மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 52

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

மாற்றம் என்பது எவ்வளவு அற்புதமான சொல் என்பதை வரும்போது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காலத்திலும் எவ்வளவு மாற்றங்கள் வந்துவிடுகின்றன?

டி.ஆர். ரசிகர்களும் ராமராஜன் ரசிகர்களும் இப்போது என்ன செய்கிறார்கள்? அவர்களின் மனஓட்டம் எப்படி இருக்கும்?

 திடுதிப்பென்று இப்படி ஒரு கேள்வி என் மண்டைக்குள் உதித்துக் குதித்தது. உச்சகட்ட மனக் குழப்பத்தில் இருக்கும்போது இப்படிப்பட்ட விநோத ரசமஞ்சரிகள் மண்டைக்குள் நிகழும்.

பிரணாப்ஜி இப்போ என்ன பண்ணிட்டிருப்பாப்ல? குஷ்புவோட ஃப்யூச்சர் பிளான்தான் என்ன? அஜித் அ.தி.மு.க-வை டைம் பார்த்து கைப்பத்திருவாருனு ஒரு பேச்சிருக்கே... அப்பிடியும் நடந்துருமோ? ஆஸ்கர் வாங்கின செகண்ட்ல ரஹ்மான் என்ன ஃபீல் பண்ணியிருப்பாரு? நூறாவது செஞ்சுரிக்கான அந்த பாலை அடிச்சப்போ சச்சின் என்ன நினைச்சுருப்பாரு? சாகப் போற செகண்ட்ல சிலுக்கு மனசுல என்ன இருந்திருக்கும்? ஒபாமா ஆளுங்க வந்துட்டாங்கனு தெரிஞ்சதும் பின்லேடன் என்ன செஞ்சுருப்பாரு? மைக்கேல் ஜாக்சனோட முகம் கடைசியா எப்படி இருந்திருக்கும்? சுனாமி அலை எவ்வளவு உயரம் இருக்கும்? செண்பகா அருவிக்கு மேல ராஜநாகம் இருக்குனு சொன்னானே கலீல்... அது எப்படி இருக்கும்? பெங்குவின்லாம் என்ன சாப்பிடும்? இப்படி எழும் அனாமத்துக் கேள்விகளின் வரிசையில்தான் மேற்சொன்ன டி.ஆர். கேள்வியும் எழுந்தது. ஆனாலும், இந்தக் கேள்வி ஓர் அற்புதமான எபிசோடுக்கான தொடக்கமாகவே பட்டது.

அன்றைக்கு இரவே பஷீரிடம் தனபாலின் நம்பரை வாங்கி போன் அடித்தேன். ''டேய்... எத்தனை வருஷம் ஆச்சுரா... காமராஜர் ஹால் பக்கம்தான் என் டிராவல்ஸ் ஆபீஸ். வாடா...'' என்றார் தனபால் உற்சாகமாக. அவரைப் பார்ப்பதற்கு முன், ஒரு ஃப்ளாஷ்பேக் போட்ரலாம்...

அப்போது தனபால் தீவிரமான டி.ஆர். ரசிகர். அவரது அடையாளமே அதுதான். ''வாடா என் மச்சி, வாழக்கா பஜ்ஜி, ஓ ஒடம்பப் பிச்சி...'' எனக் கையைச் சொழட்டிச் சொழட்டிப் பேசுவார். ''பூ வாங்கி வந்த நேரம்... என் பொன்னுரதம்...'' என உச்சகட்ட ஃபீலிங்கில் பாடுவார். சாதாரணமாகவே தலையைக் கோதிக்கொண்டு, ''ஏன்டா பேசல... எதுக்குடா பேசல...'' என வானத்தைப் பார்ப்பார். டிகிரி காலம் முடித்துவிட்டு சிலபல அரியர்களோடு வெட்டியாகச் சுற்றித் திரிந்தவர் ஒருநாள் அப்பாவோடு சண்டை போட்டுக் கொண்டு, கையில் பெட்டியோடு இளைஞர் மன்றம் நடந்த தாஸின் நெல்லுக் கடையிலேயே வந்து தங்கிவிட்டார்.

வட்டியும் முதலும் - 52

எதற்கெடுத்தாலும் ரைமிங்கில் பேசிக்கொண்டு டி.ஆர். மாதிரியேதான் திரிவார். ''என் தலைவன்டா...'' என்பார் எப்போதும் ஆவேசமாக. சின்ன விஷயத்துக்கெல்லாம் பொசுக்கென்று கண்ணீர்விட்டு அழுதுவிடுவார். டீ குடிக்கப் போகும்போது விட்டு விட்டுப் போனதற்கு எல்லாம் ''இனிமே பேசாதரா... அவ்வளவுதான் உறவு இல்ல...'' என உச்சகட்ட உணர்ச்சிகளைப் பெருக்குவார். ஊரில் இருக்கும் தங்கச்சியை நினைத்து டைரியில் பக்கம் பக்கமாகக் கவிதை எழுதுவார். எப்போது தனபாலை நினைத்தாலும் ''நானும் உந்தன் உறவை...'' எனக் கையில் ரத்தத்தோடு கண்ணாடிக் கதவை முட்டுகிற டி.ஆரின் விஷ§வல்தான் நினைவுக்கு வரும். அதன் பிறகு திருப்பூர், பெங்களூரு, சென்னை என தனபாலின் வாழ்க்கை எங்கெங்கோ போய்விட்டது. இப்போது அவர் சென்னையில் இருக்கிறார் என்பதே எனக்கு பஷீர் சொல்லித்தான் தெரியும். இத்தனை வருடங்கள் கழித்து அவரைப் பார்க்கப் போனேன். டிராவல்ஸ் ஆபீஸில் உட்கார்ந்திருந்தார்.

கொஞ்சம் நரையடித்து, ஆளே மாறிப்போய் இருந்தார். லஞ்ச்சுக்கு வெங்கட் நாராயணா ரோட்டுக்குப் பக்கத்தில் இருந்த அவரது ஃப்ளாட்டுக்கு அழைத்துப் போனார். வீட்டில் அவரது ரூமில் நுழைந்ததும் பரவசமாக இருந்தது. ரூமை அடைத்து பெரிய டி.வி.டி. லைப்ரரி. அத்தனையும் உலகப் படங்கள். '' 'டு லிவ்’ பார்த்துட்டியா? செம பொலிட்டிக்கல் படம். டொரன்டினோ கலெக்ஷன்ஸ் மொத்தமா என்கிட்ட இருக்கு. டைம் கிடைக்கும்போது இங்கயே வந்து பாரு. 'மெலினா’வெல்லாம் பார்த்துருப்பல்ல... ம்... 'சில்வர் சால்ட்’ பார்த்துட்டியா? கண்டிப்பா பாக்க வேண்டிய படம்பா... என்னா ஸ்டோரி டெல்லிங்குற...'' எனத் தடதடவென தனபால் பேசப் பேச... எனக்கு படா ஆச்சர்யம். டி.ஆரின் ரசிகக் குஞ்சு தனபாலா இவர் எனத் தோன்றியது. அதைப் பற்றிப் பேசியபோது, ''அது மட்டும் இல்ல... நிறைய மாறிட்டேம்பா. வாழ்க்கை, டிராவல், ரசனை எல்லாமே மாறிப்போச்சு. இப்போ எல்லாமே தீவிரமா தேவைப்படுது. மெச்சூர்டா தேவைப்படுது... 'வே ஹோம்’ படத்துல வர்ற கெழவியோட முகம் மாதிரி மனசு சலனம் இல்லாம ஆக ட்ரை பண்ணிட்டே இருக்கு...'' என்றார் சிரித்தபடி. தனபால் இப்படியெல்லாம் பேசுவாரா என எனக்குச் சந்தோஷமாக இருந்தது. வரும்போது வாசலுக்கு வந்ததும் ஓடிப்போய் 'ஐ அம்’ பட டி.வி.டி-யைக் கொண்டுவந்து ''இத வெச்சுக்க...'' எனக் கொடுத்தார்.

மாற்றம் என்பது எவ்வளவு அற்புதமான சொல் என்பதை வரும்போது யோசித்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காலத்திலும் எவ்வளவு மாற்றங்கள் வந்துவிடுகின்றன?

சின்ன வயதில் ரஜினி பிடிக்கும் என்று சொன்ன பெரும்பாலான நண்பர்களுக்கு இப்போது கமல்தான் பிடிக்கிறது. அப்போது கமல் பிடிக்கும் என்ற பல பேர் இப்போது ரஜினி பிரியர். இரண்டு பேரையும் பிடிக்கும் என்கிற இடத்துக்குப் பல பேர் வந்துவிட்டார்கள். தீவிர ரசிகர்கள் என்ற இனமே இப்போது இல்லை என்பதுதான் ஆறுதலான மாற்றம். ரஜினி கணேஷ், பாட்ஷா சுரேஷ் என அடைமொழி போட்டுக் கொண்டு முக்கோண ஹேர் ஸ்டைல் பண்ணிக்கொண்டவர்கள் பலர் இப்போது மாறிவிட்டார்கள்.

என்னோடு டி.ஒய்.எஃப்.ஐ-யில் பணியாற்றி தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்த நண்பன் இப்போது காங்கிரஸ் கவுன்சிலர். ''பெட்ரோல் செலவுக்கும் செல் பில்லுக்குமே மாசம் முப்பதாயிரம் வந்துருது மாப்ள...'' என்கிறான் கழுத்து செயினை இழுத்துவிட்டபடி. ''ரஹ்மான் வந்தப்போ என்னால ஜீரணிச்சுக்கவே முடியலைங்க... ராஜா மேல அவ்வளவு பைத்தியம். ராஜாவை விட்டா வேற யாரு வர முடியும்னு ஒரே நெனப்புதாங்க... ரஹ்மான்லாம் ஆளே இல்லனு கொந்தளிச்சிட்டே இருந்தேன்... அது முட்டாள்தனம்னு அப்பறம் புரிஞ்சு ருச்சுங்க... ஹி இஸ் ஆல்சோ எ லெஜன்ட்... ஜீனியஸ்ங்க... மாற்றத்தை மனசு உடனே எடுத்துக்க மாட்டேங்குது பாருங்க...'' என ஹவுஸிங்போர்டு பார்க்கில் உட்கார்ந்து அம்பேத்கர் சொன்னபோது ஒரு பருவம் கடந்துவிட்டிருந்தது.

வட்டியும் முதலும் - 52

''டோனியைப் பார்த்தப்போ எனக்கும் இப்பிடித்தான் எரிச்சலா இருந்தது... சச்சின் மாரி வர முடியுமானு... வேர்ல்டு கப் ஃபைனல்ல ஷார்ப்பாப் பார்த்துக்கிட்டு ஒரு சிக்ஸரைப் போட்டான் பாருங்க... அங்கயே மாறிட்டேன்...'' என்றார் கூடவே வினோத். காதலிக்கு நிச்சயம் எனத் தெரிந்ததும் ஆஃப் அடித்துவிட்டுப் போய் ''உன்னை போட்டுத்தள்ளிட்டு நானும் போய் சேர்ந்துர்றேன்டி...'' என ரகளை பண்ணி, விஷம் குடித்துத் தப்பிய கணேசன், இப்போது மூன்று பெண் பிள்ளைகளுக்கு அப்பா. ''அதை நினைச்சா இப்பவும் சிரிப்பா வருது. நம்ம சீரியல்ல செம காமெடி எபிசோடுங்க அது...'' எனக் குலுங்கிச் சிரிக்கிறார் இன்று. காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பாலு சித்தப்பா தனது மகள் காதலித்து வந்து நின்றபோது ஒப்புக்கொள்ளவில்லை. ''இப்போ ஏன் இப்படி மாறிட்டீங்க..?'' எனப் போராடி வீட்டைவிட்டு ஓடிப்போய்தான் கல்யாணம் செய்துகொண்டார்கள் அவர் கள். நாலைந்து வருடங்களுக் குப் பிறகு இப்போது சமா தானமாகி ஒன்றாகிவிட்டார்கள். எப்போது, எந்தக் கணம் இந்த மன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான் எனக்கு வியப்பு.

மனித மனம்தான் உலகின் மிகப் பெரிய வேதியியல் கூடம். ''அவன் ரொம்ப மாறிட்டாம்பா...'' என்கிற டயலாக்கைக் கேட்கும்போது எல்லாம் எனக்கு செம காமெடியாக இருக்கும். 'மாற்றம் ஒன்றைத் தவிர மாறாதது எதுவும் இல்லை... சம்போ சிவ சம்போ!’ அன்பு துரோகமாக மாறுவதும், காதல் வலியாக மாறுவதும், மகிழ்ச்சி துயரமாக மாறு வதும், நம்மால் கண்டறிய முடியாத கணங்களின் மேல் நடந்துகொண்டே இருக்கின்றன. நாம் வாழ்வது, அந்தக் கணங்களும் மாறும் என்ற நம்பிக்கையின் கணங்களில்தான்!

ஒவ்வொரு காலத்துக்குமான சமூக மதிப்பீடுகளும் எனக்கு வியப்புதான். ''அய்யோ! மாப்ள குடிப்பாரா£ம்ல...'' என்கிற குரல் இப்போது ''ஏங்க குடிக்காதவன் இப்போ யாருங்க..? குடிக்கலைன்னாதான் ஆச்சர்யம்'' என மாறிவிட்டது. ''தப்பான ஆளுங்க... லஞ்சம்லாம் வாங்குவாராம்...'' என்ற குரல் ''மேல் வரும்படி இல்லையா... என்னங்க பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரு...'' என மாறிவிட்டது. தர்மம் என்ற சொல் பாதிக்கு மேல் வன்மம் என்ற சொல்லாக மாறிவிட்டது. தவறுகள் அவமானத்துக்குரியன அல்ல என்கிற அளவுக்குச் சமூகம் வசதியாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கிற எவர்சில்வர் செம்பும் ஈசி சேரும் 25 வருடங்களாக அப்படியே இருக்கின்றன. ஆனால், ரெண்டு வருஷத்தில் மூன்று மொபைல் மாற்றிவிட்டோம். இதுதான் இந்தச் சமூகத்தின் மாற்றம்!

எங்கள் தெருவில் இருந்த சரவணன் லாட்டரி பைத்தியம். சம்பாதிக்கிற காசுக்குப் பாதிக்கு மேல் லாட்டரிக்கே விட்டுவிடுவார். ஒருமுறை கும்பகோணத்தில் சுரண்டல் லாட்டரி கிழித்திருக்கிறார். காசு விழ விழ... மறுபடி மறுபடி கிழித்துக்கொண்டே இருந்திருக்கிறார். 1,000 ரூபாய்க்கு மேல் கிழித்துவிட, ''காச வெச்சுட்டுக் கிழி...'' எனக் கடைக்காரர் தடுக்க, பயங்கர ரகளை. அடிதடி போலீஸ் கேஸாகி ஒரு மாசத்துக்கு திருச்சி ஜெயிலில் கிடந்தார். ஜெயிலில் இருந்து திரும்பி வரும்போதே தஞ்சாவூரில் 1,000 ரூபாய்க்கு லாட்டரி சுரண்டி மறுபடி தகராறு இழுத்த சரித்திர நாயகன் சரவணன். திடுதிப்பென்று ஒருநாள் லட்டரிக்குத் தடை வந்த பிறகு பாதிப் பைத்தியமாகித் திரிந்தார் பார்ட்டி. பதுக்கல் லாட்டரிக்கெல்லாம் போய் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு இப்போது ஆளே மாறிவிட்டார். ''சூதாட்டத்தைவிட மோசமான விஷயம் இல்லைங்க... நல்லவேளை இந்த அளவுல தப்பிச்சுட்டேங்க...'' என்பவர் இப்போது ஈ.பி. ஆபீஸில் பியூனாக உழைக்கிறார்.

நாளைக்கே தமிழ்நாட்டில் தீவிர மதுவிலக்கு வந்துவிட்டால் என்னாகும்? ப்ளாக்கில் சரக்கு தேடுவது, கள்ளச் சாராயம் என அலைபாய்ந்து ஒருகட்டத்தில் 'குடிமகன்கள்’ மொத்தமாகத் திருந்தி, தெளிவான மாற்றம் வந்துவிடும் இல்லையா?

கே.பி.எஸ். தாத்தாவுக்கு அவரது சைக்கிள் தான் எல்லாம். தினம் தினம் காலையில் எழுந்ததும் சைக்கிளை எண்ணெய் போட்டுத் துடைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை. ஹாண்ட்பாரில் குஞ்சம் கட்டி, மட்கார்டில் ஸ்டிக்கர் ஒட்டி அந்த சைக்கிளை அலங் கரிப்பதுதான் அவருக்குப் பாதி வேலை. ஒரு மகாராஜா குதிரையில் வருகிற மாதிரி தான் அந்த சைக்கிளை அவர் ஃபீல் பண்ணுவார். யாராவது அவர் சைக்கிளில் கைவைத்தாலே டென்ஷனாவார். ஒருமுறை தெரியா மல் சாவியைத் திருடி சைக்கிளை எடுத்துப்போனதற்காக மாசக்கணக்கில் நண்பனோடு பேசாமல் இருந்திருக்கிறார். அந்த சைக்கிளில்தான் அவரது காதல், நட்பு, கல்வி, வேலை எனப் பல நினைவுகள் சுழன்றுகொண்டு இருந்தன. தாத்தா வின் நண்பர்கள் எல்லாம் மோட்டார் பைக், கார் என அடுத்தடுத்த மாற்றங்களுக்குப் போய் விட... இவர் மட்டும் சாகிற வரை அந்த சைக்கிளில்தான் போய்வந்தார். பணம் காசு வந்தபோதுகூட, ''இவனை விட முடியாதப்பா...'' என அந்த சைக்கிளையே கட்டிக்கொண்டார். தாத்தா செத்துப்போய் அவரைத் தூக்கிப் போனபோது அந்த ஹீரோ சைக்கிள் திண்ணையில் தனியே கிடந்தது, மட்கார்டில் உதிர்ந்த பெயர் எழுத்துகளோடு. பின்னொரு நாள் கொல்லையில் உடைந்துகிடந்த அந்த சைக்கிளைப் பார்த்தேன். ஆயிரமாயிரம் ஹாரன் ஒலிகளுக்கு நடுவே இப்போது அதன் சித்திரம் தோன்றுகிறது!  

'ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பூக்கும் பூக்களைத் தருவது வேரின் பழமைதான்’ என ஜப்பானியப் பழமொழி இருக்கிறது. மாற்றம் என்பது ஒரு சுழற்சி. எல்லாப் புதிய மாற்றங்களும் ஏதோ ஓர் பழமையின் விதையில் இருந்தே கிளைக்கும்.

'ஃபாதர் அண்ட் சன்’ என்ற படத்தில் ஒரு வசனம் எனக்கு எப்போதும் நினைவிருக்கும். ஒரு மகனுக்கும் அப்பாவுக்குமான உணர்வுகளைப் பேசும் படம் அது. மகனுக்கும் அப்பாவுக்கும் எதாவது சண்டை வந்துகொண்டே இருக்கும். வயதான அந்த அப்பா எப்போதும் இருமிக்கொண்டு அறையின் மூலையில் முனகிக் கிடப்பார். மகனின் குடும்பம் அவரைக் கண்டுகொள்வதே இல்லை. அவரது மூன்று வயது பேரன் மட்டும் தாத்தாவை நேசிப்பவனாக இருப்பான். ஒரு நாள் மகன் அவரைக் கொண்டுபோய் வலுக்கட்டாயமாக முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வருவான். அப்போது அவனிடம் அவனது மூன்று வயது மகன், ''ஏம்ப்பா தாத்தாவக் கொண்டுபோய் வெளில விட்டீங்க..?'' என்பான். அதற்கு இவன், ''பழசையெல்லாம் மாத்தினாத்தாம்பா நம்ம லைஃப் மாறும்... தாத்தா பழசாயிட்டாரு...'' எனப் பதில் சொல்வான். உடனே, பக்கத்தில் மாட்டப்பட்டிருக்கும் ஜீசஸ் படத்தைக் காட்டி அந்த குட்டிப் பையன் கேட்கும் ஒரு கேள்விக்குத் திகைத்து நிற்பான் அந்த அப்பன்,

''இந்த ஜீசஸ்கூட ரொம்பப் பழைய ஆள்தானே... இவரை ஏம்ப்பா இன்னும் இங்க வெச்சுருக்க?''

- போட்டு வாங்குவோம்...