மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 53

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

இரண்டாம் உலகப் போரின்போது வியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் நிர்வாணமாக ஓடிவரும் ஒரு சிறுமியின் முகத்தில் இருக்கும் உணர்வுகளை எழுதிவிட முடியுமா?

சமீபத்தில் எனது உறவினர் ஒருவருக்குப் பணி மாற்றம் வாங்குவதற்காக அலைந்தேன்.

சென்னையைச் சேர்ந்தவர், விழுப்புரம் பக்கத்தில் அரசு ஆசிரியையாக இருக் கிறார். தினமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் பயணம் பண்ண வேண்டியிருக் கிறது. அவருக்கு சமீபத்தில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை வேறு நடந்திருப்பதால், சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்குவது உடனடித் தேவையாகிவிட்டது. அரசுத் துறைகளில் ஒரு காரியம் சாதிப்பது என்பது அவ்வளவு பெரிய 'ஜிந்தாக்கா’!

முறைப்படி டிரான்ஸ்ஃபருக்கு 23-ம் தேதி காஞ்சிபுரத்தில் கவுன்சிலிங் என்பார் கள். அங்கு உள்ள அரசுப் பள்ளியில் கவுன்சிலிங் நடக்கும். போனால் ஒரு ஈ காக்கா இருக்காது. ஒரு வடக்குப்பட்டி ராமசாமி பல் குத்திக்கொண்டே டீடெய்ல் கேட்பார். கடைசியாக, ''என் சகலபாடிக்குக்கூட போன வாரம்தான் நீடாமங்கலத் துலேருந்து திருச்சிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்குனோம். இதெல்லாம் ச்சும்மா ஃபார்மாலிட்டி... ஒண்ணும் நடக்காது. பாருங்க... ஒரு கேண்டிடேட்டும் வரல... என் சகலபாடிக்கு மூணு குடுத்துச்சு. டிபார்ட்மென்ட்ல ஆள் இருக்கு... வேணும்னா சொல்லவா...'' என்பார் கூலாக.

''மூணுன்னா..?''

''மூணு லச்சங்க...''

''பாப்பு படிப்புச் செலவு வேற இருக்கு... இப்போ போய் மூணு லச்சம்னா எங்க போறது?''

''சரி விடுங்க... கொஞ்சம் சென்டிமென்ட்டா அட்டாக் பண்ணிப் பாப்போம்.''

அதன்படியே மனதை உருக்கும் கடிதம் ஒன்றை சி.எம். செல்லுக்கு எழுதினோம். (கற்பனை கலப்பெல்லாம் இல்லை... உண்மைதான்!) மூன்று பெண் பிள்ளை களை வைத்துக்கொண்டு சிரமப்படுவது, அறுவைச் சிகிச்சை செய்தது, ஒரு பெண்ணாக இந்த சமூகத்தை எதிர்கொள்வது என எழுதப்பட்ட கடிதத் துக்கு, 'கடிதத்தைப் பெற்றுக்கொண்டோம்’ என்பதற்கான ரெசிப்ட் வந்தது. ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லை. மேற்கொண்டு யாரை அணுகுவது, பேசுவது என்றும் தெரியவில்லை.

திடுதிப்பென்று ஒரு நாள் உறவினர் எனக்கு போன் பண்ணி, ''தினமும் காலைல 11 மணிக்கு போயஸ் கார்டன்ல சி.எம். பப்ளிக்கை மீட் பண்றாங்களாமே... அங்க உனக்கு யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா? நேர்ல மீட் பண்ணி லெட்டர் குடுத்தா, எதாவது நடக்கும்ல'' என்றார்.

''இல்லத்த... அவங்க தனியாலாம் யாரையும் மீட் பண்ண மாட்டாங்க... சி.எம். செல்லுக்கு மனு குடுக்கறதுதான்... பெருங்கூட்டம் நிக்கும்... நாமளும் போய்க் குடுத்துட்டு வர வேண்டியதுதான்...'' என்றேன்.

''இல்லல்ல... நீ விசாரியேன். தனியாப் பார்த்துட்டாங்கன்னா நடந்துரும்ல...'' என்றார் அப்பாவியாக.

''நீங்க என்னத்த... முக்குக் கட ஆவின் வேலுவப் பார்க்கறது மாதிரி சொல்றீங்க. சரி... நான் ட்ரை பண்றேன்...'' என்றேன் அப்போதைக்கு. இந்த நாட்டின் குடிமகள் ஒருத்தி, முதலமைச்சரைப் பார்த்துப் பேசுவது என்பது அவ்வளவு சுளுவான காரியமா..? 11 மணிவாக்கில் போயஸ் கார்டன் பக்கம் போய்ப் பார்த்தால், கேட் பக்கமே போக முடியவில்லை. அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் டீடெய்ல் கேட்டுவிட்டு, ''லூஸா தம்பி நீங்க... இதெல்லாம் நடக்கற காரியமே இல்ல. டிரான்ஸ்ஃபர் தானே... எங்க மச்சினன் ஒய்ஃபுக்கு போன வருஷம் இங்க வேளச்சேரிக்கு வாங்குனோம்... ரெண்டார்ரூவா... நமக்குத் தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருக்காரு. செகரட்ரியேட்ல நல்ல பழக்கம்...'' என்றார் கடைசி பஃப் கிங்ஸ் இழுத்தபடி.

எனக்கு சி.எம்மை எப்படிப் பார்ப்பது என்ற யோசனை தறிகெட்டு ஓடியது. சசிகலாவின் சொந்தக்கார குரூப்பில் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் ஹோட்டல் நடத்துகிறார். அவரைப் பிடிக்கலாமென்றால், ''நீ வேற... அந்த ஏரியாவுக்கே இப்ப போக முடியாது... போட்ருவாய்ங்க...'' எனத் தடுத்தாட்கொண்டார் ஒரு நண்பர். ''சோ சாரை மீட் பண்ண முடியுமா..?'' என இன்னொரு நண்பர் என்னிடம் கேட்டார். ''இல்லை நண்பா... அவங்க ஸ்கூல்ல எம் பொண்ணுக்கு சீட் கேட்டுப் போனதுக்கே என் டவுசர் கிழிஞ்சுருச்சு. அமைச்சரை வேணும்னா பார்ப்பமா..?'' என ஒரு ரூட் போட்டார் இன்னொரு நண்பர்.

ஓர் அதிகாலையில் அமைச்சரின் பி.ஏ-வை ரெண்டு கோட்டிங் பவுடரோடு சந்தித்தேன். 'கரகாட்டக்காரன்’ சண்முகசுந்தரத்தை அரசியல்வாதி கேரக்டர்களில் ஏன் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். சண்முகசுந்தரம் மாதிரியே அந்த பி.ஏ-வும் சீரியஸாகப் பேசுகிறாரா... நக்கலாகப் பேசுகிறாரா என்பதைக் கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த பி.ஏ-வுக்கு போன் பண்ணும்போது சொன்னார், ''தம்பி... ரெண்டு ரூவால முடிச்சுரலாம்... போன வாரம்தான் மூணு பேருக்கு முடிச்சுவுட்டுச்சு... ஒண்ணு அபிராமிபுரம், இன்னொண்ணு நெற்குன்றம்...''

வட்டியும் முதலும் - 53

ஒரு வாரம் கழித்து அந்த அத்தை போன் பண்ணி, ''முருகா... நம்ம வசந்தி டீச்சர் டிரான்ஸ்ஃபர் வாங்கிருச்சு. ரெண்டு ரூவாயாம்... நம்பிக்கையான ஆளுன்னு சொல்லுச்சு. அம்பதாயிரம் ரூவா குடுத்துட்டேன்... ஒண்ணாம் தேதிக்குள்ள வாங்கித் தந்துர்றேன்னு சொல்லிருக்காங்க... இதுக்கு மேல போராட முடியாதுப்பா. உடம்பு தாங்கணும்ல...'' என்றது. என்ன சொல்வது என்று தெரியாமல் போனை வைத்தேன்.

அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது..? நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம்.

அதிகாரத்துக்கு ஆசைப்படுகிறவர்களுக்கும் அதிகாரத்தால் நசுக்கப்படுகிறவர்களுக்குமான போராட்டம் எப்போதும் நடக்கிறது. அன்றைக்கு ஒரு ஹோட்டலில் கண்ணாடிக் கதவுக்குப் பின்னால் ஒரு நேபாளி சப்ளையர் சிறுவனை சூப்பர்வைசர் ஒருவர் போட்டு அடித்துக்கொண்டு இருந்தார். ஏதோ கண்ணாடிப் பொருளை உடைத்துவிட்டானாம். அந்த சூப்பர்வைசரைத் திட்டி, அந்தச் சிறுவனை இழுத்தேன். ''சார்... உங்களுக்கெல்லாம் தெரியாது... இவனுங்களைஎல்லாம் இப்பிடித்தான் சார் ட்ரீட் பண்ண ணும்...'' என்றார் அந்த சூப்பர்வைசர்.

அந்தச் சிறுவன் நாலாயிரம் ரூபாய் சொற்ப சம்பளத் துக்கு எங்கோ தூர மண்ணில் இருந்து மொழி தெரியாத இங்கே வந்து பாத்திரம் கழுவுகிறான். அவனது முகத்தைப் பார்க்கும்போது, கனடாவில் ஒரு ரெஸ்டாரென்ட்டில் பாத்திரம் கழுவும் வேலை பார்க்கும் என் ஈழ நண்பர் ஒருவரின் நினைவு வந்தது. 'வன்னியிலே பெரிய விவசாயக் குடும்பம் எங்களோடது... எல்லாத்தையும் இழந்துட்டு இங்கே பிளேட்டு கழுவிட்டு இருக்கேன். யார் யார்ட்டேயோ அடி வாங்கிருக்கேன்... காயம்பட்ருக்கேன்.... எவ்வளவோ இழந்துட்டேன்... உயிர் வாழ்றது மட்டும்தான் இப்போ என்னோட சாதனை... அதிகாரமும் அதிகார வெறியும் எங்களை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கப்பா...’ என அவர் சொன்னது வலியாக நெஞ்சில் நிலைத்திருக்கிறது. இந்த நேபாளிச் சிறுவனுக்கு அதையும் சொல்லத் தெரியவில்லை... அவ்வளவுதான்.

வட்டியும் முதலும் - 53

உலகம் முழுவதும் எத்தனை எத்தனை பேர் இப்படி யாரோ ஒருவரின், ஒரு நிறுவனத்தின், ஒரு தேசத்தின் அதிகார வேட்கைக்குத் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

''ஏய்... எல்லாத்தையும் அள்ளிப் போடு...'' - திடுதிப்பென்று வந்து நிற்கும் போலீஸ்காரரைப் பார்த்து மிரண்டு, ரோட்டில் போட்ட இட்லிக் கடையை அப்படியே அள்ளிவைக்கிறார்கள் ஒரு தம்பதி. ''இன்னிக்கு யாவாரம் அம்புட்டு தேன்... எல்லாம் நாசமாப்போச்சு...'' என ஒரு டீக்கடைக்காரர் சுருட்டிக்கொண்டு போகிறார். ''என்னை ஏன்யா புடிச்சுட்டு வந்தீங்க...'' என்ற ஒப்பாரியோடு காவல் நிலையங்களில் ஆயிரம் ஆயிரம் பேர் அனுதினம் உட்கார்ந்திருக் கிறார்கள்.

''என் நெலத்தைப் புடுங்கிட்டாங் கய்யா...'' எனக் கதறிக்கொண்டு காத்திருக்கிறார்கள். கட்டப் பஞ்சா யத்து, அதிகார துஷ்பிர யோகம் என எளிய மக்களின் மீது திணிக்கப்படும் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு நடிகைக்காக அடித்துக்கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸும் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரிகடலை விற்கிற கிழவனைக் கொண்டுபோய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்துத் துன்புறுத்தும். நேற்று வரை ஒன்ரையணாவுக்குப் பெறாதவர்கள், கவுன்சிலர் ஆனதில், எம்.எல்.ஏ. ஆனதில்... கார், அடியாட்கள், செல் வாக்கு எனப் பறக்கிறார்கள்.கோயில் களில், ஆஸ்பத்திரிகளில், பள்ளி களில் சாமான்யர்கள் அத்தனை பேரும் காத்திருக்க, அதிகாரம் படைத்தவர்கள் முதல் ஆளாக உள்ளே போய்வருகிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் தூரத்துச் சொந்தக்காரர்களுக்குக்கூடப் பயப்பட வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும் இல்லாதவர்களுக்கு வேறாகவுமே இருக்கிறது.

'ரிங் மாஸ்டர்’ என்றொரு ரஷ்யன் சிறுகதை. அந்த ஊருக்குப் புதிதாக ஒரு சர்க்கஸ் வந்திருக்கும். சிங்கத்தை ஒரு சாட்டை நுனியில் அடக்கி வைத்திருக்கிற அந்த ரிங் மாஸ்டரைப் பார்த்து வியந்துபோவான் ஒரு சிறுவன். அவருக்கு பரம விசிறியாகி அவர் செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்வான். சிங்கத்தை விரல் நுனியில் அதிகாரம் செய்கிற ரிங் மாஸ்டர் சம்பளத்துக்காக சர்க்கஸ் ஓனரிடம் கை கட்டி நிற்பார். வீட்டில் சதா திட்டும் மனைவியின் முன்னால் கூனிக் குறுகி நிற்பார். ரேஷன் கடை, ராணுவ முகாம், மகனின் பள்ளிக்கூடம் என நாளெல்லாம் மிகவும் பணிவாக, பயந்த ஆளாக சுற்றிக்கொண்டு இருப்பார். 'சிங்கத்தை அதிகாரம் பண்ணும் அவர், மற்றவர்களிடம் எல்லாம் அப்படி இருப்பது ஏன்?’ என்ற கேள்வியோடு முடியும் அந்தச் சிறுகதை. அந்த ரிங் மாஸ்டரைப் போலத்தான் இருக்கிறது நம் ஒவ்வொருவருக்கு மான வாழ்க்கை!

அதிகாரம் என்பது சமூகத்தின் சகல மட்டங்களிலும் நம்மைப் படுத்தி எடுக்கிறது. பூர்ஷ்வா என்ற சொல்லுக்கு உரியவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ''எங்க மேனேஜர் டாமினேஷன் தாங்க முடியலை... வேணும்னே அவர் பவரை என் மேல திணிக்கிறாரு...'' என எத்தனை பேர் புலம்புகிறார்கள். ''நான் புக் ரீடிங் பண்றது என் ஹஸ்பெண்டுக்குச் சுத்தமாப் பிடிக்காது... அவருக்குத் தெரியாமதாங்க படிக்கிறேன்...'' என போன வாரம் ஒருவர் போன் பண்ணினார். ''எம் பொண்டாட்டிக்கு அவ சொல்றதுதான் நடக்கணும்... அவங்க வீட்டுக்குத்தான் நான் பண்ணணும்... அவளை மீறி எதாவது நடந்தா, எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவா...'' என நாக்கு குழற நள்ளிரவில் புலம்புகிறார் நண்பர். ''எங்கப்பாதாங்க எனக்கு முதல் எதிரி... அவர் சொன்ன மாதிரிதான் டிரெஸ் பண்ணணும்... முடி வெட்டணும்... அவர் சொன்ன கோர்ஸைத்தான் படிக்கணும்... ஹிட்லர் மாதிரி நடந்துக்கிறாருங்க... இப்போ கல்யாணத்துலயும் வந்து நிக்கிறாரு... நேத்து பெரிய சண்டை வந்துருச்சுங்க...'' என டென்ஷ னாகும் மகன்கள் எத்தனை பேர். ஓர் உறவை, அன்பை, நட்பைச் சிதைக்கும் முதல் விஷயம் அதிகாரம்தான் இல்லையா?

இரண்டாம் உலகப் போரின்போது வியட்நாமில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் நிர்வாணமாக ஓடிவரும் ஒரு சிறுமியின் முகத்தில் இருக்கும் உணர்வுகளை எழுதிவிட முடியுமா?

இலங்கையில் ஈழப் பகுதியில் வெற்றிச் சின்னம் என சிங்கள அரசு அமைத்திருக்கும் துப்பாக்கி ஏந்தியிருக்கும் ராணுவ வீரனின் சிலையைப் பார்க்கும்போது எவ்வளவு கோபம் வருகிறது..? ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்ததற்கு அஞ்சலி செலுத்தக் கூடும் அமெரிக்க மக்களிடம், உருத்தெரியாமல் அழிந்து, சிதைந்துபோன ஆயிரமாயிரம் மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் என்ன கேட்கும்..? வில், அம்பு வைத்துக்கொண்டு பெரும் ஆயுதங்கள் தாங்கிய துணை ராணுவப் படையிடம் எதற்காகப் போரிடுகிறார்கள் வனவாசிகள்?

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் நடந்துகொண்டு இருந்தபோது சாலையில் இன்னும் அழியாத ரத்தக் கறை கிடந்தது. விசாரித்தபோது, ''இங்க ஒருத்தரைப் போட்டாங்க... அவர் மனித உரிமை ஆர்வலர். ரியல் எஸ்டேட், கவர்மென்ட் ஆபீஸர்ஸ் அது இதுன்னு எதையாச்சும் நோண்டிக்கிட்டே இருப்பாரு. அவரு வூட்ல நெறைய பூனைங்க வளர்த்தாரு... அதுங்களுக்கு பால் வாங்கறதுக் காக காலையில வந்தவரை யாரோ போட்டுட் டாங்க...'' என்றார் நண்பர்.

அன்றைக்கு இரவு பௌர்ணமி கிரிவலம். எங்கெங்கும் ஜனத்திரள். பாதை ஓரத்தில் பார்வையற்ற முதியவர் சின்ன இசைக் குழு வோடு உட்கார்ந்து பழைய பாடல்களாகப் பாடிக்கொண்டு இருந்தார். கிரிவலம் சுற்றி விட்டு அண்ணாமலையார் கோயிலில் போய் நின்றபோது தூரத்தில் அந்த முதியவர் பாடிக் கொண்டு இருந்த வரிகள் கேட்டன,

''நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட, நாணமென்ன வெட்கமென்ன காசு கேட்பதிலே...''  

- போட்டு வாங்குவோம்...