மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 51

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

நம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு விளம்பரங்களால் நிறைந்துகிடக்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எத்தனை எத்தனை விளம்பர முகங்களும் குரல்களும் நம்மை ஆக்ரமித்துக்கொள்கின்றன?

''ஒரு வெளம்பரம்...'' - கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்கிற இந்த டயலாக் வெறும் காமெடி அல்ல என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சமீபத்தில் அருணகிரி அவர்களைப் பார்த்ததும் அப்படியான சந்தர்ப்பம்தான்.

கும்பகோணத்தின் குறுகலான தெரு ஒன்றில் பழைய ஓட்டுக்கட்டு வீட்டின் திண்ணையில் அவரைச் சந்தித்தேன். வீடு முழுக்க உடைந்த மரப்பெட்டிகள் குவிந்திருந்தன. கொல்லைக்கட்டில் பழைய சோடா மெஷின்கள் இரண்டு சிதிலமாகி நின்றன.

சாவதற்கு முந்தைய நாள் கொல்லைக்கட்டு கயித்துக் கட்டிலில் ஜம்பு தாத்தா படுத்திருந்தது ஒருகணம் நினைவில் 'க்ளிக்’கடித்தது. 15 வருடங்களுக்கு முன்பு இதே வீட்டுக்கு வந்தபோது எப்படி இருந்தது..? கூடம் முழுக்கப் பன்னீரும் ரோஜாவுமாக ஒரு வாசனை... தடதடதடவென மெஷின்கள் ஓடிக்கொண்டேயிருக்க... குறுக்கும் மறுக்குமாக ஆட்கள் ஓடிக்கொண்டே இருந்த சித்திரம்... ஜரிகை வேட்டியில் வாய் நிறைய வெத்தலையும் ஜவ்வாது வாசமுமாக நடுக்கூடத்தில் நின்று சைகையில் மிரட்டிக்கொண்டு இருக்கும் அருணகிரி அய்யாவின் ஆகிருதி... எதுவும் இன்று இல்லை.

வட்டியும் முதலும் - 51

இந்திய சுதேசி சிறுதொழிலின் ஒட்டுமொத்த இன்றைய சித்திரம்போல் இருந்தது அந்த வீடு. அருணகிரி அய்யாவின் சோடா, கலர், பன்னீர் சோடா என்றால், சுத்துப்பட்டில் அவ்வளவு பிரபலம்... ஒருகாலத்தில்! தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம் வரைக்கும் வியாபாரம் அள்ளும். கோயில் கோபுரம் போட்டு பக்கத்தில் ஒரு ரோஜாப் பூ வரைந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பன்னீர் சோடா கிடைக்காத கடை இருக்காது. வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே திண்ணைத் தூணில் சாய்ந்தபடி, ''நீ இந்த சோடாவ எங்கயும் குடிக்க முடியாது... காவேரித் தண்ணிக்குன்னு ஒரு டேஸ்ட்டு இருக்கு... கோரையாத்து தண்ணின்னா இன்னும் விசேஷம்... அதானே நம்ம பெசல்...'' என்பார் அருணகிரி அய்யா. இப்போது அந்த கம்பெனியே இல்லை. அழுக்கு வேட்டியும் துண்டுமாக அய்யாவைப் பார்க்கவே மனசுக்கு ஒருமாதிரி இருந்தது.

''கம்பெனிய வுடு... இன்னுங் கொஞ்ச காலத்துல காவேரியே இல்லாமப் போயிருமோனுல்ல பயமாருக்கு... வர்றப்போ பாத்தியா... கம்னாட்டிப் பசங்க மணலா அள்ளி எப்பிடி கட்டாந்தரையாக் கெடக்குன்னு... ம்ம்ம்ம்'' - பெருமூச்சு விட்டபடி சிரித்த அருணகிரி அய்யாவிடம், ''கம்பெனி என்னாச்சுங்க..?'' என்றேன். அவர் முகம் ஏதேதோ உணர்ச்சிகளுக்குப் போனது. ''எல்லாம் போயிருச்சு தம்பி...'' என்றவர் கொல்லைப் பக்கமாக அழைத்துப் போனார்.

சிதிலமான மெஷின்களுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டு ஏதேதோ பேசினார். கடைசியாகச் சொன்னார், ''தம்பி இது விளம்பர உலகம்... டெண்டுல்கர், டோனி, விஜய், சூர்யானு எல்லாப் பயலுகளும் தெனம் தெனம் வந்து 'பெப்சி குடி’, 'கோக்கு குடி’னு ஆடுறான்... பாட்றான்... உருண்டு பொரள்றான்... இந்தப் பய மக்க அதைக் கேக்குமா... இந்த அழுக்கு வேட்டி அருணகிரி சொல்றதக் கேக்குமா? நாம என்ன செஞ்சோம்? இந்தா பாபநாசம் பக்கம் மோட்டார் செட்டு சொவத்துல எழுதி வெச்சதுதான் ஜாஸ்தி... கொமரிமுத்துவக் கொண்டாந்து வெளம்பரம் சொல்றதுக்குகூடத் திராணி கெடையாது... பெருமொதலாளி இல்லையேப்பா. எல்லாப் பயலும் இங்கிலீஸ் கம்பெனி ஐட்டத்துக்குப் போயிட்டான்... நம்ம யாவாரம் அப்பிடியே படுத்துருச்சு. ரெண்டு புள்ளைகளும் குடும் பத்தோட சூரத்துக்குத் துணி யாவாரம் பண்ணப் போயிட்டானுவோ. நா இப்பிடியே இந்த வூட்ல ஒண்டிக்கிட்டேன். தூங்குனா காதுக்குள்ள லொடலொடலொடனு சோடா மெஷின் ஓட்ற சத்தமா கேக்குது... எவ்வளவு நாளைக்குனு பாக்குறேன்.''

அங்கிருந்து திரும்பும்போதுதான் தோன்றியது. அவர் சொன்னது எவ்வளவு உண்மை?

நம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு விளம்பரங்களால் நிறைந்துகிடக்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எத்தனை எத்தனை விளம்பர முகங்களும் குரல்களும் நம்மை ஆக்ரமித்துக்கொள்கின்றன?

காபி, டீயில் இருந்து கட்டில் மெத்தை வரைக்கும் எதை வாங்குவது, எப்படி வாழ்வது என எல்லாவற்றையும் விளம்பரங்கள்தான் தீர்மானிக்கின்றன. இந்த தேசமே விளம்பரங்களில் மயங்கி, ஸ்பான்சர்களில்தான் இயங்குகிறது.

காலையில் கண்ணைக் கசக்கும்போதே கார்த்தியும் காஜல் அகர்வாலும் ஒரு காபியைச் சிபாரிசு செய்கிறார்கள். மட்ட மத்தியானம் டி.வி-யைப் போட்டால் 'மேனேஜர்’ கிருஷ்ணமூர்த்தி, டெல்லி கணேஷ், 'ஹோம் ஸ்வீட் ஹோம்’ திவ்யதர்ஷினியெல்லாம் செங்கல்பட்டு தாண்டி நின்றுகொண்டு ப்ளாட் வாங்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள்.

சாயங்காலமாகப் புதுப் படம் போடுகிற சாக்கில், 10 நிமிஷத் துக்கு ஒரு தடவை மூன்று விஜய் மொபை லில் பேசி, சரத்குமார் வேட்டி கட்டி நடந்து, தனுஷ§ம் விமலும் ஹேர் ஆயில் தடவி, அஞ்சலியும் தமன்னாவும் குத்து டான்ஸ் ஆடி... 'ஏன்டா வூட்ல இருக்கீங்க..? ஷாப்பிங் போங்கடா’ என வேப்பிலை அடிக்கிறார்கள். நடுநடுவே 'புரட்சிப் போராட்டம்’ என பிரபு நகைக் கடைக்குப் பண்ணுகிற விளம்பரத்தில் சே குவேரா, பகத்சிங்குக்கு எல்லாம் டவுசர் கிழிகிறது. ஊரே தூங்குகிற மிட்நைட்டில் பார்த்தால், தாடை வீங்கிய சஃபாரி பார்ட்டி ஒருவர் வீரிய லேகியத்துக்கு விளம்பரித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு சேனலில் ஒரு கொழுத்த டாக்டரும் கருத்த காம்பியரும் 'இதாங்க அமுக்ரா லேகியம்...’ எனக் கடுப்படிக்கிறார்கள். பின்னிரவுக்குப் பின்னும் ஒரு வெள்ளைக்காரிக்கு சிந்தாதிரிப்பேட்டை பெண்ணை டப்பிங் பேசவிட்டு, வீட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். தொப்பையைக் குறைக்க டிப்ஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உச்சகட்டமாக சிட்டி முழுக்க 'சினேகா-பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம்..?’ என போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள்.

இருக்கிற பிரச்னையில் இது வேறா என எனக்கு போஸ்டரைப் பார்த்ததுமே வேர்த்தது. சொல்லிவைத்தது மாதிரி, ''என்ன பாஸு... சினேகா - பிரசன்னா பிரிஞ்சுட்டாங்களா? மேட்டரு நெஜமா பொய்யா? என்ன பிரச்னையாம்? நீ சினிமாக்காரன்தான? தெரியும்ல...'' என அடுத்தடுத்து போன்கள். ''இதெல்லாம் எதுக்குரா எங்கிட்ட கேக்குறீங்க..? சினிமாக்காரன்னா... சினேகா-பிரசன்னா வூட்ல செக்யூரிட்டியாவா இருக்கேன்? நானே பல பிரச்னைகள்ல சுத்திட்டு இருக்கேன்... நூத்தி எட்டுல போன் பண்ணிக் கேளுங்கடா...'' எனக் கடுப்பானேன்.

என் அண்ணிதான் சாப்பாடு போடும்போது சொன்னார், ''தம்பி... அது ஆடி மாசம் வருதுல்ல... அதுக்குத்தான் விளம்பரத்துக்கு அப்பிடிப் போட்ருக்காங்க!'' எனக்கு, 'இதெல்லாம் யாரு, எங்க உக்காந்துய்யா யோசிக்கிறது..?’ என ஆச்சர்யமாக இருந்தது. அதன் பிறகு மொத்த மீடியாவும் சினேகா-பிரசன்னாவைச் சுற்றி வளைத்து இந்த விளம்பரத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்க, அவர்களும் ஏகப்பட்ட விளக்கங்கள் கொடுக்க... அது செம ஹிட். எனக்கு எதற்கு இவ்வளவு விளக்கங்கள் எனத் தோன்றியது. இதற்கான பதிலையெல்லாம் அன்றே ஒரே வரியில் சொல்லிவிட்டானே தானைத் தலைவன் செந்தில்... 'ஒரு வெளம்பரம்!’

20 வருடங்களுக்கு முன்பு வரை, அம்பாஸிடர் காரில் மைக் கட்டிக்கொண்டு வருவதுதான் எங்கள் ஊரின் அதிகபட்ச விளம்பர யுத்தி. அப்படி எம்.ஏ. தமிழ் படித்த அண்ணன் சரவணனை மகாராஜா சில்க்ஸுக்கு பிராண்ட் அம்பாஸிடராகப் போட்டார்கள். 'மகாராஜா சில்க்ஸ்... தென்றலின் முதல் வரி, வசந்தத்தின் முகவரி... மகாராஜா சில்க்ஸ்’ எனக் கரகரவெனக் கவிதை எழுதி, மைக்கில் கூவியபடி அண்ணன் அண்ட் கோ வரும். நாள் முழுக்க கவிதையாகப் பொழிந்துவிட்டு, ராத்திரி 150 ரூபாய் பணமும் சாந்தி கடை பரோட்டாவுமாக முடியும் அந்த செஷன். 'ஜெமினி சர்க்கஸ்... குட்டி யானையின் சாகஸம் காணத் தவறாதீர்கள்... திலகர் திடலில் மாலை ஆறு மணி முதல் குடும்பத்தோடு கண்டு களிக்க... ஜெமினி சர்க்கஸ்...’ என அடுத்த ரவுசு ஆரம்பிக்கும்.

'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வந்தப்பலாம் ஆட்டோல மைக் கட்டிக்கிட்டு உங்க மாமன்தான் சுத்துனான். ஊருக்கு ஊர் நோட்டீஸ் போட்டே வெள்ளி விழா பாத்தாங்கள்ல... 'ஆட்டுக்கார அலமேலு’ வந்தப்ப ஊர் ஊரா அந்த ஆட்டைக் கொண்டுவந்தாங்க... கும்போணம் விஜயால கொண்டுவந்து நிப்பாட்னப்ப அப்பிடி ஒரு கூட்டம்... 'கூலிக்காரன்’ வந்தப்ப விஜயகாந்து வண்டி இழுக்குற மாரி தங்க கலர்ல செல செஞ்சி தேட்டருக்கு தேட்டர் வெச்சாங்க... 'ஆடிவெள்ளி’க்கு எங்க பாத்தாலும் அம்மன் செலையா வெச்சாங்க... இப்பல்லாம் அந்த ஹீரோ, ஹீரோயினே தியேட்டர் தியேட்டரா வந்தாக்கூட பாக்க ஜனம் வர மாட்டேங்குதே... அதான் டி.வி-ல எப்போ பாத்தாலும் வெளம்பரமா பாத்துக்கிட்டு கெடக்குல்ல...'' என்றார் ரவி சித்தப்பா.

உண்மைதான்! இப்போதெல்லாம் விளம்பரங்கள் 'சீ’ பட்டுவிட்டன. ஊரில் குழந்தை பிறந்த நாள், பூப்பு நீராட்டு விழா தொடங்கி எழவு வரைக்கும் எல்லாவற்றுக்கும் ஃப்ளெக்ஸ் பப்ளிசிட்டி பின்னிப் பிரிக்கிறது. லோக்கல் கேபிளைத் திறந்தால் 'புலி உறுமுது... புலி உறுமுது’ பாடல் பின்னணியில் ஒருவர் நடந்து வர, 'அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்கிறார்கள். 'மாசமா... ஆறு மாசமா...’ பாடலில் இருவர் கை கோத்து நிற்க... கல்யாண வாழ்த்து சொல்கிறார் கள். இன்னொரு பக்கம் நெட்டில், மொபைலில் ஷூட் பண்ணி தெரு முக்கில் எடிட் செய்யப்பட்ட ஏகப்பட்ட வீடியோக்களை ஏற்றி கேப் விடாமல் ரகளை பண்ணுகிறார் கள். ஆளாளுக்கு விளம்பரத்தில் இறங்கி விட்டதால் பலருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனாலேயே கிசுகிசு கிளப்பிவிடுவது, லிப் கிஸ் அடிப் பது, அரை நிர்வாண போஸ் கொடுப்பது என சினிமா விளம்பரங்களின் எல்லை எகிறிக்கொண்டே இருக்கிறது.

வட்டியும் முதலும் - 51

சென்னை வந்த புதிதில் வேலை இல்லாததால், ஓவியரான செல்வம் சித்தப்பாவைப் பார்க்க தினமும் போய்விடுவேன். சித்தப்பா ஒரு விளம்பர பேனர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஹோர்டிங்குக்குஎல்லாம் தடை இல்லை. கையால் விளம்பர போர்டுகள் எழுதும் வேலைகளுக்குக் கிட்டத்தட்ட இறுதிக் காலகட்டம்போல் இருந்தது அப்போது. மவுன்ட் ரோட்டில் மிகப் பெரிய ஹோர்டிங் ஏற்றி, சாரம்கட்டி நள்ளிரவில் நாலைந்து பேர் தொங்கிக்கொண்டு வரைந்துகொண்டு இருப்பார்கள். எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கும் கணம் பக்கென்று இருக்கும்.

உடல் முழுக்க பெயின்டோடு அதிகாலை யில் கீழே இறங்கி கையைத் துடைத்துக்கொண்டு இருப்பவர்களை அவ்வளவு ஆச்சர்யமாகப் பார்த்திருக்கிறேன். அப்புறமாக அந்த வழியாக வரும்போது பளபளவென அந்தப் பலகை நிற்பதையும் ஏராளமான விழிகள் அதைப் பரவசமாகப் பார்த்துப் போவதையும் காணும்போது ஒவ்வொரு விளம்பரத்துக்குப் பின்னும் இருக்கும் பெயர்தெரியா உயிர்களை நினைத்துக்கொள்வேன். அப்புறம் எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகிவிட்டன. 'சிப்பி டெய்லர்’ போர்டில் மைக்கேல் ஜாக்சனை அவ்வளவு நளினமாக வரைந்து வைத்தவரும், 'மணி சலூன்’ போர்டில் ரகுவரனைத் தேர்ந்தெடுத்து வரைந்து வைத்தவரும், 'நளினி சில்க்ஸ்’க்கு மாதவி முகத்தை உதட்டுச் சுழிப்போடு அப்படி ஒரு காவியமாக வரைந்து வைத்தவரும் 'விடியல் இசையக’த்துக்கு ராஜாவையும் ரஹ்மானையும் கறுப்பு வெள்ளை ஆர்மோனி யக் கட்டைகளாலேயே வரைந்தவரும் இப்போது எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு 'பவர் ஸ்டார்’ இருக்கிறார். அவரவரின் எல்லைக்கு உட்பட்டு ஏதேனும் ஒரு விளம்பரம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. அடிக்கிற கலரில் பூப்போட்ட சட்டை போட்டுக்கொண்டு போவதில் இருந்து கன்னத்தை மறைத்து திடீரென 'விருமாண்டி’ மீசைக்கு ட்ரை பண்ணுவது வரை ஏதேனும் கவன ஈர்ப்பு தேவைப்படுகிறது. நடுரோட்டில் நாய் குரைக்கிற மாதிரி பைக் ஹாரன் வைத்துக்கொண்டு பறக்கவைக்கிறது. ஒவ்வொரு நகத்துக்கும் ஒவ்வொரு கலரில் நக பாலீஷ் போட்டு, லோ-ஹிப்பில் பெல்லி ஸ்டட் போட வைக்கிறது. உப்பு பெறாத விஷயத்தை எல்லாம் மணிக்கணக்கில் பேசவைக்கிறது. புதிதாக லாஞ்ச் ஆகியிருக்கிற மாமரத்து மாரியம்மனைப் பிரபலமாக்க, மரமெல்லாம் பால் வடிவதாகக் கிளப்பிவிட வைக்கிறது. கடவுள் வரைக்குமே ஒரு 'பவர் ஸ்டார்’ டச் தேவைப்படுகிறது.

''திறமையெல்லாம் விடுப்பா... அவன் மார்க் கெட்ல புலிக்கரடி... அரை மணி நேரம் பேசினான்னா அவனையே வித்துருவான். விளம்பரம் பண்ணிக்குறவன்தான் தடதடனு முட்டித் தூக்கிட்டுப் போயிட்டே இருக்கான்...'' எனப் புலம்பும் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? இங்கே மரம் நடுவதைச் சொல்வதற்குக்கூட விளம்பரங்கள் வேண்டி இருக்கிறது இல்லையா?

ஒரு முறை திருவண்ணாமலை போயிருந்தபோது, மலை உச்சியில் குடிசை போட்டு வசிக்கிற நாராயண சாமியைப் பார்க்க நண்பர் அழைத்துப் போனார். ஏழெட்டு கிலோ மீட்டர்போல மூச்சிரைக்க ஏறி அவர் குடிசையை நெருங்கும்போது எங்களை நோக்கி 'சரேல் சரேல்ல்ல்’ எனக் கற்கள் பறந்து வந்தன. தெறித்து ஓடி பதுங்கிக்கொண்டோம்.

''சாமி கோவமா இருக்கு... இருங்க...'' என்றார் நண்பர். கொஞ்ச நேரம் கழித்து படுத்த வாக்கில் நகர்ந்துபோனோம். எங்களைக் கண்டதும் பயங்கரக் கோபமாகி, ''டேய்... உங்களையெல்லாம் பாக்க வேணாம்னுதானே இங்க வந்து உக்காந்திருக்கேன்... எதுக்கு வர்ற... போ... போயிரு...'' என சாமி கத்தினார். மறுபடி அவர் கற்களை வீச, கொண்டுபோயிருந்த ஆப்பிளை உருட்டிவிட்டு ஓடிவந்தோம். ''சாமி அப்பிடித்தான்... யாரையும் பாக்கவே விரும்ப மாட்டாரு... அவர்ட்ட திட்டு வாங்குனதே பெரிய விஷயம்...'' என்றார் நண்பர். விளம்பர வெளிச்சமே வேண்டாம் என ஓடி ஒளிகிறவர்களுக்கும் விளம்பரம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது இந்த உலகம்.

சிதம்பரம் பக்கம் காரில் போய்க்கொண்டு இருந்தபோது, ''இங்க ஒரு பாட்டி இட்லி சுட்டு விக்கும்... செம ஃபேமஸு... வா போவோம்...'' என ஒரு நண்பர் அழைத்துப்போனார். போனால் தெரு ஓரமாக ஒரு பாட்டி இட்லி சுட்டு விற்க, எக்கச்சக்க கூட்டம் கும்மிக்கொண்டு இருந்தது. ''இந்த ரூட்ல போறவங்க வர்றவங்க எல்லாரும் இங்க வந்துருவாங்க. எப்பிடியோ இந்த ருசி பரவி, சென்னை வரைக்கும் பாட்டி ஃபேமஸ் ஆகிருச்சு...'' என்றார் நண்பர். இப்படித்தான் ஒரு முட்டுச் சந்தில் டாக்டர் அருண்பிரசாத் நடத்தும் சின்ன க்ளினிக்கில் அவ்வளவு கூட்டம் எப்போதும் காத்திருக்கும். ஒருமுறை பஸ் ஸ்டாண்ட் ஸ்க்ரீன்களில் போடுவதற்கு ஒரு விளம்பரம் எடுக்கலாமா என அவரிடம் கேட்டதற்குச் சொன்னார், ''அதெல்லாம் வேணாங்க... நம்ம வேலை நல்லாயிருந்தா எல்லாரும் வருவாங்க... இங்க இருக்கறவங்கள்லாம் விளம்பரம் பார்த்துட்டா வந்தாங்க. நம்ம வொர்க்தாங்க நமக்கு விளம்பரம்!''

அன்றைக்கு கோட்டூர்புரத்தில் இருந்து ஆட்டோவில் வந்துகொண்டு இருந்தபோது வழியில் மெட்ரோ ரயில் வேலைகளுக்காகப் போட்டு இருக்கும் இரும்புப் பலகையெல்லாம் போஸ்டர்கள். அதில் இருந்த வாசகங்களைப் பார்த்ததும் ஃப்ரீஸாகிவிட்டேன். 'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே... ஒரு லட்சம் கோடி ஊழல் சதியை உடைத்துவிட்டு வெளி வந்த அண்ணனே...’ என அடிக்கப்பட்ட போஸ்டரில் கோட் சூட்டில் அந்த அரசியல் புள்ளி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ சூர்யா மாதிரி நிற்கிறார்.

உடனடியாக செந்திலின் கீச்சுக் குரல் கேட்டது... 'ஒரு வெளம்பரம்..!’

- போட்டு வாங்குவோம்...