என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
Published:Updated:

ரூப்தேரா மஸ்தானா!

ரூப்தேரா மஸ்தானா!

##~##

'அஷ்டாவதானம்’ என்ற வார்த்தையைக் கேட்டு இருப்பீர்கள். ஒரே சமயத்தில் எட்டு விதமான வேலைகளைச் செய்வதற்கு 'அஷ்டாவதானம்’ என்று பெயர். இப்படி எட்டுவித வேலைகளைச் செய்பவர்களுக்கு 'அஷ்டாவதானி’ என்று பெயர்.

 இந்த 'அஷ்டாவதானி’யைப் பார்த்திருக்கிறீர் களா? இல்லையென்றால், இந்தி நடிகர் கிஷோர் குமாரைப் பார்த்தால் போதும்; அவர் ஒரு 'அஷ்டாவதானி’தான். இந்தத் தனி மனிதர் எட்டுப் பெரிய பொறுப்புகளைச் சுமந்திருக்கிறார்.

டைரக்டர், தயாரிப்பாளர், மியூஸிக் டைரக்டர், பின்னணிப் பாடகர், நடிகர், கதை-வசனகர்த்தா, பாடலாசிரியர், 'ஃபைனான்ஸியர்’ என்ற இந்த எட்டுப் பெரிய பொறுப்புகளையும் சுமந்துகொண்டு இருக்கும் நடிகர் இவர். உலகத்தில் எந்த நடிகரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மகத்தான சாதனை இது.

மீபத்தில், சென்னை மியூஸிக் அகாடமி ஹாலில், நாட்டிய கலாகேந்திரத்தின் சார்பில் நடந்த இவரது இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அது ஒரு புதுமையான இசை நிகழ்ச்சி. எப்படி என்றால், நிகழ்ச்சிகளில் எல்லாம் பாடகர்கள் உட்கார்ந்துகொண்டுதான் பாடுகிறார்கள். ஆனால், கிஷோர் குமாரோ பாடிக்கொண்டே ஓடுகிறார், குதிக்கிறார், வளைகிறார், நாட்டியம் ஆடுகிறார். இன்னும் என்னென்னெல்லாமோ செய்கிறார்!

ரூப்தேரா மஸ்தானா!

''இப்படிப் பாடுவதுதான் எனக்குப் பிடிக்கிறது!'' என்கிறார் கிஷோர். ரசிகர்களுக்கும் இதுதான் பிடிக்கிறது என்பதை அன்று அவர்கள் காட்டிய அளவுக்கு மீறிய உற்சாகத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

கிஷோர் குமார் முதலில் பின்னணிப் பாடக ராகத்தான் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். அதற்குக் காரணம், அவரது அண்ணன் அசோக் குமார்.

இசை நிகழ்ச்சிக்கு அன்று அசோக் குமாரும் வந்திருந்தார். இருவரும் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்தால், அண்ணன் - தம்பி என்று யாருமே சொல்ல மாட்டார்கள். மிக நெருங்கிய நண்பர்கள் மாதிரி இருந்தது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, அசோக் குமார் நடித்துக்கொண்டு இருக்கும்போது, கிஷோர் குமார் படித்துக்கொண்டு இருந்தாராம். லீவு நாட்களில் அண்ணனைப் பார்க்க ஸ்டுடியோ வுக்கு வருவாராம். பிறகு, அண்ணனின் சிபாரிசின் பேரில் பின்னணி பாடத் தொடங்கினாராம்.

''நீ பாடுவது அவ்வளவு திருப்தியாக இல்லை. இன்னும் இதை நன்றாகப் பாடியிருக்கலாம்!'' என்று அன்றிலிருந்து இன்று வரை சொல்லி வருகிறாராம் அசோக் குமார்.

''இப்படி சொல்லிச் சொல்லியே எனது இசைத் திறமையை வளர்த்துவிட்டவர் என் அண்ணன்'' என்கிறார் கிஷோர்.

'ஆராதனா’வில் இவர் பாடிய 'ரூப்தேரா மஸ்தானா’ என்ற பாட்டை, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக விரும்பிக் கேட்டிராத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. இந்தப் பாட்டுக்கு மெட்டு உருவான விதமே தனிக் கதை.

ரூப்தேரா மஸ்தானா!

இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மன் காலை வேளையில் வாக்கிங் போவாராம். அப்போது, தவறாமல் கிஷோர் குமார் பங்களாவுக்குப் போய்ப் பேசிக்கொண்டு இருப்பாராம். ஒரு நாள் 'ரூப்தேரா மஸ்தானா’ இசையைப் பாடிக் காண்பித்தாராம் பர்மன். கிஷோருக்கு அது அவ்வளவாக ருசிக்கவில்லை. வேறு எப்படி இசை அமைப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கையில், அஸ்ஸாம் பகுதியில் மலை வாழ் மக்கள் பாடுகிற ஒரு கிராமியப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு இருந்தாராம் பர்மன்.

''அச்சா! மெட்டு கிடைத்துவிட்டது. இப்போது நீங்கள் மெதுவாகப் பாடிக்கொண்டு இருந்த இந்த மெட்டிலேயே 'ரூப்தேரா மஸ்தானா’வைப் பாடுவோமா?'' என்றாராம் கிஷோர்.

ஆம்! பல லட்சம் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட இந்தப் பாட்டின் மெட்டும் ஒரு சாதாரண கிராமியப் பாடலின் மெட்டுதான்.

கிஷோர் குமார் இப்போது நல்ல சிவப்பாக இருக்கிறார். ஆனால், சிறு வயதில் இவர் நிறம் கறுப்பு. அதனால், இவருக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம். யாருடனும் அதிகமாகப் பேச மாட்டார். வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கூட்டம் வந்துவிட்டால், பரண் மேல் ஏறி ஒளிந்துகொள்வார்.

''நான் ஒரு ரிசர்வ் டைப். யாருடனும் அதிகமாகப் பழக மாட்டேன். மனம்விட்டுப் பேச மாட்டேன். மேடையில் நான் ஆடுவதும் பாடு வதும் தமாஷ் பண்ணுவதும் என்னுடையஇயற்கை யான சுபாவத்துக்கு மாறானவை. பாடிக்கொண்டு இருக்கும்போதே நாம் எதற்காக இப்படி எல்லாம் கூத்தாடுகிறோம் என்று என் மேலேயே எனக்கு வெறுப்பாக இருக்கும்!'' என்கிறார் கிஷோர்.

ரு முறை இவரது நண்பர் ஒருவர் இவரிடம், ''உன்னுடைய மனப்போக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. ஒரு சைக்யாட்ரிஸ்ட்டிடம் (மன இயல் நிபுணர்) போய் பரிசோதித்துக்கொள்!'' என்றாராம். அதே போல் கிஷோர் குமார் ஒரு மன இயல் நிபுணரிடம் போனாராம். அந்த நிபுணர் இவரை கௌச்சில் படுக்கச்சொல்லி, கண்களை மூடிக்கொள்ளச் சொல்லி, ''இப்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை உடனே சொல்லுங்கள்'' என்றாராம்.

''ஒரு பெரிய மலை. அதன் உச்சி. அந்த உச்சிக்கு நான் ஓடுகிறேன். அங்கேயிருந்து பார்த்தால் ஒரு பயங்கரமான பள்ளத்தாக்கு. நான் அந்தப் பள்ளத்தாக்கில் குதிக்கிறேன். அதற்குப் பிறகு...''

''போதும்... போதும்...'' என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சுவிட்டாராம் அந்த சைக்யாட்ரிஸ்ட்.

ரூப்தேரா மஸ்தானா!

கிஷோர் குமாரின் தாம்பத்ய வாழ்க்கை அனுதாபத்துக்கு உரிய ஒன்று. இரண்டு முறை திருமணம் செய்துகொண்டும் நிறைவு காணாதவர்.

ஆரம்பத்தில் ரூமா என்ற நடிகையைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினாராம். அதற்கு இவருடைய தாய் சம்மதிக்கவில்லை. ''நடிகையைத் திருமணம் செய்துகொண்டால், அவள் குடும்பத்தைக் கவனிக்க மாட்டாள்'' என்று கூறினாராம் அந்தத் தாய். ஆனால், கிஷோர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அந்த நடிகையைத் திருமணம் செய்துகொண்டாராம். ஒரு பையன் பிறந்தான். அதற்குப் பிறகு பிரச்னை தோன்றியது. அந்த நடிகை, தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். கிஷோர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் விவாகரத்து.

கிஷோரின் மகன் பெயர் அமீத். இப்போது அவனுக்கு 17 வயது ஆகிறது. கல்கத்தாவில் அவனைப் படிக்கவைக்கிறார் கிஷோர். அது மட்டுமல்ல... தமது படங்களில் நடிக்கவும் வைக்கிறார்.

கிஷோர் குமாரின் இரண்டாவது மனைவி பிரபல இந்தி நடிகை மதுபாலா. இந்தத் திருமணம் பரஸ்பர தியாக உணர்வில் உருவானது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிகழ்ச்சியால், கிஷோர் மனம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. சரியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல், தொழி லைக் கவனிக்காமல் பித்துப் பிடித்த மாதிரி இருந்தார். இந்தச் சமயத்தில்தான் இவர் மதுபாலாவுடன் ஒரு படத்தில் நடித்தார். நிஜ வாழ்க்கையிலும் காதல் அரும்பியது. கிஷோரை மணந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார் மதுபாலா. கிஷோர் அதற்கு ஒப்புக்கொண் டார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கக் கூடாது என்றார்.

ரூப்தேரா மஸ்தானா!

''நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நான் இந்தத் தியாகத்தைச் செய்கிறேன்'' என்று ஒப்புக்கொண் டார் மதுபாலா. ஆனால், மற்றொரு பிரச்னை. மதுபாலா இதய நோய் உள்ளவர். இது நன்றாகத் தெரிந்திருந்தும் கிஷோர் மகிழ்ச்சியுடன் அவரை மணந்துகொண்டார். இதுவும் ஒரு தியாகம்தானே!

இதய நோய் மதுபாலாவை மிகவும் பாதித்துவிட்டது. சில சமயங்களில் 'ஹிஸ்டீரியா’ வந்துவிடும். 'கன்னா பின்னா’வென்று கத்துவாராம். அதைப் பொறுத்துக்கொண்டு, அவருக்கு உதவிகள் செய்வாராம் கிஷோர்.

மதுபாலா இறந்துவிட்டார். இன்று கிஷோர் தனி மனிதர்!

வருடைய மகன் அமீது ஒரு நாள் இவரிடம் சொன்னானாம், ''அப்பா! நீங்கள் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள்'' என்று.

''யாரை?'' என்று கேட்டாராம் கிஷோர்.

''எத்தனை பெண்கள் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரைத்தான்...''

''என் அருமை மகனே! உனக்கு 17 வயது. என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்கும் அந்த வயதுதான். 'டோன்ட் பி சில்லி’!'' என்று சொல்லிவிட்டார் கிஷோர்.

''உங்களுக்கு இப்போது 40 வயதுதானே ஆகிறது. இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்களேன்'' என்றேன் நான்.

''நான் விரும்புகிற பெண் கிடைத்தால், திருமணம் செய்துகொள்கிறேன்!''

''யார் அவள்? எங்கே இருக்கிறாள்?''

''ஒரு மலை. அந்த மலையில் ஓர் அநாதை விடுதி. அந்த விடுதியில் ஒரு பெண். அவளுக்கு உற்றார் உறவினர் யாருமே இல்லை. அநாதையாக, தனி மரமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். எளிமையான பெண். அவளைத்தான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், அவள்தான் என்னிடம் அன்பாக இருப்பாள். என்னைப் பற்றிக் கவலைப்படுவாள். எனக்காகக் கண் விழித்துக் காத்திருப்பாள்!''

''சரி... அந்த மலை எங்கே இருக்கிறது?''

''என்னைக் கேட்டால்... நீங்களே தேடிப் பாருங்கள். அப்படி ஒரு பெண் கிடைத்தால் சொல்லுங்கள்... திருமணம் செய்துகொள்கிறேன்!''

கிஷோர் குமாருக்கு நியூமராலஜி தெரியும். ஒருவருடையை பிறந்த தேதியை வைத்து, அவரது குணநலன்களைச் சொல்வார்.

''உங்களுடைய பிறந்த தேதி என்ன?'' என்று என்னைக் கேட்டார்.

''ஒன்று'' என்றேன்.

கிஷோர் எனது குணத்தைப் பற்றிச் சொன்னார். சரியாக இருந்தது.

''உங்களுடைய பிறந்த தேதி என்ன?'' என்று நான் கேட்டேன்.

''நான்கு. இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்கு குணம் விநாடிக்கு விநாடி மாறும். மூடி டைப். அதனால், மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால், அது அவர்கள் தப்பில்லை. பாவம், அவர்களுடைய குணமே அது!'' என்றார் கிஷோர்.

'நியூமராலஜி’படி இது சரியோ... தவறோ எனக்குத் தெரியாது. ஆனால், கிஷோர் தன்னைப் பற்றிச் சொன்னது ரொம்பவும் சரி. ஏனென்றால், அவரைப் புரிந்துகொள்வது சிரமமான காரியம். அப்படிப் புரிந்துகொண்டால் அவர் மீது கோபப்படுவது அதைவிடச் சிரமமான காரியம்!

- நமது நிருபர்