அவசரத்துக்கு ஆட்டுப் பால் மருந்து!
தி.மு.க. மாநிலத் தேர்தல் பணிக் குழு செயலாளரும் பெரியகுளம் தொகுதி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கம்பம் செல்வேந்திரன், தன் சொந்த ஊர் கூடலூர் பற்றிய பால்ய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
##~## |
'அப்போ கூடலூர் மொத்தமுமே விவசாய பூமிதான். அதில் எங்க குடும்பமும் ஒண்ணு. ஊர் முழுக்க எல்லா வீடுகள்லயும் ஆடு இருக்கும். எங்க ஊர் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமப் போனா, அவசரத்துக்கு ஆட்டுப்பாலைப் பீய்ச்சி மருந்தாக் கொடுப்பாங்க. எங்க வீடும் ஆட்டுத் தொழுவமும் பக்கத்து பக்கத்துலயே இருக்கும். தினமும் காலையில ஆடுகளோட கனைப்பு சத்தம் கேட்டுதான் கண் விழிப்பேன்.
எங்க தெரு பக்கத்துல ஒரு சாலிமரம் இருந்தது. எப்படியும் அதுக்கு இப்போ 150 வயசாவது இருக்கும். அந்த மரத்தடி அப்போ ரொம்ப விசாலமா இருக்கும். அதில் ஒரு பக்கம் மாட்டுக்கு லாடம் அடிப்பாங்க. இன்னொரு பக்கம் குரூப்பா உட்கார்ந்து ஆடுபுலி ஆடுவாங்க. அந்தப் பக்கம் பஞ்சாயத்து நடக்கும். இதுக்கு நடுவுல நாங்க கபடி, கிளித்தட்டு எல்லாம் விளையாடுவோம்.
கூடலூர் ஒத்தாங்குளத்தில் என் இளமைக் காலம் கழிஞ்சுது. அந்த ஒத்தாங்குளத்தின் கரை ரொம்ப நீளமா இருக்கும். குளத்துல குளிச்சுட்டு அந்த நீளமான கரையில காற் றாட நடந்துக்கிட்டே நண்பர்களோட இலக்கியம் பேசிட்டு வருவேன். அங்கே இருக்கிற அழகர்சாமி கோயில் தனிமை விரும்பிகளின் சொர்க்கம். பழமையான அந்தக் கோயில் எப்பவும் அமைதியா இருக்கும். அங்கேதான் புத்தகமும் கையுமா பழியாக்கிடந்திருக்கேன்.
அப்போ எங்க ஊர் ஆண்களுக்குக் கொண்டை போடுற பழக்கம் இருந்தது. அதே போல் பெண்கள் யாரும் ரவிக்கை அணிய மாட்டாங்க. வயதான பெண்கள் காது வளர்த்து தண்டட்டி போட்டுஇருப் பாங்க. அப்போ எங்க ஊர்ல ரோடு வசதி இருக்காது. மாட்டு வண்டியில நெல் மூட்டைகளை ஏற்றிக்கிட்டு கிராமி யப் பாடல்களை பாடிக்கிட்டே கழனி யில் இருந்து வீடு வந்து சேர்வோம். அது அவ்வளவு சுகமான அனுபவம்.
சித்திரை பிறந்ததும் தெருவில் இருக்கிற எல்லோரும் இட்லி, அதிரசம் செஞ்சு சாப்பிடுவோம். சாதாரணமாகக் கறி எடுத்து நெல்லுச் சோறு ஆக்கி சமைக்கிறதே ஒரு திருவிழா கணக்கா இருக்கும். அடுப்பைப் பத்தவைக்க தீ கங்கைக் கடன் வாங்குவோம். அதைத் 'தீத் தட்டை’னு சொல்வாங்க.
வேல்முருகன் தியேட்டர் எங்க வீட்டுல இருந்து சரியா ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. படம் ஆரம்பிக்கிறதுக்கு சரியாக அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி 'முருகா! நீ வருவியோ!’னு ஒரு பாட்டுப் போடுவாங்க. அப்படினா படம் போடப் போறாங்கனு அர்த்தம். ஒவ்வொரு தடவையும் பாட்டு கேட்டதும், ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை அஞ்சே நிமிஷத் துல கடந்து டிக்கெட் வாங்குவேன். உள்ளே போய் மணலை குவிச்சு உருமாடை வைத்து அது மேல உட்கார்ந்து படம் பார்ப்பேன்.
எங்க ஊர்ல 'அமரர் சொர்க்கம்’ என்ற பெயரில் 10 ஏக்கர்ல ஒரு சுடுகாடு இருக்கு. இது ஒரு பொது சுடுகாடு. கோடீஸ்வரன்ல இருந்து கூலி ஆளு வரைக்கும் எல்லாருக்கும் அங்கே கண்டிப்பா இடம் உண்டு.
என் திறமைகளை நான் கண்டுகொண்டது பள்ளி காலத்தில்தான். அப்போ மாவட்ட,மாநில அளவில் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கி இருக்கேன். நான் பரிசு வாங்குறதுல என்னைவிட என் வகுப்பு மாணவர்கள் ஆர்வமா இருப்பாங்க. ஏன்னா நான் ஒவ்வொரு முறை பரிசு வாங்குறப்பவும், அதைக் கொண்டாடும் விதமா ஸ்கூலுக்கு ஒருநாள் லீவு விட்ருவாங்க. 17 வயசுல தி.மு.க. மாணவர் அணியில் சேர்ந்து, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகிட் டேன். 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராகத் தலைவர் கலைஞர் என் பெயரை அறிவிச்சார். அப்போ திருச்சியில் ஏற்கெனவே ஒரு செல்வேந்திரன் இருந்ததால் தலைவர் என் பெயரை 'கம்பம் செல்வேந்திரன்’னு அறிவிச்சார். அதுவே இன்னைக்கு வரைக்கும் நிலைச்சிருச்சு. என் பெயர்ல கூடலூர் இல்லை னாலும், அது எப்பவும் என் மனசுல இருக்கு!''
- உ.அருண்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி