மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 50

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

மழை எப்போதும் காதலையும் பிரிவையும் அள்ளி வந்துவிடுகிறது. இந்த மழையை அவள் பார்ப்பாளா... ரசிப்பாளா... நினைப் பாளா..? என மனசு சலசலக்கிறது.

''தூத்த போடுற மாரி இருக்கு... வெள்ளக்கன்னப் புடிச்சு உள்ள கட்றயாய்யா!''- அப்பாவின் குரல் கேட்ட மாதிரி இருந்தது. நள்ளி ரவில் தடக்கென்று எழுந்துகொண்டேன். ஜன்னலைத் திறந்தால், திடுதிப்பென்று மழை பின்னுகிறது. பொசுக்கென்று ஈர வாசம்.

வெளியே வெள்ளைக் கன்று வந்து நிற்குமோ எனப் பிரம்மை தட்டுகிறது. கதவைத் திறந்துகொண்டு கீழே வருகி றேன். மாடிப் படிகளின் கீழே உடல் கிடுகிடுத்தபடி காபி கலர் நாய் வந்து நிற்கிறது. காது மடல் எல்லாம் கழுத்தோடு ஒட்டிக்கொண்டு, அடிவயிற்றில் தண்ணீர் சொட்ட நிற்கிறது. இரண்டு காதுகளையும் பொடப்பொடப்பொடவெனத் தட்டி முதல் மழையில் தலை சிலிர்க்கும் வெள்ளைக் கன்று மாதிரிதான் இருக்கிறது. செங்காமட்டை கலரில் குஞ்சைக் கவ்விக்கொண்டு ஈரமாய் பத்தாயத்தில் வந்து ஒண்டிய எலி, றெக்கை யைச் சிலுப்பிக்கொண்டு வேப்பங்கிளையில் வந்து உட்கார்ந்த காகம், 'சொட்டேர் சொட்டேர்’ என மழைத் துளி பட்டுத் தெறிக்கும் திண்ணைத் திண்டில் உடல் குறுக்கி நிற்கும் பூனை, எங்கிருந்தோ தபதபவென வந்து திண்ணையை நிறைத்துக்கொண்டு வாசமாய்த் தோல் சிலிர்க்கும் ஆடுகள், சாய்ந்துகிடக்கும் மாட்டு வண்டிக்குக் கீழே வரிசையாக ஒண்டி மழை குடிக்கும் தவிட்டுக் குருவிகள், 'பட்பட்பட்’டென அகல்மாடத்தைச் சுற்றத் தொடங்கும் ஈசல்கள் என ஏராளமான உயிர் களை ஞாபகத்தில் கொண்டு வந்து கொட்டுகிறது மழையில் நனைந்து வந்த இந்த நாய்.

இத்தனை நாட்களில் நீல் மெட்டல் தொட்டியின் பக்கத்தில், அண்ணாச்சிக் கடை வாசலில், மீன் மார்க்கெட் ஏரியாவில் என எங்குஎங்கோ இந்த நாயைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு மழை இரவில் மாடிப் படிகளின் கீழ் வந்து ஒண்டி நிற்கும் இந்தத் தருணம்தான் இது கவனம் பெற்றுவிட்டது.

நேற்று இரவு சின்ன மழைக்கு எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டர் பிளாட் ஃபார்மில் படுதா கட்டிக்கொண்டு இருந்த தாத்தா இப்போது எங்கே போய் படுப்பார்? உதயம் தியேட்டர் பக்கம் பிளாட்ஃபார்மில் கிடக்கும் குடும்பங்கள் எல்லாம் பக்கத்துக் கல்யாண மண்டப வாசலில் போய்க் கெஞ்சிக்கொண்டு இருக்கும். மெரினா பீச்சில் படுத்துக்கிடந்தவர்கள் ஐ.ஜி. ஆபீஸ் வாசலில் வந்து நிற்பார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் சுப்ரகீத் ஹோட்டல் வாசலில் தூங்காமல்கொள்ளாமல் பீடி வலித்துக்கொண்டு இருப்பான் தக்காளிக் கடை செல்வராஜ். அதிகாலையில் போனால், சைதாப்பேட்டை கூவக் கரையில் 'பில்லா 2’ ஃப்ளெக்ஸ் பேனரைக் கொண்டுவந்து குடிசை மேல் போட்டுக்கொண்டு இருப்பான் ஒருவன்.

போன வருஷம் இப்படி ஒரு மழை இரவில் ஜி.ஹெச். வாசலில்கிடந்த ஆஸ்பத்திரி வேனுக்குள் இரண்டு குழந்தை களுடன் ஒரு தம்பதி படுத்திருந்தது. 'இடுப்பு வரைக்கும் தண்ணி மச்சான்... லேப்டாப்பு, புக்ஸெல்லாம் போச்சு. நீ செகண்ட் ஃப்ளோர்... தப்பிச்ச’ என்றபடி பெட்டி படுக்கையோடு செந்தில் வந்து நின்றது, கும்மிருட்டில் நெஞ்சு வரைக் கும் தண்ணீரில் நீந்தி அருள் எழிலனோடு பெனின்சுலா பாருக்குப் போனது, 'அய்யனார் குண்டுலதான் தண்ணி ஏறிருக்கு. ஆகாசளி குண்டுக்கு இன்னும் நாலு நாளைக்கு மழைஅடிக்கணும்’ என்ற அம்மாவின் போன் குரல், 'த்தா... இன்னும் ஒரு மாசத்துக்கு சோத்தக் கெடுத்துரும் இந்த மழ... அள்ளி வையி அள்ளி வையி!’ என்ற சாலையோர வியாபாரியின் குரல் அத்தனையும் ஆண்டனி எடிட்டிங் மாதிரி சடசடவென ஞாபகத்தில் மான்டேஜ் ஷாட்ஸ் ஆகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு சின்ன மழை எத்தனை நினைவுகளைக் கிளர்த்திவிடுகிறது?

வட்டியும் முதலும் - 50

மழையை விடுங்கள்... மழையால் வாசலில் வந்து நிற்கும் உயிர்கள்தான் இந்த உலகத்தை எவ்வளவு ஈரமாக்கிவிடுகின்றன? இமையில் பட்டுத் தெறிக்கும் ஒரு துளியைப் போல, ஜன்னலில் நடனமாடும் குல்மொஹரைப் போல, ஹால் எல்லாம் தீற்றிக்கொள்ளும் சேற்றைப் போல, பேருந்தில் எங்கே நின்றாலும் கொஞ்ச நேரத்தில் தலையில் சொட்டும் ஈரம்போல, குடையில் பள்ளம் பறித்து முட்டியை நனைக்கும் நீரைப் போல... மழை எத்தனை சூடான நினைவுகளைத் தந்துவிடுகிறது.

இந்த ஞாபகங்கள்தான் மழையின் பெரிய அவஸ்தை. ஒரு மழைக் காலையில், கையில் செருப்புகளை ஏந்திக்கொண்டு, இன்னொரு கையில் முட்டி வரை புடைவையைத் தூக்கிக்கொண்டு வாசலில் வந்து நின்ற கீர்த்தனா இந்த மழையில் எங்கிருக்கிறாள்?

''குளிச்சுட்டு துணி ஒலத்திட்டுத்தான் போவேன். என்னா மொறைக்கிற..? திட்றதுன்னா மழையைத் திட்டிக்கோ!'' என அவள் சொன்ன நாளில் சாயங்காலம் வரை விடாமல் மழையடித்தது. பேய் மழை. மொபைலை பாலிதீன் கவரில் சுருட்டிக்கொண்டு சாப்பாடு வாங்க ஹோட்டலுக்குப் போனால், போன் வரும். ''அப்டியே சூடா டீ வாங்கியாடா... ஸ்ட்ராங்கா... ஷ§கர் அதிகமா!'' வீடெல்லாம் ஈர வாசனை. 'ஓ வசந்த ராஜா... தேன் சுமந்த ரோஜா...’ இப்போது பார்த்து இளையராஜா ஹிட்ஸ் போடுகிறவன் எவ்வளவு அற்புதன்? 'ஐய... ரிமோட்டைக் குடு... உனக்கு எப்போ பார்த்தாலும் இளையராஜாதானா?’ அவள் மாற்றிய சேனலில் ஏதோ ஒரு இங்கிலீஷ் பாட்டு ஓடத் தொடங்க, ''போடி போங்கு!'' என உள்ளே போய்ப் புத்தகம் படிக்கத் தொடங்குகிறேன். ''இப்போ எதுக்குப் புத்தகம்..? நான் இருக்கும்போது!''

அந்த மழை இப்போதும் பெய்துகொண்டே இருக்கிறது. மழை சிறுத்த இரவில் அண்ணா நகர் ஆர்ச் பக்கம் அவளை விட்டுவிட்டுத் திரும்பியபோது ஆட்டோவில் சுழன்றடித்து நனைத்த ஈரக் காற்று இந்தக் கணமும் சிலிர்க்கிறது.

மழை எப்போதும் காதலையும் பிரிவையும் அள்ளி வந்துவிடுகிறது. இந்த மழையை அவள் பார்ப்பாளா... ரசிப்பாளா... நினைப் பாளா..? என மனசு சலசலக்கிறது.

இந்தத் தெருவில் மழை பெய்து அடுத்த தெருவில் மழை பெய்யாத மாதிரி ஆகிவிடுகிறது சில நேரம். கண் எதிரே வானத்தில் நூல் பிடித்த மாதிரி மழை நெருங்கிவருவதைப் பார்க்க எப்படி இருக்கும்? தார் சாலையில் சொட சொடவென நமக்கு முன்னும் பின்னும் கொட்டிச் சூழும் மழை மாதிரி பிரியங்கள் சூழ்கின்றன. மனிதர்கள் எங்கெங்கோ போய்விட்டாலும் மழை மறுபடி மறுபடி அவர்களை அழைத்துக்கொண்டு வந்து விடுகிறது...

'பாபூ... இந்த மழையில் நனைந்துகொண்டே உன்னிடம் மட்டும் சொல்வதற்கென்று ரத்தம் வழியும் ஞாபகங்களைச் சேர்த்துவைத்திருக்கிறேன் பாபூ!’

என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை அடித்து நனைக்கிறது. மழைக் காலத்தின் உணவைக் கோடையில் சுமந்து திரியும் எறும்பைப் போல, கோடையிலும் இந்த மழையையும் நினைவுகளையும் சுமந்து திரிகிறோம் நண்பர்களே. எங்கிருந்தாலும் இந்த மழை உன்னிடமும் வரும். நீ தீண்டாவிட்டாலும் உனது கூரையில் வழிந்து வாசல் மண்ணில் 'குபுக் குபுக்’ என விழுந்து குமிழிடும் மழை, எனது உதிரத்தைப் போல!

நண்பர் ஒருவருக்குக் கல்யாண வரவேற்பு நடந்த நாளில் நல்ல மழை. தி.நகரில் ஒரு ஹோட்டலில் ரிசப்ஷன். விடாமல் பேய் மழை அடிக்கிறது. நான் போனபோது மொத்தமே மூன்று நான்கு பேர்தான் இருந்தார்கள். மணமக்கள் எதுவும் செய்வ தற்கு இல்லாமல் நின்றார்கள். அத்தனை பேருக்குச் சாப்பாடு செய்துகிடந்தது. நேரம் ஆகியும் மழை அடித்துக்கொண்டே இருக்க, நான் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன். எனக்கு நண்பனையும் அவன் மனைவியை யும் பார்க்கப் பாவமாக இருந்தது. மறுநாள் அவனிடம் போனில் பேசும்போது, ''அப்புறம் யாராவது வந்தாங்களா..?'' என்று கேட்டேன். ''இல்லடா... இன்னும் ரெண்டு பேர் வந்தாங்க... அவ்வளவுதான்!'' என்றான். ''டேய்... வருத்தப்படாத... விடு!'' என்றதற்கு அவன் சொன்னான், ''டேய்... எதுக்கு வருத்தம்..? யாரும் வரலைன்னா என்ன... எங்க கல்யாணத்துக்கு மழையே வந்துருச்சே! அதைவிட யாரு பெரிய கெஸ்ட்டு?''

விமலா அத்தை கல்யாணத்துக்கும் இப்படித்தான் மழை வந்தது. தஞ்சாவூர் ரயில்வே கல்யாண மண்டபத்தில் கல்யாணம் ஆரம்பிக்கிற நேரத்தில் 'சொட சொட’வெனக் கொட்ட ஆரம்பித்துவிட்டது மழை. ''கம்னாட்டி... வெறும் வாய்ல அரிசி திங்காத... அரிசி திங்காதனு சொன்னா கேட்டாத்தான. அதான் அடிச்சு வெளுக்குது!'' என ஆத்தா அலுத்துக்கொண்டது. எனக்கென்னவோ அத்தை கல்யாண நாளில் மழை வந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது பெரிய கொடுப்பினை இல்லையா? கல்யாணத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் அப்படி ஒரு மழை வருவது எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? அத்தைக்கும் அப்படிச் சந்தோஷமாகத்தான் இருந்தது.

வட்டியும் முதலும் - 50

முகம்கொள்ளாத சிரிப்போடு மாமாவை இடித்தபடி போட்டோவுக்கு எல்லாம் நின்றுகொண்டு இருந்தது. அடிக்கிற மழையில் வேனில் ஏறி நசநசவென நெருக்கிக்கொண்டு வீட்டுக்குப் போகும்போதும் அப்படி ஒரு சிரிப்பு. அது வரை பார்த்த மழைதான். ஆனால், அப்படி ஒரு நாளில் அது முற்றிலும் வேறு மழை இல்லையா! இப்போதும் அத்தையை நினைத் தால் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய வீட்டில், முற்றத்தை அடைத்துக் கொட்டும் மழைக்கு பாத்திரங்கள் வைத்துவிட்டு, நீர் தெறிக்கும் இடத்தில் அமர்ந்து இருக்கும் முகம்தான் நினைவில் இருக்கிறது.

குமார் செத்துப்போனது ஒரு மழை நாளில்தான். மழையோடு மழையாக சுடுகாட்டுக்குப் போய் பந்தல் போட்டு எரித்துவிட்டு வந்தோம். முதல் வாரம்தான் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வாழை இலைக் கட்டு கொண்டுவந்தான். வாழை இலையெல்லாம் வழிந்துகொண்டு இருந்த மழை நீரை விரலால் சுண்டிக்கொண்டே, ''மழ நிக்கிற மாரி தெரியல ஆயி... சூடா காபி குடு. ஒரு கிளாஸ் அடிச்சுட்டு மழையோட போயிர்றேன். மேட்டு குண்டுல மடத் தொறந்துடலைன்னா நாத்தெல்லாம் அழுவிப்போயிரும்!'' என மச்சான் பேசிக்கொண்டு இருந்தது மழையில் ஊடுருவும் வாகன வெளிச்சம்போல் மனசுக்குள் இருக்கிறது.

அன்றைக்கு ஐ.ஏ.எஸ். அகாடமி நண்பர் சங்கருடன் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார், ''மழைன்னா எனக்கு எங்க அப்பா நெனப்பு வந்துரும் பாஸ். அப்பா செத்த அன்னிக்கு செம மழ... கொண்டுபோய் சிதைக்கு வெச்சா எரியவேயில்ல. நெருப்பு வைக்க வைக்க கை காலெல்லாம் நீட்டிட்டு வருது. மட்டேர் மட்டேர்னு கம்பால அடிச்சு அழுது அழுது எரிச்சோம். இங்க பாருங்க... இப்பக்கூட அழுக வந்துருச்சு'' எனக் கண்கள் கலங்கியபோது மழை இன்னும் பெரிதானது.

சித்தார்த்தனைத் தேள் கடித்தபோது லட்சுமாங்குடி ஆஸ்பத்திரியில் கழிந்த மழை தொடங்கி, அரக்கோணத்தில் நடு வழியில் நின்றுவிட்ட ரயில் மழை வரை எத்தனை எத்தனை மழை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மழை. ஒரு முறை கார்த்திகை சுடலை அன்றைக்கு மழை வந்தபோது, ''ஊருக்கு நல்லதில்லடா... என்னவோ குத்தம் செஞ்சிட்டீங்க'' எனக் கருப்பு பெரியப்பா மேல் சாமி வந்து எல்லோரையும் மாறி மாறி அறைந்தார். பால்யத்தில் வெடி எல்லாம் காயவைத்துத் தயாராகும்போது எல்லாம் தீபாவளி அன்றைக்கு அடித்துக் கொட்டும் மழை.

சகதியில் தேங்கி வானவில் காட்டும் மழை. பெருமழை முடிந்த தெருவில் பேப்பர் கப்பல் விட்ட சிறுபிள்ளை மழை. காலையில் எழுந்து பார்க்கும்போது, கொல்லைஎல்லாம் நீரோடி, ''நைட்டு மழையா பேஞ்சது?'' எனப் பரவசப்படுத்தும் மழை. கண்ணாடியில் வழியும் மழை பார்த்து சூடாய் தேநீர் அருந்தியபடி இசை கேட்கும் கொடுப்பினை எல்லோருக்குமா இருக்கிறது..? பேன்ட்டை மடித்துக் கொண்டு, குடையை விரித்தபடி ''இன்னிக்கு ஆபீஸ் போகலைன்னா லாஸ் ஆஃப் பே!'' என்றபடி தபதபவென மழையில் ஓடும் கால்கள் எத்தனை?

அன்பை, அவஸ்தையை, பிரியத்தை, பிரிவை, நினைவை அள்ளி அள்ளி இறைத்தபடி பெய்கிறது மழை. கோடம்பாக்கத்தில் தங்கியிருக்கும் நண்பனுக்கு இலங்கை மெனிக்ஃபார்ம் அகதிகள் முகாமில் இருக்கும் அவனது அம்மாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு கடிதம் இப்படித் தொடங்கியிருந்தது, 'அன்புள்ள ஜான், இங்கே மழை தொடங்கிவிட்டது. பாத்ரூம்கூடப் போக முடியவில்லை. தூங்கக்கூட முடியாமல் அவஸ்தைப்படுகிறேன். காய்ச்சலாக வேறு இருக்கிறது. நீ எப்போது என்னை அழைத்துச் செல்வாய்?’

உதிரமாய், கண்ணீராய் மழை மாறிவிடும் தருணமும் இருக்கிறது. நிலம் அற்றோ ருக்கான பிரார்த்தனைகளை... மன்றாடல் களை இந்த மழையிடம் வைத்துவிட்டுத் தூங்கப்போகிறேன். காலையில் வந்து பார்த்தபோது, மாடிப் படிகளின் கீழே ஓர் உயிர் படுத்துவிட்டுப் போன தடம் இருந்தது ஈரமாய்!

- போட்டு வாங்குவோம்...