துர்கா
நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா
இயக்கம் : நீங்களேதான்

##~## |
மகிஷாசுரமர்த்தினி படம். தாலிக் கொடியை கைகளில் பிடித்தாள் துர்கா! கண்களில் அக்னி. துர்காவின் முடிவு என்ன?!
கடந்த எபிசோட் இப்படி முடிந்திருக்க, வாசகிகள் பலரும் வீராவேசமாக களத்தில் இறங்கிவிட்டார்கள்! பிரச்னை தாலியாச்சே? பத்தினிகள் காலத்தை ஒரு சிலர் அலச, நவீன காலத்தை மற்றவர்கள் கையில் எடுக்க... சினிமா தோற்றது!
பெங்களூரு - கல்பகம் லஷ்மணன், பாண்டிச்சேரி - ராமலஷ்மி, கும்பகோணம் - ஜெயலஷ்மி... இந்த மூன்று சகோதரிகளும், 'துர்கா தாலியைக் கழற்றத்தான் வேண்டும்' என்று அடம் பிடிக்கிறார்கள்!
அதேசமயம், தாலியின் மகிமை பற்றி வாதாடுகிறார் மதுரையைச் சேர்ந்த சகோதரி ஜெயசித்ரா.
பெங்களூரு - ஆர்.பிருந்தா... ஆழமாக அலசுகிறார். ஆனால், தீர்வைச் சொல்லவில்லை!
மாமியார் ராஜத்தை திருத்த வழி பார்க்கிறார்... மதுரை - மீனாட்சி பட்டாபிராமன். இந்தத் தோழி எடுக்கும் ரூட், கதையின் சூட்டைக் குறைத்துவிடும் என்றே தோன்றுகிறது!
துர்கா, ஜாமீனில் எடுக்க... ஆனந்த், ரத்தம் கக்கி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட... என செம கமர்ஷியல் சினிமா ரேஞ்சுக்கு முயற்சிக்கிறார் சென்னை - ஜானகி ரங்கநாதன்.
'குழந்தை சென்டிமென்ட், சமூக நிர்ப்பந்தம், சொல்புத்தி கேட்கும் ஆண்களை திருத்த பெண்கள் போராட வேண்டும்' என யதார்த்தமாக வாதாடும் இந்தத் தோழி, திருச்சி - அம்பிகா, இந்த எபிசோட் இயக்குநர் நாற்காலியை அலங்கரிக்கிறார். வாழ்த்துக்கள் தோழியே!

''ஒரு மோசமான புருஷன் கட்டின தாலி, தூக்குக் கயிறு!''
''ஒரு வேசிக்குப் புருஷனா வாய்ச்சதுக்கு, தூக்குல தொங்குறது எனக்கு தண்டனை இல்லைடி... கௌரவம்!''
''அக்கா... இதைக் காரணம் காட்டி உடனே விவாகரத்து பண்ணிடுங்க!''
மாறி மாறி ஒலிக்க, துர்காவின் கையில் தாலிக் கயிறு!
'ஏன் இந்தப் புருஷனை சகித்துக்கொண்டு வாழ வேண்டும்? அவனுக்கும் எனக்கும் இடையில் உள்ள பந்தம் இந்த தாலிக் கயிறுதான். இதை அறுத்து வீசிவிட்டு, விவாகரத்தும் வாங்கிவிட்டால், நான் சுதந்திர மனுஷி!’
'தனி ஒரு மனுஷியாக இந்த சமூகத்தில் ஒரு பெண்ணால் வாழ முடியாதா?’
கேள்வி மேல கேள்வி எழ, கையில் பிடித்திருந்த தாலிக் கயிறு இறுக, ஏறத்தாழ அறுத்துவிடும் நிலைக்கு வந்துவிட்டாள்!
''அம்மா!''
- ஓடி வந்து அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டது அஞ்சு!
''எனக்குப் பசிக்குதும்மா... வாம்மா...''
துர்காவுக்கு உடம்பு முழுக்க ஒரு முறை அதிர்ந்து குலுங்கியது.
'குழந்தையை எப்படி மறந்தேன்? எங்கள் இருவருக்கும் மத்தியில் இருப்பது வெறும் தாலிக் கயிறு மட்டும்தான் என்று எப்படி நினைத்தேன்? அதைவிடப் பெரிய இணைப்பு அஞ்சுவல்லவா? ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு நான் எடுக்கும் முடிவு அஞ்சுவின் எதிர்காலத்தை பாதிக்காதா? இது ஏன் எனக்குத் தோன்றவில்லை? ஆவேசத்தில் நான் அம்மா என்பதை எப்படி மறந்து போனேன்?’
சுதா உள்ளே வந்துவிட்டாள்.
''அஞ்சு... அம்மாவைத் தொந்தரவு பண்ணாதே. அத்தைகிட்ட வா. உனக்கு என்ன வேணும்... நான் தர்றேன். தாத்தா உன்னைக் கூப்பிடறார் பாரு.''
அஞ்சுவை அழைத்துக் கொண்டு சுதா வெளியேற, துர்கா திரும்பினாள்.
'அத்தை, தாத்தா... இந்த பந்தங்களெல்லாம் அஞ்சுவுக்கு எப்படி வந்தது? காரணம் ஆனந்த்தானே? ஒரு நொடியில் இந்த பந்தங்களை அறுத்துப் போட்டு விட முடியுமா? தாலிக் கொடியை அறுத்துவிடலாம்... உறவுகளைத் துண்டிக்க முடியுமா?’
- கேள்விகள், நெருப்பாக உள்ளே இறங்கின. நடேசன் உள்ளே வந்தார்.
''துர்கா!''
அவருடைய அழைப்பில் கனிவு பொங்கியதும், துர்கா தாள மாட் டாமல் உடைந்து அழத் தொடங்கி னாள். நடேசன் பதறிவிட்டார்.
''என்னம்மா... ஏன் நீ இப்ப அழறே?!''
துர்கா தன் ஆவேசத்தை அவரிடம் சொல்லிக் கதறினாள்.
''அதுல தப்பில்லையேம்மா. அப்படி உன்னை செய்யச் சொன்னதே நான் தானே?''
''மாமா... அப்புறமா உங்க உறவு களுக்கெல்லாம் என்ன அர்த்தம்?''

''ஏம்மா இல்லை..? நான் உன் அப்பா. கல்பனா, சுதா உன் சகோதரிகள். எங்களை பிறந்த வீட்டுப் பந்தமா நம்பு. மோசமான புருஷனை ஒரு பெண் விவாகரத்து செஞ்ச காரணமா, வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போகுமா என்ன?’ அஞ்சுவோட எதிர்காலம் ஆனந்தை வெச்சு இல்லை துர்கா. கேள்வி வரும்... 'அப்பா எங்கே?'னு. நான் மறுக்கலை. உண்மையைச் சொல்லலாம். புரிஞ்சுக் கற பக்குவம் நூத்துல பத்துப் பேருக்கு இருக்காதா? ராஜத்தோட குணம் தெரிஞ்சு, சுதாவை ஏத்துக்க செந்தில் முன் வரலையா? போராட்டம் உனக் குப் புதுசா துர்கா? சென்டிமென்ட் பார்த்தா, தாலிக்கொடி உன் கழுத்துல ஒரு நகையா இருந்துட்டு போகட்டும்... விடு. ஆனா, ஆனந்தை நீ விவாகரத்து பண்றதுதான் துர்கா நியாயம்!''
அஞ்சுவுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டே சுதா வந்தாள்.
''தப்பான புருஷனா இருந்தாலும்... தாங்கிட்டு வாழணும்னு இல்லை. விதவை, வாழாவெட்டி இவங்க புள்ளைங்களுக்கெல்லாம் எதிர்காலம் இருண்டு போகுதா அண்ணி?''
வராகன் உள்ளே வந்தான்.
''நல்லவனா இருந்தாத்தான் அவன் புருஷன். உன்னைக் கொல்லப் பார்த்தவன், கேவலமாப் பேசினவன் ஆனந்த். அவனால் அஞ்சுவுக்கு நிச்சயமா கௌரவம் இல்லை.''
நடேசன் அருகில் வந்தார்.
''சாயங்காலமே நான் பாலாஜி, அன்வர், செந்தில் எல்லாரையும் வரச் சொல்றேன். கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வரலாம். உன் கூட நாங்க எல்லாரும் இருக்கோம். நீயேன்மா கலங்கறே?''
வராகன் நெருங்கினான்.
''துர்கா... எங்க எல்லார் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் தந்தவ நீ. இன்னிக்கு இத்தனை பெரிய வீட்ல நிம்மதியா மாமா, சுதாவெல்லாம் வாழ யார் காரணம்... ஆனந்தால முடிஞ்சுதா... சொல்லு..?''
வாசலில் ஆட்டோ வந்து நிற்க, ராஜம் இறங்கி, ஒரு மாதிரி தலைவிரி கோலமாக உள்ளே ஓடி வந்தாள்!
''அடிப்பாவி! என் புள்ளையை ஜெயில்ல புடிச்சுப் போட்டுட்டியா? நீ நல்லாருப்பியா? அவனைத் தூக்குல தொங்க விட்டு வேடிக்கை பார்க்கப் போறியா? சத்தியமா நீ விளங்க மாட்டேடீ. உன்னை அந்த தெய்வம்கூட மன்னிக்காது. நீ நாசமாப் போவே!'' - கூச்சலிட்ட படி வெறியுடன் துர்காவை நெருங்கினாள். நடேசன் குறுக்கே வந்தார்.
''நீ உள்ள போ துர்கா. உன் வேலையை கவனி.''
''மாமா... ரசாபாசம் எதுவும் வேண்டாம்...''
''இல்லைம்மா... நான் பார்த்துக்கறேன். நீ போ. சுதா... நீ குழந்தையைக் கவனி.''
''பாவி மனுஷா... அவனோட அப்பா நீ.''
''அப்படியா?''
''இதுக்கு என்ன அர்த்தம்?''
''நான் நல்லவன். அவன் எனக்குப் பொறந்த வனா இருந்தா, இப்ப ஜெயில்ல இருக்க மாட்டான்.''
''உன் நாக்கு அழுகிப் போகும். கட்டின பொண்டாட்டியை கேவலப்படுத்தறியா?''
''கொதிக்குதாடீ? எல்லாருக்கும் அப்படித் தாண்டி இருக்கும். நடுரோட்ல வெச்சு, இதைவிடக் கேவலமா துர்காவை பேசி, குடிபோதையில அவளைக் கொல்ல வந்தான் உன் பிள்ளை. டிரைவர் குறுக்கே புகுந்து காப்பாத்தி, இன்னிக்கு ஆஸ்பத்திரில இருக்கார். குடிகாரன், கொலைகாரன்... இத்தனை நல்ல தகுதிகள் உள்ள ஒரு கேடுகெட்டவனுக்கு நீ அம்மா. யாருக்குடி நீ சாபம் போடறே?''
''என் பிள்ளை இப்பிடியெல்லாம் மாற யார் காரணம்? இவதானே?''
''அதுக்கெல்லாம் காரணமே நீதான். அம்மாங் கறது கடவுளுக்கு சமம்தான். ஆனா, இன்னிக்கு யதார்த்த உலகத்துல நிறைய அம்மாக்கள் தாயா இல்லை. பேயா மாறி பிள்ளைகள் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. தன் பொண்ணுங்க வாழணும். ஆனா, மருமகள் நிம்மதியா இருக்கக் கூடாது. வெறி புடிச்சு, புள்ளைங்க மனசுல விஷத்தைத் தூவறாங்க. மருமகளைப் புடிக்காத காரணமா பேரன், பேத்தியைப் பழி வாங்கறாங்க. அவ பெத்த புள்ளைகளும் வாழக்கூடாதுனு வஞ்சனை செய்யறாங்க.''
''இதெல்லாம் பொய்!''
''நீதாண்டி பொய். நன்றிகெட்டவ. உன் கெட்ட குணத்துக்கு கிடைச்ச தண்டனையைப் பாரு. இன்னிக்கு உன்கூட உன் புருஷனும் இல்லை, பொண்ணுங்களும் இல்லை, உன் பிள்ளை யும் ஜெயில்ல! உனக்கு இந்த தண்டனை போதா துடி. நீ இன்னும் நிறைய அனுபவிக்கணும்!''
''நான் விடமாட்டேன். ஊரைக் கூட்டி இவ முகத்தைக் கிழிப்பேன்.''
''போதும்டி. உன் முகமே கிழிஞ்சு தொங்குது. பார்க்க சகிக்கல. ராஜம்... இப்பயாச்சும் உண்மையை உணர்ந்து மனசு மாறு. உன் மருமகள்கிட்ட மன்னிப்பு கேளு. செஞ்ச பாவத் துக்கு கண்ணீர் விட்டு அழு. உன் பிள்ளை வெளிய வருவான்...''
''ஒருக்காலும் நடக்காது.''
''துர்காவை நீ பேசப் பேச, உன் பிள்ளைக்கு அழிவுதான். அவன் சத்தியமா கரையேறவே போறதில்லை.''
ராஜம் பாய்ந்து வந்து வெறியுடன் அவர் சட்டையைப் பிடிக்க, அவர் ஓங்கி அறைந்தார். ராஜம் தூரப் போய் தரையில் விழ, பாய்ந்து வந்து அவளை மிதிக்க காலைத் தூக்கிவிட்டார். துர்கா ஓடி வந்து பிடித்தாள்.
''வேண்டாம் மாமா. இவங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுனா, உங்க நிலைமை என்ன? நீங்க எனக்கு வேணும்...''
ராஜம் வெறியுடன் எழுந்தாள்.
''மாமனார் உனக்கு வேணுமா? வெச்சுக்கோ!'' என ஆரம்பித்து கேட்கச் சகிக்காத வார்த்தை களைக் கொட்ட, நடேசன் மறுபடியும் பாய்ந்தார்.
''சுதா... அப்பாவை உள்ளே கூட்டிட்டுப் போ...'' என்று அனுப்பிய துர்கா, ராஜத்திடம் வந்தாள்.
''இதப்பாருங்க... நீங்களோ, உங்க பிள்ளையோ இனி என்ன பேசினாலும் என்னை அது பாதிக் காது. நீங்க மாறணும். மனுஷியா வாழணும். இல்லைனா, தண்ணி தரக்கூட ஆளில்லாமப் போயிடுவீங்க. இப்போ கிளம்புங்க.''
ராஜம் திட்டிக்கொண்டே வாசலில் இறங்கி நடந்தாள். ஆட்டோ புறப்பட்டது.
மாலையில் பாலாஜி, செந்தில், அன்வர் அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ராஜத்தின் வரவு அங்குள்ள சூழ்நிலையை இன்னும் இறுக்கமாக மாற்றியிருந்தது. கல்பனா அருகில் வந்தாள்.
''துர்கா... நீ அவனை விவாகரத்து பண்ணிடு. அதுல தப்பே இல்லை!''
''ஆமாம் அண்ணி. உங்க அந்தஸ்துக்கும் நல்ல குணத்துக்கும் அஞ்சு வாழ்க்கை அற்புதமா அமையும்.''
''செந்தில்... இப்ப சட்டப்பூர்வமா ஆனந்தோட நிலைமை என்ன?''
''அக்கா... டிரைவர் பிழைச்சாச்சு. ஆனா, கொலை முயற்சினு கேஸ்... அதுலயும் கட்டின மனைவியை, குடிபோதையில கொல்ல வந்திருக்கார். அட்டெம்ப்ட் டு மர்டர் சாதா ரண சார்ஜ் இல்லை. சட்டத்துல அது மிகப்பெரிய குற்றம்.''
''என்ன செய்வாங்க?''
''கோர்ட்ல ஆஜர்படுத்தி கஸ்டடி வாங்கணும். அப்புறமா சார்ஜ் ஷீட் போடணும். நிறைய இருக்கு.''
''பெயில் கிடைக்காதா?''
''அட்டெம்ப்ட் டு மர்டர்... நான் - பெயிலபிள் அஃபன்ஸ்.''
''செல்வாக்கை வெச்சு ஜாமீன்ல எடுக்க முடியாதா?''
நடேசன் குறுக்கிட்டார்.
''எதுக்கும்மா?''
''அக்கா... அவர் திருந்தல. உங்க மேல கோபமும், வெறியும் அதிகமாயிருக்கு.''
அன்வர் அருகில் வந்தான்.
''அக்கா... இதையே காரணமா காட்டி சுலபமா நீங்க விவாக ரத்து வாங்கிடலாம்.''
''இதப்பாரு துர்கா... ஆனந்த் மேல நீ இரக்கம் காட்டாதே. அது உன் நிம்மதியைக் குலைக்கும்''
- இது பாலாஜி.
''லாக்கப்ல இருக்கற ஆனந்தைப் பார்த்து நான் பேச முடியுமா?''
''எதுக்கு துர்கா? அவன் ஏச்சையும், பேச்சையும் கேட்டுக்க நீ தேடி அங்கே போகணுமா?''
- நடேசன் பொறுமை இழந்தார்.
''ஆனந்த், அடிப்படையில ஒரு தப்பான மனுஷன் இல்லை. அவன்கூட இனி நான் வாழணும்னு நினைக்கல. ஆனா, கொஞ்ச நாட்கள் வாழ்ந்த அனுபவத்துல சொல்றேன். தன் தாயோட பேச்சைக் கேட்டு நாசமாப் போனவர்.''
''அது நிஜம்தான்''
- நடேசன் ஒப்புக்கொண்டார்.
''நான் ஒரு வகையில அதிர்ஷ்டசாலி. ஆனந்தோட குடும்பம் மொத்தமும் இன்னிக்கு என் பக்கம் - ஆனந்தையும் மாமியாரையும் தவிர. இவங்க எல்லாரும் யதார்த்தம் புரிஞ்சவங்க. ஆனா, வேறொன்றையும் யோசிக்கத் தோணுது எனக்கு. சம்பாதிக் கறவங்க அத்தனை பேரும் இப்ப இந்தப் பக்கம். அங்கே இன்னும் கொஞ்ச நாள் போனா, அத்தை தனிச்சு வாழக்கூட முடியாது. அதனால ஆனந்த்தைப் பார்த்து பேசறது தான் நல்லதுனு தோணுது.''
''அதுதாம்மா அவளுக்குத் தண்டனை. ஆதரிச்சிட்டா, ஆவேசம் அடங்காது.''
''அக்கா... நீங்க ஆனந்தை பார்க்க வராதீங்க. சட்டம் கொடுக்கற தண்டனையை ஆனந்த் அனுபவிக்கட்டும். தனக்கு நாதியில்லைனு தெரிஞ்சாத்தான் வெறி அடங்கி, பயம் வரும். இரக்கப்படாதீங்க. சொல்றதைக் கேளுங்க. பொறுமைக்கும், இரக்கத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் எல்லை உண்டு. அது கடந்தாச்சு.''
''அக்கா... விவாகரத்துக்கு நீ அப்ளை பண்ணிடு.''
''துர்கா... அது கிடைக்க நாளாகும். ஆனாலும், உடனே அப்ளை பண்ணு. அது ஒரு நல்ல பலனைத் தரட்டுமே!''
- வராகன் சொல்வதைக் கேட்டு, ஏதோ புரிந்தவளாக தலையாட்டினாள் துர்கா.
''அன்வர்... நீ உடனே அட்வ கேட்டை வெச்சு அதைத் தயார் செய்.''
அத்தனை பேரும் கலைந் தார்கள். துர்கா ஆயாசமாக ஒரு மூலையில் சாய்ந்து உட் கார்ந்தாள்.
கல்பனா, சுதா இருவரும் அருகில் வந்தார்கள்.
''கோயில் மாதிரி இருக்க வேண்டிய குடும்பம், இப்பிடி குப்பைக் கூடையா ஆயிடுச்சே? கோர்ட், கேஸ், ஜெயில், விவாகரத்துனு அசிங்கப்பட்டுப் போச்சே? நீங்க ரெண்டு பேரும் அத்தைகிட்டப் பேசிப் பார்க்கறீங்களா?''
''எதுக்கு?''
''இப்படி எல்லாரும் ஒதுங்கினா, இந்தக் குடும்பம் சேரவே சேராதே?''
''வேண்டாம் துர்கா. அப்பா சொல்ற மாதிரி, எங்கம்மா அநாதையா நாதியில்லாம நிக்கணும். குடிக்கத் தண்ணி கொடுக்கக்கூட ஆள் இல்லாம ஏங்கணும். வாழ்க்கையில ஒரு பயம் வரணும். அதை நாம கெடுத்துடக் கூடாது. நீ இரக்கம் காட்டாதே''
- இருவரும் எழுந்து போனார்கள்.
அன்று இரவுக்குள் வக்கீலை வைத்து, அன்வர் விவாகரத்து நோட்டீஸ் தயாரித்து, துர்காவிடம் வந்து கையெழுத்தும் வாங்கிவிட்டான். துர்கா வேதனைப்பட்டாள்.
''அக்கா... இது தர்ம யுத்தம். நீ போராடித்தான் ஆகணும். நாங்கள்லாம் பக்கபலமா இருக்கோம்!''
புறப்பட்டான்.
வக்கீலுடன் அன்வர் ஸ்டேஷனுக்கு வந்த நேரம், செந்தில் முன்பாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் ராஜம்.
''என் மகளை கட்டிக்கப் போறவர் நீங்க. அவ அண்ணனை விட்றக் கூடாதா? உங்க கால்ல விழறேன்...''
அன்வர், செந்திலிடம் நோட்டீஸைத் தந்தான்.
''உங்க மனைவி துர்கா, உங்களுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க!''
ஆனந்த் அதைப் படித்து முகம் இருள, ராஜத்திடம் திரும்பினான் செந்தில்.
''உங்க மகனை வெளியில கொண்டு வரவோ, காப்பாத்தவோ, இந்த உலகத்துல துர்கா அக்காவால மட்டும்தான் முடியும். இனி அவங்க அதுக்குத் தயாரா இல்லை!''
ராஜத்தின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, எதிர்பாராத அந்தச் சம்பவம் அங்கே நடந்தது. அத்தனை பேரும் ஆடிப் போனார்கள்!
என்ன நடந்திருக்கும் அங்கே?!
தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம்.சில்க்ஸ்,
மயிலாப்பூர், சென்னை
''ஹலோ அம்பிகா... நீங்கதான் இந்த எபிசோட் இயக்குநர்'' என்று தொலைபேசி மூலம் விஷயத்தைச் சொன்னதும்... ''என்னால நம்பவே முடியல'' என்று பதினைந்து வயது மாணவியின் குரல் எதிர்முனையில். ''பாப்பா, அம்மாகிட்ட போனைக் கொடுங்க'' என்றோம்.
''நான்தான் அம்பிகா. ஸ்கூல் டீச்சரா இருக்கேன். நானும் எங்கம்மாவும் தொடர்ந்து கதை சொல்லிட்டே இருக்கோம். இந்தத் தடவை நான் ஜெயிச்சுட்டேன். ஆனா, அம்மாவுக்கு இதுவரை கிடைக்காததுல எனக்கு வருத்தம். எனக்குக் கிடைச்சதுல அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்'' என்று இடைவெளி இல்லாமல் பேசியவரின் குரலில், கூடுதல் உற்சாகம். அதற்குக் காரணம்... ''எனக்குக் கல்யாணம் ஆகி ஆறுமாசம்தான் ஆச்சு'' என்ற அம்பிகாவின் குரலில் அத்தனை வெட்கம்! வாழ்த்துக்கள் சொன்னோம்... புதுமண வாழ்க்கைக்கும், இயக்குநர் நாற்காலிக்கும்!
வாசகிகளுக்கு சூப்பர் பரிசுப் போட்டி
இவருக்கு 'வி.ஐ.பி.’ சூட்கேஸ் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-66808023 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லிவிட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்த கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக படைக்கும் வாசகிக்கு சூட்கேஸ் பரிசு! இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!