
போலிகள் ஜாக்கிரதை!டாக்டர் ஷாலினி, ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
##~## |

நேரடியாக சாம்ராஜ்யம் உருவாக்கத் திராணியற்ற ஆண், 'நானும் பெரியவன் தான்!’ என்று காட்டிக்கொள்ள குறுக்கு வழிகளைக் கையாள்வான். இவன் உண்மையிலேயே பெரியவன் இல்லை என்பதால், மற்றவரைச் சிறுமைப் படுத்தி மட்டும்தான் இவன் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ள முடியும். துரதிர்ஷ்டவசமாக எல்லா விலங்குக் கூட்டங்களிலுமே நிஜ ஆல்ஃபா ஆண்களின் எண்ணிக்கை எப்போதுமே மிகக் குறைவாகத்தான் இருந்து வருகிறது. ஆல்ஃபா ஆண் இப்படி அரிதாக இருப் பதுதான் அவனுடைய இந்த மவுசுக்கும் காரணம்.
பதவி, அதிகாரம், அந்தஸ்து இவை எதுவுமே, தன் சந்ததியினரின் கையை விட்டுப் போய்விடக் கூடாது என்று நைஸாக சில Mind games விளையாடி, அடுத்தவருக்கு எந்த ஆற்றலும் ஏற்படாதபடி சமூக அமைப்பை மாற்றிவிடுகிறார்கள்.

எகிப்து, கிரேக்கம், பாரசீகம், இந்தியா, சீனா என்று எல்லா புராதனக் கலாசாரங்களிலும் மன்னனை மூளைச் சலவை செய்து, மந்திரிகளும் புரோகிதர்களும் ரகசியமாக நிழல் உலக ராஜ்யம் நடத்தி வந்திருக்கிறார்கள். அதனால், இந்த எல்லா கலாசாரங்களுமே, பெண்களுக்கு படிப்பு/சொத்து/வருமான உரிமைகளை வழங்கியது இல்லை. பெண்களைச் சுகம் வழங்கி, பிள்ளை கள் பெற்றெடுக்கும் கருவிகளாகவும், அடிமை ஆண்களை இலவசமாக வேலை செய்யும் இயந்திரங்களாகவுமே நடத்தி வந்தனர். இதனால், பெண்களும் அடிமை ஆண்களும் சுயமாக எந்த அதிகாரமும் இல்லாத powerless puppets ஆகிப் போனார்கள். தனக்கு உணவு வழங்கி, பாதுகாக்க ஒரு எஜமான் கிடைத்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். Beggars cannot be choosers. தன் அன்றாட வாழ்வுக்கே உத்தரவாதம் இல்லை என்று ஆகிவிட்ட பிறகு, பெண்கள் எப்படி ஆண்களைக் கலவிக்காகத் தேர்ந்தெடுக்க முடியும்? அதனால், உலக ஜீவராசிகள் எவற்றிலும் இல்லாத புது விசித்திரமாக, மனிதர் களில் மட்டும் ஆண்கள் பெண்களைக் கலவிக்காகத் தேர்ந்தெடுக்க ஆரம்பித் தார்கள்.

சாதிக்க முடியாத போலி ஆண் களைப் பெண்கள் மிகச் சுலபமாகஇனம் கண்டு உதாசீனப்படுத்த, தங்களுக்கும் துணை வேண்டுமே என்று இவ்வகை ஆண்கள் ஒரு சாதுர்யத்தைக் கையாண்டார் கள். அதுவரை பெண்கள், ஆண்களைத் தரம் பிரித்து, கலவியல் தேர்வுக்கு உட்படுத்தினார்கள் அல்லவா? அதையே தடை செய்துவிட்டால்? பெண்ணுக்கு கலவி சுதந்திரம் பறிபோகும். அப்புறம் என்ன? தராதரமே இல்லாமல் எந்த ஆண் வேண்டுமானாலும் எந்தப் பெண்ணையும் தனதாக்கிக்கொள்ளலாமே!
பெரும்பான்மையான ஆண்களின் தேவையை இந்த யுக்தி பூர்த்தி செய்ததால் இந்தக் கலவியல் தேர்வு முறை பரவலாக ஆரம்பித்தது. இதனால், தரமே இல்லாத ஆண்களின் மரபணுக்களும் பெருவாரியாகப் பரவ ஆரம்பித்தன. நிஜமான ஆல்ஃபா ஆண்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைந்துபோனது. பெண்களின் சமூக அந்தஸ்து குறைந்து, ஆண்களைத் தரப்பரிசோதனை செய்ய அவர்கள் தவறியதால், தராதரம் இல்லா மல் பெண்கள் போலி ஆல்ஃபாக்களுக்குக் குழந்தைகள் பெற்றுப்போட, கோழைகளும்,

நோஞ்சான்களும், வெட்டி ஆசாமிகளும் ஜனத்தொகையில் பெருகினர். நிஜப் பராக்கிரமம் கொண்ட வீரர்கள் அதிகம் இல்லாத இந்த மாதிரியான நாட்டை எவன் தாக்கினாலும், எதிர்த்துப் போரிட எவரும் இல்லை. அதனால், ஒட்டுமொத்த சமுதாயமே அடிமையாகிப் போகும் அவலம் ஏற்பட்டது.
உதாரணத்துக்கு, தமிழ் கூறும் நல்லுலகை எடுத்துக்கொள்வோமே! சங்க காலத்தில் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த பெண்கள் கலவியல் சுதந்திரம்கொண்டு இருந்தார்கள். வீரமும், திறமையும், காதலும் ததும்பும் ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கூடியிருந்தார்கள். அதனால், மனித வளம் உயர்ந்திருந்தது. முல்லைக்குத் தேர் கொடுக்கும் அளவுக்கு இங்கு பரோபகாரம் பெருகிக்கிடந்தது. கிரேக்கத்துடனும், மிஸ்ரத்துடனும் வியாபாரம் செய்து செல்வம் கொழித்துக்கொண்டு இருந் தது. ஆனால், இதே நிலப்பரப்பில் நம்பிக்கை கள் மாறியபோது, நிலைமை தலைகீழானது அல்லவா? ஆரியர், மங்கோலியர், பாரசீகர், துருக்கியர், முகலாயர், போர்ச்சுகீசியர், ஆங்கி லேயர், ஃபிரெஞ்ச் என்று வரிசையாகப் பல வெளிநாட்டினருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கும் நிலைமை உருவானதே, ஏன்?
- காத்திருங்கள்...