மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 15

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஒவியம் : மணி, படம் : கே. ராஜசேகரன்

சிவாவும் - சில சிந்தனைகளும்!

##~##

வேட்டியும் சட்டையும் தும்பைப் பூவைத் தோற்கடிக்கும்; வெடவெடவென்று நெடிய உருவம்; சற்றே பெண்மை கலந்த சாயலில், ஒரு நளின நடை.

இரு செவிகளையும் இறுகப் பற்றிக்கொண்டு மூக்கு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் மூக்குக் கண்ணாடி; அதன்உள்ளே அவ்வப்போது அறிவு வெளிச்சத்தை உமிழ்ந்தவாறு இரு உருண்டை விழிகள்.

மோவாயில் கட்டிய தேன்கூடுபோல், மொய்த்துக்கிடக்கும் - கத்தரித்து ஒழுங்கு செய்யப்பெற்ற குறுந்தாடி; படிய வாரிய தலை.

ஆங்கிலமும் அருந்தமிழும் நாக்கு பூராவும்; ஆற்றொழுக்கனைய மேடைப் பேச்சு.

பால்யப் பருவத்திலேயே - தந்தையை

இழந்து தாயால் வளர்க்கப் பெற்றவர்.

கல்லூரி நாள்களிலேயே, கழகத்தால்

ஈர்க்கப் பெற்று -

தளபதியின் தடக்கையாய் இளைஞரணியில் இருக்கப்போய் - ஓராண்டு காராகிருகம், 'மிசா’வில்!

இப்போது - ராஜ்ஜிய சபா உறுப்பினர்; உறுப்பினர் குழுவிற்குத் தலைவர்.

இது - திருச்சி சிவா பற்றிச் சின்னதாய் ஒரு Nail Sketch!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 15

திருவரங்கத்துக்காரன் நான்; திருச்சி கூப்பிடு தூரத்தில்; காவேரிக்கு அக்கரையில் கால் வைத்தால் போதும்!

வாரம் இரண்டு மூன்று நாள்களாவது, திருச்சிப் புழுதியைத் தேகத்தில் பூசிக்கொண்டு தான் திருவரங்கம் திரும்புவேன்!

'நீங்க - இருபதாண்டு காலம் விழுந்து புரண்டு விளையாடிய மண்ணில் - இந்த மண்ணின் மைந்தன் என்று - உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப் பிரியப்படுகிறேன்!’ என்று -

வீட்டுக்கு வந்தார் திரு.சிவா. 'ஏன்? எதற்கு?’ என்றெல்லாம் நான் சொன்ன சில சால்ஜாப்பு களை ஏற்க மறுத்தார்.

தேதி கொடுத்தேன்; திருச்சிக்குப் புறப்பட்டேன்!

ன் மூத்த மகன் அனைய திரு.வெங்கட் கொடுத்த 'INNOVA’ வில் -

வாஜ்பாய் காலத்தில் வழவழப்பாய் வார்க்கப் பெற்ற நெடுஞ்சாலையில் திருச்சியை நோக்கிப் பயணித்தேன்.

ஆழ்வார்க்கடியான் என நான் அன்போடு அழைக்கும் 'மை.பா’வும்; என் சிந்துகள்பால் சித்தத்தை இழந்து நிற்கும் சிநேகிதர் திரு.கிருஷ்ணகுமாரும் உடன் வர -

ஊர்தி முன்னோக்கி ஓடியது; உள்ளம் பின்நோக்கி ஓடியது!

டடா! சென்ற நூற்றாண்டின், அய்ம்பதுகளில்தான் எத்துணை நிகழ்வுகள்!

திருச்சி வானொலியில் - 'Contract Casual Artiste’ ஆக நான் பணியாற்றிய காலத்தில்தான் -

'படங்களில் நான் பாட்டெழுதலாம்’ என்று பச்சைக் கொடி காட்டுகிறார், வானொலியில் பாட வந்த புகழ் வாய்ந்த ஒரு பாடகர்.

'எருமை மாட்டெத் தண்ணீல போட்டுக் கிட்டு விலெ பேச முடியுமா? வாருமய்யா, சென்னைக்கு; உமக்கு வருது, பாட்டெழுத!’

என்று என் உள்ளத்துள் உற்சாக ஊசிகளைச் செலுத்தியவர் - தனது தங்கக் குரலால், தமிழுக்குத் தகவு சேர்த்த -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 15

ஒரு டஜன் தான்சேன்களை ஒருசேர விழுங்கிக் குரல் வளையில் குடிவைத்திருந்த -

மதுரை மாங்குயில் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்.

நான் நாற்பதுகளிலேயே, சின்னச் சின்னதாய் நாடகங்கள் எழுதத் தொடங்கி -

திருச்சி தேவர் ஹாலில் அரங்கேற்றுவதுண்டு. அமரர் திரு.ரத்தினவேலுத் தேவரின், அருமைப் புதல்வன் திரு.கணேசன் என் ஆருயிர்த் தோழன்.

அப்படியிருந்தும் நாடகம் போட, சில நேரங்களில் தேவர் ஹால் கிடைக்காமல் போகும்.

'City Club’ ல் - சீட்டாடிக்கொண்டிருக்கும் அன்பில் தர்மலிங்கத்திடம் போய் நிற்பேன்; அடுத்த விநாடி ஹால் கிடைத்துவிடும்!

திருச்சி கெயிட்டி டாக்கீஸில் - கலைஞரின் 'மருதநாட்டு இளவரசி’ ஓடிக்கொண்டிருந்தது. அதில் கலைஞரின் பேனா பிலிற்றிஇருந்த உஷ்ணமான உரையாடல்களே, என்னை உசுப்பிவிட்டு நாடகம் எழுதவைத்தது.

தினமும் அந்தப் படத்தைப் பார்ப்பேன்; இலவசமாகத்தான், - திரு.மாரியப்பா தயவில்!

அதில் எம்.ஜி.ஆருக்காகப் பாடியவர், என் அருமை நண்பர் திரு.எம்.எம். மாரியப்பா அவர்கள். திருச்சி லோகநாதன் அவர்களின் தாய் மாமன்.

'இந்த உலகில் இருக்கும் மாந்தருள் - எழிலுடையோன் எங்கள் தமிழன்’ என்று - கோவை அய்யாமுத்துக் கவுண்டர் எழுதிய பாட்டைக் 'கஞ்சன்’ திரைப்படத்தில் பாடியவர் இந்த மாரியப்பாதான்.

இது, சிவாஜிக்கு இஷ்டமான பாட்டு, என்னைப் பார்க்கும்போதெல்லாம் இதைப் பாடுவார். அவரும் திருச்சிக்காரர்தானே!

தி.மு.க-வில் எனக்கு அற்றை நாளிலேயே, அனேக நண்பர்கள் உண்டு.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 15

பொன்மலை பராங்குசம்; எம்.எஸ்.மணி; எஸ்.ஏ.ஜி.ராபி; நாதன் பிரஸ் பாண்டுரங்கம்; மற்றும் அன்பில் என்று.

ஒருமுறை பொன்மலை பராங்குசத்தோடு ஓர் இளைஞர் - சிவப்புச் சிந்தனை உள்ளவர் - என் நாடகம் பார்க்க வந்தார்.

'வாலி! இவருக்கு ஒரு வேஷம் கொடுய்யா, உன் நாடகத்திலே!’ என்று பராங்குசம் சொல்ல -

அடுத்த நாடகத்தில் அவருக்கு வேஷம் கொடுத்தேன். அந்த இளைஞர் அற்புதமாக நடித்தார்.

'சினிமாவில் உமக்கு நல்ல எதிர்காலம் இருக்குதய்யா... சென்னைக்குப் போய் முயற்சி பண்ணலாம்!’ என்று சொன்னேன்.

பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் -

'சினிமா - பூர்ஷ்வாக்களின் உலகம்; அதை நான் அறவே வெறுக்கிறேன்!’ என்று என்னிடம் சண்டைக்கு வந்துவிட்டார்.

என்ன வேடிக்கை என்றால் - அந்த இளைஞர்தான், பின்னாளில் சினிமா நடிகராகவும், பிறகு பிரபல திரைப்பட இயக்குநராகவும் - அதுவும், அதிகமான சிவாஜி படங்களை இயக்கியவராகவும் ஆனார்! பெயர் திரு.கே.விஜயன்!

'நாளைப் பொழுதை நாயகனல்லவோ தீர்மானிக்கிறான்’ என்பதை அந்த சிவப்புச் சிந்தனையாளர் ஆரம்பத்தில் அறியவில்லை!

திருவானைக்காவில் - ஒரு எலிமெண்ட்ரி ஸ்கூல். ஸ்ரீரங்கம் உயர்நிலைப் பள்ளியின் பராமரிப்பில் உள்ளது.

அங்கு 'காலேஜ் குமாரி’ என்று ஒரு நாடகம் நான் எழுத, பள்ளி மாணவர்களை வைத்துப்போட்டேன்.

அதன் ஒத்திகையை மாலை நேரங்களில் பார்க்க, இரு பையன்கள் வருவார்கள். இருவரும் இருபதை நெருங்கிக்கொண்டுஇருந்தவர்கள். சற்று முன்பின் இருக்கலாம்.

குடுமி வைத்துக்கொண்டு செக்கச் செவேலென்றிருந்த பையனை - நாடகத்தில் பெண் வேஷம் போடக் கேட்டேன். அவன் வேத பாடசாலையில் படித்துக்கொண்டிருந்ததால் வேஷம் கட்ட ஒப்பவில்லை.

இன்னோர் இளைஞன் - நாடக ஒத்திகையை வேடிக்கை பார்க்க வந்தவன் -

பக்கத்தில் உள்ள T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணியாற்றிக்கொண்டிருப்பவன். ஏற்கெனவேயே - 'பாய்ஸ் கம்பெனி’யில் இருந்து பழக்கப்பட்டவன்.

அவனுக்கு நடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் இருந்தும் - பள்ளி மாணவனாக இல்லாததால் நான் சொன்ன பெண் வேஷத்தைப் போட இயலவில்லை!

ப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டு - நான் 'INNOVA’  காரில் திருச்சி வந்து சேர்ந்தேன்!

நாடகத்தில் பெண் வேடம் போட மறுத்த பாடசாலை மாணவன்தான் -

காஞ்சி மடாதிபதி திரு.ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

நாடகத்தை வேடிக்கை பார்த்த - T.S.T. பஸ் டிப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணிபுரிந்த பையன் பேர் -

திரு.கணேசமூர்த்தி. சிவாஜி கணேசன் என்று சொன்னால் புரியும்!

- சுழலும்...