
மஞ்சள் பூசிய அக்காக்கள் முகங்களையும் துரத்திவிட்டுச் சட்டென்று எழுந்து நிற்கும் இந்தக் கட்டடத்தைப் போல, அனுதினமும் பல நூறு கட்டடங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன பெருநகரங்களில்.
நான் இருக்கிற எம்.எம்.டி.ஏ. ஏரியாவில் புதிதாக ஒரு அபார்ட்மென்ட் கட்டிக்கொண்டு இருந்தார்கள்! மிகப் பெரிய அபார்ட்மென்ட். மணலும் ஜல்லியும் கொட்டப்பட்டு இருக்க, ஒவ்வொரு நாள் பார்க்கும்போதும் வளர்ந்துகொண்டே இருந்தது.
கட்டட வேலை நடந்துகொண்டு இருக்கிற இடத்தின் அருகிலேயே ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்டு இரண்டு, மூன்று குடும்பங்கள் தங்கியிருந்தன. பகல் முழுக்க மாங்குமாங்கெனக் கட்டட வேலை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சாயங்காலங்களில் பார்த்தால் கொட்டியிருக்கிற மணலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். குளித்து முடித்து ஈரத் தலையை உலர்த்திய படி ஒரு அம்மா நின்றுகொண்டு இருக்கும். காலெல்லாம் சிமென்ட்டோடு அறுத்துப் போட்ட மரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு, ரெண்டு மூணு பேர் எஃப்.எம்மில் பாட்டு கேட்டுக்கொண்டு இருப்பார்கள். பாதி எழும்பிய சுவரில் சாய்ந்துகொண்டு, ஊர்க் கதை பேசியபடி அக்காக்கள் பேன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இரவுகளில் படுதா போட்டு, நடுவில் காண்டா விளக்கு வைத்து, சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு நாள் பார்த்தால் அந்த இடமே ரகளையாகக் கிடந்தது. எங்கோ ஊரில் இருந்து வெள்ளை வேட்டி-சட்டை, பட்டுப் புடவைகளில் ஒரு குரூப் வந்து இறங்கியிருந்தது. ''பெரிய மாமா பொண்ணுக்குக் கல்யாணம்... பத்திரிக்க வைக்க வந்துருக்காகண்ணே... எங்க சனம் நெறைய இந்தூர்ல கெடக்கு. வெத்தலாக்கு ரூவா வெச்சு பத்திரிக்க வைக்கலைன்னா போமாட்டானுவோள்ல...'' எனச் சிரித்துக்கொண்டே சொன்னார் அங்கிருக்கும் ஒரு அண்ணன்.
நள்ளிரவில் வீடு திரும்பிய பொழுதில் பார்த்தேன், சாரங்கட்டப்பட்ட இடத்தில் உட்கார்ந்து மொசுமொசுவென அழுதுகொண்டு இருந்தது ஓர் அக்கா. அது புருஷங்காரன் ஏதேதோ கிசுகிசுவெனப் பேசியபடி கையைப் பிடித்து இழுக்க, அது விசும்பியபடி தள்ளிவிட்டுக்கொண்டு இருந்தது. இன்னொரு நாள் காலையில் போகும்போது பாதி வேலையில் எல்லோரும் நின்றிருக்க, ஒரு குட்டிப் பெண் சாக்லேட் கொடுத்துக்கொண்டு இருந்தாள். ''மாமாவுக்குக் குடு... அதுக்குப் பொறந்த நாளு சார்...'' எனக் கம்பியைச் சுற்றிக்கொண்டே ஒருவர் சொல்லிக்கொண்டு இருந்தார்.
சில மாதங்கள் போயிருக்கும். அதற்கு முன்பு அந்த இடத்தை என்ன காட்சியோடு கடந்துபோனேன் என்பதுகூட நினைவுஇல்லை. இப்போது அந்த இடத்தில் பிரமாண்டமான அபார்ட்மென்ட் வளர்ந்து நின்றது. பாதி ஃப்ளாட்களில் குடும்பங்கள் குடிவந்திருந்தன. பளபளவென கார்கள் நிறுத்திக் கிடக்க, ஆஸ்பெஸ்டாஸ் குடி யிருப்புகள் இருந்த இடத்தில், கூண்டில் வாட்ச்மேன் உட்கார்ந்திருந்தார். இறுகிய முகங்களோடு குடிவந்திருந்த மனிதர்கள் அப்பெரும் கட்டடத்தில் நடமாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு இந்த அபார்ட் மென்ட்டைக் கட்டிய கைகளுக்கான மனிதர்களைத் தெரியவே போவது இல்லை. இங்கேயே உண்டு, உறங்கி, உழைத்துவிட்டு கட்டடம் எழுந்து நிற்கும்போது எங்கேயோ போய்விட்டார்கள் அவர்கள்.

அவ்வளவு பெரிய கட்டடம் இருந்தும் எனக்குச் சட்டென்று அந்த இடமே வெறுமையாகத் தெரிந்தது. இரண்டு மூன்று குடும்பங்கள் இருந்தபோது நிறைந்துகிடந்த இந்த இடம், இத்தனை குடும்பங்கள் வந்த பிறகு வெறுமையாகக் கிடக்கிறது.
அந்தச் சமையல் வாசமும் பாட்டுச் சத்தமும் குழந்தைகளும் மஞ்சள் பூசிய அக்காக்கள் முகங்களையும் துரத்திவிட்டுச் சட்டென்று எழுந்து நிற்கும் இந்தக் கட்டடத்தைப் போல, அனுதினமும் பல நூறு கட்டடங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன பெருநகரங்களில்.
அந்தக் குடும்பங்கள் எல்லாம் இப்போது எங்கே போயிருக்கும்? சொந்த ஊருக்கா? வேறு ஏதேனும் ஏரியாவில் அபார்ட்மென்ட்டோ காம்ப்ளெக்ஸோ கட்டிக்கொண்டு இருக்கிறார்களா? அவர்களை வாழ்க்கையில் மறுபடியும் பார்க்க முடியுமா? யோசிக்க யோசிக்க... இம்மாதிரியான முகம் தெரியாத எவ்வளவு சாமான்ய மனிதர்களால் இந்தப் பேரண்டம் இயங்குகிறது என ஆச்சர்யமாக இருக்கிறது. மிக எளிய மனிதர்களின் வேலைகளால்தான் நமது அன்றாடங்களே சுழல்கின்றன என்ற பேருண்மை உறைக்கிறது. ஆனால், அவர்களை நாம் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்ப்பது இல்லை.
காலையில் கதவைத் தட்டிக்கொண்டு ஒருவர் நிற்கிறார். ''சார்... மேடம் டேங்க் க்ளீன் பண்ணணும்னாங்க... டூ ஹண்ட்ரட் ஆகும் சார்... ஹண்ட்ரட் இப்போ குடுங்க... ந்தா வந்துர்றேன்...''
''க்ளீன் பண்ணிட்டு வாங்கிக்கப்பா... இப்போ எதுக்கு நூறு ரூவா...'' ''இன்னா சார் நீ... ஒந் துட்ட தூக்கினு ஓடவாப் போறேன்... குடு சார். அர அவர்ல மாடிக்கு வா... சார்ப்பா வந்து நிக்கிறேன்...'' அரை மணி நேரத்தில் குவார்ட்டரைப் போட்டுக்கொண்டு, ஜட்டியோடு வந்து நிற்கிறார். டேங்கில் இறங்கி க்ளீன் பண்ணிவிட்டு, பாட்டில் நிறைய ஐஸ்வாட்டர் வாங்கிக் குடித்துவிட்டுப் போகும்போது தயங்கி நிற்கிறார். ''மேடம்... மேடம்... அந்த பொம்ம ஒட்ஞ்சி கெடக்குல்ல... அத்து ஒங்க பாப்பாக்கு யூஸ் ஆகாதுல்ல... அத்த எட்துக்கவா...'' கை, கால் எல்லாம் அழுக்கோடு அந்த உடைந்த பொம்மையைத் தூக்கிக்கொண்டு அவர் போவதைப் பார்க்கும்போது மனசு சொல்ல முடியாத உணர்வுகளுக்குப் போய்விடுகிறது.
அத்தனை பேரும் பரபரப்பாக எங்கெங்கோ போய்க்கொண்டு இருக்கிற காலையில், நடுத் தெருவில் இரண்டு பேர் டிரைனேஜில் இறங்கி, உடம்பு முழுக்கச் சாக்கடையோடு நிற்கிறார் கள். நமது கால்களுக்குக் கீழே, நமது அசிங்கங் களையெல்லாம் சுமந்துகொண்டு நிற்கிறார்கள். நாம் அவர்களைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். மூச்சு முட்ட முட்ட அந்த சாக்கடைக் குழிக்குள் அவர்கள் கிடக்கும் சாலையைக் கடக்கும் ஓர் ஆடி காரில், ஏ.சி-யின் உறுமலுக்குக் காது விறைக்கிறது ஒரு நாய்க்குட்டி. திரும்பும்போது பார்த்தால், உடம்பு முழுக்கச் சாக்கடையோடு வாட்டர் பாக்கெட்டில் கையை மட்டும் கழுவிக்கொண்டு, டீயில் பன்னை நனைத்துத் தின்றுகொண்டு இருக்கிறார்கள் அவர்கள். அதன் பிறகு அவர்கள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அவர்களது வாழ்க்கையில் நறுமணம் என்று எதாவது இருக்கிறதா? ஆனால், அவர்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கையில் நறுமணமே இல்லை. இல்லையா?
அவர்கள் அதன் பிறகு, பரபரப்பான சாலையின் ஒதுக்குபுறமாக இருக்கும் கட்டணக் குளியலறையில் சாம்பிள் சோப்பு போட்டுக் குளிக்கிறார்கள். உடைந்து தேய்ந்த பழைய நோக்கியா செட்டில் பொண்டாட்டியிடம் சில வாக்குறுதிகள் கொடுக்கிறார்கள். நியான் விளக்குகளால் மினுங்கத் தொடங்கிவிட்ட ஊரை சிரிப்பும் ஏக்கமுமாகப் பார்க்கிறார்கள். டாஸ்மாக் போகிறார்கள். இருக்கிற காசுக்கு வீட்டுக்குச் சாமான்கள் வாங்குகிறார்கள். வீட்டுக்குப் போய் பொண்டாட்டிகளுடன் கொஞ்சுகிறார்கள்... சண்டை போடுகிறார்கள். ''அய்யே... அப்பா மேல நாத்தமே போகல...'' என்றபடி ஓடும் தங்கள் பிள்ளைகள் என்னஆகுமோ என்கிற கேள்விகளோடு தூங்கிப்போகிறார்கள்.

இப்படி சாக்கடை அள்ளுபவர்களைப் பற்றி ஒரு டாகுமென்டரி எடுப்பதற்காக நண்பர் ஒருவருடன் சுற்றித் திரிந்தேன். ஐஸ் ஹவுஸ் பக்கம் ராம் நகரில் இப்படி வேலை பார்க்கிற பல குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தங்களது வாழ்நிலைபற்றிய பெரிய பிரக்ஞை எதுவும் இல்லை. பொதுவாகவே, இந்த எளிய மனிதர்களிடம் தங்களைப் பற்றிய பெரும் துன்பச் சிந்தனைகள் இருப்பதே இல்லை. எனவேதான் அவர்களுக்கு எந்தச் சாமியார்களும் தேவைப்படுவது இல்லை. ரகுஜிதான் எங்களை ராம் நகருக்கு அழைத்துப் போனது. அவரும் கழிவகற்றும் வேலைதான் பார்க்கிறார். ''சார்... சாக்கட அசிங்கம்லாம் ரொம்ப நாள் தேங்கிருந்தா வெஷமாகிரும் சார். அப்போ போய் க்ளீன் பண்ண எறங்கினா ரொம்ப டேஞ்சர். நம்ம ஆளுங்கள்லயே ரெண்டு பேர் அப்பிடிப் போயே போய் சேர்ந்துட்டானுங்க...'' என்றார் அலட்சியமாக ஹான்ஸ் போட்டபடி. அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள்.
அந்தச் சிறிய குடிசையில் அவ்வளவு பெரிய குடும்பம் நெருக்கியடித்து கவர்மென்ட் டி.வி-யில், சன் மியூஸிக்கில் பாட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறது. ''இந்த டி.வி. நமக்குத் தந்தது இல்ல சார்... பஜார்ல ஆயிரம் ரூவா குடுத்து வாங்குனது. நாம கவர்மென்ட் சர்வன்ட் கெடையாது. கெடைக்கற எடங்கள்ல க்ளீன் பண்றதுதான்... கான்ட்ராக்ட் மாரியும் பாப்போம்...'' என்றவர், ''மூக்குத்தி... ஏய் மூக்குத்தி...'' எனக் குரல் கொடுக்க... பின்னால் இருந்து ஒரு பெண் வந்து நின்றது. ''இது எம் மூத்த பொண்ணு சார்... வெஷம் அடிச்சு நம்ம ஆளுங்கள்ல ரெண்டு பேரு செத்தாங் கன்னு சொன்னேன்ல... அதுல ஒருத்தன் இது புருஷன்தான். நெல்லூர்லேருந்து வந்த மாப்ள... இப்பிடிப் போய்ச் சேர்ந் துட்டான்...'' என்றார் அதே புன்னகை யோடு.
''ஏய் நாதாரிப் புள்ளைங்களா... எத்தன தடவ சொல்றது... ஈவினிங் ஆனா காளி படத்துக்குப் பூ வைக்கணும்னு அறிவு இல்ல...'' என அங்கு இருக்கும் ஒரு காளி படத்தைப் பார்த்தபடி திட்ட ஆரம்பித்தார். ஏரியாவைச் சுற்றிவிட்டு அவர் வீட்டுக்குத் திரும்பியபோது காளி படத்தில் மணந்துகொண்டு இருந்தது சரம் மல்லிகை!
ரகுஜியைப் பற்றிப் பேசும்போதே மாசிலாமணியின் குடும்பமும் கிடைச் சாணியின் வாசமும் ஞாபகத்தில் பரவுகிறது. சிறுபிள்ளையாக இருக்கும்போது எங்கள் ஊருக்கு வயல்களில் கிடை போட வந்த குடும்பம் மாசிலாமணியினுடையது. தொடர்ந்து மூன்று வருடங்கள்போல் அவர்தான் வந்து ஊர் வயல் களில் கிடை போட்டார். இருபதுக்கு மேல் மாடுகளும் ஐம்பதுக்கு மேல் ஆடுகளுமாக வயல்களில் வந்து கிடை போடுவார்.
ஆடு, மாடுகளின் சாணம் எருவாகி, அதுதான் வயக்காடுகளுக்கு அம்சமான உரம். கோடைகளில் வந்து வயலில் கிடை போட்டு, அங்கேயே ஓரமாக டென்ட் போட்டுத் தங்கிவிடுவார்கள். ஊரில் இருக்கும்போது அவர்களும் ஊரில் ஒரு குடும்பமாக ஆகிவிடுவார்கள். ஒரு கோடையில் கிடை போட வந்தபோது தான் மாசிலாமணியின் மகளுக்கு நிச்சயம் நடந்தது. அந்த டென்ட்டி லேயே விசேஷம் நடந்தது. அவரது பையன் ஒருவன்தான் எங்களுக்கு 'காக்கா முட்ட’ விளையாடக் கற்றுத்தந்தான். எந்த ராத்திரியில் அவர்கள் ஊரைவிட்டுக் கிளம்புவார்கள் என்பதுதான் எப்போதும் புதிர். ஏதேனும் ஒரு காலையில் பார்த்தால், ஒரு ஆடு மாடு இருக்காது. வயலெல்லாம் சாணமும் எருவுமாகக் கிடக்கும். அப்புறம் நடவு நட்டு, வயல் விளைந்து அறுவடை முடிகிற வரைக்கும் அவர்களைப் பார்க்கவே முடியாது.
அந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு மொத்தமாகவே அவர்களைப் பார்க்க முடியவில்லை. இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இன்னும் கிடை போட்டுக்கொண்டு இருக்கிறார்களா.? இப்போதும் அதெல்லாம் நடக்கிறதா? அந்தப் பிள்ளைகள் வாழ்க்கையில் என்ன வாக ஆனார்கள்?... ஏராளமான நினைவு கள் மோதுகின்றன.
எவ்வளவு சாமான்யர்களின் உழைப்பால் நாம் வாழ்கிறோம்? இதோ இந்தப் பக்கத்தை நீங்கள் படிப்பதற்குப் பின்னால்கூட மரம் வைத்தவர், அறுத்தவர், பேப்பர் மில் ஓட்டியவர், பிரின்ட்டிங் பிரஸ்ஸில் உழைப்பவர், புத்தகத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர் என எத்தனை பேரின் உழைப்பு தேவைப்படுகிறது? ஒவ்வொருவர் சாப்பிடும் சாப்பாட்டிலும் எவ்வளவு விவசாயிகளின் வியர்வையும் உதிரமும் கலந்திருக்கிறது. சுவாசம் அடைக்கும் சூழலில் உழன்று இந்தச் செருப்பைப் பதனிட்ட கைகள்... இந்தத் துணியைத் தைத்த விரல்கள்... இந்த வாகனத்தின் பாகங்களை உருவாக்கிய கரங்கள்... எவ்வளவு சாமான்யர்களின் வேலைகளால் நிறைந்திருக்கிறது தேசம்!
டி.டி.கே. சாலை லைஃப் ஸ்டைல் எதிரே உள்ள பிளாட்ஃபார்மில் இப்போதும் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு நாளெல்லாம் அறுந்த செருப்புகள் தைக்கிறார் ஒரு முதியவர். சொற்ப சம்பளத்துக்குப் பண்ட பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்து, சமையல் முடித்துவிட்டு டிகிரி படிக்கிற மகளுக்குக் கொஞ்சம் சாப்பாடு எடுத்துப்போகிறார் ஒரு பெண்மணி. அந்த இஸ்திரிப் பெட்டியைத் தூக்கிச் சுமந்து ஒரு சட்டையை அயன் பண்ணுவதற்குள் வலி பின்னி எடுக் கிறது. நாளெல்லாம் அதைச் சுமந்து ஏகப் பட்ட துணிகளைச் சலவை செய்துகொண்டே இருக்கிற அண்ணன் சாயங்காலமாகத் தலை உயர்த்தி, ''சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்னு எத்தன..? டோனி இருக்கான்ல..?'' எனக் கேட்கிறபோதுதான் அவர் அங்கு இருப்பதே தெரிகிறது.
சலூன் ரமேஷ் செவ்வாய்க் கிழமைகளில் கடைக்கு லீவு விட்டுவிட்டு, ''எதாவது புதுப் படத்துக்கு டிக்கெட் ரெடி பண்ணேன்... ஒய்ஃபைக் கூட்டிட்டுப் போறேன்...'' என்கிறபோது எவ்வளவு சந்தோஷம் தெரிகிறது.
பெட்ரோல் பங்க்கில் யாரும் வராத ஒரு மதியப் பொழுதில் ஓரமாக மொபைல் போனில் பேசிக்கொண்டு இருக்கிற பெட்ரோல் போடுகிற பெண் ஒரு வண்டிச் சத்தம் கேட்டதும் எப்படிப் பதறி ஓடிவருகிறாள். ஆயிரமாயிரம் முகம் தெரியாத மனிதர்களின் உழைப்பாலும் பங்களிப்பாலும்தான் நம் ஒவ்வொருவருக்குமான உலகம் சுழல்கிறது. ஆனால், அவர்களின் உலகத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கிறோமா?
நேற்று நண்பர் ஒருவர் வந்தார். ''அய்யோ நண்பா... ரொம்ப லோன்லியா இருக்கு. தனியா என்னை விட்டு எல்லாரும் போயிட்ட மாதிரியே இருக்கு... என்னால தாங்கவே முடியல நண்பா...'' எனப் புலம்பினார்.
அவர் சமீப காலமாகவே இப்படித்தான் பேசிக்கொண்டே இருக்கிறார். ஏதேதோ மனப் பிரச்னைகள். நேற்றும் ஆட்டோவில் அப்படிப் புலம்பிக்கொண்டே வந்தார். ''எவ்வளவு பேர் நம்மோடு இருக்கிறார்கள். எவ்வளவு பேரின் கரிசனமும் பங்களிப்பும் நம் அனுதினங்களோடு பின்னியிருக்கின்றன. இதை இந்தாளுக்கு எப்படிச் சொல்வது..?'' என நினைத்துக்கொண்டு இருக்கும்போதே சைடு கண்ணாடியைச் சரி செய்தபடியே ஆட்டோக்காரர் நண்பரைப் பார்த்துச் சொன்னார், ''விடுங்க தலைவா... இந்த உலகம் உங்களை விட்டு விலகுறதும் இல்ல... உங்களைக் கைவிடுறதும் இல்ல!''
- போட்டு வாங்குவோம்...