
இந்த வாழ்க்கை சினிமா என்றால், இங்கே ஆளுக்கு ஒரு ரோல் கிடையாது. ஒவ்வொரு வருக்கும் மாறி மாறி எல்லா ரோல்களையும் கொடுக்கிறான் டாப் ஆங்கிள் டைரக்டர்.
வாழ்க்கையைவிட சிறந்த சினிமா ஏது?
இந்த வாழ்க்கை ஒரு சினிமா என்றால், அதில் நாம் யார்? ஹீரோவா... வில்லனா... காமெடியனா... கேரக்டர் ஆர்ட்டிஸ்டா?
இப்படி ஒரு கேள்வி, நடராஜப் பிள்ளையைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது தோன்றியது. நடராஜப் பிள்ளை அற்புதமான கூத்துக் கலைஞர். தஞ்சாவூர்க்காரர். முழு வாழ்க்கையையும் கூத்துக்காகவே அர்ப்பணித்த மனிதர். 90 வயதில் மயிலாப்பூரில் உள்ள மகளுடைய வீட்டில் வந்துகிடக்கிறார். கூத்துக்கான மரியாதை எல்லாம் குறைந்துவிட்ட பிறகும்கூட அதையே பிடித்துக்கொண்டு, இப்போதும் அந்த நினைவுகளில் இருப்பவர். கூத்துக் கலை சம்பந்தமான தகவல்களுக்காக நாலைந்து தடவை அவரைச் சந்தித்து இருக்கிறேன். போன வாரம் நண்பர் சுப்பு வந்து, ''நடராஜப் பிள்ளை ரொம்ப முடியாமக்கெடக்குறாருப்பா. உன்னைப் பாக்கணும்னு சொன்னார். வாயேன் ஒரு எட்டுப் போயிட்டு வருவோம்' என்றார்.
அவ்வளவு முடியாத நிலையிலும் எங்களைப் பார்த்ததும் அப்படி ஒரு புன்னகை நடராஜப் பிள்ளையிடம். சாய்ந்து உட்கார்ந்து படக்கென்று கைகளைப் பற்றிக்கொண்டார். என் கைக்குள் அவர் கைகள் நடுங்கிக்கொண்டு இருந்தன.
'அந்திமத்தின் தெருவில் உட்கார்ந்திருக்கிறேன் ஒரு கார் கடந்துபோய்விட்ட மாதிரி தெரிகிறது போய்விட்டதா?’ என்ற நகுலன் கவிதை நினைவுக்கு வந்தது!

அந்திமம் என்பது நாம் நுழைந்தறியாத வனத்தைப் போல ஏராளமான இருளையும் ஒளியையும் வைத்திருக்கிறது. பெருமரங்களின் உடலை ஊடுருவி வழியும் வெயிலைப் போல, நிலவொளியைப் போல அந்திமத்தின் வனத்தில் வழிந்துகொண்டு இருப்பவை மரணமும் ஞானமும்தானா? அதை நம்மால் உணரவே முடியாது இல்லையா?
நடராஜப் பிள்ளையின் முகத்தில் அந்த ஜ்வாலையைப் பார்த்தேன். என்ன ஓர் ஒளி! பட்டெனக் கண்கள் கவிந்து நினைவுகளைத் தேடும்போது, ஒரு மேகம் வந்து நிலவை மூடிவிட்ட மாதிரி தோன்றும். ''ஆங்... அது நடந்தது ஆப்பாவூர்ல...' என்கிறபோது மேகம் நழுவிப் பொசுக்கென நிலவு விகசிக்கும். ஒரு குழந்தையைப் போல பாதி தின்று பாதி துப்பும் வார்த்தைகளில் பேசிக்கொண்டே இருந்தார். அவருடைய பழைய கூத்துப் புகைப்படங்களை எல்லாம் எடுத்துப் போட்டு, ஏதேதோ நினைவுகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார். கண்ணன், தர்மன், துரியோதனன், கர்ணன், அரவான், விக்ரமாதித்யன், பட்டிவீரன், நல்லத்தங்காளாகப் பெண் வேடம் என விதவிதமான, எதிர்மறையான, ஏராளமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
அதை எல்லாம் பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாகவும் பரவசமாகவும் இருந்தது. பேசிக்கொண்டு இருக்கும்போதே ஓர் இடத்தில், சலனமே இல்லாமல் முகத்தைவைத்துக்கொண்டு, ரொம்ப யதார்த்தமாக இப்படிச் சொன்னார் நடராஜப் பிள்ளை, ''எத்தனையோ வேஷம் கட்டி நடிச்சிருக்கேன்... நல்லவனா, கெட்டவனா, கோமாளியா... எத்தனையோ வேஷம். அரிதாரம் கலைச்ச பின்னாடியும் அப்படியேதான் இருந்திருக்கேன். நெஜமா நான் என்னவா இருந்தேன்னுதான் எனக்குத் தெரியலை. என்னவா இருக்கேன்னும் தெரியலை. அய்யா... நான் என்னவா சாகப்போறேன்? தர்மனாவா... துரியோதனனாவா? எதுவும் தெரியலையேய்யா' - சிரிப்புடன் சொல்லிவிட்டு, அப்புறம் கடந்து வேறு எங்கோ அவர் போய்விட்டார். ஆனால், நான் அந்த இடத்திலேயே உறைந்து நின்றுவிட்டேன். அவரது கைகளை அழுத்திய வெப்பத்தை வாங்கிக்கொண்டு வெகு தூரம் வந்துவிட்ட பிறகும் அங்கேயேதான் நிற்கிறேன். அந்தக் கேள்வி என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
இந்த வாழ்க்கை சினிமா என்றால், இங்கே ஆளுக்கு ஒரு ரோல் கிடையாது. ஒவ்வொரு வருக்கும் மாறி மாறி எல்லா ரோல்களையும் கொடுக்கிறான் டாப் ஆங்கிள் டைரக்டர்.
ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கணம் ஹீரோவாக இருக்கிறோம். நாமே வேறு வேறு கணங்களில் வில்லனாகவும் காமெடியனாகவும் குணச்சித்திர நடிகனா கவும் மாறிக்கொண்டே இருக்கிறோம். பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் நான் நடு பெஞ்ச். முதல் பெஞ்ச்சில் இருப்பவன் ஹீரோ. கடைசி பெஞ்ச்சில் இருப்பவன் வில்லன். நடு பெஞ்ச்சில் இருப்பவன் யார்? முழுக்க காமெடியனாகவோ, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவோ மட்டுமே இருக்கச் சபிக்கப்பட்டவன். குட்டிச்சுவர் ஃப்ரெண்டாகவோ, அமெரிக்க மாப்பிள்ளையாகவோ, கைப்பிள்ளை முறைமாமனாகவோ இருக் கவே துதிக்கப்பட்டவன். 'இம்சை அரசன்’ மாதிரி ஆண்டு விழாக் காலங்களிலோ, சுற்றுலாக் காலங்களிலோ மட்டுமே ஹீரோவாக அனுமதிக்கப்படுகிறவன். நடு பெஞ்ச் சில் இருப்பவன், முதல் பெஞ்ச்சில் இருக் கும் ஹீரோயினைப் பார்க்கக் கூடாது.
நடு பெஞ்ச்களிலேயே இருக்கும் நாயகியின் தோழிகளையே பார்க்க வேண்டும். படிக்காமல் வந்தாலும் குளிக்காமல் வந்தாலும் வாத்தியார்களிடம் அதிகம் சிக்குவது நடு பெஞ்ச்சுகள்தான். அவ்வப்போது செய்யும் தவறுகளால் அடிக்கடி பலியாடுகள் ஆவதும் இவர்கள்தான். அத்துமீறி அடிக்கும் கமென்ட்டுகளுக்கு வகுப்பறை சிரிக்கும். சிக்கினால் வாத்தியார் கும்மியெடுக்கும்போது, அழுதாலும் வகுப்பறை அப்படியே சிரிக்கும். நம்மில் ஏராளமானவர்கள் வாழ்க்கை முழுக்க நடு பெஞ்ச்சுக்காரர்களாகத்தான் இருக்கிறோம் என்பது என் கருத்து.
''டேய்... ஒவ்வொருத்தனும் ஹீரோவாகற இடம் எது தெரியுமா? கல்யாண மேடைதான். அங்க நமக்குனு வரப்போற பொண் ணோட அப்பிடி நிக்கும்போது மனசுக்குள்ள ஒரு பெருமை வரும் பாரு... அது தான் மேட்டரு. நம்மள மாதிரி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுக்கெல்லாம் ஹீரோ ஆகற வாய்ப்ப அங்கதான் குடுக்கறானுங்க. இந்தா பாரு... கல்யாண போட்டோல எம் மூஞ்சிய... என்னா ஒரு ரொமான்ஸு... என்னா ஒரு பெருமை...'' ஒருமுறை வீட்டுக்கு அழைத்துப்போய், புது மனைவி சகிதம் தனது கல்யாண ஆல்பத்தைக் காட்டியபடி ஒரு நண்பர் இப்படிச் சொன்னார்.
இந்தப் பேருண்மையை ஏராளமான கல்யாண ஆல்பங்களில் நான் தரிசித்து இருக்கிறேன். அதற்கு முன்னும் பின்னும் பார்த்தறியாத வெட்கத்தோடும் சந்தோஷத்தோடும் நண்பர்களின் முகங்களைக் கல்யாண ஆல்பங்களில்தான் பார்த்திருக்கிறேன்.
சமீபத்தில் ஒரு ராத்திரி அதே நண்பரை ஹோட்டலில் பார்த்தேன். ஃபுல் போதையில் இருந்தார். ''ஃப்ரெண்டு... லாஸ்ட் ஆர்டர் முடிஞ்சது. ஆனா, ஐ வான்ட் டூ மோர் லார்ஜஸ்... உன் பவரைப் பயன்படுத்து...'' என என் தோளில் சாய்ந்தார். நள்ளிரவில் அவரை வீட்டில் கொண்டுபோய் டிராப் பண்ணினேன். அவர் மனைவி, குழந்தை யாரையும் காணோம். பேச்சுலர் அறை மாதிரி கலைந்துகிடந்தது ஃப்ளாட். ஃப்ரிஜ் ஜின் மேல் இருந்த கல்யாணப் புகைப்படத்தை எடுத்துப் புரட்டினேன். சட்டென்று பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர், ''ஆமா... அன்னைக்குத்தான் என்னைக் காமெடியன் ஆக்கினானுங்க... ம்... ங்க பாரு எம் மூஞ்சிய... மொக்க... மொக்க... காமெடியன் ஆயிட்டியேடா...'' எனக் கொஞ்ச நேரம் அனத்திவிட்டு அப்படியே தூங்கிவிட்டார்.

சமீபத்தில் நண்பர் கார்த்திக்கு, குழந்தை பிறந்திருந்தது. பில்ராத் ஹாஸ்பிடலில் இருந்து எனக்கு போன் பண்ணும்போதே அவரது குரலில் அப்படி ஒரு பெருமிதம். சாயங்கால வெயில் விழுந்திருந்த வார்டில், கையில் குழந்தையோடு நின்றபோது மினுங்கிய கார்த்தியின் முகத்தில் அவ்வளவு ஹீரோயிஸம். ஒரு சாமான்யன் ஹீரோவாகிற இன்னொரு முக்கிய தருணம் இதுஅல்லவா..? ''யார் மாதிரிடா இருக்கான்... என்னை மாதிரிதான..?'' என்றார் இதுவரை கேட்காத ஒரு குரலில். ''இல்லல்ல... அக்கா சாயல்ல அழகா இருக்கான்...'' என்றதும் அந்தக்கா சாய்ந்து படுத்துப் புன்னகைத்த படி, ''தம்பி... ஒனக்கு நான் ட்ரீட் தர்றேன்டா...'' என்றது ஹீரோயினாக.
இரண்டு நாட்கள் கழித்து கார்த்தி பதற்றமாக போன் பண்ணினார். ''டேய், எங்க இருக்க..? வடபழனிதான..? சரவண பவன் பக்கமா வாயேன்... வாசல்ல நிக்கிறேன்... அவசரம்டா...'' கொஞ்ச நேரத்தில் அங்கே போனால், வாசலில் பதற்றமாக நின்றார். என் கையில் ஒரு மோதிரத்தைக் கொடுத்து, ''பக்கத்துல அவசரமா இத அடகு வெச்சுட்டு சிக்ஸ் தவுசண்ட் வாங்கியா... அவசரம்டா...'' என்றார். கொஞ்ச நேரத்தில் அடகு வைத்து பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு பரபரப்பாக ஓடினார்.
மறுநாள் போன் பண்ணும்போது சொன்னார், ''வொய்ஃப் வீட்லேருந்து பெரிய கும்பலே கௌம்பி வந்துட்டாய்ங்கடா. நான் இங்க எதோ பெரிய ஹீரோ மாரி நெனச்சுக்கிட்டு 'எம்.ஜி.எம். போலாம்... மாயாஜால் போலாம்’னு ஒரே அட்ராஸிட்டி... வேன் வெச்சு ஊர சுத்திக்காட்றதுக்குள்ள பதினஞ்சு பழுத்துருச்சு... கையில காசு இல்லாமத்தான் மோதிரத்த அடகுவைக்கக் குடுத்தேன். அத வேற கண்டுபுடிச்சுருவாய்ங்கனு பேன்ட் பாக்கெட்லயே கைய வுட்டுக்கிட்டு காமெடி யன் மாரி சுத்திட்டிருந்தேன். இதுல இன்னொரு கூத்து... பொண்ணுக்குச் சுத்த தமிழ்ப் பேர் வைக்கலாம்னு நெனச்சுட்டு இருந்தா, 'பேரு 'வா’ல ஆரம்பிக்கணும், ராசி வரணும்’ அது இதுனு வாயில நொழையாத சம்ஸ்கிருதப் பேர் சொல்றாய்ங்க. எல்லாரும் ஊருக்குக் கிளம்பட்டும். வீட்ல அதுக்கு ஒரு ரகள இருக்கு.''
அடகுவைத்துப் பணம் கொடுத்த எனக்குச் சிறிது நேரமே வந்தாலும், நல்ல கேரக்டர் ரோல் என்பது மட்டும் தெரிந்தது. ஜவுளிக் கடைகளிலும் நகைக் கடைகளிலும் தியேட்டர்களிலும் ஷாப்பிங் மால்களிலும் கார்த்தி மாதிரி அலைபாயும் எத்தனை எத்தனை கேரக்டர்கள் இருக்கிறார்கள்.
நிஜமாகவே நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்து சாமான்யர்கள் ஹீரோவாகிற தருணங்கள் மிக மிகச் சொற்பம்தான். அதுவும் அதிக நேரம் நீடிப்பது இல்லை. 'நான் கமல்ஹாசன்... நான் கமல்ஹாசன்...’ என நாம் கத்திக்கொண்டு திரிந்தாலும், சமூகம் நம்மைச் 'சப்பாணி... சப்பாணி...’ என்றுதான் பேசுகிறது. வில்லனாக டெரர் முகம் காட்டும்போது, 'ஏய்! மயில்சாமிக்குக் கோவத்தப் பாரு...’ எனக் கைகொட்டிச் சிரிக்கிறது. இந்தச் சமூகத்தில் காமெடியனாக இருக்கும்போதுகூட, நம்மால் கவுண்டமணியாக இருக்க முடிவது இல்லை... செந்திலாகத்தான் இருக்க முடிகிறது. கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வரும்போது எல்லாம் நமக்கான வசனங்களை நம்மால் எழுதிக்கொள்ளவே முடிவது இல்லை. யாரோ, யாருக்காகவோ எழுதிக்கொடுத்த வசனங்களையே பேச வேண்டி இருக்கிறது.
அன்றைக்கு அடையாறில் இருந்து நந்தனத்துக்கு பஸ்ஸில் வந்துகொண்டு இருந்தேன். பத்து, இருபது பையன்கள் ஏறி ஏக ரகளை பண்ணிக்கொண்டு இருந்தார்கள். அவ்வளவும் ஆபாசப் பேச்சு. காது கொடுக்க முடியாத பேச்சு. அத்தனை பேரையும் தொந்தரவு பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஒருத்தரும் வாய் திறக்கவில்லை. யாராவது ஒருவர் ஹீரோவாகி, ''ஏய்ய்ய்...'' என வசனம் பேசி ஆக்ஷன் பண்ணுவார்கள் எனப் பார்த்தால், யாரும் வரவில்லை. ஒரு ஸ்டாப்பிங்கில் அவர்கள் இறங்கிப்போனதும் ஒருவர் சத்தமாக, ''போங்கடா... ஒருத்தனும் உருப்பட மாட்டீங்கடா'' என்றார். யாரிடமும் பெரிதாக எந்த ரியாக்ஷனும் இல்லை.
அந்தப் பேருந்து இந்த தேசமாகவும் நாம் அந்தப் பயணிகளாகவும்தான் இருக் கிறோம். உண்மையில் யோசித்தால், எந்த ரோலும் இல்லாமல் இந்த வாழ்க்கையின் பெரும்பகுதி நாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளாகத்தான் இருக்கிறோம். பெட்ரோல் விலை உயர்ந்து, பெட்ரோலும் கிடைக்காமல்போனால் பங்க்குகளில் கூடி அட்மாஸ்பியரில் அடித்துக்கொள்கிறோம். ஈமு கோழிக் கடையைத் திறந்துவைக்க நமீதா வந்தால், கூட்டம் கூட்டமாக வந்து ஜாலியாகிறோம். 'நீயா... நானா’வில் பவர் ஸ்டாரைப் பார்த்துக் குதூகலிக்கிறோம். 'இந்த நித்தியானந்தாவைத் தூக்கிட்டு வந்து கொரில்லா செல்லுல போடணும்யா...’ என்கிற கோபம் பலருக்கும் இருக்கிறது.
'ஊழல் வழக்குல உள்ள போயிட்டு ஜாமீன்ல வந்தவருக்குத் தார தப்பட்ட வரவேற்பாய்யா...’, 'ஈ.பி. பில்லு, பால்-பஸ் டிக்கெட்டு எல்லாத்தையும் இந்தம்மா ஏத்திட்டு, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கிறாங்களே... என்னங்க அநியாயம் இது?’, 'ப.சிதம்பரம் பாதி 'கஜினி’ ஆன பிறகும் அமைச்சராவே இருக்காரேய்யா...’, 'எதுக்கு இந்த இங்கிலீஷ் சேனல் எல்லாம் இப்பிடிக் கதர்றா னுங்க... பிரணாப் ஜனாதிபதியானா, நாட்ல புரட்சி வந்துருமா..?’ என்றெல்லாம் எல்லோருக்கும் எல்லாக் கோபங்களும் இருக்கின்றன. ஆனால், எந்த ரியாக்ஷனும் வசனங்களும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக குற்ற உணர்வாகி, கூட்டம் கூட்டமாகக் காமெடி பண்ணி, கூட்டம் கூட்டமாகக் கடந்துபோகிறோம். ஏனென்றால், நாம் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளால் என்ன செய்ய முடியும்?
ஒயின் ஷாப்புகளில் கூட முடியும். புலம்ப முடியும். ''ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்லருந்து பேசுறோம்... புது லோன் ஸ்கீம் இருக்கு கேக்கறீங்களா சார்...'' என்ற குரலுக்கு டென்ஷனாக முடியும். பழைய லோன் பாக்கிக்கு நாலு தெரு பம்மித் தப்பிக்க முடியும். கண்ணாடித் தூள்களையும் விபத்துகளையும் பார்த்துக்கொண்டே கடந்துபோக முடியும். லஞ்ச் பிரேக்கில் உட்கார்ந்து வதந்தி பேச முடியும். எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு ராத்திரியே போய் விடிய விடிய ஸ்கூல் வாசலில் தூங்காமல்கிடக்க முடியும். கல்விக்கும் மருத்துவத்துக்கும் எந்தக் கேள்வியும் கேட்காமல், டவுசர் கிழியக் கிழியச் செலவு பண்ண முடியும். பிச்சைக்காரருக்கு பத்து ரூபாய் போட்டோ, ரத்த தானம் பண்ணியோ, ரிங் டோனில் தத்துவக் குத்துக்கள் வைத்தோ அவ்வப்போது கெஸ்ட் ரோலுக்கு முயற்சி பண்ண முடியும். கோர்ட்டில் தீர்ப்பும் சொல்ல முடியாமல், கோர்ட்டுக்கு வெளியே ரெண்டு பேரைப் போட்டுத்தள்ளவும் முடியாமல், தினமும் நியூஸ் பார்த்துப் பொரும முடியும். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளால் வேறு என்னதான் பண்ண முடியும்?
நேற்று ஏதோ புது நம்பரில் இருந்து ஒரு போன். ''தம்பி... நான் முருகய்யன் பேசுறேன். நீங்க மறந்திருப்பீங்க... ஒங்கள கொஞ்சம் நேர்ல பாக்கணும் தம்பி...'' என்றது ஒரு முதிய குரல். கொஞ்ச நேரத்தில் அவர் அலுவலகம் வந்தார். பழைய நைந்த வேட்டி, சட்டை... கக்கத்தில் ஒரு துணிப் பை, எழுபது வயதுக்கு மேல் இருக்கும். நரைத்து முகம் எல்லாம் சுருங்கி, கண்கள் மட்டும் பிரகாசம் குறையா மல் எரிந்துகொண்டு இருந்தது. கக்கத்தில் இருந்த பையில் இருந்து கொஞ்சம் நோட்டீஸை எடுத்து என்னிடம் தந்தார். ''தம்பி... ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி விகடன்ல நீங்க இருந்தப்ப வந்து பார்த்திருக்கேன்... இப்பவும் அதுக்குத்தான் வந்தேன். நோட்டீஸைப் பாருங்க...'' என்றார்.
இயற்கை விவசாயம் குறித்தும் இந்திய விவசாயிகளின் பாதுகாப்பு எதிர்காலம் குறித்தும் ஒரு கூட்டம்பற்றிய நோட்டீஸ் அது. ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு இதே தோற்றத்தில் மரபணு மாற்ற விதைகள்பற்றிய எதிர்ப்பு உணர்வுப் பிரசாரத்துக்கு இப்படி ஒரு நோட்டீஸ் கொடுக்கத்தான் இவர் வந்திருந்தார். இப்போதும் இந்த வயதில் உச்சி வெயிலில் ஒற்றை ஆளாக இப்படி வந்து நிற்கிறார். இருவரும் டீ குடித்த பிறகு, என்னைத் தரவிடாமல் அவசரமாக கசங்கிய ரூபாயை அவர் எடுத்து டீக்கடைக்காரரிடம் நீட்டியதைப் பார்த்து எனக்கு சொல்ல முடியாமல் மனசு கனத்துவிட்டது. ஏதோ குற்ற உணர்வு உயிரைப் பிசைந்தது. ''நாம இருக்கறவரைக்கும் எல்லாம் எடுத்துச் செய்வோம் தம்பி... மறக்காம வந்துருங்க தம்பி...'' என்றபடி பழைய ரப்பர் செருப்பு தேய அவர் நடந்துபோனார் எப்போதைக்குமான ஹீரோவாக!
எனக்கு 'சாகும்போதும் நான் தர்மனா, துரியோதனனானு தெரியலையே தம்பி...’ என்ற நடராஜப் பிள்ளையின் குரல் உள்ளே ஒலித்தது. 'தர்மனாகவும் துரியோத னனாகவும் சாவதைவிட அபிமன்யுவாகச் சாவதுதான் பெரிய விஷயம்...’ எனச் சொல்லிவிட்டுப்போவது மாதிரி இருந்தது முருகய்யனின் வருகை.
- போட்டு வாங்குவோம்...