மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 44

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

ஒட்டக்குடி தாத்தா வீடு இப்போதும் ஒரு கனவு. எங்களது நிறைய கோடை விடுமுறைகள் அங்கேதான் கழிந்திருக்கின்றன. பகலிலேயே இருள் பரவிக்கிடக்கிற எட்டுக்கட்டு வீடு. தாத்தா குதிரை வண்டி யில்தான் போவார்.

ஆறாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில் அத்தை வீட்டுக்குப் போயிருந்தேன். திருச்சி பக்கத்தில் ஒரு கிராமம். அங்கே எங்களுக்குச் சகலமும் சக்தி மாமாதான். அவர் வீடு இருந்தது பக்கத்து ஊரில்.

காலையிலேயே கிளம்பி சென்ட்டு போட்டுக் கொண்டு வந்துவிடுவார். எங்களையும் மெட்ராஸில் இருந்து வந்திருந்த குட்டி, தயா குரூப்பையும் புளியந்தோப்பு, மோட்டார் செட்டு, மாரியம்மன் கோயில், சர்பத் கடை என எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போவார் சக்தி மாமா.  மெட்ராஸில் இருந்து வந்த அத்தையும் கூடவே வரும். சதா பொழுதும் ஒரே கொண்டாட்டமாகக் கழியும். நாங்கள் மோட்டார் செட்டில் தண்ணீரில் சேவண்டி அடிக்கும்போது, சக்தி மாமாவும் மெட்ராஸ் அத்தையும் வரப்பில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்பார்கள். பெரிய மாமா வீட்டில் நாங்கள் ஒளிஞ்சாங்கண்டு விளையாடும்போது இவர்கள் ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டு, நெல் கொட்டுகிற ரூமில் உட்கார்ந்து இருப்பார்கள். ஒரு முறை யாரும் பார்க்காத தருணத்தில் சக்தி மாமாவுக்கு வைத்த காபி டம்ளரை எடுத்து பாதி குடித்துவிட்டு மெட்ராஸ் அத்தை வைக்க, மாமா வந்து குறுகுறு சிரிப்போடு அதை எடுத்துக் குடித்தார். எனக்கு இந்தக் காட்சிக்குப் பின்னால் இருக்கும் 'ப்ளாப்ளா’ எதுவும் விளங்கவில்லை. ஒருநாள் காவேரி கலையரங்கத்துக்கு 'நீயா’ படம் பார்க்க வண்டி கட்டி எல்லோரையும் அழைத்துப்போனார் சக்தி மாமா.

தியேட்டரில் நடு சீட்டில் நான். இந்தப் பக்கம் சக்தி மாமா, அந்தப் பக்கம் மெட்ராஸ் அத்தை. நான் தீவிரமாகப் படம் பார்க்க, அடிக்கடி ''மாப்ள... எடவேளைல ஒனக்கு என்ன வேணும்?' என்றபடி மாமா என் தலையைப் பிடித்துக் கீழே அழுத்துவார். படத்தில் பாம்பு என்ட்ரி ஆகிற சீனாகப் பார்த்து இப்படி நடக்க, எனக்குப் பயங்கர டென்ஷனாகும். ''க்ரீம் பன்னு வாங்கித் தரவா?' என்றபடி கூல் பண்ணுவார் மாமா. சொன்ன மாதிரியே இன்டர்வெலில் க்ரீம் பன், பன்னீர் சோடா என எனக்குப் பலமான கவனிப்பு. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ஏழாவது முடித் திருந்த சித்தார்த்தன்தான் சொன்னான், ''டேய் தம்பி... தேட்டர்ல முத்தங் குடுத்துக்கிட்டாங்கடா... அவங்களுக்குள்ள டச்சிங் டச்சிங்!''

வட்டியும் முதலும் - 44

ஊருக்குக் கிளம்புகிற நாளில், ரயில்வே ஸ்டேஷனில் எல்லோரையும் ரயில் ஏற்றிவிட்டு, கடைசி நிமிடங்களில், ''டேய்... டேய்... இதைக் கொண்டுபோயி மெட்ராஸ் அத்தைட்ட குடுத்துட்டு வா...' என சக்தி மாமா என் கையில் எதையோ கொடுத்தார். அது ஒரு லெட்டரும் பாட்டு கேசட்டும். அதைப் பதற்றமாக வாங்கி சூட்கேஸில் வைத்துக்கொண்டது அந்த அத்தை. ரயில் போன பிறகு என்னை அழைத்து வந்து, ''டேய்... இதையெல்லாம் யார்ட்டயும் சொல்லக் கூடாது சரியா...' என்றபடி பஸ் ஸ்டாண்ட் ஸ்வீட் கடை ஒன்றில் பாதுஷா வாங்கித் தந்தார் மாமா. இப்போதும் அந்த பஸ் ஸ்டாண்ட் பாதுஷா வாசம் கமழ்கிறது.

அந்த ஒரு கோடைக்குத்தான் அந்த அத்தை வீட்டுக்குச் சென்றது. அந்த ஊரில் எங்கு பார்த்தாலும் நெல்லும் கரும்புச் சக்கையுமாகக் கிடக்கும். பெரிய வீடும், மோட்டார் செட்டும், சக்தி மாமா, மெட்ராஸ் அத்தையின் முகங்களும் மறக்க முடியாத ஒரு சினிமா!

ஒட்டக்குடி தாத்தா வீடு இப்போதும் ஒரு கனவு. எங்களது நிறைய கோடை விடுமுறைகள் அங்கேதான் கழிந்திருக்கின்றன. பகலிலேயே இருள் பரவிக்கிடக்கிற எட்டுக்கட்டு வீடு. தாத்தா குதிரை வண்டி யில்தான் போவார்.

ரெண்டு, மூணு குதிரைகள் வளர்த்தார். ஆத்துக்குக் கொண்டுபோய் குதிரைகளைக் குளிப்பாட்டி, அதற்கு கொள்ளு போட்டு, விதவிதமான மணி கட்டிய பெல்ட்டுகள் கட்டி... அதுவே எங்களுக்குப் பெரிய திருவிழாவாக இருக்கும். ''ந்தா... கம்னாட்டி... எம் பேராண்டிக்கு ஒரு வித்தையக் காட்டு...' என தாத்தா இடம் பார்த்துத் தட்ட, குதிரை பெரும் சத்தத்தோடு முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு கனைக்கும். ''ம்ம்ம்... எப்பிடி வளர்ப்பு. அதுல ஏறி லகானப் புடிக்கிறதுக்கு... ந்தா... தாத்தா மாரி தெம்பு வேணாமா? நையினு கெடக்க... டேய் வெங்கிட்டு! எம் பேராண்டிக்கு டெய்லி ஒரு மரக் கள்ளா எறக்கி சாப்புடவையி... லீவு முடியறதுக்குள்ள ச்சும்மா கிண்ணுனு வரட்டும்...' என்பார் தாத்தா. தினமும் சாயங்காலம் ஆனால் ஆத்து மணலில் காட்டாமணக்கால் வீடு கட்டி, கூட்டாஞ்சோறு செய்து இருட்டும் வரைக்கும் விளையாடுவோம். ஒருநாள் விளையாட்டுக்கு சுபா வரவில்லை.

''டேய் பீஸு... சுபாவைப் போய் அழைச்சுட்டு வாடா...'

''போடா... அவுங்கூட்டுக்குப் போனா, இனிமே இங்க வராதீங்கடானு அவங்கம்மா வையிறாங்கடா...'

''ஆமாடா... சுபா வயசுக்கு வந்துருச்சாம். இனிமே, அங்க போவக் கூடாதாம்ரா...'

மறுநாளே சுபா வீட்டில் விசேஷம். அதுவரை எங்களுடன் அராஜகம் பண்ணி விளையாடும் சுபாவை புதுப் பாவாடை, தாவணி கட்டி உட்காரவைத்திருந்தார்கள். விதவிதமாகக் கலந்த சாதங்களும் கலர் அப்பளமும் வைத்து விருந்து நடந்தது. ''அமித்தீஸ்வரம் ஆயி மவனா இது... எலேய்... என்னடா மொறப்பு... கட்னாலும் மூத்தவனுக்குத்தாம்ரா சான்ஸு... ஒனக்கெல்லாம் கெடையாது. கொணசேகரன் பொண்ணு வெளையட்டும்ரா... ஒனக்குப் பாத்துருவோம்' என உத்திரங்குடி பெரியம்மா வெத்தலையைக் குதப்பிக்கொண்டு என் தொடையில் கிள்ளிவிட்டது. முகமெல்லாம் சந்தனம் பூசிக்கொண்டு உட்கார்ந்திருந்த சுபாவிடம், ''இனிமே வெளையாட வர மாட்டியா...' என்றான் குரு. ''ஏன்... அதெல்லாம் வருவேனே...' என்றது கோபமாக. ஆனால், அதன் பிறகு சுபா விளையாடவே வரவில்லை.

வட்டியும் முதலும் - 44

ஒரு மாதம் கழித்து தாத்தா வீட்டுக்கு தூர்தர்ஷனில் 'ஒளியும் ஒலியும்’ பார்க்க வந்தது. பார்வை, பேச்சு, சிரிப்பு எல்லாமே மாறிப்போயிருந்தது. ஒரே மாதத்தில் ஒரு பெண்ணால் எப்படிப் பெரிய மனுஷியாகிவிட முடிகிறது? 15 வருட சாயல்கள் அத்தனையையும் கலைத்துப்போட்டுவிட்டு, சட்டென வேறு ஒருத்தியாக மாற எப்படி முடிகிறது? இந்த மாற்றம் நிஜமா... நாடகமா? இப்படி ஏராளமான கேள்விகளை எனக்குள் கிளறிவிட்டன அந்தக் கோடை விடுமுறை நாட்கள்.

கடைசியாக, தாத்தா வீட்டுக்குப் போன ஒரு கோடையில் அங்கே ஒரே ஒரு குதிரைதான் இருந்தது. அதுவும் சீக்கு வந்து கிடந்தது. அப்பாதான் வந்து தினமும் வைத்தியம் பார்த்துவிட்டுப் போவார். ராத்திரி அரிக்கேன் விளக்கைத் தூக்கிக்கொண்டு நாங்கள் நிற்க, அப்பா ஏதேதோ வைத்தியம் பார்ப்பார். எதுவும் பயன் இல்லாமல் ஒரு சாயங்காலம் அந்தக் குதிரையும் செத்துப்போனது. ஆற்றைத் தாண்டிய தாத்தாவின் வாழைக் கொல்லையில் போய் அதைப் புதைத்துவிட்டு வந்த ராத்திரி, மனப்பத்தாயத் தில் அப்படியே கிடக்கிறது.

முதன்முதலாக நாங்கள் பார்த்த பெருநகரம் என்பது திருச்சிதான். ரயில்வேயில் வேலை பார்க்கிற சிவராஜ் சித்தப்பா திருச்சி சுப்ரமணியபுரத்தில் இருந்தார். மறக்க முடியாத சில கோடை விடுமுறைகள் அங்கே கழிந்தன. வேப்பம்பூக்கள் உதிரும் காம்பவுண்டில் உள்ள வீடு அது. பால் கொழுக்கட்டை, பணியாரம், நீர் உருண்டை என சாந்தி சித்தி தினமும் ஏதாவது பலகாரம் செய்து கொடுத்துக்கொண்டே இருக்கும். சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் முதன்முதலில் அம்புலி மாமா புத்தகங்கள் கிடைத்தன. பழைய அம்புலி மாமா, கோகுலம், சிறுவர் மலர் புத்தகங்களை மொத்தமாகக் கட்டிவைத்திருப்பார்கள்.

காலையில் போனால் சாயங்காலம் வரைக்கும் கதைகள் படிப்பதிலேயே போகும். பீர்பால், மாயாவி, முல்லா, கிருஷ்ணர் கதைகள் என அற்புதமான உலகத்தை அருளியது அந்தக் கோடை விடுமுறை நாட்கள். சபீனா தியேட்டரில் ஜாக்கிசான் படம், துப்பாக்கித் தொழிற்சாலை, மலைக்கோட்டை, முக்கொம்பு என எல்லாமே அதிசயமாக இருந்த அந்தக் கணங்கள் எவ்வளவு அற்புதமானவை! சுப்ரமணியபுரம் ஏரியாவில் பன்றிகள் அதிகம். எங்கு பார்த்தாலும் நாலைந்து பன்றிகள் நின்று 'உர்ர்... உர்ர்’ரெனப் பார்த்துக்கொண்டு இருக்கும். பாத்ரூமில் இருக்கும்போதுகூட பின்னால் இருந்து 'க்ர்ர்ர்’ரென ஒருவர் எட்டிப் பார்ப்பார். அவ்வப்போது கார்ப்பரேஷன் வேனில் நாட்டுத் துப்பாக்கியோடு பன்றி வேட்டைக்கு ஆட்கள் வருவார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டு வேனின் பின்னால் ''ஹேய்ய்ய்...' எனத் தொங்கிக்கொண்டு பன்றி வேட்டைக்குப் போனதெல்லாம் மறக்க முடியாத ஆக்‌ஷன் ப்ளாக்!

ஒவ்வொரு கோடை விடுமுறையும் புதிய புதிய உலகங்களையும் எவ்வளவு சந்தோஷங்களையும் நமக்குத் தந்திருக்கின்றன. ஒவ்வொரு நண்பரிடமும் இதைப் பற்றிப் பேசும்போது அவர்கள் அப்படியே மலர்ந்துவிடுகிறார்கள். ''உசிலம்பட்டில எங்க ஆத்தா வூட்டுக்குப் போவோம். தோப்புல கெணத்துலயே கெடப்போம்... ரமா புள்ளைய மறக்க முடியுமா..?' எனச் சொல்லும்போதே கண் களும் மனசும் விரிகிறது ஒருவருக்கு. ''பம்மல்ல பெரிப்பா வீட்டுக்கு வருவோம். மொத மொதல்ல மெரினா பீச்ச பாத்ததே அப்பதான்...'

''திருநெவேலில மதினி வூட்டுக்குப் போவோம்... அந்த வூடு முழுக்க பூனைங்க பாஸு... அவ்வளவு அழகான வீடு. கேரம் போர்டு, ரம்மி எல்லாத்தையும் கத்துக் கிட்டது ஃபிலோமினாகிட்டதான். கொரங்கு பெடல் சைக்கிளும் அதுதான் கத்துத் தந்துச்சு... இங்க பாருங்க... இந்தத் தழும்பு அப்ப வுழுந்து அடிபட்டதுதான்.'

''நைன்த் லீவுல ஈரோடு பக்கம் எங்க சின்ன தாத்தா ஊருக்குப் போனப்பதான் மொத டைம் செக்ஸ் புக்கையே பார்த்தேன் மச்சான்... ரைஸ் மில் மாமா ஒளிச்சுவெச்சுருந்த 'சரோஜா தேவி’யை அவருக்குத் தெரியாம சுட்டுப் படிச்சுட்டு ஒரே டெரராகிருச்சு...'

''லீவு முடிஞ்சு திரும்பும்போது பெரியத்தான் தஞ்சாவூருக்கு அழைச்சுட்டு போயி பாவாட சட்ட, வளையல்லாம் வாங்கித் தந்துதான் அனுப்பும்... அந்த ஊர மறக்கவே முடியாதுப்பா...' என ஒவ்வொருவரிடமும் கோடை விடுமுறைப் பயணங்கள், மனசுக்குள் முணுமுணுக்கும் பிடித்த பாடல்களைப் போல் உள்ளே கிடக்கின்றன. புதிய ஊரை, உறவுகளை, அனுபவங்களை நமக்கு முதன்முதலில் கொண்டுவந்தது கோடைகள்தான்.

புளியம்பூ வாசம் சேமித்ததும், தொட்டாச்சிணுங்கி அறிமுகமானதும், வெட்கத்தில் விறைத்து பூ ஜாடிகள் வைத்த ஸ்டுடியோ வில் போட்டோ எடுத்துக்கொண்டதும், பருவத்தின் முதல் குறுகுறுப்பை உணர்ந்ததும், கான்வென்ட் படிக்கிற பெண்ணைப் பார்த்ததும் காதலித்ததும், திருவிழாக்களில் தொலைந்ததும் தாழ்வுமனப்பான்மையில் தனித்து அழுததும், அன்பில் நனைந்ததும், வெயில் என்றால் என்னவென்றே உறைக்காமல் ஓடித் திரிந்ததும்... எல்லோருக்கும் ஏதோ ஒரு கோடை விடுமுறையில்தானே நடந்தது.

அப்போது பத்தாவது பரீட்சை ரிசல்ட் என்பது எங்கள் ஊரைப் பொறுத்தவரை ஓர் இடைத் தேர்தல். அவ்வளவு ரணகளமாக இருக்கும். காலையில் இருந்தே ஏகப்பட்ட பில்ட்-அப்கள் அரங்கேறும். ஒருத்தனும் பாஸ் பண்ண மாட்டான். பிற்பகலில் கொரடாச்சேரிக்கு மாலை தினசரிகள் வந்துவிடும். பஸ் ஸ்டாண்ட், வெட்டாத்துப் பாலம், ரயில்வே கேட் என எங்கெங்கும் பையன்கள் நின்று பதற்றமாக பேப்பர் பார்ப்பார்கள்.

ஆளாளுக்கு உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, வீட்டுக்கு எப்படித் திரும்புவது எனத் தெரியாமல் திரிவார்கள். அப்படியே பாஸ் பண்ணினால் கூட, அதிகபட்சமாக 300 எடுத்தாலே அவன் கிங்குதான். அதிலும் எங்கள் குடும்பத்தில் பத்தாவது என்பது பூர்வகர்மா போல் சுழட்டியடித்தது. மூத்த அண்ணன் மூன்று அட்டைகள், அடுத்தவன் குரு இரண்டு அட்டைகள், மூன்றாமவன் சித்து சிக்ஸர் அடித்தும் களத்தில் கம்பாக நின்றான். ரிசல்ட் வருகிற அன்றைக்கு ''என்னா... இந்த வருஷமும் மாட்டுக்குத் தண்ணிதானா? இன்னும் ரெண்டு செவலைய வாங்கிவுட்ரவா' என்றபடிதான் அப்பா வீட்டுக்குள் நுழைவார். (இதில் நான் மட்டும்தான் அட்டை வாங்காமல் பார்டர் கட்டியவன் என்பது வரலாறு!)

எவ்வளவு அழகான அனுபவங்களை நமக்கு அறிமுகப்படுத்தின இந்தக் கோடை விடுமுறை கள். இப்போது ''ஒரு மூணு நாள் ஊட்டி டூர் போயிட்டு வந்தோம்... பசங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்லாம் இருக்குல்ல...' என்கிறார்கள் நண்பர்கள். மால்களுக்கும் கம்ப்யூட்டர் கேம்ஸ்களுக்கும் போய்விட்டு வருவதோடு முடிந்துவிடுகின்றன அநேக பிள்ளைகளின் கோடை.

ஒரு மாதத்துக்கு முன் ஒரு நண்பரிடம், ''ஏங்க... பிள்ளைங்களை அழைச்சுட்டு ஒங்க கிராமத்துக்குப் போயிட்டு வரவேண்டியதுதான...' என்றால், ''அய்யோ... ஊர்ப் பக்கம்எல்லாம் இப்ப பத்து மணி நேர கரன்ட் கட்டாம். அதான் இங்கயே இருந்துட்டோம்...' என்கிறார். 'அற்புதமான கோடைகளை இந்தப்

பிள்ளைகள் இப்படி மிஸ் பண்ணுகிறார்களே...’ என நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. உறவாடவும் விளையாடவும் கொண்டாடவுமாகப் பிள்ளைகளின் பருவங்களைப் பூத்துக் குலுங்கவிடுங்கள். என் அண்ணன் மகள் பொன்மலர், யு.கே.ஜி. முடித்தாள். லீவு விட்டாச்சு. பக்கத்து ஃப்ளாட்டில் இருக்கும் ஒரு மலையாளக் குடும்பத்தில் இருந்து அந்தம்மா வந்து, ''எம் பையன் சம்மர் கேம்ப் போறான்... அங்கே கிடார், கராத்தே, ஸ்விம்மிங், கிரிக்கெட்னு நிறைய கோர்ஸ் இருக்காம்' என்றார். பக்கத்தில் பாவமாக அந்தக் குட்டிப் பையன் நின்றான்.

அண்ணி பொன்மலரைப் பார்த்தது. உடனடியாக மறுத்த நான், ''கொன்டேபுடுவேன்... ஊர்ல அவ்வளவு புள்ளைக கெடக்கும். ஒரு மாசம் ஆத்தா வூட்ல போய் இருந்துட்டு வாங்க...' என சாயங்காலமே ரயில் ஏற்றிவிட்டோம். இன்று பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டன. பொன்மலரை அண்ணி பள்ளிக்குக் கிளப்பிக்கொண்டு இருந்தார். ''ஆளப் பாத்தீங்களா... கருத்துப் போயிட்டா... ஊர்ல ஒரே ஆட்டம்... இரு மிஸ்கிட்ட வெச்சு நல்லா குத்தச் சொல்றேன்!'' என்றது அண்ணி. பேக்கை மாட்டிக்கொண்டு எதையோ இழந்த ஏக்கத்துடன் ஸ்கூலுக்கு நடக்கிறாள் பொன் மலர்.

நான் கடவுளாக இருந்திருந்தால், அவளுக்குப் பரிசளித்து இருப்பேன்... இப்போதே இன்னொரு கோடை விடுமுறையை!

- போட்டு வாங்குவோம்...