
சாலைகளில், உணவகங்களில், கடற்கரையில், கோயில்களில்... நமக்குப் பிரியமானவர்களின் சாயல்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் பதறி நிற்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம்?
'பார்த்த மொகமா இருக்குங்களே..?'
''அப்டியா..?'
''தம்பி... நீங்க மதுரதான..?'
''இல்லைங்க... நா தஞ்சாவூரு...'
''எங்க பாத்தேன்... பரிச்சயப்பட்ட மொகமா இருக்குங்களே தம்பி...'
இன்று வீட்டுக்கு வந்த அண்ணனின் நண்பர் இப்படியே பேசிக்கொண்டு இருந்தார். கொஞ்ச நேரம் கழித்து சட்டென்று பிரகாசமாகி, ''ஆங்... நம்ம ஜெய்ஹிந்த்புரம் மகேந்திரன் இல்ல... அப்பிடியே இருக்காருங்க இவரு. பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்பிடியே...' என்றார் சந்தோஷமாக. அடிக்கடி இப்படி யான உரையாடல்களை எங்கேனும் யாரா வது முகம் மலர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
நேற்று பட்டென ஆண்ட்ரூஸின் ஞாபகம் வந்துவிட்டது. அவரைப் பார்த்துப் பல வருஷங்கள் இருக்கும். இப்போது என்ன செய்கிறார்... எங்கே இருக்கிறார் என்றுகூடத் தெரியவில்லை. ஆள் பார்ப்பதற்கு அப்படியே 'லொள்ளு சபா’ மனோகர் மாதிரியே இருப்பார். யூ டியூபில் மனோகர் காமெடி பார்த்ததில் ஆண்ட்ரூஸ் ஞாபகம் வந்துவிட்டதா தெரியவில்லை. ஏதேதோ ஞாபகங்கள் வந்துவிட்டன. தடக்கென ஆண்ட்ரூஸ்தான் மனோகராக மாறி நடிக்க வந்துவிட்டாரோ எனத் தோன்றியது. 'இது என்ன பைத்தியக்காரத்தனம்’ எனச் சிரிப்பாக வந்தது. ஆனால், நம்மை எப்போதும் பித்துநிலைக்கே கொண்டுசெல்ல வல்லவை நினைவுகளின் சாயல்கள்.
அப்போது வடபழனியில் நெற்குன்றம் பாதை தெருவில் குடிபோய் இருந்தோம். ஒருநாள் அந்தத் தெருவில் நடந்துவந்துªகாண்டு இருந்தபோது, எதிரே செல்போனில் பேசியபடி ஒரு பெண் போனாள். சிலபல நொடிகள்தான் அவள் முகத்தைப் பார்த்தேன்... நெஞ்சு பதறத் தொடங்கிவிட்டது. கை காலெல்லாம் நடுங்கி, மூச்சு முட்டியது. அது கீர்த்தனா. ''ஏய்... அம்மா இருக்கும்போது கையப் பிடிக்கிறியே... அறிவில்ல ஒனக்கு... விட்றா...' என உதறி விட்டு, மறுபடி அவளே என் கையைப் பிடித்துக்கொண்டு, ''பயந்தாங்குளி... பயந்தாங்குளி...' எனச் சிரித்த அதே கீர்த்தனா. பத்து வருடங்களாவது இருக்கும். பிரிந்த நாளின் கடைசிக் கணங்கள்கூட மறந்துவிட்டது. அவளுக்குக் கல்யாணம்நடந்து விட்டதை, ஒரு மட்ட மத்தியானம் பாடாவதிக் கடையன்றில் மீல்ஸ் வாங்கித் தந்துவிட்டு, பாதி சாப்பாட்டில்தான் கருணா சொன்னான்.

கொஞ்ச நாளைக்கு அவளை எங்கேயாவது பார்த்துவிடுவேனோ என மனசு அடிக்கடி திடுக் கிட்டு யோசிக்கும். கத்தரிப்பூ கலர் சுடிதாரை எங்கேனும் பார்த்தால், மனசு பதறும். கொஞ்ச நேரத்துக்கு வேலையே ஓடாது. ஆனால், அவளை எங்கேயும் பார்க்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து வெயில் எரியும் இந்தப் பெருநகரத் தெருவில் அவளைப் பார்ப்பேன் என நினைக்கவே இல்லை. அக்கணமே சுற்றி நடப்பவை யாவும் மறந்து, பித்து நிலையில் அவளைத் தொடர்ந்து நடந் தேன். ஒரு கடையில் நின்று ஏதோ வாங்கிக்கொண்டு எதிரே இருக்கும் அபார்ட்மென்ட்டுக்கு நடந்தாள். கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாள். அதே நடை, உடல் மொழி... பின்னாலேயே படிக்கட்டில் ஏறி ஃப்ளாட் வரைக்கும் போனேன். பக்கத்து ஃப்ளாட்டில் நின்று சாவி வாங்கிக்கொண்டு திரும்பியவள்... என்னைப் பார்த்து நின்றாள். சில பொழுது உற்றுப் பார்த்து... ''யாரு..?' என்றாள். பொசுக்கென்று மூளை ஆசுவாசமடைந்தது. அவள் கீர்த்தனா இல்லை. அவளைப் போலவே சாயல்கொண்ட ஒருத்தி. அப்படியே அவளைப்போல! விடுவிடுவெனத் திரும்பி கிட்டத்தட்ட ஓடி வந்து தெருவில் நின்று ஒரு தம்மடித்தேன். இப்போதுகூட அந்தப் படபடப்பை உணர் கிறேன்.
'பழைய காதலி சாயலில்/ யாரோ ஒருத்தியைத் தெருவில் பார்த்தேன்/பம்மிப் பதுங்கி அவளைக் கடந்து/ பாதுகாப்பான இடத்தில் இருந்து / திரும்பிப் பார்த்தேன்/ அவளேதான்/ யாரைப் போலவோ ஆகிவிட்டிருந்தாள்’ என்ற பேயோனின் கவிதையை இப்போதுதான் படித்தேன்.
சாலைகளில், உணவகங்களில், கடற்கரையில், கோயில்களில்... நமக்குப் பிரியமானவர்களின் சாயல்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் பதறி நிற்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம்?
பக்கத்தில் வந்து ''எப்பிடிறா இருக்க?' எனக் கேட்பார்களா என்று தவிக்கவைத்துக்கடந்து போகும் சாயல்களில் எத்தனை பேர் இருக்கி றார்கள்? சாயல் என்பது முகம் மட்டுமா? ரோஸி சிஸ்டரின் குரல் அப்படியே 'டி 4’ பத்மாவதிக்கு இருந்தது. அடிக்கடி தலையைக் கலைத்துவிட்டு, 'காட் ப்ளெஸ் யூ’ எனச் சொல்கிற அந்த மேனரிஸம். தமிழும் இங்கிலீஷ§மாக இழுத்து இழுத்துப் பேசுகிற அந்த ஸ்டைல். எல்லாத்துக்கும் மேல் 'எந்நாளும் உன்னை விட மாட்டேன் என் இயேசய்யா... எந்நாளும் உன்னை விட மாட்டேன்’ என அதே பாட்டை... அதே குரலில் பாடியது. 15 வருடங்களுக்குப் பிறகு, ரோஸி சிஸ்டர்அங்கி யில் இல்லாமல் புடவை கட்டிக்கொண்டு வந்துவிட்டதைப் போலத்தான் இருக்கிறது பத்மாவதி அக்காவின் அருகாமை.
அருள் எழிலன் மீசையை விரலால் நீவி நீவிக் கடிக்கிற மேனரிஸம், அப்படியே செல்வ ராஜ் வாத்தியாரைத்தான் நினைவுபடுத்துகிறது எப்போதும். ''என்ன ராசுக்குட்டி...' என ராஜசேகரன் சார் கூப்பிடும்போது எல்லாம் நடராஜ மாமாவின் ஞாபகம் வராமல் போகாது. சாப்பாடு பறிமாறிவிட்டு ஓரமாக நின்றபடி ''வறுத்த மீனு வைக்கவா...' எனப் பரமு அம்மா கேட்கும்போது, 'இது சென்னையா... அபிவிருத்தீஸ்வரமா’ எனக் குழம்பி அம்மா நினைவு வருகிறது. எப்போதும் தன்னிச்சை யாக சட்டைக் கையை ஏற்றிவிட்டுக்கொண்டே பேசும் பாலாஜியைப் பார்க் கும்போது எல்லாம் பகவதியைப் பார்க்கிற மாதிரியேதான் இருக்கிறது. நடையைப் பார்த்து பின்னாலேயே போய் முகத்தைப் பார்த்ததும் 'இது பாவா இல்ல...’ எனத் திரும்பியிருக்கிறேன். அன்றைக்குப் பனகல் பார்க் பஸ் ஸ்டாப்பில் நின்றவரிடம், ''ஏய் சுல்தான்... என்ன தாடில்லாம் வெச்சுட்டு... என்ன லுக்கு இது...' எனக் கேட்டு அவர் முறைத்துப் பார்த்ததில், 'ஸாரி...’ சொல்லி நகர்ந்தேன்.
திருவள்ளூர் மின்சார ரயிலில் கடலை மிட்டாய் விற்கிற பையன் அப்படியே ஜெகத் மாதிரியே இருந்தான். மூலக்கடையில் கருவாட்டுக் கடையில் பார்த்த பெண் ராஜாமணிதானா என இன்னமும் விளங்கவில்லை. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பது மாதிரி, முகத்தால்... குரலால்... செயல்களால்... சாயல்களால்தான் நம் பிரியங்களையும் பிரிவுகளையும் நிரப்பிக்கொண்டே இருக்கிறோம்!

கிருஷ்ணமூர்த்தி மாமா ஒரு நாள் காணாமல் போய்விட்டார். அவரது கிராமத்தைவிட்டு, யாரிடமும் சொல்லா மல்கொள்ளாமல் கிளம்பிவிட்டார். நாலைந்து நாட்கள் ஆகியும் ஆளைக் காணோம். அதன் பிறகுதான் அவர் காணாமல் போய்விட்டார் என உணர்ந் தோம். அத்தை நெல் குதிரில் சாய்ந்தபடி அழுதுகொண்டே இருந்தது. என்னமோ சண்டை... கோபம்... மனுஷன் போய்விட் டார். மாமாவைத் தேடி தஞ்சாவூர் முழுக்க அலைந்து திரிந்தோம். அப்போது பார்க்கிற எல்லோரும் மாமா மாதிரியே இருப்பார்கள். சாலைகள், பெரிய கோயில், பஸ் ஸ்டாண்ட் எனப் பார்க்கிற இடங்கள் எல்லாம் அவரே நிறைந்திருப்பதாகத் தோன்றும். யார் யாரையோ பார்த்துத் தோள் தொட்டுப் பக்கத்தில் ஓடி ஏமாந்து திரிந்தோம். இல்லாமல் போய்விடுகிறவர் கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்த தருணங்கள் அவை. இல்லாமல் போய்விடுகிறவர்களின் நோக்க மும் அதுவேதானோ?
தேடித் தேடி சிவகங்கை பூங்காவில் 15 நாள் தாடியோடு உட்கார்ந்திருந்த மாமாவைப் பிடித்து அழைத்துவந்தோம். வீட்டு வாசலில் அப்படி ஒரு பராரிக் கோலத்தில் கண்கள் கசிந்து அவர் வந்து நின்றபோது யாரோபோல இருந்தது. சமீபத்தில் நல்லகண்ணு அய்யாவின் இளமைக் காலப் புகைப்படம் ஒன்றைப் பார்த்தபோது, அப்படியே கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் போலவே இருந்தது. மனம் எல்லை இல்லாத சாயல்களின் நினைவிலேயே உயிர்த்திருப்பதை உணர்ந்தேன்!
எங்கள் ஊரில் திரிபேண்டு அப்படியே ரஜினி மாதிரியே இருப்பான். இரண்டு பக்கமும் தலை ஏறி, சின்னக் கண்கள், கத்தி மீசை என அப்படியே எண்பதுகளின் ரஜினி. இதை எல்லோரும் சொல்லிச் சொல்லி அவனே ஒரு ரஜினியாக மாறிவிட்டான். ரஜினியின் மேனரிஸங்கள், ஸ்டைல், காஸ்ட் யூம் எனத் தன்னை ரஜினியாகவே மாற்றிக் கொண்டான். லோக்கல் ஆர்கெஸ்ட் ராவில் பவுடர் அப்பி, ஜிகினா டிரெஸ் போட்டு 'மை நேம் இஸ் பில்லா...’ என அவன் ஆட, எகிறியது மார்க்கெட்.
எப்போதும் தலையைக் கோதிக்கொண்டு 'இது எப்டி இருக்கு...’ என அலைய ஆரம் பித்ததில் கிறுகிறுத்தது ஏரியா. திருவிழா ஆர்கெஸ்ட்ராவெல்லாம் சீஸனுக்குத்தானே! மற்றபடி வயித்துப் பொழப்புக்கு என்ன செய்வது..? ரஜினியால் கூலி வேலைக்குஎல்லாம் போக முடியுமா? திரிபேண்டு திருடனானதன் பின்னணிகளில் இதுவும் ஒன்று.
நள்ளிரவுகளில் கொல்லையில் புகுந்து அண்டா குண்டானை எல்லாம் கொண்டுபோக ஆரம்பித்தான். ஒருமுறை தஞ்சாவூரில் யாரோ ஒருவரின் பெட்டியை அடித்துக்கொண்டு வந்துவிட்டான். அதில் எக்கச்சக்கமாய் பணம் இருந்திருக்கிறது. நூறு ரூபாய் நோட்டைச் சுருட்டி அதில் தம்மடிப்பது, கம்மங்குடி வரைக்கும் சரக்கு சப்ளை செய்வது, 'பச்சப்புள்ளகூட இந்த திரிபேண்டு பேரக் கேட்டா வாயப்பொத்தும்’ என 'மூன்று முகம்’ அலெக்ஸ்பாண்டியனாக பஞ்ச் அடித்தபடி பணத்தை அள்ளிவிட்டு ரவுசு பண்ணியவனை, ஒரே வாரத்தில் போலீஸ் அமுக்கியது. கொண்டுபோய் லாக்கப்பில் வைத்துச் செதுக்கி எடுக்க, ரஜினி கஜினியாகி ஊருக்குத் திரும்பினான். அதிலிருந்து அவன் ஹீரோ இமேஜே காலியாகிவிட்டது. ஒருமுறை பள்ளிவாசலில் அவன் முதுகில் பாறாங்கல்லைவைத்து நாள் முழுக்க நிற்க விட்டார்கள். ஆனாலும், 'ஜஸ்ட் லைக் தட்’ தூக்கி எறிந்துவிட்டு, மறுநாளே கை வைக்க ஆரம்பித்துவிடுவான்.
15 வருடங்களுக்குப் பிறகு திரிபேண்டைச் சமீபத்தில்தான் பார்த்தேன். பெரியவராகி இருந்தார். பக்கத்து ஊரில் காய்கறிக் கடை போட்டிருக்கிறார். தலைமுடி பாதி கொட்டி, நரைத்து ஆளே உருமாறிப் போயிருக்கிறார். ''இப்போ நேர்மையாப் பொழைக்கிறேன் தம்பி... எல்லாம் போயிருச்சு. ஆனா, இப்பமும் நாம சூப்பர் ஸ்டார்தான்... மனசால தம்பி...' என வேகமாக நெஞ்சில் அடித்துக்காட்டினார். இப்படி ஊருக்கு ஊர் எத்தனையோ எம்.ஜி.ஆர்கள், சிவாஜிகள், சரோஜா தேவிகள், விஜய்கள், அஜீத்கள்... வண்ணங்கள் கரையும் கனவுகளின் துயரங்களாகவே இருக்கின்றன சாயல்களின் வாழ்க்கை எப்போதும்!
'கொழந்த யார் மாரி இருக்கு..?’ என்கிற கேள்வியிலேயே தொடங்கிவிடுகிறது ஒவ்ªவாருவருக்குமான சாயல்களின் உலகம். யாரிடமாவது, யாரையாவது தேடிக்கொண்டே இருப்பது பூர்வ ஜென்மம்போல் நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. யாராவது வந்து யாருடைய இடத்தையேனும் தங்கள் சாயல்களால் இட்டு நிரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். நினைவுகளைப் புதுப்பிக்கிறார்கள். இந்த நாளை அழகாக்குகிறார்கள். வாடிய பொழுதைத் துளிர்க்கவைக்கிறார்கள். காதலும் நட்பும் உறவும் பிரிவும் சாயல்களால் நிறைந்துகிடக்கிறது.
இப்போதெல்லாம் அடிக்கடி எனது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் என் அப்பாவின் சாயலை என்னிடமே நான் உணர்கிறேன். அது சமயங்களில் சந்தோஷத் தையும் சமயங்களில் துயரத்தையும் தருகிறது. எல்லோருக்கும் ஏதோ ஒரு நாளில் அப்பா, அம்மாவின் சாயல் வந்துவிடும் என்று தோன்றுகிறது. கண்ணாடி பார்க்கும்போது எல்லாம் வயதாகிக்கொண்டே இருப்பது நமக்கா நமது சாயலுக்கா எனக் குழம்புகிறது மனம். கண்ணாடி நகைக்கிறது காலத்தின் சாயலில்!
ஒரு ஆக்ஸிடென்ட்டில் பிரேம் சார் செத்துப் போனபோது, அவரை அடை யாளம் காட்ட திருப்பூர் ஜி.ஹெச். மார்ச்சு வரிக்குப் போயிருந்தோம். அந்த அறையில் பத்து இருபது பிணங்கள் கிடந்தன. யார் யாரோ, யார் யாரின் சாயல்களிலோ செத்துக்கிடந்தார்கள். மனசு திடுக்கிட்டு திடுக்கிட்டு அடங்கியது. இம்மாதிரியான தருணங்களில், நொடிகளில் மனசு ஏதேதோ கற்பனைகளுக்குப் போய்விடுகிறது. இறந்து கிடந்த ஒருவரின் கையைப் பார்த்து என்னுடன் வந்த சக்திவேல் பதறி நின்றான்.
சட்டென்று அவர் முகத்தைப் பார்த்து ஆசுவாசமானான். 'ச்சீ...’ எனத் தலையை உதறிக்கொண்டான். சந்தன கலர் சட்டை யும் காப்பி கலர் பேன்ட்டும் போட்டிருந்த பிரேம் சாரை அடையாளம் காட்டினோம். அடுத்த வாரம்போல ஹாஸ்டலுக்கு சக்திவேலின் அப்பா வந்திருந்தார். அப்போதுதான் பார்த்தேன்... அவரது வலது கையில் ஒரு ரெட்டை இலையைப் பச்சை குத்திஇருந்தார்... திருப்பூர் ஜி.ஹெச். மார்ச்சுவரி யில் சக்திவேல் பார்த்துத் திடுக்கிட்டவரின் கையில் குத்தியிருந்ததைப் போலவே!
- போட்டு வாங்குவோம்...