என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

வலையோசை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

வலையோசை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

வலையோசை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

காஷ்மீரும் அண்ணா ஹஜாரேவும்!

##~##

 'காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பிரிக்கமுடியாத ஒரு பகுதி. யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன்' என்று சொல்லி இருக்கிறார் அண்ணா ஹஜாரே.

காஷ்மீருக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் என்ன சம்பந்தம்? அங்கு உள்ள மக்கள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் எல்லாவற்றையும் இடது கையால் ஒதுக்கிவிட்டு இப்படிச் சொல்வது ஒரு பள்ளிச் சிறுவனின் மூர்க்கத்தனமான தேசப்பற்றின் வெளிப்பாடாக இருக்கிறது.

வலையோசை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

காஷ்மீரின் விடுதலை என்ற பொருளை எடுத்துக்கொண்டால், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவான வாதங்களையும் அதை எதிர்த்து காஷ்மீர் பிரிந்து செல்வதற்கான நியாயங்களையும் பேச வேண்டும். 'யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது’ என்று மிரட்டுவது தவறு. 'இந்திய தேச பக்தி, ஒருமைப்பாடு’ என்பதை மட்டும் சொல்லி, மற்ற காரணங்களைப் புறக்கணிப்பது அயோக்கியத்தனம்!

 எம்.ஜி.ஆர். வேறு... எம்.ஜி.ராமச்சந்திரன் வேறு!

வீட்டில் ஒருநாள் மாலை வேளை. ''இனிமேல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யாருனு கேட்டா என்னடே எழுதுவ?'' அப்பா அண்ணனை இப்படிக் கேட்டுவிட்டு அவரே பதிலும் சொன்னார். ''எம்.ஜி.ஆர்.னு எழுதிடாதே, ஏதாவது சினிமாக்காரன்னு ஆயிடும். எம்.ஜி.ராமச்சந்திரன் என்று எழுத வேண்டும்'' என்று சொன்னார். எம்ஜிஆர். என்றால் சினிமாக்காரர், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றால் முதலமைச்சர்!

அந்தத் தேர்தல் பிரசாரக் காலங்களில் ஊரில் தாத்தா வீட்டில் நின்றதாக நினைவு. தினமும் மாலையில் தீப்பந்தம் ஏற்றிக்கொண்டு பையன்கள் ஊர்வலமாக வருவார்கள் 'போடுங்கம்மா ஓட்டை, ரெட்டை எலையப் பார்த்தே!’ என்று முழக்கம்.

நாகர்கோவில் தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க-வுக்கு இடையிலான போட்டியில் தி.மு.க-வின் ரத்தினராஜ் வெற்றிபெற்றார். அவர் அம்மாவின் கூடப் படித்தவர் என்ற அபிமானத்தில் அவருக்கு ஓட்டுப் போட்டதாக அம்மா சொல்லிக்கொள்வார்கள்.

வலையோசை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

தமிழாசிரியரான அம்மாவுக்கு கலைஞர் மீது தனி அபிமானம். ''எங்களை எல்லாம் ஏத்திவெச்சது அவர்தான்'' என்பார். ஆனால், அவருடைய கடவுள் மறுப்பு அரசியல் மீது அம்மாவுக்கும் வெறுப்பு உண்டு. அப்பாவின் சித்தி மகன்களில் ஒருவர் தி.க. கடவுள் மறுப்புப் புத்தகங்களைக் கொடுப்பார். இன்னொருவர் இந்துத்துவா அரசியலில் ஈடுபடுவார். இரண்டின் மீதும் சம அளவு வெறுப்பு அம்மாவுக்கு!

 பட்டினியும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணும்!

நண்பர் ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தேன். ''இன்றைக்கு சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் ஏறிவிட்டதாமே!'' என்று காரணமில்லாமல் சந்தோஷப்பட்டுக்கொண்டார். ஒருவேளை கொஞ்சம் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கலாம். இந்தியப் பங்குச் சந்தை, உலகச் சாதனைகளை முறியடித்துக்கொண்டு இருக்கும்போது, அதற்கு சின்ன இருமல் வந்தால்கூட அவசர அவசரமாக நிவாரணத்தில் இறங்கும் நிதி அமைச்சர் இருக்கும்போது, இன்னும் பல இடங்களிலும் இந்தியாவின் சாதனை வெளியே தெரியவருகிறதாம்.

வலையோசை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

பட்டினிக் கொடுமையை ஒழிப்பதற்கான தர வரிசையில் நம்முடைய திருநாடு எத்தியோப்பியாவுக்கு ஒரு இடம் பின்னால் இருக்கிறதாம். 118 நாடுகளை மதிப்பிட்டதில் இந்தியாவின் தர வரிசை 94. எத்தியோப்பியா 93-ல். 'இந்தியாதான் உலகைக் கலக்குகிறது. இனி எல்லாம் சுகமே’ என்று எழுதி முடித்துவிட்ட, மேல் நோக்கிப் பறக்கும் சமூகம் இருக்கும் இந்தியாவில்தான் இந்த நிலைமையும்!

 வஞ்சகர்களின் ஏமாற்று வேலைகள்!

சென்னையில் தாஜ் ஹோட்டலுக்கு எதிர் வரிசையில் காதர் நவாஸ்கான் சாலை என்று ஒரு சாலை உள்ளது. அந்தச் சாலையின் தொடக்கத்தில் இடது பக்கத்தில் ஒரு தள்ளு வண்டி சாப்பாடுக் கடை. வலது பக்கத்தில் குப்பைகள் குவிக்கப்படும் இடம். சற்றே நடந்த பிறகு சாப்பாட்டுக் கடையில் இருந்து ஏப்பம்விட்டால் கேட்டுவிடும் தூரத்தில் உள்ளது ஒரு புடைவைக் கடை.

அந்தக் கடையில் சாப்பாடு விலை, 10 ரூபாய்க்கு மேலே இருக்காது. புடைவைக் கடையில் புடைவைகள் 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறைந்து கிடைக்காது. புடைவைக் கடைக்குள் நுழையும் பணம் காய்த்த மாந்தருக்கு, அந்தச் சுகாதாரமற்ற சூழலில் பசியாறி விடப்படும் ஏப்பங்களோ மற்ற எந்த வாயு ஓசைகளோ கேட்டுவிடாது.

வலையோசை - எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

20 ஆயிரத்துக்கு சேலை செய்யப் பயன்பட்ட முதலீட்டையும் முயற்சிகளையும் சாலையோரம் சாப்பிட வந்த மனிதருக்குத் தரமான உணவு கிடைக்குமாறு செலவிட முடியாதா? இந்தியா ஒளிர்கிறது, பங்குச் சந்தைகள் 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டன என்ற கூக்குரல்களுக்கு இடையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டு வாங்கித் தொலைக்க வேண்டுமே என்ற சலிப்போடு இல்லாமல், உண்மையான கரிசனத்தோடு தரம் குறைந்த உணவை உண்ணும் குடிமக்களின் நலனைப் பேண விழையும் தலைவன் எங்கே?

வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த வலைப் பதிவரா நீங்கள்..? வலையோசைப் பகுதியில் நீங்களும் உங்கள் பிளாக்கும் இடம்பெற உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப் பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை pondy@vikatan.com மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டுங்கள்!