வாசகிகள் பக்கம்ஓவியங்கள் : ஹரன்
ரூபாய் நோட்டில் வேண்டாம் மை!
##~## |
மின்சாரக் கட்டணம் கட்டுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் நின்றிருந்த பெண்மணி, காசாளரிடம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை நீட்டினார். கள்ள நோட்டுப் புழக்க சந்தேகம் இருப்பதால், அந்த இரண்டு 500 ரூபாய் நோட்டுகளிலும்... மின் இணைப்பு எண், அந்தப் பெண்ணின் செல்போன் நம்பர் ஆகியவற்றை எழுதச் சொன்னார் காசாளர். அப்பெண்மணியும் அலுவலகம் செல்லும் அவசரத்தில் வேகமாக ரூபாய் நோட்டில் எழுத ஆரம்பித்தார். குறுக்கே புகுந்த நான், ''ரூபாய் நோட்டில் எழுதுவது மிகமிக தவறு. அதிலும் செல்போன் நம்பர் எல்லாம் எழுதித் தருவது பெண்களுக்கு ஆபத்துகளை வரவழைக்கும். தேவையான தகவல்களை தனித்தாளில் எழுதித் தரச் சொல்லலாமே..?'' என்று காசாளரிடம் சொன்னேன். சட்டென்று அதிலிருக்கும் ஆபத்துகளை உணர்ந்தவராக... வெள்ளைத்தாளைத் தந்து அதில் எழுதித்தரச் சொன்னார்.

ரூபாய் நோட்டுகளில் எழுதுவது... பாதுகாப்பற்றது என்பதோடு... இந்திய ரூபாய்க்கு மரியாதை குறைவு என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்!
- கேத்தரின் சந்திரசேகர், சேலம்-7
மாடி வீட்டில் கூரை!

மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த எங்கள் உறவினர் ஒருவர், வெளிநாடு சென்று உழைத்து, படிப்படியாக முன்னேறி கும்பகோணத்தில் அழகான வீடு கட்டி இருக்கிறார். புதுமனை புகுவிழாவுக்குப் போயிருந்தபோது... வீட்டு ஹாலில் இருந்த ஃபிரேம் செய்யப்பட்ட ஒரு புகைப்படம், எங்களின் கண்களை அதிலேயே நிலைக்கச் செய்துவிட்டது. படத்திலிருந்த கூரை வீட்டைக் காட்டிய உறவுக்காரர்... ''நாங்கள் முன்பு இந்தக் கூரை வீட்டில்தான் வசித்தோம். இந்த போட்டோ அடிக்கடி கண்ணில்பட்டால்... நம் மனதில் கர்வம் இருக்காது. யாரையும் குறைவாக மதிக்கத் தோணாது. அதற்காகத்தான் புதுவீட்டின் ஹாலில் அதை மாட்டி வைத்திருக்கிறேன்'' என்று சொன்னபோது... அவரது மனப்பக்குவம், எங்களை மேலும் கவர்ந்தது!
- கே.எம்.மும்தாஜ், கரூர்
மறதி... அவதி!

எங்கள் அபார்ட்மென்ட்டில் குடியிருந்த ஒருவர், வெளியூர் கிளம்பியபோது ஒரு சாவியை வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு, இன்னொரு சாவியுடன் சென்றிருக்கிறார். திரும்பி வரும்போது ஞாபகமறதியாக ஊரிலேயே சாவியை விட்டுவிட்டு வந்துவிட்டார். அது ஆட்டோமேட்டிக் லாக் என்பதால், உடைத்து எடுப்பதும் சிரமம். மீண்டும் ஊருக்கு சென்று சாவி கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லாததோடு, கூடுதல் செலவுக்குரிய விஷயமாகவும் இருந்ததால், தவிப்போடு நின்றிருந்தார். முதல் மாடியில்தான் அவருடைய வீடு என்பதாலும், நல்லவேளையாக ஜன்னல் திறந்திருந்ததாலும், ஏணி மூலமாக மேலே சென்று, அதன் கம்பியை லேசாக வளைத்து, ஒல்லியான ஒருவனை உள்ளே அனுப்பி பிரச்னைக்கு தீர்வு கண்டோம். ஒருவழியாக வேலை முடிந்தது என்றாலும்... பதற்றம், பயம் என்று ஒரே குழப்பம்.
பொதுவாகவே மாற்றுச் சாவி ஒன்றை, நாம் குடியிருக்கும் பகுதியிலேயே வசிக்கும் மிகவும் நம்பகமான நண்பர், உறவினர் என்று கொடுத்து வைப்பது உத்தமம். குறிப்பாக... ஊர் செல்லும்போது!
- இந்திராணி தங்கவேல், மும்பை
எஸ்.எம்.எஸ். வரும் முன்னே... இன்விடேஷன் வரும் பின்னே !
எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், தன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானதும்... முகூர்த்த நாள், மண்டபம், ஊர் பெயர் அனைத்தையும் அனைவருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் உடனடியாகத் தெரியப்படுத்தினார்.
'திருமணத்துக்கு இன்னும் நாலு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள்ளாகவே அனுப்பிவிட்டீர்களே...!’ என்று கேட்டேன்.

'சொந்தம், நட்பு என்று அனைத்துமே இப்போது வெளியூர்களில்தான் அதிகமாக இருக்கின்றன. அவர்கள் எல்லாம் வரவேண்டும் என்று நாம் நினைத்தால், முன்கூட்டியே தெரிந்தால்தானே சௌகரியப்படி ரயில் அல்லது பஸ் என்று டிக்கெட் ரிசர்வ் செய்து வருவார்கள். 'விடிந்தால் கல்யாணம்... பிடிடா பாக்கு, வெத்தலை' என்கிற கதையாக... கடைசி நேரத்தில் பத்திரிகையை அனுப்பினால், வர நினைப்பவர்கள் கூட வரமுடியாமல் போகக்கூடும்... டிக்கெட் கிடைக்காத அவஸ்தையால்! அதனால்தான் தகவலை முன்கூட்டியே அனுப்பிவிட்டேன். சம்பிரதாயமாக பத்திரிகையை பிறகு அனுப்பிக் கொள்ளலாமே!’ என்றார்.
நல்ல ஐடியாதானே!
- அனுராதா ரமேஷ், பாண்டிச்சேரி