
இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை... எதுவும் இல்லாத எளியவர் களின் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக வும் நிம்மதியாகவும் இருக்கிறது!
''டேய் பங்காளி... ஜோதி பேசுறேன். கோயம்பேட்ல இருக்கேன்... ஒங்கூட்டுக்கு எப்பிடி வரணும்? ஆங்... ஆட்டோல்லாம் தோதுப்படாது. பஸ் ரூட்டு சொல்லு?''
- போன வாரம் அதிகாலை குடும்பத்தோடு வந்து கதவு தட்டினான் ஜோதி. தன் மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் நான்கு மொட்டைத் தலைகள்.
''ரொம்ப நாளா இது கெடந்து அனத்திட்டேகெடந்துச்சு... திருப்பதி போவணும்னு. வெயிலு வேற ஏறிக்கட்டி அடிச்சுதா... அதான் இழுத்துட்டுக் கௌம்பிட்டேன். சின்னதுதான் மொட்ட அடிக்கிறப்ப கரச்சலக் குடுத்துருச்சு. என்னா கூட்டங்கற... ஆனா முருகா... சபரிமலைக்கு திருப்பதி தேவலாம்யா... கொஞ்சம் எடுத்து செய்றானுவோ...' - வந்து உட்காரக்கூட இல்லை. தடதடவெனப் பேசிக்கொண்டே நின்றான். ''ஆமா... நீ ஆரம்பிச்சுருவியே... அதுங்கள வேற தூக்கத்துல எழுப்பி... நீங்க படுங்கண்ணே...' என்றார் அவன் மனைவி. ''நீ போய் படுத்துக்க... நாங்க போயி ஒரு டீயடிச்சுட்டு வர்றோம். சின்ன வண்டு நீ வாடி... மாமனுக்கு குட்மானிங் சொல்லு... சாக்கோபார் கேளு!''
டீ குடித்துவிட்டு வருகிற வழியில் இட்லி மாவு வாங்கினேன். ''என்னங்கடா இது... தண்ணியும் பாக்கெட்ல குடுக் குறான்... இட்லி மாவும் பாக்கெட்ல குடுக்குறான். ஒங்க வாழ்க்கையே இப்பிடி பாக்கெட் பாக்கெட்டாப் போயிட்டு இருக்கேடா. அரிசியும் உளுந்தும் ஊறப்போட்டு நாமளே அரைச்சித் திங்கிற மாரி வருமாய்யா... அதுக்குக்கூட நேரம் இல்லயா?'' எனச் சிரித்தான் ஜோதி.

''நான்லாம் ஆறு வயசுலதான் பள்ளிக்கூடம் பக்கமே போனேன்... வாழ்க்கைல சந்தோஷமாத்தானய்யா இருக்கேன். ரெண்டு வயசுல எல்லாம் புள்ளைவோலக் கொண்டுபோயி எதுக்குய்யா ஸ்கூல்லவிடுறீங்க... இதுங்கள அஞ்சு வயசுலதான் ஸ்கூல் சேக்கப்போறேன்... அதுவும் அரசாங்கப் பள்ளிக்கூடம்தான். அதுங்களா கத்துக்கும்யா...'' என்றான், எங்கள் வீட்டுப் பாப்பாவை ஸ்கூலில் விடப் போகும் போது.
சாயங்காலமாக மெரினா பீச் போனார்கள். அவன் பஜ்ஜி வாங்கித் தந்தபோது அவன் மனைவியிடம் மின்னிய வெட்கம் ஒரு இன்ஸ்டன்ட் காவியம். பிள்ளைகளுக் குப் பலூன்கள் வாங்கித் தந்து, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி காட்டி, சந்தோஷமாகத் திரும்பினார்கள். வருகிற வழியில் 'சகுனி’ பட போஸ்டரில் கார்த்தி யைப் பார்த்துவிட்டு, ''சிவகுமாரோட ரெண்டு பசங்களும் நல்லா வந்துட்டாய்ங் கள்ல... எடம்லாம் வாங்கிப் போட்ருக்காங் களா..? ஏம் பங்காளி... ரஜினி இப்ப இங்க இருக்காப்லயா... இமயமலை போயிட்டாப் லயா..? அண்ணே... ஆட்டோ அம்மவூட்டு வழியாப் போவுமா..? புள்ளைவோளுக்குக் காட்டுவோம்... எல்லாப் பயகளுக்கும் நாமதான மொதலாளி...'' என வரும் வரை நான்ஸ்டாப்பாகப் பேசிக்கொண்டே வந்தான்.
சந்திரா பவனில் சந்தோஷமாக மசாலா பால் குடித்தார்கள். குழந்தைகளுக்கு பொம்மை போட்ட வாட்டர் பாட்டிலும் டி.வி. கவரும் வாங்கிக்கொண்டார்கள். இரவு கோயம்பேட்டில் அவர்களை பேருந்து ஏற்றிவிட்டுத் திரும்பியபோது மனசு ரொம்ப லேசாகி இருந்தது.
ஜோதி என் செட்டுதான். அவனைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. அவனுக்கு இந்த நகரம்குறித்து, வசதி வாய்ப்புகள்குறித்து, எந்தப் பிரமிப்பும் ஏக்கமும் இல்லை. யார்குறித்தும் அச்சம் இல்லை. வாழ்க்கைபற்றிய சிக்கலோ, குழப்பமோ இல்லை. குயுக்தி இல்லை. மனைவி, பிள்ளைகளை அப்படி நேசிக்கிறான். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான். எதையும் அடைந்துவிட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளிவிடுகிற, கவிழ்த்துவிடுகிற எத்தனிப்பு இல்லை. அவனைப் போன்ற வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு எனக்கு இல்லையே என்கிற வருத்தம் என்னைத் தின்கிறது.
''பங்காளி வந்து சேந்துட்டம்... அதுக்குத்தான் பயணத்துல ஒடம்பு கொஞ்சம் முடியல... படுத்துருக்கு. நானே சமைச்சுட் டேன்... தக்காளி சாதம் எடுத்துட்டு வேலைக்குக் கௌம்பிட்டேன்... சாயங்காலம் வந்து இத கோயிலுக்குக் கூட்டிப் போணும்...'' என காலையிலேயே ஜோதி போன் பண்ணியது மனசைச் சட்டென மலர்த்திப் போட்டுவிட்டது.
இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை... எதுவும் இல்லாத எளியவர் களின் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக வும் நிம்மதியாகவும் இருக்கிறது! வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன் போடும் கொண்டாடுபவர்கள் இம்மாதிரி யான எளியவர்கள்தான்.
ரெங்கநாதன் தெருவில் ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு பார்த்துப் பார்த்து பர்ச்சேஸ் செய்துவிட்டு, வியர்வை வழிய வழிய ரோட்டுக் கடையில் கட்டைப் பைகளோடு நின்று குடும்பமாக கோன் ஐஸ்க்ரீம் சாப்பிடுபவர்களின் முகங்களில் எவ்வளவு சந்தோஷம் வழிகிறது. ஞாயிற்றுக் கிழமையில் புருஷனும் பொண்டாட்டியும் லேட்டாக எழுந்து, எண்ணெய்க் குளியல் போட்டு, கறி எடுத்துச் சமைத்து எடுத்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போவதிலேயே எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்துவிடுகிறது சிலருக்கு.
எவ்வளவு பெரிய கூட்டத்திலும் சட்டெனப் பொண்டாட்டியின் புடவை முந்தியை எடுத்து முகம் துடைத்துக்கொள்கிறவன் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறான். மொத்தமாக ஒரு வேன் எடுத்துக்கொண்டு, சோறு கட்டிக்கொண்டு ஆலங்குடிக்கும் பெரிய பாளையத்துக்கும் போகிறவர்களின் நாட்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. எத்தனை பெரிய குடும்பப் பிரச்னையையும் ஒரு காதுகுத்தில், குலசாமிக் கோயிலில் வைத்து, ஆஃப் ஓல்டு மங்கில் தீர்த்துக்கொள்கிறவர்கள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.
''பேசுனாத் தீராதது என்னா இருக்கு மாப்ள... நீ சரக்கப் புடிச்சுக்கிட்டு வெட்டாத்துப்பாலத்துக்கு ஆப்போஸிட்ல வந்துரு... செந்திலையும் வரச் சொல்லியிருக்கேன். அவன்ட்ட சைடு டிஷ் வாங்கச் சொல்லிட்டேண்டா... அப்றம் என்னா... இன்னிக்கு மிக்ஸ் ஆகிருங்க...'' என்கிற ரவி சித்தப்பா, ஐ.நா. சபைக்குத் தலைவராகப் போனால்... நல்லா இருக்கும்.

வாசலில் மாஞ்செடிகளும் தென்னங்கன்றுகளும் வைத்து குழந்தைகள் மாதிரி தினமும் அவற்றுடன் பேசுபவர்கள், தெருக் குழந்தைகள் எல்லோருக்குமாக ஃப்ரிஜ்ஜில் கேக் வாங்கி வைப்பவர்கள், ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கும்போது, பக்கத்து பெட்காரருக்கும் சேர்த்து மணத்தக்காளி ரசம் செய்துவரும் குடும்பம், ஏதோ சண்டையில் பேசாமல் போனவரை அப்பன் செத்துப்போய்க் கிடக்கிற எழவு வீட்டில் பார்த்ததும் கையைப் பற்றிக்கொண்டு கதறி முன்னிலும் நெருக்கமாக ஆகிவிடுகிறவர்களை, அவசரத் தேவைக்கு கல்லுவைத்த வளையலை அடகுவைத்துவிட்டு, ''இதுக்கென்ன... ஏங்கைக்கு எடுப்பாத்தான இருக்கு...'' என ரப்பர் வளையல்கள் வாங்கிப் போட்டுக்கொண்டு, கணவனிடம் சிரிப்பவர்களைப்போல் இருந்துவிட்டால்... அதைவிட வேறென்ன வேண்டும் இந்த வாழ்வில்?
அறியாமையைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது? கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், ஜோதி மாதிரி நிம்மதியான வாழ்க்கையை வாழவிடாமல் என்னைத் துரத்தி அடிப்பது இந்த அறிவு முகமூடிதான் எனத் தோன்றுகிறது. எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலைச் சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக்கொண்டவர்களின் மூளைகள்தான். அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல், 'அறிவு’ தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை.
சிறுபிராயத்தில் தஞ்சாவூரில் உள்ள சித்தி வீட்டுக்கு விடுமுறைக்குப் போவோம். அப்போது பக்கத்து வீட்டில் ஒரு தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். பெண் பிள்ளை களைக் கட்டிக் கொடுத்துவிட்டு அவர்கள் தனித்து இருந்தார்கள். அவர்களின் வீட்டு வாசலில் இரண்டு வாதாம் மரங்கள் இருந்தன. எங்கு பார்த்தாலும் இள மஞ்சளும் பச்சையுமாக வாதாம் பழங்கள் உதிர்ந்துகிடக்கும். அதைப் பொறுக்க நாங்கள் போனால், அந்த தாத்தா டென்ஷன் ஆவார். ஒரு தடிக்கம்பை எடுத்துக்கொண்டு எங்களைத் துரத்துவார். அவருக்குத் தெரியாமல் பொறுக்கப்போனால், எங்கு இருந்து வருகிறார் என்றே தெரியாமல் திடீரென வந்து கம்பைச் சுழற்றுவார்.
அவர் தூங்கிவிடும் மதியங்களில் சத்தம் இல்லாமல் போய் உதிரும் பழங்களைப் பொறுக்கி வந்துவிடுவோம். சாயங்காலம் வெளியே வந்து நின்று கண்டபடி திட்டுவார். ஒருநாள் அந்த தாத்தா செத்துப்போய்விட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து அவரது சடலம் வந்து இறங்கியது. எல்லா மகள்களும் வந்துவிட, ஒரே கூட்டம். அப்போதுதான் அவர் செத்துப்போனதே தெரியும். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மறுபடி யாரும் இல்லாமல் வெறுமையாகக்கிடந்தது அந்த வீடு. அந்தப் பாட்டி வந்து வெளியே விளையாடித் திரிந்த எங்களை வீட்டுக்குள் அழைத்துப்போனது. உள்ளே ஒரு ரூமில் பாதி அளவுக்கு வாதாம் பழங்கள் குவிந்துகிடந்தன.
''இந்தாங்கப்பா... எடுத்துக் கோங்க... தாத்தா ஒங்களுக்கெல்லாம் குடுக்கச் சொன்னாரு...'' என்றபடி பழங்களை அள்ளி அள்ளி எங்களிடம் தந்தது அந்தப் பாட்டி. ''அவருக்கு ரொம்ப வருத்தம்... ஒங்களை எல்லாம் அடிச்சுட்டோமேனு... ஆஸ்பத்திரில இருக்கும்போது ரொம்ப வருத்தப்பட்டாரு. இனிமே நீங்க வந்தா அடிக்காம வாதாம் பழம் குடுக்கச்சொன்னாரு... பயப்படாம வாங்க...'' என அவர் சொன்னதன் கனம் அப்போது புரியவில்லை. இப்போது அது எவ்வளவு பெரிய அற்புதம் எனச் சிலிர்க்கிறது. சாகும்போது குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கும் ஒரு மனம் ஓர் எளிய மனிதருக்குத்தான் வாய்க்கும். புத்திசாலிகளுக்கு ஒருபோதும் வாய்க்காது. அப்படி ஒரு மனம் வாய்த்துவிட்டால், அதைவிடக் கொடுப்பினை ஏது?
திருப்பூரில் வேலை பார்த்தபோதுதான் மாறனைத் தெரியும். அவருக்கு ஒரு கை கிடையாது. முழுக்கை சட்டை போட்டு, பாதி மடக்கிவிட்டு உட்கார்ந்திருப்பார். அங்கு ஒரு கட்டணக் கழிப்பறையை எடுத்து நடத்திவந்தார். கழிப்பறைக்கு எதிரே டேபிள் போட்டு, பக்கத்தில் ஒரு ஓட்டை ஃபேன் போட்டு உட்கார்ந்திருப்பார். டேபிளில் எப்போதும் ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும். இசைப் பிரியர். அவரே அற்புதமான பாடகர். ரேடியோ பாடுவதை நிறுத்தும்போது, அவர் பாட ஆரம்பித்துவிடுவார்.
'அதிகாலை நேரமே... புதிதான ராகமே... எங்கெங்கிலும் ஆலாபனை...’ எனப் பாடிக்கொண்டே சைகையில்தான் நமக்குப் பதில் சொல்வார். ''சாப்பிட்டிங்களாண்ணே..?' என்றால், ''புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு... பஞ்சம் மட்டும் இங்கு இன்னும் மாறவில்ல... இந்த பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்ல...' எனப் பாடிக்கொண்டே தோள் குலுக்கி ஆடுவார். அவரிடம் எப்போதும் துளி சோகத்தையும் பார்த்தது இல்லை. எப்போதும் பாட்டு, இசை, புன்னகைதான்.
''ஏண்ணே... இந்தக் கைக்கு என்னாச்சுண்ணே..?'' என ஒருமுறை கேட்டபோது, ''ஒரு ஆக்சிடென்ட்ல போச்சுப்பா... பஸ்ஸு கீழ உருண்டு அடிபட்டு அப்பிடியே கெடந்தேன். கை உள்ள மாட்னதே தெரியல... அப்பிடியே கெடந்துருந்தாக்கூடத் தப்பிச்சுருக்கும். பக்கத்துல ஒருத்தர் மொனங்கிட்டுக் கெடந்தாருல்ல... அவரைப் புடிச்சு இழுக்க நவுந்தேன்ல.... மாட்ன கை புடுங்கிக்கிச்சு...' எனச் சிரித்தார்.
ஒருநாள் அவருக்கு உடம்பு முடியவில்லை. கல்யாணம் குட்டி என எதுவும் இல்லாத தனிக்கட்டை. காய்ச்சல் வந்து கழிப்பறை ஓரமாகவே படுத்திருந்தார். நான் பார்க்கப் போனபோது, ''ஒண்ணுமில்ல... சின்ன காய்ச்சல்தான்.
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு புதிரானது...' எனப் பாடியபடி எழுந்து அமர்ந்து பக்கத்தில் இருந்த ஒரு தகரப் பெட்டியைத் திறந்து காட்டினார். பெட்டி முழுக்கக் கசங்கிய ரூபாய் நோட்டுகள். சில ஆயிரங்கள் இருக்கும். அதை அள்ளிக் காட்டியபடி, ''எதுக்கு சேத்துவெச்சுருக்கேங்கிற... நாஞ் செத்தா... என் அடக்கச் செலவுக்கு. சும்மாக் கொண்டுபோய் பொதச்சுட்டுப் போயிராம... சந்தோஷமா வேட்டு கீட்டு போட்டு அலங்காரம் பண்ணிக் கொண்டுபோய் அடக்கம் பண்ணணும். நம்ம எளங்கோகிட்ட சத்தியம் வாங்கிப்புட்டேன்... இதுலதான் அடக்கம் பண்ணணும்னு... சந்தோஷமா இருந்தேன்... யாருக்கும் தொந்தரவு கொடுக்காம நம்ம காசுல சந்தோஷமா போயிரணும்... அது போதும்பா எனக்கு...' என அவர் சிரித்தது இப்போதும் மனசுக்குள் ஒலிக்கிறது.
அவரைப் போன்ற அன்பனாய், அற்புதனாய், லட்சியவாதியாய் ஓர் புத்திசாலியால், அறிவாளியால் ஆகவே முடியாது என்பதும் உண்மைதானே!
- போட்டு வாங்குவோம்...