மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 04

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வாடகைக்கு வீடு பார்த்து அலையும் நடுத்தர வர்க்கத்தினர் சபிக்கப்பட்டவர்கள். எதற்குமே வழி இல்லாமல் சாலை ஓரங்களில் குடித்தனம் நடத்தும் மக்களைப்பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.

'தம்மின் மெலியாரை நோக்கித்
தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க!’

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

'சொப்பனத் துறை’யாம் திரைப்படத் தொழிலில் வஞ்சிக்கப்பட்ட அபலைப் பெண்போல, தொடர்ந்து அலைக்கழிக்கப்படுபவர்கள் உதவி இயக்குநர்கள்தாம். அறிவையும் ரசனையையும் மட்டும் மூலதனமாகக்கொண்டு மனம் முழுதும் கற்பனையை, தாங்கள் சிருஷ்டித்த ஏராளமான கதாபாத்திரங்களையும் சுமந்தபடி சென்னைக்கு வந்து இறங்குகிற இளைஞர்களை முதலில் முகத்தில் அறைந்து வரவேற்பது, 'இவ்ளோ பெரிய மெட்ராஸ்ல எங்கே தங்கப்போறே?’ என்ற கேள்விதான்.

பசியைப் பகிர்ந்துகொள்ளக்கூட நண்பர்கள் கிட்டுவர். சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைக்கும் வரை காலத்தை ஓட்ட ஏதேனும் ஒரு வேலைகூடக் கிடைத்துவிடும். ஆனால், தங்கும் இடம்?

மதுரையில், சிதம்பரத்தில், சேலத்தில், திருப்பத்தூரில், கோவையில், கன்னியாகுமரியில் வசதியாகவோ, ஓரளவு சொல்லிக்கொள்கிற மாதிரியாகவோ, சின்னஞ் சிறிய வீடுகளிலோ பிறந்து வளர்ந்த இந்தப் படைப்பாளிகள், சென்னையில் தங்களுக்கு என்று ஒரு கூரை கிடைக்க எதிர்கொள்ளும் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்தைவிடக் கடுமையானது... கொடுமையானது. இந்தத் தொடர் போராட்டம் தரும் நெஞ்சுரம்தான், பிற்காலத்தில் இந்த இளைஞர்களைப் படைப்பாளிகளாக, ஒப்பற்ற கலைஞர்களாக உயர்த்துகிறது!

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

றுமையிலும் இனிமை என்பதுபோல நான்கைந்து உதவி இயக்குநர்கள் ஒன்றாக அறை எடுத்துத் தங்கியிருக்கும்போது, அவர்களுக்கு யானை பலம் இருக்கும். ஒருவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் உதவ, மற்றவர்கள் காத்துக்கிடப்பார்கள்.

மேன்ஷன் வாழ்க்கையைத் தாண்டி ஓரளவு வசதியாக ஒரு வீடு எடுத்துத் தங்கிக்கொள்ள முடிவு எடுத்த பின், உதவி இயக்குநர் கள் சந்திக்கும் ஒவ்வொரு ஹவுஸ் ஓனரும், அவர்களை 'ஏன்டா இந்த சினிமாவுக்கு வந்தோம்?’ என்று எளிதாக நினைக்க வைப்பார்கள்.

'என்னது... சினிமால அசிஸ்டென்ட் டைரக்டரா? ஸாரி. வீடு காலி இல்ல.’

'சார், நான் அசோஸியேட் சார்’.

'என்ன எளவா இருந்தா என்ன சார்? சினிமாக்காரங்களுக்கு வீடு குடுக்கறதா இல்ல. நீங்க வேற எடம் பாருங்க.’

சினிமாக்காரர்கள் என்று ஒரு சாதியை இவர்களே உருவாக்குவார்கள். வீடு கொடுக்க மறுப்பதற்குப் பொதுவாக இரண்டு காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. ஒன்று, வாடகை சரியாகக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்போது உதவி இயக்குநர்களுக்கான சம்பளத்தை இயக்குநர்கள் சங்கமே தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி, உதவி இயக்குநர்களின் கைகளில் தந்து வயிற்றில் பாலை வார்க்கிறது. இனி, எந்த ஹவுஸ் ஓனரும் வாடகை குறித்து கவலைகொள்ளத் தேவை இல்லை. மற்றொரு காரணமாகச் சொல்லப்படுவது, குடிப் பழக்கம். காபிகூடக் குடிக்காத எத்தனையோ இயக்குநர்களை, உதவி இயக்குநர்களை தமிழ்த் திரைஉலகில் பார்க்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. 'ஐயா மகனே, இவனுக சினிமாக்காரங்களுக்கு நாட்டைக் குடுப்பானுக. ஆனா, குடியிருக்க வீட்டக் குடுக்க மாட்டானுக. இந்தக் கொடுமைக்குள்ளதான் நாமளும் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். என்ன பண்ணச் சொல்றிய?’ - மனம் வெதும்பிப்போன தருணத்தில் நண்பர் சீமான் சொன்னார். ஆரம்ப காலத்தில் தான்பட்ட கஷ்டங்களை நண்பர் சீமான் இன்னும் மறக்காமல் இருப்பதால்தான், இன்றைக்கும் பல உதவி இயக்குநர்களுக்குப் புகலிடமாக சீமானின் இல்லம் காட்சி அளிக் கிறது. அங்கு தங்கி இருக்கும் சினிமா நண்பர்கள் தங்களுக்கு என்று ஒரு பிடிப்பு வந்து வளர்ந்த பிறகும்கூட உரிமையோடு அங்கு வந்து செல்வார்கள்.

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

'அண்ணன் வீட்ல தண்ணி வரலையாம். அதான் குளிச்சிக்கிட்டு இருக்கு’ - சீமானின் குளியல் அறையில் இருந்து குளித்து முடித்து, துண்டைக் கட்டிக்கொண்டு ஒளிப்பதிவாளர் நண்பர் செழியன் ஒருமுறை வெளியே வந்ததைப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு நண்பனின் அறையாக ஒரு சில உதவி இயக்குநர்களின் முகவரி மாறிக்கொண்டே இருக்கும். ஊரில் இருந்து வரும் கடிதங்களோ, மணியார்டரோ இவர்கள் கைக்கு வந்து சேரும் வரை உறுதி இல்லை.  எங்கெங்கோ சென்று, யார் யார் கைகளில் எல்லாமோ சிக்கிச் சின்னா பின்னமாகி, இவர்களிடம் வந்து சேரும் காதல் கடிதங்கள்பற்றி அநேகமாக எல்லோரிடமும் ஒரு ஸ்க்ரிப்ட் இருக்கும்.

'நமக்குன்னு ஒரு மூணு மாசத்துக்குக்கூட ஒரு முகவரி இல்ல தோழர். இதுல எங்கே இருந்து நாம அஜீத்தை வெச்சுப் படம் பண்றது?’ - அங்கலாய்ப்பார் ஒருவர்.

'கவலைப்படாதே நண்பா! டைரக்டர் சமுத்திரக்கனி சொன்னதைப் பாத்தியா? ஆரம்பத்துல பிளாட்ஃபாரத்துல போயிப் படுத்திருக்காரு பார்ட்டி. மனசு தளராம ஒழைச்சு, இன்னிக்கு ஒரு ஆளா உயர்ந்துட்டாரு. அதப் பாரு. நாமளும் ஒருநாள் அப்பிடி வந்து, இதே ஏரியா வுல பெரிய பில்டிங் கட்டி வாடகைக்கு விடுவோம். அதுவும் அசிஸ்டென்ட் டைரக்டர் களுக்கு மட்டும். கொறஞ்ச வாடகைல.’ மன உறுதி யுடன் மற்றொரு நண்பர் உற்சாகப்படுத்துவார்.

மாநகர வாழ்க்கையில் தாக்குப்பிடிக்க முடியாமல் நங்கநல்லூர், கிட்டத்தட்ட செங்கல் பட்டில் இருந்தெல்லாம் உதவி இயக்குநர்கள் படப்பிடிப்புக்கு வந்துபோவது உண்டு.

'மாப்ளே, இதுக்கு நீ பேசாம புதுக்கோட்டைலயே இருந்துருடா. நாங்க மிஸ்டு கால் குடுத்தா, கௌம்பி வா. என்ன சொல்றே?’

வாழ்க்கையின் ஒவ்வொரு சிரமமான கட்டத்தையும் இப்படி ஹாஸ்ய உணர்ச்சியுடனே கடந்து செல்ல முயல்வர், இந்தப் படைப்பாளிகள்.

சினிமா எடிட்டர் பீட்டர் பாபியாவின் அறையில் தங்கியிருந்த எத்தனையோ நண்பர்கள், இன்றைக்குப் பிரபலமான இயக்குநர்கள். வந்தாரை இன்முகத்துடன் வரவேற்று, தன்னுடன் தங்கவைத்துக்கொள்வதில் பீட்டர் பாபியா இன்னொரு சீமான் எனலாம்.

அடிப்படையில் எடிட்டராக இருந்தாலும், நண்பர்களின் படப்பிடிப்புகளுக்குச் சென்று, ஓடியாடி உதவி இயக்குநர் வேலை செய்வது பீட்டரின் வழக்கம். அப்படி ஒரு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டு வந்து, இரவு நேரத்தில் தான் தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டியிருக்கிறார் பீட்டர். அவரது அறைவாசியான உதவி இயக்குநர் நண்பர் பீட்டர் நின்ற கோலத்தைப் பார்த்து அலறியிருக்கிறார்.

'டேய், என்னடா இது? ஒனக்கென்ன பைத்தியமா? மொதல்ல அந்தக் கருமத்தக் கொண்டுபோய் எங்கியாவது விட்டுட்டு வா. ஹவுஸ் ஓனர் பாத்தா, நம்ம ரெண்டு பேரையும் இந்த நடுராத்திரியில கழுத்தப் புடிச்சு வெளியே தள்ளிடுவாரு.’

நண்பனின் பதற்றத்தைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், கையில் வைத்திருந்த அந்தக் குட்டிப் பிராணியுடன் பீட்டர் உள்ளே நுழைய முயல, 'பீட்டரு, ஒனக்கே தெரியும். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ரூமை வாடகைக்கு எடுத்திருக்கோம்னு. சொன்னா கேளுடா, ப்ளீஸ்.’

கிட்டத்தட்ட பீட்டரின் காலில் விழாத  குறையாகக் கதறியிருக்கிறார் நண்பர்.

பீட்டர் கைகளில் கொஞ்சியபடி தூக்கி வந்தது நாய், பூனை போன்ற செல்லப் பிராணி வகையும் இல்லை. சிங்கம், கரடி, பாம்பு என்ற அபாய விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்ததும் இல்லை. ஒரு பாவமும் அறியாமல், பீட்டரையும் அவரது நண்பரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறது அமைதியான அந்த 'ஆமை’!

ரு சில இயக்குநர்கள், தங்கள் மனதுக்குப் பிடித்த சிஷ்யர்களைத் தங்களது அலுவலகத்திலேயே தங்கவைத்துக்கொள்வர். அப்படி எங்கள் 'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்திலேயே தங்கியிருந்த அவரது சிஷ்யர்களில் ஒருவர் இயக்குநர் பாலா.

'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, 18 வருடங்களாக சாலிகிராமத்திலேயே ஒவ்வொரு வீடாக மாறி மாறி வசித்து வருகிறேன். அப்போது படும் சிரமங்களை நினைத்து ஊருக்கே போய்விடலாம் என்று பலமுறை எண்ணியது உண்டு. Vegetarians only என்ற போர்டு எங்கு தொங்கினாலும், அதை ஒரு முக்கியத் தகுதியாக எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டு, போய்க் கேட்டுப் பார்ப்பேன். எல்லாம் சரியாக வந்து, சினிமாவில் இருப்பது தெரிந்தால், வீடு கொடுக்க மாட்டார்கள்.

'சார், நான் ஒரு ஃபேமிலி மேன் சார். நீங்க எதிர்பாக்கற மாதிரி வெஜிடேரியனும்கூட. அப்புறம் என்ன சார்?’

'ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சார். சினிமால இருக்கறவங்களுக்கு நாங்க வீடு குடுக்கறது இல்ல. இது எங்க பாலிஸி.’

'என்ன சார், பெரிய இன்ஷூரன்ஸ் பாலிசி மாதிரி சொல்றீங்க? தியேட்டர்லயும் டி.வி-லயும் தெனமும் சினிமாதானே பார்க்கறீங்க?’

'அது வேற...  இது வேற’ - சொல்லிக்கொண்டே நாய் கழுத்தில் உள்ள சங்கிலியை அவிழ்க்க முனைவார்.

ருமுறை Brahmins only போர்டைப் பார்த்து, அந்த வீட்டுக்குச் சென்று பேசினேன்.

'நீங்க பிராமின்ஸா?’

'இல்ல சார். ஆனா, வெஜிடேரியன்.’

'ஓ.கே. ஃபேமிலி மேனா?’

'ஆமா சார்.’

'எங்கே வொர்க் பண்றேள்?’

மண்டைக்குள் முன் அனுபவ மணி டாண் என்று அடிக்க, 'அட்வர்டைஸிங் கம்பெனி சார்.’

சற்று நேர யோசனைக்குப் பிறகு, வீடு கொடுக்கச் சம்மதித்தார்.அதன் பிறகு, ஒருநாள் பேச்சுவாக்கில் கேட்டார்.

'எக் சாப்பிடுவேள் இல்லையா?’

'இல்ல சார்.’

'என்ன சார் சொல்றேள்? எக் சைவம்னு சொல்லி, இப்பெல்லாம் Eggetarianனு ஒரு புது செக்ஷனே வந்துடுத்தே!’ - அதிர்ந்துபோய்ச் சொன்னார்.

'நான் சாப்பிடறது இல்லங்க.’

அதற்குப் பிறகு, ஒரு முறை வாடகை கொடுக்கப் போனபோது, என்னைப் பார்த்ததும்,

சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஆம்லேட் பிளேட்டைச் சட்டென்று டைனிங் டேபிளுக்கு அடியில் மறைத்தார், அந்த 'Eggetarian’.

ற்றொரு வீட்டில் குடியிருந்தபோது, ஒரு நண்பகல் நேரத்தில் நடிகர் ஆர்யாவிடம் இருந்து போன் வந்தது.

'எங்கேண்ணா இருக்கீங்க?’

'வீட்லதான்!’

'சாலிகிராமத்துக்குள்ள வந்துட்டேன். ஒங்க வீட்டுக்கு எப்பிடி வரணும்... சொல்லுங்க?’

'அடப்பாவி, என்னடா இது சொல்லாமக் கொள்ளாம!’

இறங்கித் தெருவுக்கு ஓடினேன். நல்ல வேளை, அந்த நேரத்தில் ஜனநடமாட்டம் இல்லை. ஆர்யா காரில் இருந்து இறங்கி, என் வீட்டுக்குள் வரும் வரை யாரும் பார்க்கவில்லை. கிளம்பிச் செல்லும்போது சரியாக ஹவுஸ் ஓனரின் மகள் பார்த்துவிட்டாள். தான் பார்ப்பது சினிமா நடிகர் ஆர்யா என்பதை அவள் கண்கள் நம்பி, மூளை உறுதி செய்வதற்குள் ஆர்யாவின் கார் கிளம்பிவிட்டது.

'அங்கிள், அப்பா ஒங்களக் கூப்பிடறார்.’

நான் எதிர்பார்த்த அழைப்பு மாலையில் வந்தது.

'எதுக்கு சார் காலி பண்ணணும்? அதான் வாடகைல்லாம் ஒழுங்கா குடுத்துக்கிட்டுதானே இருக்கேன்?’, 'கொறஞ்சது ரெண்டு மாசமாவது டைம் வேண்டும். இப்பிடி திடீர்னு காலி பண்ணச் சொன்னா எப்பிடி?’ மனதுக்குள் ஏராளமான யோசனைகள்.

திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட காலண்டர் முன், குஷன் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார். தலைக்கு மேல் உள்ள ஃபேனின் சத்தம் திகிலை வரவழைத்தது.

'உக்காருங்கோ...’

முன்னே கிடந்த நாற்காலியைக் காட்டிச் சொன்னார். அருகில் நின்றுகொண்டு இருந்த மகளைப் பார்த்துச் சற்று கோபமாக, 'உள்ள போடி’ என்று இரைந்தார். என் முகத்தை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்து, 'நீங்க எங்கே வேலை பாக்கறதா சொன்னேள்?’

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

எச்சில் முழுங்கி, 'அட்...வெர்...டை...ஸிங் கம்பெனில’ என்றேன்.

'சினிமால இருந்துட்டுப் பொய் சொல்லிஇருக்கேள்’- ஹெட்மாஸ்டர் போல் கடுமையாகச் சொன்னார்.

வீட்டுக்குள்ளே மனைவியோ, மகளோ தென்படுகிறார்களா என்பதை எட்டிப்பார்த்துவிட்டு, சற்று முன்னே நகர்ந்து, சட்டென்று மாறிய முகபாவத்துடன் கேட்டார்,

'நீங்க சினேகாவை நேர்ல பார்த்திருக்கேளா சார்?’

- சுவாசிப்போம்...