
நினைக்கவே திகிலடிக்கிற பொழுதுகள் அவை. அடுத்த நாள் பகலில் போதை எகிறி, அரவிந்தர் ஆசிரமம் முன் அத்தனை அழுக்காக மட்டையாகிக் கிடந்தபோதுதான் வாசிகா மேடம் அவரது வீட்டுக்கு அழைத்துப்போனார்.
போன வாரம் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம் போயிருந்தேன். மலர்கள் குவிந்த சமாதியின் அருகில் அமர்ந்தேன். எனக்குள் ஏதோ ஓர் இசை. மௌனத்தின் இசை. சதா இரைந்துகொண்டே இருக்கும் மனம்வெறுமை யாய்க்கிடக்கும் அபூர்வ கணங்கள் எவ்வளவு அழகானவை.
சட்டென்று, 'அடப் போங்க பாஸு... நம்மட்ட ஒண்ணுமே இல்ல பாஸு’ என்பதை ஆத்மார்த்தமாக உணரும் பொழுதுகள் எவ்வளவு நிம்மதியானவை. மொந்தை பேக்குகள், ரோலிங் சூட்கேஸ்களுடன் ரயில்வே ஸ்டேஷனில் கம்பார்ட் மென்ட் தேடி அலைபாயும் ஆசாமியைப் போலத் தானே இருக்கிறது வாழ்வு. ரயில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு, எந்த இலக்கும் இல்லாமல் எதிர்க் காற்றுக்கு முகம் கொடுக்கும் மனசு என்றாவது ஒரு நாள்தானே வாய்க்கிறது. எனக்கு எதிரே ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி கண்கள் மூடி ஏதோ முணுமுணுத்தபடி இருந்தார். தூரத்தில் எங்கோ பலர் சேர்ந்து,
'ஜீவன் என்னும் ஜோதியில் கலந்து
சிந்தை எங்கும் தெய்வத்தின் விருந்து
காலை மாலை இரவிலும் நினைந்து
கருணை என்னும் மழையினில் நனைந்து’ எனப் பாடுகிற குரல்கள் பூத்து உதிர்கின்றன. வெளியே வந்தபோது, காலணிகள் விடுகிற இடத்தில் வாசிகா மேடம். ''ஏய் முருகா... எப்போ வந்த?'' என சட்டெனக் கைகளைப் பற்றிக்கொண்டார். என்னை உற்றுப் பார்த்துவிட்டு, ''ஏய்... ரொம்பத் தெளிவாயிட்டியே... போன தடவை பார்த்ததைவிட... குட்...'' என அணைத்துக் கொண்டார். ஆறு வருடங்களுக்கு முன்பு இதே பாண்டிச்சேரி யில் வாசிகா மேடம் என்னைப் பார்த்த கோலம்... அவ்வளவு கேவலமானது!
ஆறு வருடங்களுக்கு முன்பு இதே பாண்டிச்சேரியில் கீர்த்தனாவோடு அவ்வளவு அழகான ஒரு நாள் வாய்த்துஇருந்தது. இதே அரவிந்தர் ஆசிரமத்தில் கைகள் கோத்து அமர்ந்து, கடற்கரையில் ஏராளமாய்க் கதைத்து, கீ செயின்கள், கிளிஞ்சல்கள் பரிசளித்து, ஃப்ரெஞ்ச் உணவகங்களில்சாப்பிட்டு, குளிரும் இருளும் பரவிய பெரும் முற்றம்கொண்ட வீடு ஒன்றில் பாவைக் கூத்து பார்த்து, நள்ளிரவு அரசுப் பேருந்தில் தோளில் முகம் புதைந்து சென்னை திரும்பிய ஒரு நாள். காதல் முறிந்து கீர்த்தனாவைப் பிரிந்த பிறகு, துயரம் துரத்தியடித்த இன்னொரு நாளும் இதே பாண்டிச்சேரியில்தான் வாய்த்தது. காதல் பிரிவும் இன்னும் ஏதேதோ கழிவிரக்கங் களும் சுழற்றியடிக்க... இரண்டு நாட்கள் குடித்துக் குடித்து, தெருத் தெருவாகச் சுற்றினேன். பஸ் ஸ்டாண்ட் பக்கம் பாரில் யாரோ ஒருவனுடன் சண்டையிட்டுப் புரண்டு, கடற்கரை மணலில் உருண்டு, நள்ளிரவுக்கு மேலும் ஆட்டோவில் எங்கெங்கோ திரிந்து...
நினைக்கவே திகிலடிக்கிற பொழுதுகள் அவை. அடுத்த நாள் பகலில் போதை எகிறி, அரவிந்தர் ஆசிரமம் முன் அத்தனை அழுக்காக மட்டையாகிக் கிடந்தபோதுதான் வாசிகா மேடம் அவரது வீட்டுக்கு அழைத்துப்போனார்.

குளிக்கவைத்து, புது டி-ஷர்ட் எடுத்துத் தந்து, என்னைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டு, நிறையப் பேசி, கை நிறைய அரவிந்தர்பற்றிய புத்தகங்களையும் சி.டி-க்களையும் கொடுத்து அனுப்பிவைத்தார். அப்போது கடைசியாக அவர் சொல்லியனுப்பிய வார்த்தைகள் இப்போதும் எனக்கு அசரீரி மாதிரி கேட்கிறது... ''இதுவும் கடந்து போகும்... புரியுதா?''அதன் பிறகு, பாண்டி போகும்போது எல்லாம் அவரைப் பார்த்துவிடுவேன். இதோ ஆறு வருடங்களுக்குப் பிறகு அற்புதமான மன நிலையில், 'இதுவும் கடந்து போகும்’ என அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை முற்றி லும் புரிந்தவனாக, தெளிந்தவனாக அவர் முன் நிற்கிறேன்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்... 'இதுவும் கடந்து போகும்...’ என் வாழ்க்கையில் மிக அதிக முறை எனக்கு நானே சொல்லிக்கொள்கிற சொற்கள் இவைதான். எல்லோருக்குமான, எப்போதைக்குமான வார்த்தைகள் 'அஞ்சு ரூபா இருந்தா ரெண்டு இட்லியாவது சாப்பிட்டுக்கலாம்...’ எனக் கையில் காசில்லாமல் பசியோடு எங்கே திரிந்தேனோ... அங்கேயே மிகப் பெரிய ஹோட்டலில் ரூம் போட்டு, விதவிதமாய் சாப்பாடு தந்து, ஏ.ஸி. காரில் அழைத்துச் செல்லப்பட்ட பொழுதும் வந்தது. விகடனில் வேலை பார்த்தபோது, ''யப்பா! சாரை ஜீப்லயே கொண்டுபோய் வீட்ல விட்டு வா...'' என டி.சி. சொன்ன தருணம் இருந்தது.
வேலையைவிட்ட பிறகு, சந்திரா பவன் சிக்னலில் ஒரு பிசாத்து கான்ஸ்டபிள் மடக்கி, ''வுட்டன்னா மூஞ்சி பேந்துரும்... வண்டிய ஆஃப் பண்றா...'' என அதிகாலை வரை ஸ்டேஷனில் குந்தவைத்த தருணமும் வந்தது. ஃபுல் பாடி செக்கப் பண்ணி விட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் கணங் களில், ''கேன்சர் வரைக்கும் இருக்குமோ...' எனப் பயத்தில் அலறிய மனசு, ''எல்லாமே நார்மல்ங்க... நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. விட்டமின் டேப்ளட்ஸ் மட்டும் எழுதித் தர்றேன்...'' என டாக்டர் சொன்னதும் சட்டென்று தெம்பாகிவிடுகிறதே... 'இனி எப்படி இருக்கப்போகிறோம்’ எனக் குலைத்துப் போட்ட மரணங்களும் பிரிவுகளும் கடந்துபோய், நம் முன் புதிய மனிதர்களோடும் கனவுகளோடும் விடிந்துகொண்டே இருக்கின்றதே நாளை.
தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் காய்கறி மார்க்கெட் பக்கம் உள்ள டீக்கடை ஒன்றில்தான் ஜெகந்நாதனைப் பார்த்தேன். வாழ்வில் நான் பார்த்த விசித்திரக் காட்சிகளில் அதுவும் ஒன்று. பளபளவென மன்னர் கெட்டப் உடையலங்காரங்களுடன் தலைப்பாகை வைத்துக்கொண்டு பெஞ்ச்சில் உட்காந்து டீ குடித்துக்கொண்டு இருந்தார் ஜெகந்நாதன். 'ஏதோ டிராமா ஆர்ட்டிஸ்ட்போல. பக்கத்தில் எங்காவது நாடகம் முடித்து வருகிறார்’ என்று நினைத் துக்கொண்டேன். அவர் ரொம்பவே கேஷ§வலாக டீயைக் குடித்துவிட்டு, உறைவாள் வைக்கிற பகுதியில் இருந்து சில்லறையை எடுத்துக்

கொடுத்துவிட்டு கம்பீரமாக நடந்து போனார். மற்றவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. இன்னொரு நாள் பார்த்தால் அதே கெட்டப்பில் ஒரு கடையில் உட்கார்ந்து, தலைப்பாகையைக் கழட்டிக் கையில் வைத்தபடி சர்பத் கேட்டுக்கொண்டு இருந்தார். ''சர்பத்தெல்லாம் இல்ல... கௌம்புங்க... கௌம்புங்க...' எனக் கடைக்காரர் டென்ஷனாக, எனக்கு அவரைப் பற்றி சந்தேகம் வந்தது. ''அட... அவரு கொஞ்சம் லூஸுப்பா... அவங்க குடும்பம் மன்னர் பரம்பரைல வந்த குடும்பம். அவங்க கொள்ளுத் தாத்தா வரைக்கும் அரண்மனை ஜோர்ல இருந்தவர்தானப்பா... அப்புறம்தான் எல்லாம் போச்சே. இந்தாளு இன்னமும் தன்னை மன்னர்னே நெனைச்சுட்டு சுத்துறாரு. எப்போ பார்த்தாலும் போன ஜென்மத்துல நான்தான் ராஜேந்திர சோழன்னு சொல்வாரு. குடும்பத்துல எவ்வளவோ பண்ணிப் பார்த்துட்டாங்க... ஒண்ணும் நடக்கல. அவங்க வூட்ல இருந்த இந்தத் துணிமணிகளை எடுத்துப் போட்டுக்கிட்டு இப்பிடிக் கௌம்பிடுறாரு...' என்றார் அந்தக் கடைக்காரர். அதன் பிறகும் அவரை இதே கெட்டப்போடு அங்கங்கே பார்த்திருக்கிறேன்.
ஆறேழு மாதங்களுக்கு முன்பு சொந்தக்காரர் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அதிகாலை காய்கறி வாங்குவதற்காக தஞ்சாவூர் மார்க்கெட்டுக்குப் போன போது, அதே ஜெகந்நாதனைப் பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது. வேட்டி, பனியனோடு வாழை இலைக்கட்டுகளைத் தூக்கி மினி பஸ் மேல போட்டுக்கொண்டு இருந்தார். ஏதோ சத்தமாகப் பேசி ஜோக்அடித்துச் சிரித்தபடி டீ குடித்தார். ''டேய்... மன்னர் டிரெஸ்ல சுத்துவாப்லயில்ல... ஜெகந்நாதன்... அவர்தான். கரெக்ட்டாயிட்டாப்ல... அதையெல்லாம் விட்டுட்டு இப்போ இங்க ரெகுலரா லோடடிக்கிறாரு...' என்றான் சேகர் அண்ணன். அவரைப் பார்க்கும்போது, 'இதுவும் கடந்து போகும்’ என்பதற்கு ஜென்மாந்திரச் சின்னம்போல் இருந்தார்.
இப்படித்தான் திருச்சியில் கேசவனை பரோட்டா மாஸ்டராகப் பார்த்தபோதும் இருந்தது. திருச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கம் பிரமாண்டமான ஒரு பழைய வீடு கேசவனுடையது. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவுக்குப் போயிருந்தபோது மூன்று நாட்கள் அவனுடைய வீட்டில்தான் தங்கிஇருந்தேன். ''இந்த வீடு மெட்ராஸ்ல இருந்துச்சுனு வையி... பல கோடி தேறும்' என்றதற்கு, ''அட போங்க சார்... அதெல்லாம் ஒரு ஊரா?' எனச் சிரிப்பான். கேசவன் சினிமா பிரியன். சத்யஜித்ரே முதல் கே.எஸ்.ரவிகுமார் வரை அலசிப் பிழிவான். பார்த்த படங்களை நுணுக்கமாகப் பிரித்துப் பிரித்துப் பேசுவான். அதில்தான் அவனுக்கும் எனக்கும் நெருக்கம். அவ்வப்போது போன் பண்ணுவான். சமீபத்தில் போகும்போது பார்த்தால், அவன் வீடு இருந்த இடத்தில் ஒரு ஹோட்டல் வந்திருக்கிறது.
அதில்தான் கேசவன் பரோட்டா மாஸ்டர். எனக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. ''ஏய்... என்னாச்சு கேசவா?' என்றால், படுகூலாகச் சிரித்தபடி, ''பெரிய கடன்ங்க... ஒண்ணும் பண்ண முடியலை. அதான் வீட்டை வித்தாச்சு... ஏற்கெனவே கல்யாண சமையல் வேலைக்கு எல்லாம் போயிருக்கேன். பழகிட்டா, எல்லாம் தெரிஞ்ச வேலைதான் சார்...' என்றவன், கடைசியாகச் சொன்னான், ''அந்த வீடு எங்க பரம்பரைச் சொத்து. நானா சம்பாரிச்சு வாங்கினேன்? இப்போ இப்பிடி இருக்கறதும் நானா நெனைச்சு பண்ணேன்? அதுவா நடக்குது... நாம உழைப்போம் சார்... இதுவும் கடந்து போகும்... என்ன சொல்றீங்க?'
கோடம்பாக்கத்தில் ஒரு க்ளினிக்கில் டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தபோது, எதிர் பெஞ்ச்சில் கையில் குழந்தையோடும் புருஷனோடும் ஒரு பெண் உட்கார்ந்துஇருந்தாள். 'எங்கோ பார்த்திருக்கிறோமே’ என நினைவில் இடறி, அப்புறம் அவள் பெயர் மனசுக்குள் வந்தது. இவளை எனக்கு நன்றாகத் தெரியும். முன்பு பாலியல் தொழிலில் இருந்தாள். பனகல் பார்க் பக்கம் இருந்து ஒரு நண்பன் இவளை அழைத்து வந்த இரவில், நான் தங்க வேறு அறை தேடி அலைய நேர்ந்தது. அதன் பிறகும் நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். ''எங்க... இதையெல்லாம் விட்டுத் தொலைக்கலாம்னா நடக்க மாட்டேன் னுது...' என அலுத்துக்கொண்ட அவள் முகம் நினைவில் கலையாமல் இருக்கிறது. இப்போது கழுத்தில் நைந்த தாலியோடு, கையில் குழந்தை யோடு இந்த ஆஸ்பத்திரியில் உட்கார்ந்து இருக்கிறாள். முகம் தெளிந்திருக்கிறது. ஊசி போட்ட குழந்தையின் பின்னால் தேய்த்து விட்டபடி ''அழாதரா... அழாதரா... ஜூஜூம்மா...' என அவள் போனதைப் பார்த்தபடி உட்கார்ந்துஇருந்தேன். அந்த வரவேற்பறையில் இருந்த தொட்டியில் அலைந்துகொண்டு இருந்த கலர் மீன்கள், சட்டென்று குதித்து தங்களுக்கான நதிக்குப் போய்விட்ட மாதிரி இருந்தது எனக்கு.
நேற்று அலுவலகத்தில் என்னைப் பார்க்க அரவிந்த் வந்திருந்தான். சமீபத்தில் நடந்த விபத்து ஒன்றில் வலது கை முழுக்கப் போய்விட்டது அரவிந்துக்கு. ஆக்ஸிடென்ட் ஆன மறுநாள் அவனை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்தேன். வலது கையை முற்றிலுமாக அகற்றியிருந்தார்கள். கண்களில் நீர் வழிய வழிய அப்படியே மௌனமாகக் கிடந்தான். இம்மாதிரியான தருணங்களில் ஆறுதலான வார்த்தைகள் எவ்வளவு அபத்தமாகவும் ஆகிவிடும் என்பதை அறிவேன். என்ன சொல்வதென்றே தெரியாமல் அங்கிருந்து வந்தேன். ஏழெட்டு மாதங்கள்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
இப்போது அரவிந்த் வந்திருக்கிறான். ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்தவன் என்னைப் பார்த்ததும் துள்ளி எழுந்து வலது கையை நீட்டினான். எனக்குச் சட்டென்று ஆச்சர்யமாக இருந்தது. அவன் கையைத் தொட்டுப் பார்த்தேன். கட்டைக் கை. மிகக் கம்பீரமாக அந்தக் கையை வீசி அரவிந்த் சிரித்தான். சிறு சோகமும் தெறிக்காத சிரிப்பு. ''நண்பா... அனிமேஷன் வொர்க்லாம் பண்ணித் தர்றேன். ஏதாவது புராஜெக்ட் இருந்தா சொல்லு...' - அவன் கை வீசி நடந்து சென்றதைப் பார்த்தபடி நின்றேன்.
'இதுவும் கடந்து போகும்’ என்ற வார்த்தைகளில் இருந்து ஓர் எழுத்து நொறுங்கித் தூளாகி, இன்னோர் எழுத்து இறுகிச் சேர்ந்துகொண்டது... 'எதுவும் கடந்து போகும்!’
- போட்டு வாங்குவோம்...