ஆச்சர்யப்படுத்தும் ’தன்மானம்’ கலைக்களம்
''நம்முடைய பாரம்பரியக் கலைகள் அழிந்துவருகின்றன என்று நாம் எல்லோருமே ஆதங்கப்பட்டுவருகிறோம். உண்மையைச் சொன்னால் அது வீண் என்றே தோன்றுகிறது. ஏனெனில், கலைகள் சாகாவரம் பெற்றவை. உண்மையானக் கலைஞர்கள் எந்த நிலையிலும் கலைகளைச் சாகவிட்டது இல்லை. இனியும் விடப் போவதும் இல்லை. இதற்கு ஆகச்சிறந்த உதாரணம்தான் நாங்கள்'' என்கிறார்கள் ஓசூரில் 'தன்மானம் கலைக்களம்’ என்கிற கலைப் பள்ளியை நடத்திவரும் மாணவக் கலைஞர்கள்.
##~## |
தன்மானம் கலைக்களத்தை உருவாக்கிய மாணவர்களில் ஒருவரான சக்ரவர்த்தியிடம் பேசினேன். ''நாங்கள் மொத்தம் 50 பேர் இணைந்து இந்தக் கலைப் பள்ளியை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஓசூர் அதியமான் கல்லூரியில் படித்த மாணவர்கள். எங்கள் எல்லோருக்குமே நடனம் என்றால் உயிர். குறிப்பாக நம்முடைய நாட்டுப்புறக் கலைகள், கிராமிய நடனங்களுக்காகவே எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
உலகிலேயே, நம்முடைய பாரம்பரியமும் கலைகளும்தான் பழமையானதும் தரமானதுமாகும். பொதுவாக நம் பாரம்பரியக் கலைகள் காலத்துக்கு ஏற்ப புதுப்பிக்கப்படுவது இல்லை. தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், சலங்கை ஆட்டம் போன்றவைகளை நம் இளைய தலைமுறையினர் அறியாமல் இருப்பதற்கும் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.
உதாரணமாக பரதத்தை எடுத்துக்கொண்டால் முன்னோர் பின்பற்றிய விதிமுறைகளும் நடன அசைவுகளும் பல இளைஞர்களுக்குப் புரிவது இல்லை. அதில் சிறிய மாற்றம் செய்து ஆடும்போது நிறையப் பேர் ரசிக்கிறார்கள். வெளிநாட்டு நடனங்களான ஜாஸ், பாலே போன்ற நடனங்கள் பரதத்தின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டவைதான். இசை இல்லாமல் சலங்கை சத்தத்தை வைத்தே ஆடும் நம்முடைய ஆட்டத்தை சீனாவில் வேறு மாதிரியான வடிவத்தில் ஆடுகிறார்கள். கிராமிய நடனத்தில் உடைகள், மேக்கப், அசைவுகளில் நாங்கள் புதுமைகளைப் புகுத்தி நடனம் ஆடினாலும் அதன் இயல்பைப் பாழாக்காமல், பாரம்பரியத்தை அழிக்காமல் பார்த்துக்கொள்கிறோம்.'' என்கிறார்.
புதுமையான இவர்களின் நடனத்துக்கு ஃபேஸ்புக், யூ டியூப்-ல் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம். வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பலர் இவர்களின் பள்ளிக்கு விரும்பிவந்து நம் கலைகளைக் கற்றுச் செல்கிறார்கள். கலைப் பள்ளியின் மாணவர் மோகன், ''பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடும்போது நம் உடலின் நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் சீரடையும். மசாஜ் செய்யும்போது ஏற்படுவது போலவே ரத்த ஓட்டம் வேகப்படுத்தப்பட்டு, ரத்தத்தில் உள்ள கழிவுகள் வேர்வையாக வெளியேறும். மூளை புத்துணர்ச்சி பெறும். 'சப்த நடனம்’ என்ற நடன வகையை முறையாகப் பயின்று ஆடினால் சர்க்கரை நோய் குறையும் என்கின்றன ஆய்வுகள்.
இப்படி விதவிதமான நடனங்களோடு ஆட ஆரம்பித்த நாங்கள் ஆறு மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடத்திவிட்டோம். கலைகளையும் கலைஞர்களையும் ஒன்றாக இணைத்து 'தன்மானம்’ கலைக்களத்தை மேம்படுத்தி உலக அளவில் நம்முடைய கலைகளைக் கொண்டுசேர்ப்பதே எங்கள் இலக்கு. நிச்சயம் நாங்கள் ஜெயிப்போம். நம்முடைய கலைகளும் ஜெயிக்கும்'' என்கிறார் உறுதியுடன்.
நடனம் கற்ற பல இளைஞர்கள் டி.வி. ரியாலிட்டி ஷோக்களை நோக்கி அணிவகுக்கும் நேரத்தில், நமது பாரம்பரியக் கலைகளைக் காப்பாற்றக் கிளம்பி இருக் கும் இவர்களை நாம் வாழ்த்தி வரவேற்போம்!
- கு.சக்திவேல்