என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

கறுப்புத் தாள் ஓவியர்!

கறுப்புத் தாள் ஓவியர்!

துரை சுப்பிரமணியன் ஓர் ஓவியர். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? மற்ற ஓவியர்களைப் போல வெள்ளைக் காகிதத்தில் இவர் வரைவது இல்லை. கறுப்புக் காகிதம்தான் இவருடைய தேர்வு. பிரஷ§க்குப் பதிலாக ஊசி மூலம் காகிதத்தைச் சுரண்டி அதை ஓவியமாக மாற்றிவிடுகிறார். அதிலும் ஸ்டாம்ப் சைஸ் கறுப்பு பேப்பரில் லென்ஸ் வைத்துக்கொண்டு போர்ட்ரெய்ட் ஓவியங்களை வரைந்து ஆச்சர்யப்படுத்துகிறார்.  

கறுப்புத் தாள் ஓவியர்!
##~##

'நான் தேனி மாவட்டம் காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவன். வறுமையான விவசாயக் குடும்பத்துல பிறந்ததால படிக்கக்கூட வசதி இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். தங்கிப் படிக்க வசதி இல்லாம, மயிலாப்பூர்ல இருக்கிற ராமகிருஷ்ணா மடத்தில் தங்கிப் படிச்சேன். கல்லூரியில் படிக்கும்போது, பல வகையான ஓவியங்களை வரைய கத்துக்கிட்டேன். நாளாக நாளாக ஓவியம் மேல ஆர்வம் அதிகமாகி காதலே வந்துடுச்சு. ஓவியத்தில் ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு முடிவு பண்ணேன். 'நாம ஏன் உலகத்திலேயே மிகச் சின்னதா ஓவியம் வரையக்கூடாது?’னு தோணுச்சு. ஊசியைவெச்சு கறுப்பு பேப்பர்ல ஓவியம் வரைய ஆரம்பிச்சேன். இது கொஞ்சம் ரிஸ்க்கான வேலை. இந்த ஓவியங்களை அழிச்சு அழிச்சு வரைய முடியாது. ஒரு தடவை தப்புப் பண்ணினா தூக்கிப் போட்டுட்டு திரும்ப முதல்ல இருந்து வரையணும்.   ரொம்ப ஷார்ப்பா கவனிச்சு வரையணும். லென்ஸ் வழியாகப் பார்த்து வரையுறதால, கண் வலி, கழுத்து வலி, முதுகு வலி மாதிரி நிறைய பிரச்னைகள் வரும். இருந்தாலும் வரைஞ்சு முடிச்சதும் வர்ற சந்தோஷத்துல எல்லா வலியும் போயிடும்.

இதுவரை மகாத்மா காந்தி, நேருஜி, அன்னை தெரசா, அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் படங்களை வரைஞ்சு இருக்கேன். இந்த ஓவியங்களை சாதாரண கண்களால் பார்க்க முடியாது. லென்ஸ்வெச்சுதான் பார்க்க முடியும். கொஞ்சம் கொஞ்சமா ஓவியத்தோட அளவை சுருக்கிக்கிட்டே வர்றேன். இப்போ அஞ்சு மில்லி மீட்டர் அளவுக்குக் குட்டி ஓவியங்கள் வரையுறேன். இன்னமும் அந்த அளவைச் சுருக்கி இந்தியாவிலேயே சின்ன ஓவியத்தை வரைஞ்சு லிம்கா சாதனை படைக்கணும். இதுதான் என் கனவு. அதுக்காக ரெண்டு வருஷமா கடுமையா பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கேன்.

கறுப்புத் தாள் ஓவியர்!

ஓவியம் தவிர ஒற்றைச் சக்கர சைக்கிள்ல உட்கார்ந்துக்கிட்டு  ஸ்கிப்பிங் பண்ற, 'யுனிசைக் கிளிங் ஸ்கிப்பிங்’கும் எனக்குத் தெரியும். ஒரு நிமிடத்துக்கு 217 தடவை ஸ்கிப் செஞ்சு லிம்கா சாதனை செஞ்சேன். சொல்லப்போனா இதுவரைக்குமான கின்னஸ் சாதனையே ஒரு நிமிஷத்துக்கு  209 தடவைதான். நான் அதைவிட அதிகமா நான் ஸ்கிப்பிங் பண்ணியிருக்கேன்கிறதால, நிச்சயம் கின்னஸ் சாதனையில் என் பெயர் வந்துடும். அடுத்ததா நிச்சயமா ஓவிய சாதனைதான்!'' உறுதியாகச் சிரிக்கிறார் சுப்பிரமணியன்.

கறுப்புத் தாள் ஓவியர்!

சா.வடிவரசு,
 
படங்கள்: பா.காளிமுத்து