மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 54

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

எனக்கு சென்னையை ஆடி மாதத்தில் அதிகமாகப் பிடிக்கும். இந்த ஊரில் தெரு வுக்குத் தெரு இத்தனை சாமிகள் இருக்கிறார்கள் என்பதே அப்போதுதான் தெரியும்.

டி மாதம் தெருவோரத் தெய்வங்களின் காலம். - பெரியார் பாதையில் சிலுசிலுவெனத் தூறலில் நனைந்தபடி நடந்தால், வேம்புலியம்மன் கோயில் பக்கமாக 'ச்ச்செல்லாத்தா... ச்ச்செல்ல மாரியாத்தா’ என மாலதி லக்ஷ்மனின் வெண்கலக் குரலில் வீதி அதிரும்.

 ஏகாந்தம் எகிறும். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் சீரியல் லைட் அம்மன், மனசுக்குள் மாடர்ன் ஆர்ட் வரையும். நைட்டி மேல் துண்டு போட்டு அபார்ட்மென்ட் வாசல்களில் ஆன்ட்டிகள் உட்கார்ந்திருப் பார்கள். பூப்போட்ட சுடிதார்கள், மூக்குத்தி மூக்குகள், மல்லிப்பூ - சாமந்திப்பூ காம்பினேஷன் என ஏரியாவில் அதுவரை பார்க்காத ஃபிகர்கள் எல்லாம் கோயில் திண்டில் பேப்பர் பிளேட்டில் பொங்கலும் புளியோதரையுமாக நிற்கும். அஞ்சாறு தனுஷ்கள் மேடைக்கு சைடில் நின்று மிக்ஸிங் போட்டுக்கொண்டே 'தல பாட்டு... தல பாட்டு’ எனக் கத்துவார்கள். 'மதுரைக்குப் போகாதடி’ எனக் குட்டைப் பாவாடையில் குத்தி எடுக்கும் சோனுவை சைடு ஸ்டாண்ட் பைக்குகளில் இருந்து மொபைலில் வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பார்கள் சில சிம்புகள்.

தர்மகர்த்தா, கவுன்சிலர், ஏரியா வணிகர் சங்கப் பிரமுகர் என முக்கியப் புள்ளிகள் எல்லாம் பவுடரும் பழ வாசமுமாக மேடைக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, எம்.ஜி.ஆர்., சிவாஜி பாட்டு கேட்டு சீட்டு எழுதுவார்கள். இரண்டு போலீஸ்காரர்கள் ஓரமாக ஒதுங்கி சாயங்காலம் மிச்சமான சுண்டலை மென்றுகொண்டே பொண்டாட்டிக்கு போன் போடுவார்கள். நடுவே விடாமல் வந்து ஒரு கார்க்காரன் ஹாரன் அடிக்க, ஒரு குரூப் போய் அவன் அத்துமீறலை முறிப்பார்கள். திடுதிப்பென்று வரும் மூத்திரச் சந்துப் பிரச்னைகளுக்குப் பாதிக் கூட்டம் எழுந்து ஓடும். அந்த நேரம் பார்த்துதான் ஒரு எஸ்.பி.பி. எழுந்து பயங் கர சாந்தமாக, 'ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக் கண்ணன் தூங்குகிறான்’ என ஆரம்பிப்பார்.

மொத்தக் கூட்டமும் சோனு ஃபீவரில் இருக்கும்போது ஒரு ஒல்லி பெல்ட் டி.எம்.எஸ். எழுந்து, 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனத் திருகல் பண்ணுவார். லோக்கலில் மொபைல் கடை நடத்தும் பெரியம்மா, மட்டன் ஸ்டால் சித்தப்பா, தேங்காய் மண்டி அண்ணாச்சி என ஸ்பான்சர்களின் போட்டோக்களுடன் பிரமாண்ட ஃப்ளெக்ஸ்கள் எங்கெங்கும் இருக்கும். அந்த இரவு முடியும் அதிகாலையில், குவிந்துகிடக்கும் பேப்பர் கப்புகளுக்கு நடுவே தனித்து நிற்பாள் அந்த அம்மன் எப்போதும்போல.

எனக்கு சென்னையை ஆடி மாதத்தில் அதிகமாகப் பிடிக்கும். இந்த ஊரில் தெரு வுக்குத் தெரு இத்தனை சாமிகள் இருக்கிறார்கள் என்பதே அப்போதுதான் தெரியும்.

அங்காள பரமேஸ்வரி, கங்கையம்மன், எல்லை மாரியம்மன், வேடியம்மன், கருமாரி, நாகாத்தம்மன், ஹவுஸிங் போர்டு மாரி, மீன் தொற மாரி, வண்ணாந் தொற மாரி, சந்தக்கட மாரி... எல்லாமே தெருவோரத் தெய்வங்கள். யதார்த்தப் பட நாயகிகள். தினம் தினம் கடந்துபோகும் நாலு பேர் கன்னத்தில் போட்டுப் போவதைத் தவிர, வேறென்ன கிடைக்கும் இந்த வீதியோரச் சாமிகளுக்கு? திருப்பதி ஏழுமலையானைப் பார்க்கப் பல மணி நேரம் காத்திருந்து எட்டி நின்று லட்டு வாங்க வேண்டும்.

சபரிமலை ஐயப்பனை அஞ்சாறு நொடிகள் நிதானித்துப் பார்ப்பதே அதிசயம். பழநி முருகனை ஏறிப்போய்ப் பார்க்க எல்லோருக்குமா வாய்க்கிறது? நமது அனுதினங்களின் ஆசீர்வாதங்கள் இந்தத் தெருவோர தெய்வங்கள்தானே? டிராஃபிக்கில் நிற்கும் பஸ் ஜன்னல்களில் திமிறிக்கொண்டு எவ்வளவு பேர் இவர்களைக் கும்பிடுகிறார்கள்? க்ராஸ் பண்ணும் போது 'உச்ச்... உச்ச்’ எனத் தன்னிச்சையாகப் போட்டுக் கொண்டு போகிறார்கள். பெருநகரத்தில் வாக்கப்பட்டு வந்த ஊர்நாட்டு அக்காக்கள் சாயங்காலமாகப் பூக் கட்டிக்கொண்டு போய்ப் பேசிவிட்டு வருவதே அபூர்வம், இந்தச் சிறு தெய்வங்களுக்கு.

சென்ட்ரல் ஸ்டேஷன் பாலத்துக்கு முன்னால் ஒரு பாடிகாட் முனீஸ்வரன் உட்கார்ந்திருக்கிறார். எப்போதும் தள்ளி நிற்கும் இளநீர்க் கடைக்காரரைப் பார்த்தபடி. புது பைக்கோ, காரோ வாங்கி வந்து எலுமிச்சம் பழம் நசுக்கி கியர் போடும்போது முனீஸ்வரனின் சிரிப்பு கேட்கும். அண்ணா ஆர்ச் பக்கம் அவ்வளவு நெரிசலில் ஒரு குரூப் அலகு குத்திக்கொண்டு நிற்பதை முந்தா நாள்தான் பார்த்தேன். பரபரப்பான தி.நகரின் தெரு ஒன்றில் வேப்ப மரத்துக்கு மஞ்சள் பாவாடை கட்டி, சின்னதாகச் சூலம் நட்டு விளக்கெரியும். யார், எப்போது வந்து இதைச் செய்தார்கள் என்றே தெரியாமல் ஓர் எளிய சாமி அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் எல்லோருக்கும்.

வட்டியும் முதலும் - 54

ஊரில் இருந்து கொரடாச்சேரிக்குப் போகும் வழியில் ராக்கப்பெருமாள் கோயிலில் பஸ்ஸில் இருந்தே காசு போட்டுப் போவார்கள். செங்கல்பட்டு தாண்டினால் வழி எல்லாம் சீரியல் லைட்டுகளில் மின்னுகின்றன சிறு தெய்வங்கள். பயணத்தில், ஊர்களின் வெளியே உசந்து நிற்கும் பெயர் தெரியாத பெருவீரக் காவல் தெய்வங்களின் உருவங்கள் நினைவுகளில் அப்பிக்கொள்கின்றன. அகல் வெளிச்சமும் சர்க்கரைப் பொங்கலும் அனுதினமும் வாய்க்காத ஆயிரமாயிரம் ஏழைச் சாமிகளின் தேசம்ஐயா இது.

அதனால்தான் ஆடி மாதத்தை எனக்குப் பிடிக்கும். இது எளிய தெய்வங்களின் கொண்டாட்டம். இன்றைக்குக்கூட காலையிலேயே, 'மஞ்சள் குங்குமக்காரியை மறப்பேனா... அவள் மகிமையைப் பாடாமல் நான் இறப்பேனா?’ என அலறி, எம்.எஸ்.வி-தான் என்னை எழுப்பிவிட்டார். டொனேஷன் கேட்டு வந்த ஒரு குரூப்புக்கு 100 ரூபாய் கொடுத்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு வாளி நிறையக் கூழ் கொண்டுவந்து வாசலில் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். காசு வசூல் பண்ணி தெருவுக்குத் தெரு அண்டா வைத்து கூழ் காய்ச்சுகிறார்கள். கல்யாண சாம்பார் மாதிரி, ரம்ஜான் கஞ்சிக்கும் ஆடி மாசக் கூழுக்கும் தனித்தனியாக ஒரு வாசம் இருக்கிறது.

தேங்காய்ப் பத்தை மிதக்க, உதடு கொதிக்க ஊதி ஊதிக் குடித்தபோது... அபிவிருத்தீஸ்வரம், சிம்மக்கல், கருமத்தம்பட்டி, வடபழனி எல்லாக் கூழுக்கும் ஒரே வாசம்தான். வேலை இல்லாத காலங்களில் நானெல்லாம் அன்னதானத்திலேயே சலைன் ஏற்றிய கோஷ்டி. அப்போது ஆடி மாதம் வந்தாலே எங்கள் மொபைலில் டயல்டு கால், ரிஸீவ்டு கால் முழுக்க 'மிமிக்ரி செந்தில்’ நம்பர்தான் கிடக்கும். 'கர்ணன்’ டிஜிட்டல் வெர்ஷன் மாதிரி நண்பர் 'மிமிக்ரி செந்தில்’ சீஸன் ஹிட் அடிக்கிற கலைஞன். ''சி.எஸ்.ஐ. சர்ச்ல ஒரு கல்யாணம்... ட்வென்ட்டி மினிட்ஸ்ல வந்தின்னா ட்வென்டிட்வென்டி பிரியாணி விருந்து’ எனப் பசி இரவில் போன் அடிப்பார். இன்னொரு பஞ்சப் பொழுதில் வந்து, 'பைக்ல ஏறு, பாம்குரோவ்ல சேட்டுக் கல்யாணம்... சைட் டிஷ்ஷா சைட்டும் அடிக்கலாம்’ என ஜில்லடிப்பார்.

ஆடி மாதம் வந்தால் போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் மாடல்கள் மாதிரி பார்ட்டியும் செம பிஸியாகிவிடுவார். ''முப்பது நாளும் கச்சேரி புக் பண்றோம்... 365 நாளும் குக் பண்றோம்... இதான் குறைந்தபட்ச செயல்திட்டம்!’ என இறங்கி வியாசர்பாடியில் இருந்து போரூர் வரை ஜெயலலிதாவில் இருந்து ஜெயம் ரவி வரை அத்தனை குரல்களிலும் பேசுவார். மதியமே கிளம்பிவிடுவோம். தெரிஞ்சவன் எவனாவது பார்த்துவிடுவானோ என்கிற திகிலைத் தவிர, கோயில்களில் தக்காளி சாதம், புளி சாதம் என அன்னதானம் வாங்கிக்கொண்டு ரோட்டோரம் நின்று சாப்பிடுவது ஒரு சுகம். ராத்திரி செந்திலோடு கச்சேரிக்குப் போனால், நமக்கும் சேர்த்து சோடா, கலர், டீ, டிபன் என அத்தனைக்கும் மீட்டர் போடுவார். சமயங் களில் ஸ்டேஜுக்குப் பின்னால் ரஜினி யோடு உட்கார்ந்து பரோட்டா சாப்பிட்டு, சிலுக்கு, நமீதா வோடு கடலை போடுகிற வாய்ப்பெல்லாம் கிடைக்கும்.

திருவிழாவை நடத்துகிற லோக்கல் புள்ளிகளிடம், 'இவரு கவுஞரு’ என நம்மை அறிமுகப்படுத்திவிடுவார் நண்பர். பாசம் பீறிட்டு, 'கவுஞரைக் கவனிங்கப்பா கவுஞரைக் கவனிங்கப்பா...’ என நமக்குப் பிரசாதங்கள் வந்துகொண்டே இருக்கும். மொத்த ஏரியாவும் திரண்டு காசு வசூல் பண்ணி, கூட்டம் போட்டு, தங்கள் தெய்வங்களை அவ்வளவு கொண்டாடுகிற மனிதர்கள் அவர்கள்.

ஒருமுறை வட சென்னையில் ஒரு கோயில் கச்சேரிக்குப் போய்இருந்தோம். கச்சேரியைப் பாதியிலேயே வந்து நிறுத்தினார் ஏரியா தலைவர். 'காவு படையல் போட்டு கண்டினியூ பண்ணுபா... இன்னா?’ என அவர் சொன்னதும் ஜனம் மொத்தமும் கோயில் வாசலுக்குப் போனது. ஏழெட்டு ஆடுகளை நிறுத்தி, பூசாரியும் இன்னும் சிலரும் கழுத்தைக் கடித்து ரத்தத்தைக் குடிக்க... மொத்த ஜனமும் கைஎடுத்துக் கும்பிட்டது. சென்னைக்குள் அப்படி ஒரு திருவிழாக் காட்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை.

வட்டியும் முதலும் - 54

இன்னொரு ஆடி மாச இரவில் லீ மெரிடியன் ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு ஏரியாவுக்கு அழைத் துப்போனார் நண்பர் ஒருவர். 'இதுவரைக்கும் இப்பிடி ஒரு திருவிழாவை நீ பார்த்துருக்க மாட்ட..?’ என பில்டப் கொடுத்துக்கொண்டு போனார். அது ஒரு சுடுகாட்டு ஏரியா. கிறுகிறுவென முன்னூறு பேர் கூடி விட்டார்கள். சின்ன சமாதியில் பூக்களெல்லாம் போட்டு ஒரு சித்தர் சிலை. ஒருவர் பறையடித்தபடி கானா பாடலைப் பாட ஆரம்பிக்க, தடதடவென எல்லோரும் உட்கார்ந்து கஞ்சா பற்றவைத்து ரவுண்ட் ஸில் விட ஆரம்பித்தார்கள்.

'இதுக்குப் பேரே கஞ்சா திருவிழா’ என்றார் நண்பர். மாறி மாறி கஞ்சாவைப் போட்டு, பாட்டுப் பாடி, கைத்தட்டிச் சிரித்து, 'சொய்ய் ய்ங்... சொய்ய்ய்ங்... சொய்ய்ய்ங்...’ எனக் சுழட்டி அடிக்க, அது அஞ்சாறு பாலா படம். கொஞ்ச நேரத்தில் அண்டா நிறைய பிரியாணி கொண்டுவந்து வைத்து பரிமாறத் தொடங்கிவிட்டார்கள். 'என்னடா இது..? இது எந்த ஊரு? இதெல்லாம் எங்க நடக்குது?’ என அதிர்ந்து அதிகாலையில் அங்கி ருந்து ஓடிவந்தோம்.

சைதாப்பேட்டை ரயிலடியை ஒட்டி இருக்கிற ஏரியாவில் ஆடித் திருவிழா. போன வருஷம் நண்பரோடு போயிருந்தேன். தெரு முக்கில் தம்மாத்தூண்டு கோயில். புதுப் புடைவை சுற்றி கருமாரியம்மன் தேஜஸாக உட்கார்ந்திருந்தாள். கூழ் வார்த்தல், அபிஷேகம், அன்னதானம் எல்லாம் முடிந்தது. ராத்திரி ஏரியா ஜனம் மொத்தமும் கோயில் வாசலில் கூடியது. சாமிக்கு பூசாரி பூஜைகள் பண்ணிக்கொண்டு இருக்கும்போதே அங்கு இருக்கும் நண்பரின் அம்மாவுக்குச் சாமி வர ஆரம்பித்தது. 'ஏய்ய்ய்... ஏய்ய்ய்...’ எனக் கத்த ஆரம்பித்தவர், சட்டென்று நாக்கைத் துருத்திக்கொண்டு நெளிந்து வளைந்து ஆட ஆரம்பித்தார். மொத்தப் பேரும் பக்தியாகக் கையெடுத்துக் கும்பிட்டபடி முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். அப்படியே உச்சத்துக்குப் போய், கூட்டத்தில் புகுந்து நாலைந்து பேருக்குப் 'பொளேர் பொளேர்’ என அறைவிட்டார் அந்தம்மா. கூட்டத்தில் நின்ற நண்பனின் அப்பாவுக்கும் சில அடிகள் விழுந்தன. அடித்து முடித்து விபூதியை அள்ளி வீசியபடி சில குறிகள் சொல்லிவிட்டு மயங்கிச் சரிந்தார்.

அது நடந்து பல நாட்கள் கழித்து அந்த நண்பனின் வீட்டுக்குப் போனேன். வாசலிலேயே அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை நடந்துகொண்டு இருந்தது. அவர் குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டு இருந்தார். ஒரே கூச்சல். கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிவிட்டு அவர் போய் விட, 'அப்டியே போயிரு... வராத’ என்றபடி அந்தம்மா வாசலில் வந்து உட்கார்ந்துகொண்டது. வரும்போது அந்த நண்பன் சொன்னான், 'எங்கப்பு செம டார்ச்சரு... எப்போ பாத்தாலும் அம்மாட்ட ராவடி பண்ணலைன்னா தூக்கம் வராது அந்தாளுக்கு, இப்போ பரவால்ல முன்னாடிஎல்லாம் அட்ச்சிக்கினே இருப்பாரு... பேஜாராத் திட்டிக்கினே இருப்பாரு. ஒரு திருநால இதுக்கு படீர்னு சாமி வந்துருச்சு... அப்டியே அவரப் புட்ச்சுக் கண்டம் பண்ணிருச்சு. அதுலேர்ந்து திருநால அதுக்கு சாமி வந்துச்சுன்னா ஊரே பயந்துக்கும். இந்தாளும் அடிக்கிறதெல்லாம் இல்ல பாத்துக்கினில்ல!’

வாசலில் உட்கார்ந்திருந்த அந்தம்மாவைப் பார்த்தேன். அவள்தான் தெருவோரத் தெய்வம்.  

- போட்டு வாங்குவோம்...