யூமா வாசுகி படங்கள் : ஹரன்
##~## |
சைபீரியாவில் ஓர் அருவிக் கரையில் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். தன் பசியைப் போக்குவதற்கு மட்டுமே வேட்டையில் இறங்குவான். மற்றபடி எந்த விலங்கையும் தொந்தரவு செய்ய மாட்டான். ஒரு நாள் அவன் சதுப்பு நிலத்தில் சிக்கிக்கொண்ட மானைப் பார்த்தான். அதை அம்பு எய்து கொல்ல முற்பட்டான்.
அப்போது 'என்னைக் கொல்லாதீர்கள்! என்னைக் கொல்லாதீர்கள்!'' என்று மான் கெஞ்சியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவன், அதைக் கொல்லவில்லை.
'மிகவும் நன்றி! எப்போதாவது என் உதவி தேவைப்பட்டால் என்னைக் கூப்பிடு'' என்று சொல்லிவிட்டு மரங்களுக்கு இடையில் மான் ஓடி மறைந்தது. வேட்டைக்காரன் காட்டில் தொடர்ந்து நடந்தான். சற்றுத் தொலைவில் கீழே விழுந்துகிடந்த மரக் கிளையின் அடியில் சிக்கிக்கொண்டு இருந்தது ஓர் எறும்பு.
'வேட்டைக்காரா... வேட்டைக்காரா... தயவுசெய்து என்னைக் காப்பாற்று'' என்று மன்றாடியது எறும்பு.
அவன் அந்த மரக் கிளையை எடுத்து எறும்பை விடுவித்தான். அது நன்றி சொல்லிச் சென்றது.

சற்று நேரத்தில் ஆழம் குறைந்த ஒரு நீல ஏரியைச் சென்று அடைந்தான். அங்கே அழுகைக் குரல் கேட்டது. கரையில் துள்ளி விழுந்து மீண்டும் தண்ணீருக்குச் செல்ல முடியாமல் தவித்த மீனின் குரல்தான் அது.
'வேட்டைக்காரா... தவறி விழுந்து இந்தக் கரையில் தவிக்கிறேன். என்னை எடுத்துத் தண்ணீருக்குள் போடேன்'' என்று அழுதது. அவன் அந்த மீனைத் தண்ணீரில் போட்டான். 'மிகவும் நன்றி! என் உதவி தேவைப்படும்போது கூப்பிடு'' என்று சொல்லிவிட்டுத் தண்ணீருக்குள் மறைந்தது.
சற்று நேரம் ஒய்வு எடுத்த பிறகு அவன் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இறுதியில் ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே இருந்த ஒரு குடிசையின் வாசலில் ஓர் இளம்பெண் இருந்தாள். அவளைப் பார்த்ததுமே வேட்டைக்காரனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. குடிசைக்குள் சென்று அவள் அப்பாவிடம் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லித் திருமணத்துக்குப் பெண் கேட்டான்.
அந்தப் பெண்ணின் தந்தை சொன்னார் 'நான் உனக்கு மூன்று வேலைகள் தருகிறேன். நீ அந்த வேலைகளைத் திருப்திகரமாகச் செய்து முடித்தால் என் பெண்ணை உனக்கு மணம் செய்து தருகிறேன். இல்லை என்றால் நீ என் அடிமையாக வேண்டும்.''
'நான் சம்மதிக்கிறேன்'' என்றான் வேட்டைக்காரன்.

பெண்ணின் தந்தை 'யார் அங்கே, என் இரும்பு ஷூக்களை எடுத்து வாருங்கள்'' என்று குரல் கொடுத்தார். அவரது வேலைக்காரர்கள் சிரமப்பட்டு இரும்புக் காலணிகளைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள்.
'இந்த ஷூக்களை அணிந்துகொள். ஓர் இரவுக்கு ஷூக்களை நடந்து தேய்க்க வேண்டும். நீ அப்படிச் செய்த பிறகு இரண்டாவது வேலை கொடுக்கிறேன்'' என்றார் அவர்.
வேட்டைக்காரன் ஷூக்களை அணிந்துகொண்டு புறப்பட்டான். அவனுக்கு மானின் நினைவு வந்தது. ''மான் நண்பனே, உன் உதவி வேண்டும்'' என்று உரக்கச் சொன்னான். உடனே அந்த இடத்தில் மான் தோன்றியது. அவனிடம் இருந்த இரும்பு ஷூக்களை வாங்கி அணிந்துகொண்டு மலைகளில் தொடர்ந்து ஓடியது.
வேட்டைக்காரன் காலையில் விழித்து எழுந்தபோது, அவன் குடிசைக்கு முன்னால் மான் காத்திருந்தது. இரும்பு ஷூக்கள் முற்றிலும் தேய்ந்து, மேல் பகுதி மட்டுமே மிச்சம் இருந்தது. வேட்டைக்காரன் அதை எடுத்துக்கொண்டு முதியவரிடம் சென்றான். 'என் இரண்டாவது வேலையைச் சொல்லுங்கள்'' என்றான்.
ஆச்சர்யப்பட்ட முதியவர் அங்கே மூட்டைகளில் நிறைத்து இருந்த சாமைத் தானியத்தை வாசல் முழுதும் கொட்டிப் பரப்பினார். ''இந்தச் சாமைத் தானியம் முழுவதையும் ஒன்றுவிடாமல் பொறுக்கி எடுக்க வேண்டும். ஒரு தானியமும் வீணாகக் கூடாது. ஒரு நாள் அவகாசம். அதற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்'' என்றார்.
வேட்டைக்காரன் புல்வெளியில் படுத்துகொண்டு 'என் எறும்பு நண்பனே, எனக்கு உதவி செய்'' என்று அழைத்தான்.
அவன் குரலைக் கேட்டதுமே எறும்பு ஓடி வந்தது. வேட்டைக்காரன் சொன்னதைக் கவனமாகக் கேட்டது. பிறகு அது எல்லா எறும்புகளையும் உதவிக்கு அழைத்தது. பெரும் படையாகத் திரண்டு வந்த எறும்புகள், சில மணி நேரங்களுக்குள் சாமைப் பயிர் முழுவதையும் திரட்டி சாக்குகளில் நிறைத்தன. வேட்டைக்காரன் எறும்புகளுக்கு நன்றி சொல்லிவிட்டு முதியவரிடம் சென்றான்.

'இந்த இளைஞன் தான் கொடுத்த இரண்டு வேலைகளையும் சரியாக முடித்துவிட்டானே’ என்று முதியவர் வியந்தார். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சொன்னார் 'நான் உனக்கு மூன்றாவது வேலையைக் கொடுக்கப் போகிறேன். பல வருடங்களுக்கு முன்பு என் அப்பாவின் மோதிரம் ஒன்று ஆமுர் நதியில் விழுந்துவிட்டது. இன்று சூரியன் மறைவதற்குள் நீ அந்த மோதிரத்தை எடுத்து வரவேண்டும்''
வேட்டைக்காரன் விரைந்து நதிக்கரைக்குச் சென்றான். 'மீனே... எனக்கு உதவி செய்!'' என்றான்.
சில நொடிகளில் மீனின் பெரிய தலை நீரின் மேற்பரப்பில் தெரிந்தது. அதனிடம் வேட்டைக்காரன் விஷயத்தைச் சொன்னான். மீன் எதுவும் பேசாமல் ஆமூர் நதியின் அடித் தளத்துக்குச் சென்றது. அங்கே இருக்கும் தன் பிரஜைகளை எல்லாம் அழைத்து அந்த மோதிரம் எங்கே இருந்தாலும் கண்டுபிடித்துத் தரும்படிக் கட்டளை இட்டது. நதியின் அடித்தளம் முழுதும் தேடிய மீன்கள் அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்து ஏற்கனவே தரையில் வந்து உதவி பெற்ற மீனிடம் ஓப்படைத்தன. அது வேட்டைக்காரனிடம் மோதிரத்தைக் கொடுத்தது. அவன் அதை முதியவரிடம் கொண்டு சென்று கொடுத்தான்.
தன் மகளை அவனுக்கு மணம் செய்துவிப்பதாக ஒப்புக்கொண்ட முதியவர் 'வீரம் நிறைந்த வேட்டைக்காரா, இன்று முதல் நானும் என் அடிமைகளும் உனக்குச் சொந்தம்'' என்றார்.
'உங்களுக்கு நன்றி. ஆனால் இன்று முதல் அடிமைகளோ, வேலைக்காரர்களோ இந்தக் கிராமத்தில் இருக்க மாட்டார்கள். நாம் எல்லோரும் சகோதரர்களைப்போல வாழ்வோம்'' என்றான் வேட்டைக்காரன்.
அன்று முதல் அந்தக் கிராமத்தில் உயர்ந்தவர்கள் என்றோ, தாழ்ந்தவர்கள் என்றோ யாரும் இல்லை. எல்லோரும் சமமாக வாழ்ந்தார்கள்!