வொரு முறையும் தனது புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்கையில், மார்க் ஸக்கர்பெர்க்கின் பில்லியன்களில் சில நூறு டாலர்கள் அதிகரிக்கிறது என்று சொல்ல லாம். உங்களால் ஃபேஸ்புக்குக்கு எவ்வளவு வருமானம் என்பதை இங்கே பாருங்கள்: https://goprivate.abine.com/
உலகின் வணிக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வாக இருக்கும் ஃபேஸ் புக்கின் பங்குச் சந்தை நுழைவுத் தருணத்தில், கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கை, ஃபேஸ்புக்குக்குச் சற்று பாதகமானதே. சென்ற இரண்டு வருடங்களாக ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரத்துக்குச் செலவழித்தது அத்தனை பயனுள்ளதாக இல்லை. அதனால், தொடர்ந்து விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக்கைப் பயன் படுத்தப்போவது இல்லை என்கிறது ஜெனரல் மோட்டார்ஸ். அதே நேரத்தில் ஃபேஸ்புக் வணிக நிறுவனங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தக் கொடுத்திருக் கும் 'ஃபேஸ்புக் பக்கங்களை’ ( http://www.facebook.com/pages/ ) தொடந்து பயன்படுத்து வோம் என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல். விளம்பரங்களை மட்டுமே வருமானமாகக்கொண்டு இருக்கும் ஃபேஸ் புக், இதுபோன்ற பல வணிக நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக்கைப்

பயன்படுத்தப்போவது இல்லை என முடிவுஎடுத்தால், அவர்களது வளர்ச்சி வெகு வாகப் பாதிக்கப்படும்.
இணையத்தில் இணைக்கும் வசதிகொண்ட அலைபேசி கள் வந்துவிட்டதும் பயனீட்டாளர்கள் இயல்பாகவே அலைபேசியை அதிகம் பயன் படுத் துவது ஆச்சர்யம் அல்ல. ஆனால், இந்த மாற்றம் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஃபேஸ்புக் பிரபலமான புகைப்படப் பகிர்வு அலைபேசி மென்பொருளை பில்லியன் டாலர்கள் கொடுத்து வளைத்துப் போட்டுக்கொண்டதற்கு இந்தச் சவால் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கூகுள், ஆரக்கிள் வழக்கு பற்றி இந்த வாரம் பார்க்கலாம் என்றிருந்தேன். ஃபேஸ்புக்கின் சந்தை நுழைவு இந்த இரண்டு பக்கங்களையும் நிறைத்துவிட்டது. Therefore, - அடுத்த வாரம் ஆரக்கிளை வாரலாம்.
LOG OFF