வேணு சீனிவாசன் கண்ணா கண்ணா
##~## |
தேனுகா, அம்மாவைப் பார்த்தாள். அம்மா இரண்டு கைகளால் தலையை அழுத்திப் பிடித்தபடி படுத்து இருந்தாள். இப்போது எல்லாம் அம்மாவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடுகிறது. தலைசுற்றல், மயக்கம் வருகிறது.
''அம்மா டாக்டர்கிட்டே போகலாம் வா' என்றாள் தேனுகா.
''அங்கே போனா, கன்சல்டேஷன், பிளட் டெஸ்ட், மருந்து, ஊசின்னு ஐந்நூறு ரூபா ஆயிடும். இன்னிக்குத் தேதி இருபது. மாசக் கடைசியிலே அத்தனை பணம் செலவழிக்க முடியுமா? உன் தம்பி சுரேந்தருக்கு அடுத்த வாரம் பொறந்த நாள் வருது. புது டிரஸ் வாங்கணுமே... எல்லாத்தையும் யோசிச்சுத்தான் சும்மா இருக்கேன்' என்றாள் அம்மா.
''அதுக்காக முக்கியமான மருத்துவச் செலவைக் குறைச்சுக்கிறியா?'' எனக் கேட்டாள் தேனுகா.
''வேற வழி இல்லையே, பக்கத்து வீட்டு அனிதா அம்மாவுக்கும் சர்க்கரை நோய் இருக்குது. அவங்க கை வைத்தியம் பண்ணிக்கிறாங்க. நானும் அதைத்தான் செய்றேன்'' என்றாள் அம்மா.
தேனுகா பேசாமல் இருந்தாள். ''அனிதா அம்மாவுக்கு ரத்தத்துல சர்க்கரை அளவு அதிகமாயிருச்சாம், வெண்டைக்காய் காம்புகளை ராத்திரி ஒரு தம்ளர் தண்ணியிலே ஊறவெச்சுட்டு, காலையில காம்புகளை எடுத்துட்டுத் தண்ணியைக் குடிச்சாங்களாம். சர்க்கரை லெவல் நார்மலுக்கு வந்துடுச்சாம் அதைத்தான் நானும் செய்றேன்'' என்று மேலும் சொன்னாள் அம்மா.
அம்மா செய்வது சரியல்ல என்று நினைத்தாள் தேனுகா. அதை எப்படிப் புரிய வைப்பது என்று யோசனையில் மூழ்கினாள்.
ஒரு நோய் தீர வேண்டுமானால், நோயின் தன்மையை அறிந்து சரியான மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நோய் குணமாகாது. இப்படி நினைத்தபோது தம்பி சுரேந்தர் வீட்டுக்குள் நுழைந்தான்.
அவனிடம் அம்மா ''டேய், மிக்ஸி சரியா ஓட மாட்டேங்குது. மெக்கானிக் கடையிலே குடுத்து சரிசெஞ்சுக்கிட்டு வா. அரைக்க... கரைக்கக் கஷ்டமா இருக்கு. காலையில் அப்பாவுக்கு இட்லிக்குச் சட்னி அரைக்க முடியலே, இட்லிப் பொடி மட்டுமே தொட்டு சாப்பிட்டுட்டுப் போனாரு'' என்றாள் படுத்தபடியே.
''மெக்கானிக் எல்லாம் வேணாம், நானே சரிபண்ணிடறேன்'' என்றான் சுரேந்தர்.
''உனக்கு எலெக்டிரிக்கல் வேலை பத்தி என்ன தெரியும்?'' என்றாள் அம்மா.
''அப்படி இப்படி செஞ்சுபார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதுதான்''என்றான் சுரேந்தர்.
''நீ ஏதாவது செஞ்சு வைப்பே. அது ஷாக் அடிக்கும்... வேணாம்ப்பா அந்த விபரீதம். கடையிலேயே குடுத்துடு'' என்றாள் அம்மா சீரியஸாக.
தேனுகாவுக்குப் பொறி தட்டியது.

மாலையில் அவள் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவினாள். இப்போது அம்மாவுக்கு தலைசுற்றல் நின்றுவிட்டது. ஆனால், களைப்பாகக் காணப்பட்டாள்.
மறுநாள் காலையில் அவர்கள் அருகில் இருக்கும் அணைக்கட்டுக்கு சுற்றுலா சென்றார்கள். மிகப் பெரிய மதகுகளின் வழியாகத் தண்ணீர் பாய்வதை, பயம் கலந்த ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்தாள் தேனுகா.
சாதுவாக நிற்கும் தண்ணீர், மதகுகளைத் திறந்தவுடன் எத்தனை வேகத்தோடு பாய்கிறது. அந்த வேகத்தைப் பயன்படுத்தி மின்சாரம் எடுக்கிறார்கள் என்று தெரிவித்தார் அப்பா.
தேனுகா குடும்பத்தினர், தாங்கள் கொண்டு வந்து இருந்த மதிய உணவை புல்தரையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். எல்லோருக்கும் நடந்து நடந்து கால்கள் வலித்தன.
அழகிய மரங்கள், புல்தரைகள், சலசலவென்று கொட்டும் தண்ணீர், வெயில் நேரத்தில்கூடக் குளுகுளுவென்று இருக்கும் சூழல் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன.
''டிரைவரை சாப்பிடக் கூப்பிடு'' என்றார் அப்பா. கார்களை நிறுத்தி இருக்கும் இடத்திற்கு சுரேந்தர் சென்றான். அங்கே அவர்கள் வந்த காரும் இல்லை டிரைவரும் இல்லை.
இதை அப்பாவிடம் தெரிவித்தான். ''டிரைவருடைய செல் நம்பரை நான் வாங்கிவைத்து இருக்கிறேன்'' என்ற தேனுகா தனது கைபேசியை எடுத்து தொடர்புகொண்டாள்.
அவருடன் பேசிவிட்டு அப்பாவிடம் திரும்பி, ''அப்பா, கார்ல ஃபேன் பெல்ட் அறுந்து போச்சாம். அதை மாத்திட்டு வர்றதுக்குப் போய் இருக்காராம்'' என்றாள்.
''காரை எடுத்து வரும்போதே இதை எல்லாம் செக் பண்ணிக் கொண்டாரணும். என்னா டிரைவர் இவரு? காரு இப்போ நடுவுல வந்து கழுத்தறுக்குது'' என்று முணுமுணுத்தார் அப்பா.
அவர்கள் சாப்பிட்டு முடித்தபோது டிரைவர் வந்து சேர்ந்தார் ''என்னப்பா கார் ரெடி ஆயிடிச்சா?'' என்றார் அப்பா.
''ஆயிடிச்சு சார். இங்கே யாரும் சரியான மெக்கானிக் கிடைக்கலை. வேறு ஒருத்தர் அவருக்குத் தெரிஞ்சவரைக்கும் சரி பண்ணிக் கொடுத்தாரு'' என்றார் டிரைவர்.
மேலும் சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அவர்கள் கிளம்பினார்கள் லேசாக மழைத் தூறல் விழ ஆரம்பித்தது.
எல்லோரும் ஓடிவந்து காருக்குள் உட்கார்ந்துகொள்ள, டிரைவர் வண்டியை எடுத்தார்.
அவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது. இரண்டு புறங்களிலும் ராட்சத மரங்கள், அடர்த்தியான புதர்கள், ஆள் நட மாட்டமே இல்லாத சாலை. மழை சற்று வலுத்த அந்த நேரத்தில் கார் மெதுவாக சாலையில் ஓடியது.
அடிக்கடி குலுங்கி சத்தம் எழுப்பியது ''என்னப்பா?'' என்றாள் அம்மா.
''தெரியலம்மா'' என்றார் டிரைவர்.
காரைவிட்டு இறங்கிய டிரைவர் மழையில் நனைந்துகொண்டே சோதனை செய்த பிறகு, ''ஃபேன் பெல்ட் திரும்பவும் கட் ஆயிடுச்சு'' என்றார்.
''மாத்தியாச்சுனு சொன்னியே'' என்றார் அப்பா எரிச்சலோடு.
''கார் மெக்கானிக் யாரும் கிடைக்கலே, அதனால் சைக்கிள் ரிப்பேர் செய்றவரு கிட்டதான் சொன்னேன். அவரு மாத்தினதா சொன்னாரு'' என்று இழுத்தார் டிரைவர்.
''என்னப்பா இது... பொறுப்பு இல்லாம இருக்கே. சைக்கிள் ரிப்பேர் செய்யறவர்கிட்ட காரை ரிப்பேர் செய்யக் கொடுக்கலாமா? காரும் கெட்டுப்போயிடுமே, இப்படி குழந்தைகளை வெச்சுக்கிட்டு ராத்திரியிலே, கொட்டற மழையில, காட்டுல நிக்கறமாதிரி ஆயிருச்சே?'' என்று சீறினார் அப்பா.
எல்லோரும் காருக்குள்ளேயே உட்கார்ந்து இருந்தனர். இருட்ட ஆரம்பித்தது, ஏதாவது கார் வருகிறதா என்று டென்ஷனோடு பார்த்துக்கொண்டு இருந்தனர்.
யாராவது வந்து அடித்துப்போட்டால் கூடக் கேட்பதற்கு ஆள் இல்லாத காட்டுப் பிரதேசம் அது. அம்மாவுக்குப் பயமாக இருந்தது. அப்பா பரபரப்போடு காணப்பட்டார். சிங்கமோ, புலியோ அங்கே இல்லை. ஆனாலும் அந்தச் சூழல் எல்லோருக்கும் சற்று அச்சத்தைத் தந்தது. அரை மணி நேரத்துக்குப் பிறகு மழை விட்டது.
காருக்கு உள்ளே இருந்து வெளியே வந்தாள் தேனுகா. மரங்களின் மேலே பசுமையும் மஞ்சளும் கலந்த வெளிச்சப் புள்ளிகள் ஏராளமாகப் பறந்தன. ''சுரேந்தர் அங்கே பார் மின்மினிப் பூச்சிகள்'' என்று அவனுக்குக் காட்டினாள். அவன் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அப்போது எதிரே காரின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. கையை அசைத்து அந்தக் காரை நிறுத்தினாள் தேனுகா.உள்ளே இருந்தவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்டு உதவினர். அரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்தாள்.
தேனுகா அங்கே சென்றாள் ''அம்மா மிக்ஸியை ரிப்பேர் பண்ண மெக்கானிக் வேணும். அப்பத்தான் ஷாக் அடிக்காது. காரை சரியா ரிப்பேர் செய்ய கார் மெக்கானிக் வேணும். அதைப்போல உன்னோட உடம்புக்கு வைத்தியம் பார்க்க ஒரு தரமான மருத்துவர் வேணும். இல்லேன்ன பிரச்னை தீராது, புரிஞ்சிக்கிட்டியா? மத்தவங்க சொல்ற வைத்தியத்தை எல்லாம் கேட்கக் கூடாது. பணம் முக்கியம் இல்லே... உன்னோட ஆரோக்கியம்தான் முக்கியம்'' என்றாள்.
''மெக்கானிக் செஞ்ச தப்பால நாம காட்டுக்கு உள்ளே மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டோம், அதே தப்பை என் உடம்புக்கு இனிமே செய்ய மாட்டேன். கொட்டற மழையில், நடுக் காட்டுல இருந்தபோதே என்னோட தப்பைப் புரிஞ்சுக்கிட்டேன். இனிமே வெண்டைக்காய் வைத்தியம் தேவை இல்லே, நாளைக்கே டயாபடிஸ் சென்டருக்குப் போறேன்'' என்றார் அம்மா.