மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 49

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும் ( vikatan )

இத்தனை செல்பேசிகள், இணையம் என எத்தனையோ வந்துவிட்ட பிறகும் சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்துகொண்டே இருக்கின்றன.

'இறந்துபோனவரைப் புதைத்துவிட்டுத் திரும்பும் வழியில் உதிர்ந்துகிடப்பவை பூக்களல்ல... சொற்கள்!’

எப்போதோ படித்த இந்தக் கவிதை, எப்போதும் தீராத சலனங்களை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. உதிர்ந்துகிடப்பவை இறந்துபோனவர் சொல்லிவிட்டுப்போன சொற்களா... சொல்லாமல்போன சொற்களா? இந்தக் கேள்விதான் என்னை அரிக்கிறது. யோசித்துப் பார்த்தால், நம் ஒவ்வொருவரிடமும் வாழ்நாள் எல்லாம் சொல்லாமல் வைத்திருக்கும் சொற்கள் எவ்வளவு இருக்கின்றன? ஒரு குழந்தையைப் போல, பைத்தியத்தைப் போல ஒவ்வொருவரிடமும் சொல்ல முடியாமல் புதைந்துகிடக்கும் சொற்கள் லோடு லோடாக இருக்கிறதா இல்லையா?

நேற்று திருநகர் சிக்னல் பக்கம் ஒரு கடை வாசலில் டிரம்மில் வைத்திருந்த தண்ணீரை, கந்தல் வேட்டியும் வெற்றுடம்பும் ஜடாமுடியுமாக வந்த ஒருவர் மொண்டு குடிக்கப் போனார். ''ஏய்... ச்சீய் போ...'' எனக் கடைக்காரர் சத்தம் போட, சடாரெனத் தண்ணீர் டம்ளரைக் கீழே விசிறிவிட்டு சத்தமாகத் தனக்குள் பேசியபடி ஆவேசமாக நடந்துபோனார் அவர். கடைக்காரர் சட்டென வெட்கி நின்றார். 'மனநலம் சிதைந்த வழிப்போக்கன் ஒருவனுக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட மனசில்லாத நீ மனிதனா?’ என்கிற சொற்களை அவர் பேசாமலேயே அங்கே வீசிவிட்டுப் போய்விட்டார்.

ஒருமுறை நண்பரின் மகள் தற்கொலை முயற்சியில் இறங்கினாள். டப்பா தூக்க மாத்திரைகள். நல்ல வேளையாகப் பிழைத் துக்கொண்டாள். ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்தபோது, ''என்னன்னே தெரியலப்பா... ஓங்கிட்ட நல்லாப் பேசுவாள்ல...'' என நண்பரும் அவர் மனைவியும் தலையில்அடித்துக்கொண்டு அழுதார்கள். படுக்கை யில் கிடந்த அந்தப் பெண்ணிடம் தனியே போய், ''என்னம்மா ஆச்சு..?'' என்றேன். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. வாய் கோணி கோணிச் சிரித் தாள். எதுவுமே பேசவில்லை. கண்ணீரும் நிற்கவில்லை. வெயிலும் மழையும் சேர்ந்து வருகிற மாதிரி கண்ணீரும் புன்னகையும் சேர்ந்து வருவது... அதீத சந்தோஷங்களிலோ, சோகங்களிலோதானே? அவள் மருத்துவ மனையில் இருந்த ஒரு வாரமும் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. ''அவள்ட்ட இது சம்பந்தமா எதுவும் கேட்காதீங்க.இப்போ இல்ல... எப்பவும்...'' எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

முன்பு ஒருமுறை வேளாங்கண்ணி திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது, நண்பனின் பொம்மைக் கடைப் பக்கம் ஒரு குட்டிப் பெண் அழுதபடி நின்று கொண்டு இருந்தாள். விசாரித்தபோது திக்கித் திக்கி இந்தியில் இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு மறுபடி அழுதாள். எதுவும் புரியவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த போலீஸ் பூத்தில் அவளைக் கொண்டுபோய் விட்டோம். மைக்கில் தமிழில் அறிவிப்பு செய்தார்கள். ஒரு பெண் போலீஸ் வந்து, ''தமிழ்ல சொன்னா புரியுமோ புரியாதோ... இங்கிலீஷ்ல சொல்லுங்க...'' என்றபடி அவரே அறிவிப்பும் செய்தார். கொஞ்ச நேரத்தில் ஒரு வெள்ளைக்காரப் பெண் மணி ஓடிவந்தார். அந்தக் குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு, ''தேங்க்யூ... தேங்க்யூ...'' எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். லண்டனில் இருந்து வந்திருக்கிற அவர், கொல்கத்தாவில் ஒரு ஹோமில் இந்தச் சிறுமியைத் தத்தெடுத்திருக்கிறார். அந்தச் சிறுமியை அழைத்துக்கொண்டு இந்தியா முழுக்கச் சுற்றிக்கொண்டு இருக்கிறார். கண்ணீர் வழிய வழிய... அந்தச் சிறுமியை அவர் முத்த மிட்ட காட்சி மறக்க முடியாதது. எல்லா வற்றையும் சொல்லிவிட மொழிகளால் முடியுமா என்ன?

வட்டியும் முதலும் - 49

''கண்ணீரும் புன்னகையும்தான்யா தேவபாஷை...'' என்பார் தஞ்சை ப்ரகாஷ். கண்ணீர், புன்னகை, பசி, வலி எல்லாமே தேவபாஷைதான். அன்றைக்கு விலை உயர்வுக்கு எதிரான ஒரு போராட்டத்துக்குப் போயிருந்தேன். ஒரு பையனும் பெண்ணும் அரை மணி நேரம் பறையடித்து ஆடினார் கள். பறையலி முடிந்ததும் வந்துவிட்டேன். அந்த இசையைவிடவும் பெரிய கோபம் என்ன இருக்கிறது..? எல்லாம் அது பேசிவிட்டது. சென்ட்ரல் ஸ்டேஷனில் சாயங்காலமாக ஓவர் பிரிட்ஜில் உட்கார்ந்து ஒரு பார்வையில்லாத முதியவர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு இருப்பார். சிவகங்கை பூங்கா வாசலில் டோலக்கு அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிற ஒருவர் பேசியே பார்த்தது இல்லை. சனிக்கிழமைகளில் தாமஸ்மவுன்ட் சர்ச்சில் பியானோ வாசிக்கிறவரின் முகம் எவ்வளவு யோசித்தும் ஞாபகத்தில் வர மாட்டேன் என்கிறது. ஓர் இசை மாதிரி, கைகுலுக்கல் மாதிரி, சிரிப்பு மாதிரி முகங் கள் இருப்பது இல்லை எப்போதும்.

பத்து வருடங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் நண்பன் ஒருவனின் வீட்டுக்குப் போய் ஒரு மாதம்போல் தங்கி இருந்தேன். பெரிய வயல்வெளிகளுக்கு நடுவே அவர்கள் வீடு. தோட்டத்தில் சமையலறை தனியே தள்ளி இருக்கும். ஒரு பகலில் தண்ணீர் எடுப்பதற்காக அந்தச் சமையலறைக்குப் போனேன். உள்ளே ஏதோ பேச்சுக் குரல்கள் கேட்டுக்கொண்டு இருந்தன. பேச்சுச் சத்தம் நிற்காமல்

வட்டியும் முதலும் - 49

தொடரவே எட்டிப் பார்த்தேன்... அந்தக் காட்சி ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. நண்பனின் அம்மா சமையல் கட்டு திண்டில் உட்கார்ந்தபடி வெளியே பார்த்து தனியே பேசிக்கொண்டு இருந்தார். என்ன என உற்றுப் பார்த்தபோதுதான் பக்கத்தில் இருந்த ஜன்னலில் ஒரு பூனை உட்கார்ந்திருந்தது தெரிந்தது. அவர் அந்தப் பூனையிடம்தான் பேசிக்கொண்டு இருந்தார். அந்தப் பூனை வெகு சகஜமாக அவரைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தது. அந்த அம்மா தன்னை மறந்து அதனிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார். நான் சட்டெனத் திரும்பிவிட்டேன். அன்றில் இருந்து கவனித்தால், நண்பனின் அம்மா பாதி நாள் அந்தப் பூனையிடம்தான் பேசிக்கொண்டு இருந்தார். ''அது ச்சும்மா அந்தப் பூனைகிட்டயே பேசிட்டுக் கெடக்கும்ரா...'' என சகஜமாகச் சொன்னான் நண்பன். அடுக்களை ஜன்னலில் உட்கார்ந்துஇருக்கும் பூனையிடம் அந்தம்மா பேசிக்கொண்டு இருந்த காட்சி நெடு நாட்களுக்கு என்னை இம்சித்துக்கொண்டே இருந்தது. அதன் பிறகு பார்த்தால், நிறையப் பெண்கள் வளர்ப்புப் பிராணிகளுடன் பேசுவதைக் கவனித்தேன். ஊரில் இருந்து காதலித்து ஓடிவந்து கல்யாணம் பண்ணிக்கொண்ட, உறவுகளுடன் பேச முடியாமல் போன அத்தை, தான் வளர்க்கிற நாயுடன் அப்படிப் பேசுகிறது, கோபப்படுகிறது, மடியில் தூக்கிப்போட்டுக் கொஞ்சுகிறது, அழுகிறது. மதுரையில் தங்கியிருந்தபோது, கீழ் வீட்டில் இருந்த கீதாக்கா ஏகப்பட்ட கிளிகள் வளர்த்து அவற்றுடன் பேசிக்கொண்டே இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்து அவ்வளவு உயிர்ப்பாகப் பேசிக் கொண்டு இருக்கும். சுதா சித்திக்கு எப்போதும் பஞ்சாரத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கோழிகளிடம் பேசும் பழக்கம் இருந்தது. தனது துணையிடம், பிள்ளைகளிடம், உறவு களிடம், நட்பிடம் பேச முடியாத எதை பிராணிகளிடம் பேசிவிட முடியும் என எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், மனிதர்களிடம் பேசிப் புரியவைக்க முடியா மல் போன அன்பை அவற்றிடம்தான் பேச முடியும் இல்லையா? பகிர முடியாத விருப்பங்களை, தாளாத உணர்வுகளை, அழுத்தும் சுமைகளைச் சொல்லிவிட சொற்கள் மட்டுமே போதுமா? அந்தச் சொற்களையும் ஏந்திக்கொள்ள இதயங்கள் வேண்டும் இல்லையா? போய்ச் சேர முடியாத ஏராளமான சொற்களை வாழ்நாள் எல்லாம் சுமந்து அலைந்து திரிகிறவர்கள் பூனைகளிடமும் நாய்களிடமும் கிளிகளிட மும் அவற்றை இறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருவுக்குத் தெரு கடவுளிடம் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். காணாக் கடவுளர்களிடம் உருகி உருகிப் பேசுகிறார்கள். மனிதர்களிடம் செல்லுபடி ஆகாத சொற்கள் கடவுளின் காலடியில் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. கடவுளின் ஒரே ஒரு சொல் நம் எல்லாத் துயரங்களையும் தீர்த்துவிடும் என்ற நம்பிக்கையில் எவ்வளவு சொற்கள் கொட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

'அதிகாலை புல்வெளிப் பனி   அடிவயிற்றை நனைத்த கதை யாரிடம் எப்படிச் சொல்லும் நத்தை..?’

- ரமேஷ் வைத்யாவின் கவிதை நினைவில் இழைகிறது. நத்தையின் அடிவயிற்று ஈரம் மாதிரி சொல்லப்படாத ஏராளமான சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. சில உணர்வுகளை ஆயுசுக்கும் சொல்லிவிட முடியுமா என்றும் தோன்றுகிறது. கழுத்து மடிப்பெல்லாம் வேர்வையாய் ஈரம் பிசு பிசுக்க கையில் ஆரஞ்சு மிட்டாயை மடித்து நீட்டிய பால்ய தோழியின் வாசத்தை எப்படிச் சொல்ல..?

''வயித்த வலிக்குதுரா...'' ''டேப்லெட் வாங்கிட்டு வரவா?'' ''அய்யோ டேப்லெட்லாம் கெடையாது. நீ போ இங்கேருந்து...'' எனச் சரிந்து உட்கார்ந்தவளின் தவிப்பை எப்படிச் சொல்ல?

''கவலப்படாதரா... ஐ யம் வித் யூ...'' எனக் கையை இறுக்கிக்கொண்ட ஒரு தருணத்தைச் சொற்களாக்க முடியுமா?

''இதுக்கு மேல அதுகிட்ட பேசவே போறதில்ல...'' என முடிவெடுத்த கணங் களைப் புரியவைக்க முடியுமா?

இத்தனை செல்பேசிகள், இணையம் என எத்தனையோ வந்துவிட்ட பிறகும் சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்துகொண்டே இருக்கின்றன. எனில் மனசு எப்போதும் தொழில்நுட்பங்களைச் சடுதியில் கடந்துவிடுகிறது.

அது நினைத் தால்தான் எதுவும் நடக்கும். யாரோ வந்து ஒரு லஞ்ச் பிரேக்கில், குடி பொழுதில் ''அவன் ஏன் உன்னைப் பத்தி அப்பிடிச் சொன்னான்..?'' என ஒரு நண்பனைப் பற்றிப் போட்டுவிட்டுப்போனால் அவ்வளவு தான். மனசு முறுக்கிக்கொண்டு நிற்கிறது. அப்புறம் அந்த நண்பனைப் பார்த்தால் எல்லாச் சொற்களும் போலியாகவே இருக்கும். எதையும் கேட்டுக்கொள்ளாமல், பேசிக்கொள்ளாமல் அந்த நட்பே சிதைந்து போனவர்களும் இருக்கிறார்கள்.

யார்  யாரிடமோ சொல்லும் சொற்கள் எப்படி எல்லாமோ உருமாறி வந்து சேர்கின்றன. ஒன்றை உருவி ஒன்றைச் சேர்த்து வந்து சேர்கிற சொற்கள் எத்தனை எத்தனை காதலை, நட்பை, அன்பை அழித்திருக் கின்றன? ''நான் அப்பிடிச் சொல்லவே இல்ல...'' என எத்தனை இதயங்களைக் கதறி அழவைத்திருக்கின்றன? ''உன்ட்ட ஒண்ணு சொல்லணும்... எப்பிடிச் சொல்றதுனு தெரியல...'' எனத் தவித்து நிற்க வைத்திருக்கின்றன? ''அப்ப என்ட்ட சொல்லணும்னு தோணலைல்ல...'' எனத் துடிக்கவைத்திருக்கின்றன? தப்பிதமாகத் தவறி விழுந்த ஒரு சொல் பூவாக மலர்வதும் முள்ளாக முளைப்பதும் யார் கையில் இருக்கிறது? இவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தும் ஒரு சொல்லைக் கடத்த முடியாமல் தவிக்கிற மனசு யார் கொடுத்த சாபம்? ஆதியின் தூரங்களையும் இன்றைய விஞ்ஞானத்தையும் உடைத்தெறிந்துவிடுகிற சொற்களை ஒளித்துவைத்திருக்கிற மனித மனம்தான் எவ்வளவு மகத்தானது?

துரியோதனன் கர்ணனைப் பார்த்துக் கேட்ட, ''எடுக்கவோ கோக்கவோ...'' என்ற சொற்கள் எவ்வளவு அற்புதமானவை என இப்போது தோன்றுகிறது. பத்து வருஷம் குடித்தனம் செய்து கசந்து விவாகரத்துக்கு வரும் தம்பதியரைத் தனியேவிட்டு, ''கொஞ்சம் மனசுவிட்டுப் பேசிட்டு அப்புறம் முடிவைச் சொல்லுங்க...'' என்கிறார் வக்கீல். பத்து வருடங்களில் பேசிவிடாத எதை அந்தப் பத்து நிமிடங்களில் பேசிவிடப்போகிறார்கள் என அலுப்பாக இருக்கிறது. ஆனால், சிலர் அந்தப் பத்து நிமிடங்களில் பேசி மனசு மாறி வருவதுதான் சொற்களின் மீது சொல்ல முடியாத ஆச்சர்யங்களைத் தருகிறது.

இந்த உலகம் ஒவ்வொரு கணமும் நமக்கு எதையாவது சொல்லிக்கொண்டே இருக்க விரும்புகிறது. அற்பமாக, அற்புதமாக, அபத்தமாக, குரூரமாக... எதையாவது மனசுக்குள் ஏற்றிக்கொண்டே இருக்கிறது. கண் முன்னே ஆயிரக் கணக்கான போராட்டங்களும் கோடானுகோடிச் சொற்களும் மடிந்து மண்ணாகிப்போன ஈழத்தைப் பார்த்தபடி இருந்த நம்மால் என்ன செய்ய முடிந்தது? நமது ஆவேச மான, கோபமான எல்லாச் சொற்களும் இப்போது எங்கே? ஓர் உடல் மீது சேறு பூசி, சித்ரவதை செய்து, அதை ஏராளமான மொபைல் கேமராக்களில் படம் பிடித்துக் கொண்டவர்கள் இந்த உலகத்துக்கு என்ன சொல்ல விரும்பினார்கள்?

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக அன்றைய பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ டயரின் மேல் பல ஆண்டு களுக்குப் பிறகு தோட்டா வடிவில் பாய்ந்த உத்தம்சிங்கின் ஒரு சொல்தான் இம்மாதிரியான கேள்விகளுக்குப் பதிலா? யூதர்களைப் போன்ற உலகளாவிய ஒற்றுமையும் எழுச்சியும்தான் எதிர்கால விடுதலையை, தன்னுரிமையை உருவாக்குமா? நாம் எந்தச் சொற்களை நம்புவது? எவற்றின் பின்னே நிற்பது என்பதுதான் இன்றைக்குப் பெரிய துயரம்.

திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கி இருந்தபோது பக்கத்து ரூமில் லோகு அண்ணன் தங்கி இருந்தார். ஒருமுறை அவரது அறை முகவரிக்கு, அருண் என்ற பெயரைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் வந்திருந் தது. போஸ்ட்மேன் லெட்டர் பாக்ஸில் போட்டுவிட்டுப் போய்விட்டார். ''இதுக்கு முன்னாடி இந்த ரூம்ல இருந்திருப்பான் போலயிருக்கு...'' என்றபடி லோகு அதை எடுத்துப் பிரித்தார். அது ஒரு பெண் எழுதிய கடிதம். அருண் என்பவனுக்கு உருகி உருகிக் காதல் கடிதம் எழுதியிருக்கிறாள். அவளது முகவரி ஏதும் இல்லாமல் சேலம் என்று மட்டும் இருந்தது. படித்துவிட்டு, ''ஃபுல் லவ் போலிருக்கு... இவன் எங்க போனான்னு தெரியலையே...'' என்ற படி அந்த லெட்டரைத் தூக்கிப் போட்டுவிட்டார் லோகு. சில நாட்கள் கழித்து மறுபடி அதே பெண்ணிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.

இந்த முறை மிக வருத்தத் துடன் 'ஏன் என்ட்ட பேசவே மாட்டேங் குற..? நீ இல்லைன்னா நான் செத்துருவேன்’ என்கிற தொனியில் அந்தக் கடிதம் எழுதப் பட்டு இருந்தது. ''அய்யய்யே... பாவமா இருக்கேடா... யார்றா அந்த அருணு..?'' என லோகு அண்ணன் அந்தப் பையனைத் தேடிப் பார்த்தார். அவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை. அதன் பிறகு அங்கிருந்து நான் வந்துவிட்டேன். ஆனால், உரியவனுக்குப் போய்ச் சேராத அந்தக் கடிதத்தின் சொற்கள் இப்போதும் என்னைத் துரத்துகின்றன. ஒரு வகையில் அந்தச் சொற்களைப் போலவே நம்மிடமும் ஏராளமான சொற்கள் இருக்கின்றன. உரியவரிடம் சேர்க்க முடியாமல் அலைந்து திரியும் சொற்கள். அன்பை விதைத்திருக்கக் கூடிய சில சொற்கள்... பிரிவைத் தடுத்திருக்கக் கூடிய சில சொற்கள்... ஈகோவை உடைத்திருக்கக் கூடிய சில சொற்கள்... உண்மையை உணர்த்தியிருக்கக் கூடிய சில சொற்கள்... நம்மிடம் இருக்கின்றன எப்போதும்.

இதோ இந்த நொடிகூட செல்பேசியை எடுத்துப் பார்க்கிறேன்... ஒருவருக்குப் பேசலாமா, வேண்டாமா என்ற தயக்கத்துடன். அவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துவிடாதா என்ற ஏக்கம் இப்போதும் இருக்கிறது. சென்னியாண்டவர் கோயில் பிராகாரத்தில் சண்டீகேஸ்வரர் சாமி காதில் கேட்பதுபோல் கை தட்டி தங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லிக்கொண்டு இருப்பவர்களைப் போல எல்லோரும் சில சொற்களுக்காகக் காத்திருக்கிறோம் எப்போதும். சமீபத்தில் படித்த வே.பாபுவின் இந்தக் கவிதை சொற்கள் முடிவிலியை எனக்குத் தடக்கென்று உணர்த்தியது...  

'சற்று முன் இறந்தவனின் சட்டைப் பையில் செல்போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது கையில் எடுத்த காவலர் 'சார், யாரோ அம்முனு பேசுறாங்க’ என்கிறார். ஒரு நொடி இறந்தவனின் கண்கள் திறந்து மூடுகின்றன!’

- போட்டு வாங்குவோம்...