என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

வலிமிக்கவர்களின் வரம் !

கட்டுரை, படங்கள்: ந.வினோத்குமார்

##~##

பெற்றோர் இருந்தும் சித்தம் கலங்கி சாலையோரங்களில் கிடக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளை நீங்கள் பார்த்தது உண்டா? உறவினர்கள், அக்கம் பக்கத்தினரின் 'பைத்தியம்’ என்ற வசைச் சொல்லுக்குப் பயந்து, மனநிலை பிறழ்ந்த தங்கள் குழந்தைகளைத் தனி அறையில் பூட்டிவைத்திருக்கும் உங்கள் நண்பர்களின் துயரம் அறிவீர்களா? இவற்றைப் பார்த்த, இவற்றால் காயம்பட்ட, இவற்றின் துயரம் அறிந்த நல்ல உள்ளம்கொண்ட சில பெற்றோர்களால் ஏற்படுத்தப்பட்டதுதான் 'பேரன்ட்ஸ் அசோஸியேஷன் ஆஃப் மென்டலி ஹேண்டிகேப்ட் அண்ட் ஸ்பாஸ்டிக்ஸ் பெர்சன்ஸ்’ (சுருக்கமாக 'பேம்.ஹெச்.எஸ்.) எனும் 'மனப்பிறழ்வு மற்றும் வலிப்பு நபர்களின் பெற்றோர் சங்கம்’ என்கிற அமைப்பு. மாற்றுத் திறனாளிகளுக்கு என தனித் துறை இல்லாத புதுவையில் உருவாகி இருக்கும் இந்த அமைப்பு வலிமிக்கவர்களுக்கு வரம் தான்!

''1995-ல 'பரிவார்’னு ஒரு அமைப்பை எங்களை மாதிரி இருக்கிற சில பெற்றோர்கள் ஏற்படுத்தினாங்க. இன்னிக்கு அந்த அமைப்பின் கீழ் இந்தியாவின் பல மாநிலங்கள்ல இருக்கிற 180 பெற்றோர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் உறுப்பினர்களா இருக்கு. இதனுடைய தலைமை அலுவலகம் பெங்களூரில் இருக்கு. 'பரிவார்’னா குடும்பம்னு அர்த்தம். அந்தக் குடும்பத்தின் ஒரு கிளை உறவுதான் இந்த 'பேம்.ஹெச்.எஸ்.’ அமைப்பு. 2001-ல் புதுவையில இந்த அமைப்பை உருவாக்கினாங்க. ஆனா, அது சரியா நிர்வகிக்கப்படலை. அதனால, 2008-ல் மறுபடியும், சிறப்புக் குழந்தைகளை வெச்சிருக்கும் பெற்றோர்கள் ஒண்ணா சேர்ந்து ஆரம்பிச்சாங்க...'' என்று சொல்லும் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ஜெரால்டின் ஜூலியனுக்கு மனநிலை பிறழ்ந்த மகள் இருக்கிறார். அவருக்கு வயது 24.

வலிமிக்கவர்களின் வரம் !

''சிறப்புக் குழந்தைகளுக்குனு தனியான பள்ளிக்கூடங்கள் புதுவையில் அதிகமா இல்லை. வழக்கமான பள்ளிக்கூடங்கள்ல சேர்த்தா அங்கே உள்ள மற்ற குழந்தைகள் இந்த சிறப்புக் குழந்தைகளைக் கேலி செய்வாங்க. அதனால அவங்க மனசு இன்னும் குழம்பும், காயமடையும். சிறப்புப் பள்ளிக்கூடங்கள்ல சேர்த்தா... அங்க எந்த முன்னேற்றமும் இருக்காது, அல்லது இருக்கிற கொஞ்ச நஞ்ச அறிவும் போயிடும். 'ஸ்பெஷல் எஜுகேட்டர்’ஸுக்கு வெறும் 2,000 ரூபா சம்பளம் கொடுத்தா அப்படித்தானே இருக்கும்..? இதையும் தவிர, 18 வயசு வரைக்கும்தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிகளில் படிக்க முடியும். அதற்கு அப்புறம் அவங்களுக்கு இருக்கிற மனவளர்ச்சிக்கு கல்லூரிக்கும் போக முடியாது. வேற என்னதான் அவங்களுக்கு வழி? பாக்குமட்டையில் தட்டு செய்யறது, என்வலப் கவர்கள் செய்யறதுனு கத்துக் கொடுத்து அதன் மூலமா சுயவேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துட்டா போதும். பெற்றவர்கள் நாங்க இருக்கிற வரை எங்க குழந்தையை நாங்க பார்த்துப்போம். நாங்க போனதுக்கு அப்புறம் அவங்களை அவங்களே பார்த்துக்கணும்கிறதுக்காக, அந்த ஒரு நம்பிக்கையை அவங்களுக்குள்ள விதைக்கிறதுக்காக யோசிச்சப்பதான் இந்த அமைப்பை உருவாக்கினோம்...'' என்று நிறுத்தினார் ஜெரால் டின்.

வலிமிக்கவர்களின் வரம் !

அமைப்பின் இன்னொரு நிர்வாகியான வைத்தியலிங்கம், ''ஆரம்பத்தில எந்தப் பெற்றோரும் எங்களை நம்பி வரலை. அதனால பாண்டிச்சேரியில இருக்கிற பள்ளிக்கூடங்கள் அத்தனைக்கும் போனோம். அங்கே படிச்சிக்கிட்டு இருந்த சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களை எல்லாம் அழைச்சு ஒரு மீட்டிங் போட்டோம். எங்களு டைய கருத்துக்களைச் சொன்னோம். 'நமக்கு அப்புறம் நம்ம குழந்தையை யார் பார்த்துப்பா..?’ங்கிற கேள்வி அந்தப் பெற்றோர்களுக்கும் இருந்ததால அவங்களும் எங்களுடன் இணைஞ்

சுட்டாங்க. இப்ப 2,070 குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த அமைப்பில் உறுப்பினரா இருக்காங்க..'' என்றார்.

இன்னொரு நிர்வாகியான பிரகாஷ் '' 'குரூப் ஹோம்’னு ஒரு இடம் இருக்கு. அங்க பெற்றோர்கள், மனவளர்ச்சி குன்றிய தங்களின் குழந்தைகளோடு சேர்ந்து என்வலப் கவர் செய்யறது, பாக்குமட்டை தட்டுகள் செய்யறதுனு வேலை செய்வாங்க. அதில் கிடைக்கிற லாபத்தைப் பெற்றோர்களும், குழந்தைகளும் வருமானமா எடுத்துப்பாங்க. இதனால ஒரே சமயத்தில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்குது. இப்படி ஒரு விஷயம் இப்ப கர்நாடகாவில் மட்டும்தான் இருக்கு. இது மாதிரியான உதவியை நாடி அரசின் கதவுகளைத் தட்டித் தட்டி சோர்ந்து போய்ட்டோம்'' என்கிறார்.

நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைதானே வாழ்க்கை!

வலிமிக்கவர்களின் வரம் !