என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

பிள்ளையாருக்கு எதிரே பெரியார் !

ந.வினோத்குமார் படங்கள்: ந.வினோத்குமார், ஆ.நந்தகுமார்

மா.கா.பா.ஆனந்த்

##~##

''விளம்பரத் துறையில சேர்ந்து 'காப்பி ரைட்டரா’ ஜொலிக்கணும்கிற கனவோட சென்னைக்கு பஸ் ஏறினேன். இங்க வந்து இஸ்பஹானி சென்டர்ல இருக்கிற 'லேண்ட்மார்க்’ கடையில் இசைத் தட்டுகள் பிரிவில் விற்பனையாளரா இருந்தேன். அப்புறம், ரிலையன்ஸ் மொபைல்பற்றி தெருத் தெருவா போஸ்டர் ஒட்டுற வேலை. அப்புறம் கோயமுத்தூர்ல டுபாக்கூர் கால் சென்டர்ல கொஞ்ச நாள்னு போனப்ப... நண்பர்கள் என்னையே எனக்கு அடையாளம் காட்டினாங்க. மீண்டும் சென்னைக்கு வந்து ஆர்.ஜே. அவதாரம். அப்புறம், விஜய் டி.வி. ஷோனு இதோ

பிள்ளையாருக்கு எதிரே பெரியார் !

இப்ப சினிமாவுக்கு வந்தாச்சு. ஃப்ளாஷ்பேக்ல ஓடிப் போய்ப் பார்த்தா... புதுச்சேரியில பிள்ளைத்தோட்டம் ஏரியாவுல கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருக்கான் இந்த ஆனந்த்...'' என்று ரகளையாகப் பேசத் தொடங்கினார் சென்னை 'ரேடியோ மிர்ச்சி’ ஆர்.ஜே. மா.கா.பா.ஆனந்த்!

''நிஜமாலுமே நான் ஸ்கூல்ல நல்லாப் படிச்சேன். அப்படிப் படிச்சதால, தாகூர் கலைக் கல்லூரியில் பி.காம். சீட் கிடைச்சது. ஒரு வகுப்புல 30 பசங்க இருந்தாங்கனா ரெண்டு, மூணு பொண்ணுங்கதான் இருப்பாங்க. அப்படின்னா, நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

பிள்ளையாருக்கு எதிரே பெரியார் !

அப்புறம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. சேர்ந்தேன். வகுப்பறை தவிர எல்லா இடமும் எங்களுக்கு ஃபேவரைட் ஸ்பாட்தான். அதிலும் அந்தக் காவேரி லேடீஸ் ஹாஸ்டல் வாசல்... அந்தப் பெயரை இப்பக் கேட்டாலும் நினைவு அறையில் ஏதோ ஒரு ஜன்னல் திறந்துக்குது.

பிள்ளையாருக்கு எதிரே பெரியார் !

எங்க வீட்டுக்கு எதிரில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அதுக்கு எதிர்த்தாப்ல கைத்தடியோட பெரியார் நின்னுக்கிட்டு இருப்பார். இதுல என்ன விசேஷம்னா, கோயில் தொடர்பான விஷயங்களுக்கும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் ஒரே இடத்தில்தான் மேடை போடுவாங்க. பக்கத்துல இருக்கிற ஆனந்த முத்துமாரியம்மன் கோயில்ல விசேஷம்னா, எல்லார் வீட்டுச் சமையலையும் மிக்ஸ் பண்ணி அதைப் பிரசாதமாத் தருவாங்க.

இந்தக் கோயில்கள் ஒருபுறம்னா, இன்னொருபுறம் பாலாஜி தியேட்டர், ரத்னா தியேட்டர் போன்றவை எங்க செட் பசங்களுக்கு இன்னொரு கோயிலா இருந்துச்சு. பாலாஜி தியேட்டர்ல நிறையப் படங்கள் பார்த்து இருக்கேன். அப்புறம் ரத்னா தியேட்டர்ல, 'கில்மா’ படங்களாப் போட்டுத் தாக்குவாங்க. கூலிங் கிளாஸ், தொப்பி, வாயில கர்சீஃப் கட்டிக்கிட்டுனு ஒரு தீவிரவாதி கணக்கா அந்த அரையிருட்டுல படம் பார்க்குறதில் ஏக குஷி.

பாலாஜி தியேட்டருக்குப் பின்னாடி பெரிய தோட்டம் ஒண்ணு இருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கிரிக்கெட் பேட்டோட, மண்வெட்டியையும் சேர்த்து எடுத்துக்கிட்டுப் போயிடுவோம். நாங்களே அந்த இடத்தைச் சுத்தம் பண்ணிட்டு, விளையாடுவோம். நாங்க விளையாண்ட ஏரியாவுல நிறைய சேட்டுக் குடும்பங்கள் இருந்துச்சு. அங்க யாராவது இறந்துட்டாங்கன்னா எங்க ஏரியா வழியாத்தான் எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்ப சில்லறைக் காசுகளை எல்லாம் இறைச்சுக்கிட்டே போவாங்க. அந்த ஊர்வலத்துக்குப் பின்னாடியே போய் அந்தச் சில்லறைக் காசுகளை கலெக்ட் பண்ணுவோம்.

பிள்ளையாருக்கு எதிரே பெரியார் !

அந்தக் காசுகளை அப்படியே எங்க ஸ்கூல் பக்கத்துல இருந்த 'கேசினோ பேக்கரி’க்குக் கொண்டுபோவோம். அங்க 'பெப்ஸி, கோலா’னு கூல்டிரிங்க்ஸ் வெச்சிருப்பாங்க. அவ்ளோ அருமையா இருக்கும். யுனிவர்சிட்டியில படிக்கும்போது அந்த கூல்டிரிங்க்ஸ் மேல இருந்த விருப்பம் காணாமப் போனதுக்கு, அதைத் தயாரிக்கிற கம்பெனியின் ஓனரோட பொண்ணு என் கிளாஸ்மேட்ங்கிறது மட்டும் காரணம் கிடையாது. இந்த இரண்டையும் விட்டா, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பக்கத்துல ஒரு புரோட்டாக் கடை இருந்துச்சு. மத்த இடங்கள்ல புரோட்டா மூணு ரூபாய்ன்னா, இங்க மட்டும் ஒரு ரூபாய்க்கு புரோட்டா போடுவாங்க. 10 ரூபா எடுத்துக்கிட்டுப் போயி, 10 புரோட்டாவை ஈக்குவல் பண்ணிட்டு வருவோம்.

பொதுவா, பாண்டிச்சேரின்னா, எல்லோருக்கும் ஞாபகத் துக்கு வர்றது சரக்குதான். ஆனா, அதையும் தாண்டி அங்க, 'ரோமன் ரோலந்த்’னு புகழ்பெற்ற லைப்ரரி ஒண்ணு இருக்கு. அங்கயும் போய்ப் பாருங்க சார்... வாழ்க்கை கொஞ்சம் மாறும்!''

பிள்ளையாருக்கு எதிரே பெரியார் !